சுகாதார காப்பீட்டின் முக்கியத்துவத்தை கோவிட்- 19 பெருந்தொற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உணர்த்தியுள்ளது . கோவிட் -19 நோய்த் தொற்றுக்கான மருத்துவ சிகிச்சை அதிக விலையில் இருப்பதால், சுகாதார காப்பீடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உங்கள் சேமிப்பு பணத்தை இழக்காமல், கோவிட் -19 போன்ற இதர நோய்களுக்கான மருத்துவ செலவுகளைச் சமாளிப்பதை காப்பீட்டுத் திட்டம் உறுதி செய்கிறது.
எதிர்பாராத மருத்துவ தேவைகளை காப்பீடு உள்ளடக்குவதால், வயது முதிர்ந்தவர்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது அவசியமாகிறது.
மருத்துவக் காப்பீட்டு சந்தாவுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும். இது வரி செலுத்தும் பொறுப்பைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவக் காப்பீட்டு சலுகைகளை அனுபவிப்பதற்கான வழியை வழங்குகிறது.
வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 80ன் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதிகபட்ச வரி சலுகை 25,000- 50,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்குட்பட்ட சந்தாதாரருக்கு, ஒரு நிதியாண்டில் ரூ.25,000 வரையிலான மருத்துவக் காப்பீட்டு சந்தாவுக்கு வரியில் இருந்து விலக்கு கிடைக்கும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரருக்கு, ரூ.50,000 வரையிலான சந்தாவுக்கு வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது. தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்பீட்டு செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட சந்தாதாரர் ஒருவருக்கு, ஒரு நிதியாண்டில் ரூ.100,000 வரையிலான சந்தாவுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இன்று சந்தையில் பல வகையான சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை, ஒவ்வொன்றும் வெவ்வேறு முறையில் செயல்படுகின்றன. தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சந்தாதாரரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் பலனடையலாம். அதேசமயம், குழந்தைகளை உள்ளடக்கிய சிறு குடும்பத்திற்கு குடும்ப மிதவை (Family Floater plan) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சந்தாதாரருக்கு அதிக நன்மை பயக்கும். இத்திட்டத்தில், அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பொதுவானதாக சந்தா செலுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறப்போவதில்லை என்பதால், அனைவருக்கும் காப்புறுதி அளிக்க இத்திட்டம் உதவுகிறது. மேலும், தனிநபர் திட்டங்களோடு ஒப்பிடுகையில் சந்தா தொகையும் குறைவானதாக உள்ளது.
மேலும், தீவிர நோய்களுக்கனான மருத்துவத் திட்டம் (Critical Illness plans) என்று சொல்லக் கூடிய பயன்சார்ந்த திட்டங்களும் உள்ளன. இத்திட்டத்தின் கீழ், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு (கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட) காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையும் திருப்பி செலுத்தப்படுகிறது.
அவை மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து வேறுபடுகின்றன. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இழப்பீடு அடிப்படையில் செயல்படுகிறது. இதில், மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகள் மட்டும் சந்தாரருக்கு வழங்கப்படுகிறது.
அனைத்து முனைகளில் இருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடு மற்றும் தீவிர நோய்களுக்கனான மருத்துவத் திட்டம் என இரண்டும் அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றது. கோவிட் -19 பெருந்தொற்று முக்கிய காரணமாக இருந்தாலும், மருத்துவ செலவுகளில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கும், வருமான வரிச் சலுகையை அனுபவிப்பதற்கும் சிறந்த நிதி நிர்வாகம் சார்ந்த முடிவாக இதனை கருதுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“