கொரோன பெருந்தொற்றுக்குப் பிறகு, சுகாதார காப்பீட்டு திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் பல லட்சங்களை தாண்டக்கூடும் என்று அறியப்படுகிறது. இதுவரை, சுகாதார காப்பீட்டு செய்து கொள்ளாத மக்கள் முதன்முறையாக அத்தகைய திட்டங்களை பெற முன்வருகின்றனர். ஏற்கனவே, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தவர்களும், தங்களது பலன்களை நீட்டித்தனர். எவ்வாறாயினும், கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டங்கள், பயனர்களுக்கு பல தரப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது.
கொரோனா போன்ற பெருந்தொற்றை உலகம் சந்தித்து வரும் வேளையில், நமது வாழ்க்கையை வெறும் சாத்தியக்கூறுகளிடம் ஒப்படைப்பது சிறந்ததாக அமையாது. சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம், பாலிசிதாரர் தனது நீண்ட கால சேமிப்பை பாதுகாக்கலாம்.
ஒரு புதிய சுகாதார காப்பீட்டை வாங்கும் போதும், புதுப்பித்துக் கொள்ளும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்.
திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
இன்று சந்தையில் பல வகையான சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை, ஒவ்வொன்றும் வெவ்வேறு முறையில் செயல்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,மருத்துவ செலவுக்கான தொகைகள் திருப்பிச் செலுத்தப்படுகிறது. வரையறுக்கப்பட்ட-நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ செலவுகளைத் தாண்டி, ஒட்டுமொத்தமாக நிதியுதவியை நிறுவனம் அளிக்கிறது.
மெடிகிளைம் என அழைக்கப்படும் தனிப்பட்ட (அ) குடும்ப மிதவை உரிமைக் கோரல்கள் இழப்பீட்டுத் திட்டங்களாக இருந்தாலும், சில ஆபத்தான நோய்கள் நல காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் வருகிறது.
உதாரணமாக, பயனர் ஒருவர் ரூ .9 லட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளார். மருத்துவ செலவுகள் ரூ. 1.8 லட்சம் என்று எடுத்துக் கொள்வோம். இப்போது, மருத்துவ உரிமைகோரல் ( Mediclaim) திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்கு ரூ .1.8 லட்சம் திருப்பி செலுத்தப்படும். அதே சமயம், தீவிர நோய்களுக்கனான காப்பீட்டை வைத்திருந்தால் ( critical illness plan), காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையும் அவருக்கு (9 லட்சம்) செலுத்தப்படுகிறது.
சப்- லிமிட்ஸ் உண்டா என்று தெரிந்துக் கொள்ளவும்.
மருத்துவ உரிமைகோரல் திட்டங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சப்- லிமிட்ஸ்.
சப் லிமிட்ஸ்கள் இருந்தால், நீங்கள் மருத்துவ தொகையின் ஒரு பகுதியை செலுத்த வேண்டியிருக்கும்.
சப் லிமிட்ஸ் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களில், மருத்துவர்கள் கட்டணம், செவிலியர்கள் கட்டணம், ஐ.சி.யூ கட்டணம் போன்றவைகள் ரூம் வாடகையுடன் இணைக்கப்படுகிறது. பொதுவாக, காப்பீட்டு செய்யப்பட்ட மொத்த தொகையில், 1 சதவீதமாக ரூம் வாடகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். பயனர் ஒருவர் அதிக வாடகை கொண்ட ஒரு அறையைத் தேர்வுசெய்தால், மற்ற மருத்துவ செலவுகளின் விகிதங்கள் குறைக்கப்பட்ட, பணம் திருப்பிச் செலுத்தப்படுகிறது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட சப் லிமிட்ஸ் தொகைக்குள் அறையை தேர்ந்தெடுப்பது நல்லது (அ) அத்தகைய சப் லிமிட்ஸ் இல்லாத திட்டங்களை தேர்ந்தெடுப்பது அதை விட மிக நல்லது.
மருத்துவ அறிக்கைகள்:
சுகாதார காப்பீடு என்பது எதிர்பாராத மருத்துவ தேவைகளை உள்ளடக்குவதாகும். அதாவது, பாலிசி எடுக்கும் போது, காப்பீடு எடுப்பவர் ஏற்கனவே உடல்நல பாதிப்புகளுடன் இருந்தால், அத்தகைய பாதிப்புகளுக்கு (pre-existing diseases), தற்போதைய பாலிசியின் கீழ் உடனடியாக பாதுகாப்பு கிடைக்காது. இருப்பினும், pre-existing diseases என்று சொல்லக் கூடிய இத்தகைய பாதிப்புகள், ஒரு குறிப்பிட்ட கால வரம்பிறகுப் பிறகு கவரேஜ் கிடைக்கின்றது. தற்போதைய, வழிமுறைகளின் படி, காப்பீட்டு நிறுவனம் 48 மாதங்களுக்கு பிறகு pre-existing diseases மருத்துவ நிலைகளுக்கு கவரேஜ் வழங்க வேண்டும். இருப்பினும், சில நிறுவனங்கள், சில திட்டங்களின் கீழ் 24 அல்லது 36 மாதங்களுக்குப் பிறகு கவரேஜ் வழங்குகிறது.
நமது முந்தைய மருத்துவ பாதிப்புகள் பற்றிய தகவல்களை மறைக்காமல் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உரிமைகோரல்கள் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிடும்போது நமது முந்தைய மருத்துவ வரலாற்றைப் பற்றிய தகவல்களை தெளிவாக குறிப்பிடவேண்டியது மிக அவசியம் . தவறான தகவல்கள் அல்லது விவரங்களைக் கொடுத்தால் நமது கிளெய்ம் நிராகரிக்கப்படும்.
இணை நிதி (கோ – பேமென்ட்): மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில், சில சமயங்களில் இணை நிதி (கோ – பேமென்ட் ) செயல்முறை பின்பற்றப்படுகிறது. இதில்,மருத்துவ தொகையில் சில பகுதியை பாலிசிதாரர் ஏற்க வேண்டும். மீதமுள்ள தொகையை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். பொதுவாக, மொத்த மருத்துவ தொகையில் 20 சதவீதம் இணை தொகையாக இருக்கும்.
காப்பீட்டுத் தொகை தீர்வாக இருக்க வேண்டும்: நாம் வாழும் இடங்கள், நம்மை சுற்றியுள்ள ஆபத்து, பொருளாதரா சூழல் போன்ற காரணிகளைப் பொறுத்து எவ்வளவு காப்பீட்டுத் தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். தரமான மருத்துவத்துக்கு செலவுகள் அதிகரிப்பதாலும், கணிக்க முடியாத தன்மையை நம்பி பயணிப்பதாலும், அதிக காப்பீட்டுத் தொகையை தீர்மானிப்பது மிகவும் நல்லது. முக்கியமாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய திட்டத்தில் சேர்வது மிகவும் நல்லது.
இப்போது, சுகாதார காப்பீட்டு குறித்து தெளிவான யோசனையை பெற்றிருப்பதால், காப்பீட்டின் பலனை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். இருப்பினும், அதிலுள்ள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மனதில் கொள்வது சிறப்பைத் தரும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”