Advertisment

ஜூனைத் என்றழைக்கப்பட்ட ஒரு சிறுவன்

இந்நாட்கள் அவ்வளவு நல்லவையாக இல்லை. முஸ்லிம்கள் தங்களுடைய தாடிகள், குல்லாவின் பெயர்களால் தாக்கப்படுகிறார்கள்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜூனைத் என்றழைக்கப்பட்ட ஒரு சிறுவன்

முகமது யாசின், ஜூனைத்தின் நெருங்கிய நண்பன். “நாங்க எல்லோரும் மட்டன் இல்லன்னா சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது, ஜூனைத் மட்டும் சோயாபீன் பிரியாணியை விரும்பி சாப்பிடுவான். ஒவ்வொரு முறை ரம்ஜானுக்கு வீட்டுக்கு வரும்போதும் அவங்க அம்மா அவனுக்காக அந்த பிரியாணியை செய்து தருவாங்க. ஆனால், ஜூனைத்தை தாக்கினவங்க அவன் ஒரு மாட்டுக்கறி சாப்பிடுறவன்னு சொன்னாங்க.” என வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகிறான் முகமது யாசின். சாயிரா மற்றும் ஜலாலுதீனின் 7-வது மகன் ஜூனைத்தின் வயது 15. ஹரியானா மாநிலத்தின் கந்தல்வாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து ரம்ஜானுக்காக புதிய ஆடைகள், ஷூக்கள், வாங்க தன் மூத்த சகோதரன் ஹசீமுடனும், நண்பர்கள் இருவருடனும் சேர்ந்து சென்றான். ரம்ஜானுக்கு இன்னும் ஒருநாள் தான் இருந்தது. தன் அக்கா ரபியா மற்றும் அவளது 3 குழந்தைகளுக்காகவும் பரிசுகள் வாங்க சென்றான்.

Advertisment

எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு மதுரா ரயிலில் கிளம்பும்போது, ஏற்பட்ட இருக்கை பிரச்சனையால் கும்பல் ஒன்றால் ஜூனைத் கடுமையாக கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானான். ஜூனைத்தை ”மாட்டுக்கறி சாப்பிடுகிறவன்” என அந்த கும்பல் கேலி செய்தது. ஜூனைத்துடன் வந்தவர்களும் கடுமையாக தாக்கப்பட்டு ஆசோதி ரயில் நிலையத்திலிருந்து தள்ளிவிடப்பட்டனர். அங்கு தன் சகோதரன் ஹசீமின் மடியில் உயிரைவிட்டான் சிறுவன் ஜூனைத். அந்த கோர சம்பவம் நிகழ்ந்து 4 நாட்களுக்கு பிறகு ஜூனைத்தின் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒன்றிணைந்து அவனுடைய வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளி அமைந்த டீக்கடை ஒன்றில் அமர்ந்து “ஜூனைத்தின் கதை”யை பேசினர்.

எல்லோரும் போலவே ஜூனைத்துக்கு கனவு இருந்தது. சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும். குர்-ஆன்-ஐ மனப்பாடம் செய்து ஹஃபிஸ் எனும் பட்டத்தை அப்போதுதான் பெற்றிருந்தான் ஜூனைத். இமாம்-ஆக ஆசைப்பட்டு மேவத்தில் படித்துக்கொண்டிருந்தான். ஆனால், ரம்ஜானுக்காக விடுமுறைக்கு வரும்போது எல்லோருடனும் இணைந்து விளையாடுவான். தம்பி ஃபாய்சலுடன் கல்லாங்காய் விளையாடுவதையும், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதையும் ஜூனைத் பெரிதும் விரும்பினான். “ஜூனைத்திற்கு பட்டம் விடுதல் ரொம்ப பிடிக்கும். மத்தவங்களோட பட்டங்களையும் அவன் ஈஸியா அறுத்திடுவான். அப்படி பட்டம் விடும்போது ஒருமுறை அவன் கீழே விழுந்துவிட்டான்.”, ரிஸ்வான் கான், ஜூனைத் விளையாடும்போது கீழே விழுந்ததால் வீட்டில் திட்டு வாங்கியதை சிரித்துக்கொண்டே நினைவுபடுத்திக் கொள்கிறான்.

publive-image

”கிரிக்கெட் விளையாடுறதுன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும். பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என எல்லாவற்றிலும் அவன் சிறந்தவன்.”, என டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் முதுகலை அரசியல் அறிவியல் படித்துக்கொண்டிருக்கும் முஜாஹித் கான் சொல்கிறார். முஃபீத் கான், ஜூனைத்துடன் கழித்த மதிய வேளைகளை பற்றி பேசுகிறார். ஜூனைத்துக்கு குளத்தில் குளிப்பதென்றால் மிகவும் பிரியம். ”நான் தான் அவனுக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்தேன்”, முஃபீத் கான்.

ஜூனைத்தின் அண்ணன் காசிம் 6 மாதங்களுக்கு முன் அவனுடன் பேசியதை கூறுகிறார். “ஒருநாள் ஜூனைத் என்னிடம் வந்து பல்சர் பைக் வாங்க வேண்டும் என கூறினான். அது பழையதாக இருந்தாலும் வாங்கிவிட வேண்டும் என்றான். அதற்காக, அப்பா கொடுக்கும் பாக்கெட் பணத்திலிருந்து பாதியை சேமித்து 10,000 ரூபாய் சேமிச்ச உடனே பைக் வாங்கலாம்னு சொன்னான்.” எனக்கூறும் காசிமுக்கு சேர்த்துவைத்த சிறுதொகையை இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவர்கள் தங்கள் உரையாடல்களை மேலும் தொடர்கின்றனர். ஜூனைத்திற்கு யாருடனும் மோதல்போக்கை கடைபிடிப்பது பிடிக்காது. யாரையும் அவன் அவதூறு செய்தது இல்லை. “ஜூனைத் பேசுவது எங்களைப் போல இருந்ததில்லை. ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு வரும்போதும் அவன் மதரஸாவில் படித்ததில் சிலவற்றை எங்களுக்கு சொல்லுவான். அவனுடைய வாழ்வின் கடைசி தருணங்கள் மிகவும் வன்மம் நிறைந்தவை. அதனை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்த முடிவுக்கு அவன் தகுதியானவன் அல்ல.”, முஜாஹித்.

”ஜூனைத் எல்லாரையும் சிரிக்க வைப்பான். தெருவில் எங்கு நின்றும் அவனால ஒரு நண்பர்கள் கூட்டத்தை கூட்டத்தை உருவாக்க முடியும்.”, முஷரஃப் கான், 15. அந்த உரையாடல் ஜூனைத்திலிருந்து அவன் வாழ்வின் கடைசி தருணத்தினால் ஏற்பட்ட பயத்திற்கு நகர்கிறது. ”நான் இனிமேல் அந்த ரயிலில் பயணிக்க மாட்டேன்.”, ஜூனைத் பயணித்த அந்த கடைசி ரயில் டெல்லி-மதுரா ரயிலைத் தான் சொல்கிறார் முஜாஹித். அந்த ரயிலில் தான் முஜாஹித் தினமும் டெல்லியில் உள்ள தனது கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார். “இனிமேல் நான் வேறு வழித்தடத்தில் தான் செல்ல வேண்டும். அது செலவுமிக்கதாகவும், நீண்ட நேர பயணமாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால், அந்த ரயிலில் என்னால் செல்ல முடியாது.”, முஜாஹித்.

இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறித்து அவர்கள் பேசுகிறார்கள். “நாங்க பெரும்பாலும் சட்டை, பேண்ட் தான் அணிகிறோம். அப்போதுதான் அவர்கள் எங்களை கண்டறிய மாட்டார்கள். ஆனால், என்னுடைய பெயரை கேட்டாலோ அல்லது என்னுடைய குல்லாவின் மூலம் நாங்கள் அடையாளம் கண்டறியப்பட்டால் என்ன செய்வது?”, என கேட்கிறார் ஜூனைத்தின் உறவினர் ரிஸ்வான். அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. ”ஜூனைத் எங்கள விட்டு போனதுக்கப்புறம் நாங்க எல்லாரும் பிரிஞ்சுடுவோம். அவன் தான் எங்களை எல்லாம் இணைக்கும் பசை.”, எனக்கூறி அந்த மௌனத்தை கலைக்கிறார் யாசின்.

----------------------

உள்ளூர் அரசியல்வாதிகள், உறவினர்கள், ஊடகங்கள் என அனைவரும் ஜூனைத்தின் அந்த சிறிய வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்குதான் ஜூனைத், தன் தாத்தா, பெற்றோர், சகோதரர்கள், அவர்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அங்குள்ள ஒரு சிறிய இருட்டறையில் ஜூனைத்தின் அம்மா சாயிரா, சகோதரி ரபியாவை பெண்கள் சிலர் சூழ்ந்துகொண்டு அவர்களை ஆறுதல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்த அறையில் ஜூனைத்தின் வெள்ளைநிற அங்கி தொங்க விடப்பட்டிருந்தது.

”எல்லோருக்கும் ஜூனைத் போன்ற ஒரு மகன் வாய்க்க வேண்டும். அவன் எங்களை பார்த்துக் கொள்வான். உடல்நிலை சரியில்லாதபோது அவன் என் தலையைப் பிடித்து மசாஜ் செய்வான்.", சாயிரா, ஜூனத்தின் அம்மா ஒருவித மனக்குழப்பத்துடனேயே இதை சொல்கிறார். ”ஜூனைத் 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மழைக்காலத்தில் பிறந்தான்., ஜூனைத், ஜூனைத்...”, என சாயிரா முனங்குகிறார். மொட்டை மாடியில் ஒரு கட்டில் நீட்டி வைக்கப்பட்டுள்ளது. ஃபாய்சல், சாயிராவின் கடைசி மகன். ஜூனைத்தின் சில பட்டன்கள் இல்லாத அந்த பழைய அங்கியை கடந்து போகிறான். ”ஜூனைத் தன்னுடைய ஆடைகளில் ரொம்ப கவனமாக இருப்பான். சட்டைகளை அயன் செய்யாமல் அணிய மாட்டான். இந்த அங்கியில் பட்டன்கள் பிஞ்சிட்டதால என்னிடம் கொடுத்துவிட்டான்.”. கடைசி நாளன்று அவன் வாங்கிய புத்தாடைகள் எங்கிருக்கின்றன என்பது யாருக்கும் தெரியவில்லை.

publive-image

”என்னோட குழந்தைக்கு ஆடைகள், வாசனை திரவியம், ஷூ இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்,”, வந்திருந்த உறவினர்களில் ஒருவரை வரவேற்றுக்கொண்டே பேசுகிறார் ஜூனைத்தின் தந்தை ஜலாலுதீன். ஜலாலுதீனின் காரை ஜூனைத் டாக்ஸி போன்று பயன்படுத்துவான். எல்லோரையும் ஏற்றிக்கொண்டு பாலாபார்க் முழுவதும் பயணப்படுவான். அவருடைய இரு மகன்கள் இஸ்மாயில் மற்றும் ஷகீர் ஓட்டுநர்களாக பணிபுரிகின்றனர். மற்ற மகன்கள் ஹஷீம், கசிம், அடில், ஃபாய்சல் நால்வரும் குஜராத்தில் மதரஸாவில் படித்துவருகின்றனர். அவருடைய மகள் ரபியா திருமணமாகி நு-வில் வசிக்கிறார். ஜூனைத்திற்கு 7 அல்லது 8 வயது இருக்கும்போது சூரத்திலுள்ள மதரஸாவில் படித்துக் கொண்டிருந்தான். அதன்பின், சில வருடங்களுக்கு பிறகு மேவத்திலுள்ள மதரஸாவிற்கு படிக்க சென்றான்.

இஸ்லாம், உருது, அரபு குறித்தான ஜுனைத்தின் புத்தகங்கள் பக்கத்து அறையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மீது மெல்லிய தூசு இழையோடிருக்கிறது. ”ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜூனைத் நு-விற்கு வந்து என்னுடைய வீட்டில் குழந்தைகளுடன் விளையாடுவான்.”, ரபியா, ஜூனைத்தின் சகோதரி அவனுடைய புத்தகமொன்றை புரட்டிக்கொண்டே சொல்கிறார். ”நான் அவனுக்காக சமைத்து தருவேன். தூங்க வெகுநேரமாகிவிடும். எங்களுடைய குடும்பம், உறவினர்கள், கிராமம் குறித்து உரையாடுவோம். அவனுக்கு படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். பெரிய இமாம் ஆகனும்னு எங்ககிட்ட சொல்லிட்டே இருப்பான்”.

மேவத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் நமாக் எனும் கிராமத்தில் உள்ள மதரஸாவில், ஜூனைத் தான் பெரிய இமாம் ஆவதற்கான கனவை நோக்கி படித்துக் கொண்டிருந்தான். ”ராம்ஜானுக்காக வீடு திரும்பும் மாணவர்கள் 10 நாட்கள் விடுமுறைக்குப் பின் மதரஸாவிற்கு வருவார்கள். அவ்வாறு மதரஸாவிற்கு மீண்டும் வரும் மாணவர்களில் ஜூனைத்தும் ஒருவனாக இருப்பான் என நினைத்தேன்.”, ஜூனைத் படிக்கும் மதரஸாவின் முதல்வர் சஃபாருதீன் கஸ்மி. ”இஸ்லாமிய படிப்புகளின் ஒரு பிரிவான அலிம் படிப்பை அவன் படிக்க வேண்டும் என நினைத்தான். அது அவ்வளவு எளிதான படிப்பு அல்ல. அதனை முடிக்க 8 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால், ஜூனைத் அதனை கண்டிப்பாக வெற்றிகரமாக முடிப்பான் என நம்பினேன். ஹஃபிஸ் தேர்வைக்கூட அவன் நன்றாக எழுதியிருந்தான்”, சஃபாருதீன்.

மதரஸாவில் படிப்பது கடினமான நேரபட்டியலை உள்ளடக்கியது. “ஆனால், ஜூனைத் கடினமாக உழைத்தான். ஏனென்றால், அவனிடம் கடும் லட்சியம் இருந்தது.”, சஃபாருதீன். ஜூனைத் மற்றும் அவன் வகுப்புத் தோழர்கள் எல்லோரும் காலையில் 5 மணிக்கு எழுந்து நமாஸ் செய்வார்கள். அதன்பின் 6 மணிக்கு காலை உணவு. அடுத்த 4 மணிநேரம் புத்தகங்களுடன் நேரம் செலவிட வேண்டும். பிறகு, 11 மணிக்கு மதிய உணவு. அடுத்து மதியம் 2 மணி வரை புத்தகங்களுடன். மாலையில் 5-7 இதற்குள்ளான சிறிய நேரத்தில் தான் ஜூனைத் விளையாடுவான். பெரும்பாலும் கிரிக்கெட்.

-----------------

ஜூனைத்தின் கடைசி 24 மணிநேரம் ஒரு விருந்துடன் ஆரம்பமானது. ஜூன் 21, இரவு 11 மணிக்கு அந்த கிராமத்தின் மஸ்ஜித் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார், ஜூனைத் ஹஃபீஸ் ஆனதற்காக. ”குர்-ஆனை படித்ததற்கு பின் அனைவரும் ஜூனைத்திற்கு பரிசாக பணத்தை தந்தனர். அதை எடுத்துக்கொண்டு மறுநாள் காலை ரம்ஜானுக்காக புத்தகங்கள் வாங்க சென்றான்.”, கசிம், ஜூனைத் சகோதரர்.

publive-image ஜூனைத் தன் அம்மாவின் அருகில்.

"விருந்து முடிந்தபின், அதிகாலை 4.30 மணி வரை ஜூனைத் என்னுடன் இருந்தான். நாங்கள் நமாஸ் செய்தோம். அதன்பின் நான் தூங்கிவிட்டு காலை 8 மணிக்கு எழுந்தபோது, ஜூனைத் சகோதரர்களுடன் டெல்லிக்கு சென்றிருந்தான்.”, ஜலாலுதீன், ஜூனைத் உடனான அவருடைய கடைசி வரிகளை நினைக்கையில் அவர் குரல் தழுதழுத்தது. ”நான் அவனை போக வேண்டாம் என கூறினேன். காரில் அழைத்துப் போவதாக சொல்லியிருந்தேன். இந்நாட்கள் அவ்வளவு நல்லவையாக இல்லை. முஸ்லிம்கள் தங்களுடைய தாடிகள், குல்லாவின் பெயர்களால் தாக்கப்படுகிறார்கள்.”, ஜலாலுதீன்.

அதன்பிறகுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அவர்கள் டெல்லியின் சதார் பஜார் நிலையத்தில் இறங்கினர். ”நாங்கள் முதலில் அங்குள்ள மதரஸாவிற்கு சென்றோம். அங்குதான் நான் படித்தேன்.என்னுடைய ஆசியர்களை அங்கு சந்தித்தோம். அங்கிருந்து 2 மணிவாக்கில் கிளம்பினோம்.”, ஹஷீம், அவரது கண்ணில் நீர் சொறிந்தது. அதன்பின், நால்வரும் ஜமா மஸ்ஜித்திற்கு சென்று ஈத் பெருநாளில் அணியவேண்டிய புத்தாடைகளை வாங்கினர். அங்குதான் வாழ்நாளில் மறக்க இயலாத புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும் எடுத்துக்கொண்டனர். அதில், ஒரு புகைப்படத்தில் ஜூனைத் வெள்ளை சட்டையும், ஜீன்ஸ் பேண்ட், ஷூ அணிந்திருந்தான்.

”அவன் ஹஃபீஸாக இருப்பதால் பெரும்பாலும் குர்தா-பைஜாமாவைத் தான் அணிவான். ஆனால், அன்று ஜீன்ஸ் அணிந்துகொண்டு ஊரார் கண்ணில் படாமல் வேறு வழியில் வந்தான்.”, ஜூனைத்தின் நண்பன் யாசின். அதற்கு முந்தைய இரவுதான் யாசினை தன்னோடு வருமாறு ஜூனைத் சமாதானப்படுத்தினான். “என்னிடம் பணம் இல்லாததால் நான் வரவில்லை என்று சொன்னேன். ஆனால், எனக்கு அவன் பணம் செலுத்துவதாக சொன்னான்.”, யாசின்.

5 மணியளவில் அவர்கள் ஊர் திரும்ப ரயில் ஏறினர். சுமார் 7.20 மணிவாக்கில், அன்றைய இஃப்தார் முடியும் தருவாயில், ஜூனைத்தின் தந்தைக்கு ஓர் அழைப்பு வந்தது, பல்லாபார்க் ரயில் நிலையத்தில் அவருடைய மகன்கள் ஆபத்தில் இருப்பதாக. "நான் ரயில் நிலையத்திற்கு ஓடினேன், ஆனால் ரயில் அந்நேரத்தில் கிளம்பிவிட்டது. அதனால் என்னுடைய வீட்டிற்கு சென்று ஒரு டம்ளர் தண்ணீர், வாழைப்பழம் உட்கொண்டு என்னுடைய நோன்பை முடித்தேன். அதன்பின், என் மகன்களிடமிருந்தும் அக்கம்பக்கத்தினரிடமிருந்தும் எனக்கு அழைப்பு வந்த வண்ணம் இருந்தது, பல்வாலில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக வரச்சொல்லி.அங்கு என் மகன்கள் ஷகீர் மற்றும் ஹசீன் ரத்தக்கறைகளுடன் படுக்கையில் கிடந்தனர். ஆனால், ஜூனைத்தை காணவில்லை. அவன் ஐ.சி.யு.வில் இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.”, அவருடைய குரல் சீராக இருந்தது, அன்றைய இரவின் கொடூரத்தை மீண்டும் நினைவுபடுத்தும்போது.

"காலை 5 மணி இருக்கும். என் தந்தை சவப்பெட்டி பற்றி பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஜூனைத் உயிருடன் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் நொடிந்து விட்டேன்.”, கண்ணீருடன் போராடிக்கொண்டே ஜலாலுதீன் சொல்கிறார். அனைவரின் வாழ்வையும் மனதையும் தொட்டுவிட்ட அந்த 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்திற்கு ஏராளமானோர் திரண்டனர். "அவ்வளவு பேர் திரண்டனர். அவனது உடலில் அள்ளிப்போட அவர்களிடம் மண் இல்லாத அளவுக்கு.”, ஜூனைத்தின் நண்பன் முஜாஹித். ”அவன் எல்லோருக்கும் ஏதோ ஒருவகையில் அர்த்தமானான். ஆனால், இப்போது அவன் ரயிலில் இறந்துபோன ஒரு சிறுவன்.”, ஜூனைத்தின் நெருங்கிய நண்பன் யாசின்.

இந்தியன் எக்ஸ்பிரஸிற்காக சௌமியா லகானி எழுதியது.

தமிழில் நந்தினி வெள்ளைச்சாமி.

Bjp Rss Hindutva
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment