சிதம்பரம் பார்வை : நல்லது செய்யுங்கள். முடியாவிட்டால் தீயதை செய்யாதிருங்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிச்சயமாக கருப்புப் பணத்தையோ, கள்ளப் பணத்தையோ ஒழிக்கும் ஆயுதம் அல்ல. ஆனாலும் இந்த ஆயுதத்தைத்தான் அரசு பயன்படுத்தியது.

ப.சிதம்பரம்

பொய், புரட்டு, வாய் சவடால் ஆகிய அத்தனைக்கும் ஒரு எல்லை உள்ளது. ஒரு கட்டத்தில் அவை அம்பலப்பட்டு உண்மை வெடித்து வெளியேறும்.

ஒரு ஆண்டுக்கு பிறகு, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான காரணங்கள் என்று சொல்லப்பட்டவை அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன. பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பின் நோக்கம் என்று சொல்லப்பட்டவற்றில் சிலவற்றை பார்ப்போம். போலி நோட்டுகள் ஒழிப்பு என்பது முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த காரணம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது.

போலி நோட்டுக்கள் ஒழிந்து விட்டனவா ?

ஒரு ஆண்டு கழித்து மதிப்பிழக்கப்பட்ட 15,28,000 கோடி செல்லாத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்தன. இதில் போலி நோட்டுகள் வெறும் 41 கோடி மட்டுமே. இது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களில் 0.0027 சதவிகிதம் மட்டுமே. இவ்வளவு சிறிய தொகையா என்று வியக்கும் முன்னர் இதையும் கேளுங்கள். கள்ள நோட்டுக்கள் முன்பு இருந்ததை விட, மிகவும் தரமானதாக, எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மாறியுள்ளன என்று கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை கண்காணிக்கும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2017 வரை, வருவாய் புலனாய்வுத் துறை புதிய 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களில் 35 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை மும்பை, பூனா மற்றும் பெங்களுரில் கைப்பற்றியுள்ளனர். வருவாய் புலனாய்வுத் துறையை சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட உடன் சிக்கிய கள்ள நோட்டுகள் தரம் குறைந்தவையாக இருந்தன. ஆனால், சமீபத்தில் சிக்கிய நோட்டுகள் தரம் உயர்ந்தவையாக உள்ளன. சாதாரண மனிதரால் வேறுபாட்டை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

கள்ள நோட்டுகள் குறித்து அறிந்தவர்களுக்கு இது பெரிய வியப்பை ஏற்படுத்தாது. ஒரு மனிதன், நல்ல தொழில்நுட்பத்தில், புதிய கரன்சி நோட்டுக்களை அச்சடிக்க முடியும் என்றால் சில காலம் கழித்து இன்னொரு மனிதனாலும் அதை உருவாக்க முடியும்தானே? பண மதிப்பிழப்பு நடவடிக்கை கள்ள நோட்டுக்கு தீர்வு கிடையாது. அது தீர்வாக இருந்தால், ஒவ்வொரு நாடும் இதை செயல்படுத்தும். கடந்த 50 ஆண்டுகளாக எந்த பெரிய நாடும் இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை. இந்த சாதாரண விஷயம் கூட அரசாங்கத்துக்கு நவம்பர் 2016ல் தெரியாமல் போய்விட்டது.

ஊழல், கருப்புப் பண ஒழிப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் என்று 8 நவம்பர் 2016 அன்று பிரதமர் கூறிய மற்ற இரண்டு காரணங்களும் இதே போன்றதுதான். ஊழல் ஒழிப்பு மற்றும் கருப்புப் பண ஒழிப்பு. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் ஊழல் திளைக்கிறது. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக தொடர்ந்து பிடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொது ஊழியர்கள் கைது செய்யப்பட்டு ஊழல் வழக்கை எதிர்கொள்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஏற்றுக் கொண்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கும் பழக்கம், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும், நடந்து கொண்டுதான் இருக்கிறது. பண மதிப்பிழப்பால், இந்த லஞ்ச நடவடிக்கைகளில் எவ்வித தொய்வும் இல்லை.

கருப்புப் பணத்தை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் உருவாகும் வருமானத்தில் ஒரு பகுதி வரி செலுத்தப்படாமல் மறைத்து வைக்கப்படுகிறது. அது லஞ்சம் கொடுக்கவும், தேர்தல் செலவுகளுக்கும், கல்லூரிகளில் சேர்க்கைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தவும், தொழிலாளர்களை தின வேலைக்கு நியமிப்பது போன்ற பணிகளுக்கும் பயன்படுகிறது. நகை வாங்குதல், கட்டுமானப் பணிகள், மொத்த வணிகம் போன்றவற்றில் இந்த கணக்கில் வராத பணம் புழங்கிக் கொண்டு உள்ளது. கள்ளக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தங்கக் கடத்தல், பாலியல் தொழில் போன்ற சட்டவிரோத தொழில்கள் கருப்புப் பணத்தின் அடிப்படையில்தான் நடக்கின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிச்சயமாக கருப்புப் பணத்தையோ, கள்ளப் பணத்தையோ ஒழிக்கும் ஆயுதம் அல்ல. ஆனாலும் இந்த ஆயுதத்தைத்தான் அரசு பயன்படுத்தியது. முன்யோசனை இல்லாத ஒரு அவசரமான, கண்மூடித்தனமான இந்த நடவடிக்கை பொருளாதாரத்துக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பல லட்சம் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல நிதியமைச்சர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நேர்மையான, தார்மீகமான நடவடிக்கை என்று கூறினார். அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

1) கோடிக்கணக்கான மக்கள் மீதும், 15 கோடிக்கும் அதிகமான தினக் கூலி பணியாளர்கள் வாழ்விலும் வேதனையை ஏற்படுத்தியது தார்மீகமான செயலா? இந்திய உழைக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையான இந்த பிரிவில், விவசாயக் கூலிகள், சாலைகளில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் சாதாரண இதர கூலித் தொழிலாளர்களும் அடங்குவர். பல வாரங்களுக்கு தினக் கூலி வழங்கப்படாமல் அவதிப்பட்ட அவர்கள் கடன் வாங்கி கடன் வாங்கி, பெரும் கடனாளியாக நிற்கிறார்கள்.

2) 15,40,000 வேலைகள் ஜனவரி முதல் ஏப்ரல் 2017 வரையிலான காலத்தில் காலாவதியாகின. இது தார்மீகமான செயலா? இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு, மேலும் 4,20,000 வேலைகள் மே முதல் ஆகஸ்ட் 2017 வரையிலான காலத்தில் காலாவதியாகின என்று கூறுகிறது. இப்படி வேலையிழந்தர்கள் பலர் இன்னும் வேலையில்லாமல்தான் இருக்கிறார்கள். மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சொன்னது போல, வேலையிழந்த அத்தனை பேரும், மற்றவர்களுக்கு வேலை வழங்கும் தொழிலதிபர்களாக ஆகாமல் இருந்தால் அத்தனை பேரும் இன்னமும் வேலையில்லாமல்தான் இருக்கிறார்கள்.

3) ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளியது தார்மீக நடவடிக்கையா? இது ஊகத்தில் கூறப்படுவது அல்ல. உண்மை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு ஆண்டு நிறைவில், செய்தித் தாள்களில் இது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. உதாரணமாக திருப்பூரில் பழைய பேருந்து நிலையம் அருகே பெரும் தொழிற்சாலைகளின் துணை நிறுவனங்களாக 1500 நிறுவனங்கள் இருந்தன. தற்போது 500க்கும் குறைவான நிறுவனங்களே உள்ளன. மீதம் உள்ளோர், தொழில்களை மூடி விட்டனர் அல்லது, வேலைக்கான ஆர்டர்கள் இல்லாமல் காத்திருக்கின்றனர். இதே போல, ஆக்ரா, ஜலந்தர், சூரத், பிவாந்தி போன்ற பல இடங்களில் தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

4) கருப்புப் பணத்தை எளிதாக வெள்ளைப் பணமாக மாற்ற அரசே வழி வகை செய்து தந்தது தார்மீக செயலா? பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்துள்ளது என்பதை அரசே ஒப்புக் கொள்கிறது. கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை தேடி கண்டுபிடித்து, தண்டிப்போம் என்று அரசு கூறுகிறது. இதை சொல்வது எளிது. செயல்படுத்தவது மிகவும் கடினம். ஒரு ஆண்டில் வருமான வரித் துறை எத்தனை வழக்குகளை புலனாய்வு செய்து முடிவு செய்கிறது? வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ஆகஸ்ட் 2017 அன்று உள்ளபடி, அதன் முன் நிலுவையில் உஙளள 94,000 வழக்குகளை எப்போது முடிவு செய்யும். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மிக எளிதாக தங்கள் பணத்தை வெள்ளையாக்குவதற்கு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியுள்ளது என்ற குற்றச்சாட்டை மறுக்கவே முடியாது. இவர்களில் பலரை எந்த நாளும் பிடிக்க முடியாது.

நாட்டின் மக்களுக்கு தீமையை செய்யும் ஒரு மன்னரை குறிக்கும் 551வது குறள் என் நினைவுக்கு வருகிறது. மக்களுக்கு சிரமத்தையும் துன்பத்தையும் அளிக்க எந்த அரசுக்கும் உரிமை இல்லை. ஹிப்போகிராட்டிஸ் “தீமை செய்யாதே” என்று கூறியதைத்தான் சுட்டிக் காட்ட வேண்டும்.

(முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 12.11.2017 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

×Close
×Close