பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பாகிஸ்தான் டெஹ்ரீக் இ இசாஃப் என்ற கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இம்ரான் கான் வெற்றி
மாபெரும் வெற்றி என்று இல்லாவிட்டாலும் 137 என்ற பெரும்பான்மைக்கு மிக அருகில் வெற்றியை தக்கவைத்தது அவரின் கட்சி. 116 இடங்களில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முதல் நாள் நவாஸ் செரிஃப் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் பெனாசீர் பூட்டோவின் மகன் பிரதமராக பதவி ஏற்பார் என்றும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு முறை எப்படி இருக்கும்?
புதிதாக அமைந்திருக்கும் இந்த அரசிடம் இருந்து இந்தியா நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், இந்த தேர்தலால் ஒன்றுமே ஆகப் போவதில்லை என்பதால் பாகிஸ்தான் மீதான நிலைப்பாட்டினை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஒரு விசயத்தை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இது வரை பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த ஆட்சிகள் தான். 71 வருட சுதந்திர பாகிஸ்தானை 31 வருடங்கள் ராணுவம் ஆட்சி செய்தது. சில ஆண்டுகள் மட்டும் மிக அரிதாக மக்களாட்சி நடைபெற்று வந்தன. பின்னர் மக்களாட்சியுடன் கூடிய ராணுவ ஆட்சியும் நடைபெற்று வந்தது. இந்த மூன்று விதமான ஆட்சியையும் நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் பற்றி வரும் போது அத்தனை எளிதாக நம்மால் கண்டு கொள்ளாமல் இருந்துவிட முடியாது.
இந்தியாவுடனான நல்லுறவினைப் பற்றி நிச்சயம் இம்ரான் கான் யோசிப்பார். யோசிக்கத் தொடங்கிவிட்டார். அதைப் பற்றி பேசவும் ஆரம்பித்துவிட்டார் இம்ரான் கான். அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம், அண்டை நாடுகளுடனான உறவு, சர்வதேச பிரச்சனைகள், மற்றும் மிக முக்கியமான பிரச்சனையான காஷ்மீர் பற்றியும் அவர் பேசத் தொடங்கிவிட்டார்.
இந்தியா பாகிஸ்தானுடன் இணைந்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பற்றியும் யோசிக்க வேண்டும். வர்த்தகம், போக்குவரத்து, கலாச்சாரம், சுற்றுலாத்துறை, புனிதப் பயணங்கள், மருத்துவப் பயணங்கள் ஆகியவற்றைப் பற்றியும் பாகிஸ்தானுடன் பேச இந்தியா முன் வர வேண்டும். இந்த முன்னேற்றங்களால் இரு நாடுகளும் பயனடைவார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று.
அமைதிப் பற்றிய பேச்சு வார்த்தை
காஷ்மீர், சியாச்சின், சர் கிரீக் ஆகியவற்றைப் பற்றியும் அதன் மீதான ஆக்கிரமிப்பு குறித்தும் பேச வேண்டிய சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் இருக்கிறது. ஆக்கிரமிப்பு, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என இரண்டையும் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக மட்டுமே தடுத்து நிறுத்த முடியும்.
தீவிரவாதம் என்று வரும் போது எந்த ஒரு சமரசம் இல்லாமல் இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மும்பை குண்டு வெடிப்பும் அதனால் பலியான 66 பேரின் வாழ்வினையும் யோசிக்கும் போது இன்னும் பயமாக இருக்கிறது. பாகிஸ்தானில் வாழும் யாரும் இப்படியான குற்றங்களை செய்திருந்தால் யோசிக்காமல் நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவார் இம்ரான் என நம்புகிறேன்.
இம்ரான் கான், "இந்தியா அமைதி பேச்சுவார்த்தைக்காக ஒரு அடி முன்வைத்தால் பாகிஸ்தான் இரண்டடி முன்னெடுத்து வைக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அவரின் பிரதமர் பதவியேற்பிற்கான உரையாக கொண்டாலும் அவரின் வார்த்தையை நாம் எடுத்துக் கொள்வதில் பிரச்சனை ஏதும் வராது என்று தான் நினைக்கின்றேன்.
அவசர நிலையில் எடுக்கப்படுகின்ற முடிவுகளால் எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிட இயலாது. மும்பை தாக்குதலுக்கு பின்பு இந்தியா பாகிஸ்தான் மீது போர் எதுவும் தொடுக்கவில்லை. அதே போல் அமைதி பேச்சுவார்த்தைக்கும் இந்தியா மறுப்பு தெரிவிக்கவில்லை.
2008ல் இருந்து 2014 வரை இந்தியாவில் எந்தவிதமான தீவிரவாத தாக்குதல்களும் நடைபெறவில்லை. அதே போல் ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறை மற்றும் தாக்குதல்களின் அளவும் 2010 - 2014ல் மிகவும் குறைவாக இருந்தது.
இம்ரான் கான் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டும். அந்நாடு பெற்றிருக்கும் கடன் மற்றும் வெளிநாடுகளுக்குள் இருக்கும் உறவு முறைகள் அனைத்தையும் யோசித்து செயல்பட வேண்டிய பொறுப்பில் இம்ரான் கானும் அவருடைய ஆட்சியும் இருக்கிறது.
தமிழில் நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.