scorecardresearch

ப. சிதம்பரம் பார்வை : அழிவை நோக்கிய காஷ்மீரின் பாதை

லேஹ் வேலி ஜம்முவைப் போல் இருக்கிறது. காஷ்மீரைப் போல் கார்கில் இருக்கிறது…

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு புதிய கவர்னர் வந்துள்ளார், புதிய தலைமைச் செயலாளர், மற்றும் காவல்துறை ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எதற்காக? காஷ்மீர் பள்ளத்தாக்கில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறாமல் இருப்பதற்காக.

இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் நான்கு கட்டங்களாக நடைபெறும். முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 8.2 % மற்றும் 3.3 % மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. சில வார்டுகளில் வேட்பாளர்களே நிறுத்தப்படவில்லை. சில வார்டுகளில் ஒருத்தரே வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்னப்போஸ்ட்டாக அவரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் – நடப்பது என்ன ?

ஹூரியத் இயக்கம் மக்களிடத்தில், தேர்தலை புறக்கணிப்பது குறித்து பேச்சு நடத்தியது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் இரண்டு மிகப் பெரிய கட்சிகளான நேசனல் கான்ஃபிரன்ஸ் மற்றும் பீப்பிள் டெமோக்ரெடிக் பார்ட்டி என இரண்டு கட்சிகளும் தேர்தலில் பங்கேற்காமல் விலகி நின்று கொண்டன. காஷ்மீரின் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு சரிவர அமைக்கப்படவில்லை என்றால் தேர்தலில் பங்கேற்பது குறித்து மறு சீராய்வு செய்யப்படும் என்ற ரீதியில் கூறியது.

வேறெங்கும் எப்போதும் நடைபெறாத வகையில் ஒரு தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆம் வேட்பாளர் பட்டியல் கிடையாது, தேர்தல் வாக்குறுதிகள் கிடையாது, பிரச்சாரங்கள் கிடையாது. ஆனாலும் இது தேர்தல் தான்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஜம்மு காஷ்மீர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. லேஹ் வேலி ஜம்முவைப் போல் இருக்கிறது. காஷ்மீரைப் போல் கார்கில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் அதற்கான தனித்த அடையாளங்களுடன் திகழ்கின்றன.

அரசியல் தீர்வுகள் தேடும் காஷ்மீர் பள்ளத்தாக்கு

இங்கு சூழ்நிலைகள் எப்போதுமே சற்று சிக்கலானதாகவே இருக்கும். இதனை மேலும் சிக்கலாக்கியது பாஜக மற்றும் பிடிபி கட்சியின் கூட்டணி. எதிரெதிர் கருத்தோட்டங்களைக் கொண்ட இந்த கூட்டணி ஜூன் 19, 2018 அன்றோடு முடிவிற்கு வந்தது.

அந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழும் அனைத்து குழப்பங்களுக்கும் அரசியல் ரீதியான முடிவுகள் கிடைக்க வேண்டுமென மக்கள் விரும்பினார்கள். அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில், ஒவ்வொரு பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு முடிவுகளை நோக்கி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மனிதம் என்ற வார்த்தையை இப்பிரதேசத்தில் மலர வைத்தார். லாகூருக்கு பேருந்து வசதியை கொண்டு வந்தார். அன்று பாகிஸ்தானின் அதிபராக இருந்த முஷாரப்பை ஆக்ராவிற்கு பேச்சு வார்த்தைக்காக அழைத்தார். சில முயற்சிகள் தோல்விகளை சந்தித்தது. காரணம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் தன் கட்சியில் இருக்கும் மாற்றுக் கருத்துடைய தலைவர்களும் தான்.

நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்திலும் கூட இது போன்ற நிறைய அணுகுமுறைகள் வாய் வார்த்தைகளாக இருந்தன. ஆனால் அதற்கான பாலிசி என்று ஏதாவது இருக்கிறதா என்று தான் தெரியவில்லை.

ஏன் மக்கள் கொல்லப்படுகிறார்கள்?

அதிகாரப் போக்குடன் மக்களை அணுகும் நரேந்திர மோடி எதிர்மறை கருத்துகளை பாலிசிகள் மற்றும் சட்ட ஒழுங்கு என்ற பெயரில் அடக்க நினைக்கிறார். தேசியம் என்ற பிடியில் அனைவரையும் ஒருங்கிணைக்க நினைக்கிறார் மோடி.

அதற்கான விலையைத் தான் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு நாம் இப்போது கொடுத்து வருகிறோம். சாதாரண போராட்டங்களில் பங்கேற்கும் போராட்டக்காரர்கள் தொடங்கி, எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வரை அனைத்தும் அதிகரித்துவிட்டது. 121 மக்கள் 2015ம் ஆண்டு கொல்லப்பட்டனர்.

2016ல் அது 371ன்றாக உயர்ந்தது. பின்னர் 2017ல் 407ஆக விஸ்வரூபம் எடுத்தது.  தொடர்ந்து நாக்ரோட்டா, குல்ஹாம், ஆனந்தநாக், புல்வாமா, சோபியான் என ஒவ்வொரு பகுதியிலும் கலவரங்கள் வெடித்தன. வளரும் நிறைய இளைஞர்கள் போராட்டக்காரகளாகவும், கலகக் காரர்களாகவும் மாற்றம் அடைந்தனர். இந்து நாளிதழின் கணக்குப்படி (ஆகஸ்ட் 27,2018) 2017ல் 126 இளைஞர்கள் கலவரக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். 2018ல் 131ன்றாக அது அதிகரித்திருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என்ன?

முன்னேற்றம் என எதுவும் கிடையாது. மாறாக தங்களில் இருப்பு நிலையில் அதிக அளவு சரிவினை சந்தித்திருக்கிறது காஷ்மீர் பள்ளத்தாக்கு. ஆரம்பப் பள்ளி கல்வியை கற்காமல் பாதியில் நிற்பவர்களின் எண்ணிக்கை 6.93 சதவிகதத்தில் இருந்து 10.3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இடைநிலைப் பள்ளியில் படிப்பினை பாதியில் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை 5.36 சதவிகதத்தில் இருந்து 10.2 %மாக உயர்ந்திருக்கிறது.

மாநிலத்தில் 1552 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை மாறி 1880 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மேலும் அமைதி என்ற சூழலை கொண்டுவர இந்த அரசு ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 2017-ல் கூறிய வார்த்தைகளை நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு பதில் இல்லை. கத்துவா சிறுமியின் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு நேரடியாக பாஜக அளித்த ஆதரவு காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களை மேலும் தனிமைப்படுத்தியிருக்கிறது. 2001ம் ஆண்டில் தொடங்கி 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் செய்த முயற்சிகள் அனைத்தும் வீண் என்ற நிலைக்கு மாற்றிவிட்டது இன்றைய ஆட்சி.

இன்று ஒரு சூழல் மோசமானதாக காணப்பட்டால், அது நாளை மிக மோசமான சூழலை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக நேற்று (14/10/2018) அன்று எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம். 

தமிழில் நித்யா பாண்டியன்

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Across the aisle in jk the road to disaster