செயற்குழு, பொதுக்குழு என்பவை சம்பிரதாய சடங்குகள் என்பது அரசியல் அரிச்சுவடி! ஆனால் ‘ஆளுமைகள்’ என்கிற சகல அதிகாரம் கொண்ட சர்வாதிகார பிம்பங்கள் இல்லாத சூழலில்தான், ‘ஜனநாயகம்’ பூத்துக் குலுங்குகிறது.
திங்கட்கிழமை (செப். 28) சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஆளாளுக்கு பேசும் வாய்ப்பு பெற்றதை; பேசியதை; கட்டுப்பாடற்ற தன்மை என சிலர் விளிக்கலாம். உள்கட்சி அமர்வுகளில் காணக் கிடைத்த அதிகபட்ச ஜனநாயகமாகவும் இதைப் பார்க்கலாம்.
முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற சர்ச்சை சில வாரங்களாக அதிமுக முகாமை உலுக்குவது நிஜம். ஆனால் திங்கட்கிழமை கூட்டத்தின் பிரதான அஜன்டா அது இல்லை. தேர்தல் ஆணைய விதிப்படி, வழக்கமாக நடத்தப்பட வேண்டிய செயற்குழு இது. அந்த அடிப்படையில் கூடி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தும், தமிழக அரசைப் பாராட்டியும் தீர்மானங்களை நிறைவேற்றினர். அது பெரிய செய்தியாகவும் இல்லை; விவாதத்திற்கும் வரவில்லை.
அதைத் தாண்டிய நிகழ்வுகள் அனைத்தும் காரசாரமாக அரங்கேறின. வழக்கமாக தலைமைக் கழகத்தில் ஒரு கூட்டம் என்றால், சென்னை அதிமுக தொண்டர்கள் அங்கே திரள்வார்கள். இந்த முறை தேனி, மதுரைக்காரர்கள் திரளாகத் தெரிந்தனர். அவர்களில் பலரது கைகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முகம் தாங்கிய மாஸ்க்-கள்! ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தபோது, ‘வருங்கால முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க!’ என அவர்கள் கோரஸாக கோஷமிட்டபோதே, கட்சிக்குள் கோஷ்டியுத்தம் கும்மியடிப்பது வெளிப்படையாக தெரிந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது, அந்த அளவுக்கு ஆரவாரம் இல்லையென்றாலும், சிலர் ‘நிரந்தர முதல்வர் இபிஎஸ்’ என்கிற கோஷத்தை முன்வைத்தனர். வெளியே ஓபிஎஸ் தரப்பு இப்படி ‘மாஸ்’ காட்டியதால், உள்ளே செயற்குழுவிலும் ஏக முன்னேற்பாடுகளை செய்திருக்கக் கூடும் என்றே வெளியே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நினைத்தனர்.
ஆனால் அரங்கிற்குள் நடந்த கதையே வேறு! ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்து முடித்தவுடன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தான் விவகாரத்தை ஆரம்பித்தார். (திண்டுக்கல்லில் ஓபிஎஸ் தரப்பு நத்தம் விஸ்வநாதனை முன்னிலைப்படுத்துவதால், சீனிவாசன் தன்னை முதல்வர் தரப்பாக முன்னிலைப்படுத்த வேண்டிய சூழல்!) ‘அப்புறம் என்ன? அப்படியே முதல்வர் வேட்பாளர் பற்றியும் இன்னைக்கே ஒரு முடிவை எடுத்துடுவோம்’ என்றார் திண்டுக்கல்லார்.
இதை எதிர்பார்த்திருந்ததுபோல எழுந்தவர், அமைச்சர் செங்கோட்டையன். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்மொழியாவிட்டால், நமது ஆட்சியை நாமே ஏற்காதது போல ஆகிவிடும். எனவே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என்றார்.
உண்மையில் ஓபிஎஸ் தரப்பு இதை எதிர்பார்க்கவே இல்லை. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ மாதிரி யாராவது பேசலாம்; கே.பி.முனுசாமி மாதிரி நபர்கள் கையசைத்து அவர்களை உட்கார வைத்துவிடலாம் என்றே ஓபிஎஸ் தரப்பு நினைத்திருக்கக் கூடும். எந்தக் கோஷ்டியாகவும் தன்னை வலிந்து அடையாளம் காட்டாத சீனியர் செங்கோட்டையன் இப்படி சிக்சராக ஆரம்பித்ததுதான், செயற்குழுவில் இபிஎஸ் தரப்பின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
செங்கோட்டையன் அமர்ந்ததுமே மற்றொரு கொங்கு மந்திரியான தங்கமணி எழுந்தார். இபிஎஸ் ஆதரவாளராக கூறப்பட்டாலும்கூட, ஓபிஎஸ்-உடனும் நல்ல உறவைப் பேணுபவர் இவர். இவரும், செங்கோட்டையன் கருத்தை ஒட்டியே பேசி அடுத்த சிக்சரை விளாசினார்.
ஓபிஎஸ் தரப்பில் மேடையிலிருந்த அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலப் பிரச்னையால் அவதிப்படுவதால், அவரால் பெரிதாக ரீயாக்ட் செய்ய முடியவில்லை. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முறையே ஓ.பி.எஸ், இபிஎஸ் ஆதரவாளர்களாக அறியப்பட்டாலும், இரு தரப்பையும் அனுசரிக்கும் நிலைப்பாடை முன்பே எடுத்துவிட்டனர். இதனால் வெளியா மாஸ் காட்டிய ஓ.பி.எஸ் தரப்புக்கு, உள்ளே குரலில் வலு இல்லை.
வேறு வழியின்றி, ஓபிஎஸ்.ஸே எழுந்தார். ‘கட்சி இணைந்தபோது, இந்த முறை மட்டுமே துணை முதல்வர் பதவியை ஏற்க சம்மதித்தேன்’ என அழுத்தமாக குறிப்பிட்டார் ஓபிஎஸ். அதாவது, வருகிற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிற்க விரும்புவதையே சூசகமாக சொன்னார் அவர். தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ‘இணைப்புப் பேச்சுவார்த்தையின்போது இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஆளுக்கு இரண்டாண்டு முதல்வராக இருக்கலாம்’ என என்னிடம் சொல்லப்பட்டதைக்கூட நான் வலியுறுத்தவில்லை’ என குறிப்பிட்டாராம். அப்போது தங்கமணி எழுந்து, ‘அப்படி நாங்கள் உங்களிடம் சொல்லவே இல்லை’ என மறுத்திருக்கிறார். செயற்குழுவில் சூடு அதிகரித்த சூழல் இது.
தன்னை 2 முறை முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர்த்தியது பற்றியும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுப் பேசினார். இணைப்புப் பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டபடி 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு மூலமாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.
தனது பேச்சில் நேரடியாக தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றோ, இபிஎஸ்-ஸை முதல்வர் வேட்பாளர் ஆக்கக்கூடாது என்றோ ஓபிஎஸ் வாதிடவில்லை. 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டால், அதில் 5 உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பார்கள். இப்போதைய முக்கிய 5 நிர்வாகிகளில் தன்னையும் சேர்த்து 3 பேர் ஆதரவு (ஓபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி) தனக்கு இருப்பதால், சரிபாதி பலம் தன் பக்கம் இருக்கும் என ஓபிஎஸ் கணக்கிடுவதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் ஆதரவாளர்களாக அறியப்படும் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரும் வழிகாட்டும் குழு அவசியத்தை கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் கோரஸாக மற்றவர்கள், ‘அது இப்போது தேவையில்லை. முதல்வர் வேட்பாளர்தான் முக்கியம்’ எனகூற, அவர்களது குரல் எடுபடவில்லை.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா எழுந்து, ‘இபிஎஸ் ஆட்சியில் யாராவது குறை இருந்தால் சொல்லுங்கள். அவரை முன்னிறுத்தாமல் நாம் எப்படி ஜெயிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், முதல் தேர்தலில் சேவல் சின்னத்தில் நின்றதைக் குறிப்பிட்டார். அதாவது, ஆரம்பம் முதல் ஜெயலலிதாவின் ஆதரவாளராக தான் வளர்ந்ததாக தன்னை அடையாளப்படுத்தினார் அவர். ஓ.பிஎஸ் அதே காலகட்டத்தில் ஜானகி அணியில் இருந்ததை நினைவுபடுத்தும் கூற்றாக அது பார்க்கப்பட்டது.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியைக் காப்பாற்றியது (ஓபிஎஸ் தரப்பு எதிர்த்து வாக்களித்தும்கூட), கட்சியை ஒருங்கிணைத்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டிய இபிஎஸ், ஒருங்கிணைப்புக் குழு இப்போது தேவையில்லை என முடித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார் உள்பட பலர் தொடர்ந்து, ‘முதல்வர் வேட்பாளராக இன்றே இபிஎஸ்.ஸை முடிவு செய்ய வேண்டும்’ என குரல் எழுப்பினர். ஒரு கட்டத்தில் கேபி முனுசாமி எழுந்து, ‘இதை ஆளாளுக்கு பேசுவதில் பலன் இல்லை. அவர்கள் இருவரும் பேசி முடிவெடுக்கட்டும்’ என்றார். பின்னர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் முனுசாமியும், வைத்திலிங்கமும் தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அப்போது வருகிற 30-ம் தேதி முக்கியத் தலைவர்கள் கூடிப் பேசுவது என்றும், அக்டோபர் 7-ம் தேதி இதில் ஒரு முடிவை இருவரும் இணைந்து அறிவித்துவிடுவது என்றும் பேசி முடிக்கப்பட்டது. இதையே வெளியே வந்து வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் வெவ்வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டனர்.
வைத்திலிங்கம் கூறுகையில், ‘கட்சித் தொண்டர்கள் அனைவரும் விரும்புகிற மாதிரி, கட்சியின் ஒற்றுமையையும் கட்டிக் காக்கிற விதமாக அக்டோபர் 7-ல் இதில் ஒரு முடிவு அறிவிக்கப்படும்’ என்றார். கே.பி.முனுசாமி அதிரடியாக, ‘முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அக்டோபர் 7-ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து அறிவிப்பார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகளின் முந்தைய இணைப்பில் பாஜக மேலிடம் இருந்ததை முன்பு ஓ.பி.எஸ் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். அதேபோல முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்திலும்கூட டெல்லி ஆதரவைப் பெற இருதரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
முதல்வர் பதவியை ஏகபோகமாக அனுபவிக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவரைக் கேட்காமல் ஒரு கிளைச் செயலாளரைக்கூட ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸால் மாற்ற முடியாது. இப்போது முதல்வர் வேட்பாளராகவும் இபிஎஸ்.ஸை முன்னிறுத்தினால், கட்சியில் தனது செல்வாக்கை இன்னும் அதிகரித்து பொதுச்செயலாளர் ரேஞ்சுக்கு போய்விடுவார் என்பதே ஓபிஎஸ் தரப்பு கலக்கம் என்கிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் தனது பலத்தைக் காட்டிவிட்ட இபிஎஸ், இதில் இருந்து பின்வாங்கும் முயற்சிக்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். ஒருவேளை பொதுக்குழு கூடினால், இதைவிட வலுவான ஆதரவைப் பெற இபிஎஸ்.ஸால் முடியும் என்பதே பெரும்பாலானோர் கணிப்பு. எனவே கட்சியிலும், வேட்பாளர் தேர்விலும் தனக்கு அதிக பங்கைக் கேட்டு ஓபிஎஸ் சமரசம் ஆவது ஒன்றே வழி என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.
ஒருவேளை இபிஎஸ் முயற்சிக்கு முழுமையாகத் தடை போட ஓபிஎஸ் முயற்சித்தால், கட்சி மீண்டும் ஒருமுறை பிளவுபடுவதை தடுக்க முடியாது. தனக்கான ஆதரவு வட்டம் சுருங்கியிருக்கும் சூழலில், ஓபிஎஸ் அப்படியொரு முடிவை நோக்கி நகரும் வாய்ப்பும் குறைவே! இன்னொரு பிளவுக்கு அதிமுக தயாராகிறதா? என்பது அக்டோபர் முதல் மற்றும் 2-வது வாரங்களில் தெரியலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.