ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இங்கே தெரிகிறது

‘ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி 16 அடி பாய்கிறார்… ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார்’ என இனிமேலாவது சொல்லாமல் இருங்கள்!

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் என அதிமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுகூட இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதிமுக சின்னத்தில் நின்று ஜெயித்த கொங்கு இளைஞர் கட்சியின் தனியரசுவும்கூட விவாதங்களில் அதிமுக.வையும், தி.மு.க.வையும் சரிசமமாக பாவித்துப் பேசத் தொடங்கியிருக்கிறார். கடைசி நேரத்தில் திமுக.வில் இருந்து ஆஃபர் வந்தால், அந்தப் பக்கம் தாவலாம் என்கிற தொனி அதில் இருக்கிறது.

ஆனால் பாஜக?

நிச்சயம் திமுக முகாமுக்கு பாஜக செல்ல முடியாது. பாஜக எதிர்ப்பையும், அதற்கு அடிமையாக அதிமுக இருப்பதாகவும் கூறியே தனது முழுப் பிரசாரத்தையும் முன்னெடுக்கிறது திமுக. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு என்கிற ஆயுதத்தை பயன்படுத்தி வென்ற திமுக, சட்டமன்றத் தேர்தலிலும் அந்த ஆயுதத்தை கீழே போட வாய்ப்பே இல்லை.

பிறகு ஏன் பாஜக தயங்குகிறது? சென்னையில் அமித் ஷா கலந்துகொண்ட அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே ‘வருகிற தேர்தலில் பாஜக.வுடன் கூட்டணி தொடரும்’ என்று அறிவித்தனர். அந்தக் கூட்டத்தில் அதிமுக அரசைப் பாராட்டிய அமித் ஷா, கூட்டணி தொடர்பாக மவுனத்தையே பதிலாகக் கொடுத்தார்.

அதன்பிறகு பாஜக மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலையில் ஆரம்பித்து, தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வரை அதிமுக.வின் முதல்வர் வேட்பாளரை ஏற்பதாக அறிவிக்கவே இல்லை. பாஜக மகளிரணி அகில இந்திய தலைவரான வானதி சீனிவாசன், ‘அதிமுக.வின் முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பின்னர் அறிவிப்போம்’ என்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருக்குமா? என்கிற சந்தேகத்தை அவர் வெளிப்படுத்துவதாக இதை அர்த்தப்படுத்த வேண்டியிருக்கிறது.

நிஜமும் அதுதான். ரஜினிகாந்த் புதுக் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அவரது அணியில் பாஜக இணைவதாக இருந்தால், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் தேவையே பாஜக.வுக்கு இல்லை. ரஜினி ஒருவேளை பாஜக.வுடன் கூட்டணிக்கு மறுக்கும் பட்சத்திலேயே அதிமுக அணியில் இடம் பெற வேண்டிய கட்டாயம் பாஜக.வுக்கு வரும். எனவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அப்போது கூறிக் கொள்ளலாம் என்பதைத் தவிர்த்து, அவரை ஏற்பதில் பாஜக.வுக்கு பெரிய சங்கடம் எதுவும் இல்லை. சுயமாக ஒரு முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தும் அளவுக்கு தமிழகத்தில் பாஜக வலுவான கட்சியாக இல்லை என்பதும் எதார்த்தம். எனவே ரஜினியை எதிர்பார்ப்பது, கூட்டணியில் தொகுதி பேரத்தை அதிகப்படுத்துவது என்கிற இரு காரணங்களுக்காக முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் பாஜக இழுபறி நடத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

பாமக, தேமுதிக கட்சிகளைப் பொறுத்தவரை, இப்போதே அதிமுக.விடம் சரண் அடைந்தால் தொகுதி பேரம் நடத்த முடியாது என்கிற எதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றன. ஜனவரி 27-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் அதிமுக.வின் அதிகாரபூர்வ முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு கூட்டணிக் கட்சிகளை அழைக்கவே அதிமுக விரும்பியது. பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை அதிமுக அமைச்சர்கள் இருவர் சந்தித்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் கூட்டணியை இறுதி செய்யும் வரை எப்படி பிடிகொடாமல் நழுவுவது என்பதில் வேறு எவரையும்விட ராமதாஸ் சமர்த்தான அரசியல்வாதி. அவரிடம் சாதகமான பதில் இல்லை என்றதும், கூட்டணிக் கட்சிகளை அழைக்கும் முடிவையே அதிமுக கைவிட்டதாகத் தெரிகிறது.

அதிமுக சின்னத்தில் வெற்றிபெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும்கூட எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக வெளிப்படையாக கூறவில்லை. தமிமுன் அன்சாரிக்கு அதிமுக- பாஜக கூட்டணிதான் பிரச்னை. மற்ற இருவரும்கூட அதையே காரணமாகக் காட்டலாம். ஆனால் நிஜம் அதுதானா?

கலைஞர் மரணத்திற்கு பிறகும், திமுக தலைமையிலான கூட்டணியை தனது தலைமையை ஏற்க வைப்பதில் ஸ்டாலினுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் ஒரு உண்ணாவிரதம் அறிவித்தாலே கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் போய் ஸ்டாலின் அருகே அமர்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வத்திற்கு அப்படி கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை. ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இங்கேதான் தெரிகிறது.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒதுங்குவதற்கு, அதிமுக.வின் வெற்றி வாய்ப்பு மீது இருக்கும் சந்தேகம் ஒரு காரணம் எனக் கூறலாம். ஆனாலும் ஜெயலலிதா இருந்திருந்தால், வெற்றி வாய்ப்பு கணக்குகளுக்கு அப்பாற்பட்டு கூட்டணிக் கட்சிகள் அதிமுக.வின் பின்னால் திரண்டிருக்கும்.

எனினும் தேர்தல் நெருக்கத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணி அவசியம். திமுக அணியில் இப்போது இருக்கும் கட்சிகளைத் தாண்டி புதிய கட்சிகளுக்கான வாய்ப்பு குறைவு. எனவே எஞ்சிய கட்சிகள் அதிமுக அணி, ரஜினி அணி, 3-வது அல்லது 4-வது அணி என சேரலாம். அப்போது தேர்தல் உடன்பாடு செய்துகொண்டு, யாரையாவது ஒருவரை முதல்வர் வேட்பாளராக ஏற்பதைத் தவிர சிறு கட்சிகளுக்கு வேறு என்ன வழி?

அதிமுக.வினருக்கு ஒரு வேண்டுகோள்… ‘ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி 16 அடி பாய்கிறார்… ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார்’ என இனிமேலாவது சொல்லாமல் இருங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk tamil news edappadi k palaniswami aiadmk cm canditate row

Next Story
வரலாற்றுத் தருணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com