அதிமுக.வில் அதிகார யுத்தம் சற்றே தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 அன்று அரை டஜன் அமைச்சர்கள், ஒரு நாள் முழுக்க நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
3 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் முக்கிய அம்சம், ‘கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகள் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு விவாதப் பொருள் ஆகிவிட்டன. அந்த நிலை மீண்டும் ஏற்படாவண்ணம், அம்மா காலத்தைப் போல ராணுவக் கட்டுப்பாடுடன் கட்சியினர் நடந்து கொள்ளவேண்டும்’ என்பதுதான்.
முதல்வர் வேட்பாள சர்ச்சை பற்றி அறிக்கையில் எதுவும் வெளிப்படையாக இல்லை. எனினும், பிரச்னை அதுதான் என்பது பெரிய ரகசியம் இல்லை. ‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ எனக் கூறி, இந்தச் சர்ச்சையை ஆரம்பித்து வைத்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தீவிர இந்துத்வா நிலைப்பாடால், சர்ச்சையில் சிக்கி ஓரிரு மாதங்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்பை இழந்தவர் இவர். அண்மையில் மீண்டும் கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கைப்பற்றிய கையோடு, இந்த ட்வீட்டைப் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசி நடவடிக்கைக்கு உள்ளானவர், மீண்டும் எப்படி இவ்வளவு தைரியமாக ஒரு ட்வீட்டைப் போட்டார்? பின்னணி இல்லாமல்தானா? ஏனோ இபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டறிக்கை, ‘எந்தப் பின்னணியும் இல்லாமல்’ நிர்வாகிகள் பேசியதாக வலிந்து வார்த்தைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறது. நம்புவோம்!
அடுத்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அதையே வழிமொழிகிற விதமாக பேட்டி கொடுத்தார். உடனே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடை காப்பீர். தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்’ என தனது ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டார். இந்தக் கட்டத்திலேயே இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கையாக வந்திருந்தால், பிரச்னை முளையிலேயே கிள்ளப்பட்டிருக்கும். ஆனால் இபிஎஸ் இந்த விவகாரத்தில் அமைதியைத் தொடர்ந்தார்.
ஆகஸ்ட் 13 அன்று நாகர்கோவிலில் பேசிய முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், திருநெல்வேலியில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் ஆகியோரும், ‘எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்’ என பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டனர். ஆகஸ்ட் 14-ம் தேதி மாலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் இதையே குறிப்பிட்டார். அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இப்படித் தொடரவும்தான், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் ஓ.பி.எஸ்.ஸை அடுத்த முதல்வராக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஆகஸ்ட் 15 அன்று இந்த போஸ்டர்கள் செய்திகளாக வரவும்தான், கோட்டையில் அமைச்சர் ஜெயகுமார் அறையில் அரை டஜன் அமைச்சர்கள் ஆலோசனை, அங்கிருந்து ஓ.பி.எஸ் இல்லம் சென்று அவருடன் சந்திப்பு, மீண்டும் முதல்வர் எடப்பாடியுடன் இரு சுற்று சந்திப்புகள், ஓ.பி.எஸ்.ஸுடன் மீண்டும் ஒரு சந்திப்பு என முடிந்து, கூட்டறிக்கை வெளியானது. இதே விவகாரத்திற்காக ஆகஸ்ட் 13 அன்று அதிமுக தலைமைக் கழகத்தில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் ஆகியோரும் கூடி ஆலோசித்தனர்.
இந்த அரை டஜன் சந்திப்புகளில் எங்குமே சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்களையோ, போஸ்டர் ஒட்டியவர்களையோ அழைத்துப் பேசவில்லை. ட்வீட் போட்ட ராஜேந்திர பாலாஜி, அதற்கு மறுப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. இபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டறிக்கைக்குப் பிறகும், ராஜேந்திர பாலாஜி ட்வீட் அப்படியேதான் இருக்கிறது.
உண்மையிலேயே மேலிட ஒப்புதல் இல்லாமல் நிர்வாகிகள் பேசியதுதான் பிரச்னை என்றால், சுதந்திர தினவிழா முடிந்ததும், கோட்டையில் இபிஎஸ்- ஓபிஎஸ் இருவருமே கூடிப் பேசி இப்படியொரு அறிக்கையை விட்டிருக்க முடியும். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளாததும், அரை டஜன் அமைச்சர்கள் இந்த கொரோனா காலத்தில் இருபுறமும் மாறி மாறி தூது போக வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் பிரச்னையின் வீரியத்தை உணர்த்துகின்றன. ஆம், முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த வேண்டிய தருணம் இதுதான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதனால்தான் ஒரு வாரமாக இந்த விவகாரம் நீண்டபோதும், அவர் கருத்து கூறாமல் மவுனம் காத்தார்.
சரி... இன்றையச் சூழலில் அதிமுக.வுக்கு முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதா?
சற்றே வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால், 1967 தேர்தலை அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ‘முதல்வர் வேட்பாளரை’ முன்னிறுத்தாமல்தான் எதிர்கொண்டது. கட்சித் தலைவரான அண்ணா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவே இல்லை. அந்தத் தேர்தலில் வெற்றியை அண்ணாவே எதிர்பார்க்கவில்லை. உணர்வுபூர்வமான மொழிப் போராட்டமும், மாணவர்கள் எழுச்சியும் திமுக.வை வெற்றிபெற வைத்தன. எம்.எல்.ஏ ஆகாமல் முதல்வர் பொறுப்பை ஏற்ற அண்ணா, பின்னர் மேலவை உறுப்பினர் பதவியைப் பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
இதன்பிறகான 50 ஆண்டு அரசியலில், மீண்டும் ஒரே ஒருமுறை முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் திமுக தேர்தலை எதிர்கொண்டது. அது, 1980-ம் ஆண்டுத் தேர்தல்! அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. எனவே திமுக விருப்பப்படி, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியை டெல்லி காங்கிரஸ் அரசு கவிழ்த்தது.
அதே ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 112 தொகுதிகள், காங்கிரஸ் 114 தொகுதிகள் என பங்கீடு செய்து போட்டியிட்டன. தனி மெஜாரிட்டிக்கு குறைவாகவே இரு கட்சிகளும் போட்டியிட்டதால், முதல்வர் வேட்பாளராக யாரையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. எம்.ஜி.ஆரை வீழ்த்துவது மட்டும்தான் இரு கட்சிகளின் குறிக்கோளாக இருந்தது.
ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்கள், சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு மாலை சூடினர். இதுதான் தமிழகத்தில் ஒரு பிரதானக் கட்சி, முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தாமல் சந்தித்த கடைசித் தேர்தல். அந்தத் தோல்விக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி என்கிற வார்த்தையை உச்சரிக்கக் கூட தமிழகத்தில் பிரதானமான இரு கட்சிகளும் துணிந்ததில்லை.
திமுக.வுக்காவது இப்படி இருமுறை முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல், தேர்தலை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறது. அதிமுக.வைப் பொறுத்தவரை, முழுக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தனி ஆளுமைகளை மையப்படுத்தி இயங்கிப் பழகிய இயக்கம். இந்த முறை ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக திமுக முன்னிறுத்துகையில், அதிமுக அப்படி யாரையும் சுட்டிக்காட்டாதபட்சத்தில் பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.
இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் இவைதான்...
1. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவிப்பதே உசிதம். திமுக சார்பில் பிரசாந்த் கிஷோரை களமிறக்கி, தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டதையும் எடப்பாடி தரப்பில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
2. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் மட்டுமே இந்த அரசின் சாதனைகளான குடி மராமத்து திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு, காவிரி தீர்ப்பு, கொரோனா நிவாரணப் பணிகள் ஆகியவற்றை பட்டியலிட்டு பிரசாரம் செய்ய முடியும்.
3. இக்கட்டான சூழலில் ஆட்சியையும் கட்சியையும் வெற்றிகரமாக நகர்த்தியதில் அமைச்சர்கள் முதல் கிளைக்கழக செயலாளர்கள் வரை எடப்பாடி பழனிசாமி நல்ல பெயர் பெற்றிருக்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலரும்கூட இப்போது இபிஎஸ் பக்கம் நிற்கிறார்கள். எனவே அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதே கட்சிக்கு நல்லது.
4. முழுக்க திமுக எதிர்ப்பு வாக்குகளை நம்பி ரஜினிகாந்த் அரசியலில் நுழைய இருக்கிறார். இந்தச் சூழலில் அதிமுக ஒரு நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தினால், அது ரஜினிக்கு சாதகம். இதைப் புரிந்துகொண்டு, எடப்பாடியை முன்னிறுத்தி வலிமையாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
இபிஎஸ் தரப்பின் மேற்படி வாதங்களுக்கு ஓ.பி.எஸ். தரப்பு கொடுக்கும் ஒரே விளக்கம் இதுதான்... ‘ஆட்சியை ஏகபோகமாக கட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலும் சரிபாதி உரிமை வைத்திருக்கிறார். அம்மாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் வேட்பாளராக அறிவியுங்கள். அல்லது, கட்சியை முழுமையாக பொறுப்பேற்று நடத்தும் வகையில் ஓ.பி.எஸ்.ஸை பொதுச்செயலாளர் ஆக்குங்கள். கட்சியை முழுமையாக ஓபிஎஸ் வசம் ஒப்படைத்தால், துணை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ். ராஜினாமா செய்யத் தயார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கவும் தயார்’.
ஓபிஎஸ் தரப்பு வைக்கும் இந்த ஒற்றை நிபந்தனை, இபிஎஸ் தரப்பை வியர்க்க வைத்திருக்கிறது. காரணம், ஆட்சி நிரந்தரம் இல்லை என்பது அனைவரும் அறிந்த ரகசியமே!
இன்று கட்சி- ஆட்சி தளகர்த்தர்களில் 90 சதவிகிதம் பேர் இபிஎஸ் பக்கமே நிற்கிறார்கள். ஆனாலும் தேனியில் ஒட்டப்பட்ட சில போஸ்டர்கள் மூலமாக இபிஎஸ் தரப்பின் முதல்வர் வேட்பாளர் ‘மூவ்’வை ஓ.பி.எஸ் தரப்பு வாபஸ் பெற வைத்திருக்கிறது. அதிமுக அதிகார யுத்தத்தில் ஓபிஎஸ் தரப்பு வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.
ஏன் ஓபிஎஸ்.ஸை மீறி இபிஎஸ் தரப்பால் அதி வேகமாக தங்கள் முதல்வர் வேட்பாளர் கனவை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்கு இன்னும் 3 காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, டெல்லி மனநிலை! அதிமுக.வை ஒருங்கிணைத்ததில் இருந்து இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுக் கொடுத்தது வரை ‘டெல்லி’யின் கைங்கர்யம் உண்டு. இப்போதைய சூழலில், அவர்கள் மனநிலை என்ன? எனத் தெரியாமல் எந்த ஆட்டத்தையும் இங்கு தைரியமாக ஆடிவிட முடியாது.
2. முதல்வருக்கு ‘புரோமோட்’ செய்வதாக கூறிக்கொள்ளும் அமைப்பினர், தங்கள் அணுகுமுறையால் சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகளையே பகைத்து வைத்திருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளர் பிரச்னையை அவர்கள் தொடங்கிய விதமும், நகர்த்திய விதமும் பின்னடைவுக்கு பெரும் காரணம்.
3. எடப்பாடியின் நெருங்கிய ஆதரவாளர்களாகவே காட்டிக்கொள்ளும் சீனியர்கள் பலரும் இந்த இரட்டைத் தலைமை தொடர்வதையே விரும்புகிறார்கள். எடப்பாடி, ஓபிஎஸ் இருவரில் யாரோ ஒருவர் அதிக அதிகாரம் பெற்றால், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான முக்கியத்துவம் போய்விடும் என்பது அவர்கள் கவலை!
ஆக, அவரவருக்கான அரசியல் ஆதாயம்தான் இங்கே முக்கியம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.