Ambedkar statue vandalism: ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் அது அம்பேத்கரின் பிறந்த நாள்தான். அதே போல, ஆண்டு முழுவதும் இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒரு சிலரால் ஒரு தலைவர் அவமதிக்கப்படுகிறார் என்றால் அது அம்பேத்கர்தான். இந்த ஒரு அவல முரண் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அம்பேத்கரை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்தியாவில் பொருளாதாரத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர். பொருளாதார வல்லுனர், கல்வியாளர், சீர்திருத்தவாதி, இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர், இந்து பெண்களின் உரிமையை சட்டமாக்க தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர், உலகம் முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர், ரஷ்ய புரட்சியின் தந்தை லெனினுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக அளவில் சிலை வைக்கப்பட்ட தலைவர் இப்படி அவரைக் கொண்டாட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவரை அவமதிப்பதற்கு சாதி ஆதிக்க வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
நேற்று முன் தினம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்த அம்பேத்கர் சிலையை ஒரு கும்பல் உடைத்து சேதப்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ உண்மையில் பார்க்கும் எவரையும் பதறச்செய்பவையாகவே உள்ளது. அது ஒரு கும்பல் வன்முறை தாக்குதலாகவே நடந்திருக்கிறது. அம்பேத்கர் சிலை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழத்திலும் எத்தனையோ முறைகள் அவமதிக்கப்பட்டுள்ளன. சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கும் வேதாரண்யத்தில் நடந்ததற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதற்கு முன்பு நடந்தவையெல்லாம், யாரும் பார்க்காத நேரத்தில் நடந்திருக்கும். பிறகு விசாரணையில் யார் சேதப்படுத்தினார்கள் என்பது தெரியவரும். ஆனால், வேதாரண்யத்தில், பட்டப் பகலில் பலர் பார்க்க அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த தாக்குதலை வெறும் சாதி ஆதிக்க வெறியோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்க்காமல் கடந்த பத்தாண்டில் இந்தியாவிலும், தமிழகத்திலும் வளர்ந்துள்ள கும்பல் வன்முறை மனநிலையோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.
கும்பலாக திரண்டு எதையொன்றையும் எதிர்க்க முடியும் என்ற நிலையில் இருந்து எதையொன்றையும் யாரையும் அழிக்க முடியும், யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற மனநிலை வளர்ந்திருக்கிறது. கும்பல் என்பது முழுவதும் கூட்டத்திலிருந்து வேறுபட்டது. அதிலும் இந்த கும்பல் வன்முறை ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் மீதுதான் அதிகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களே அதற்கு சாட்சி.
கும்பல் வன்முறை என்பது வெறுமனே வன்முறையாக மட்டுமில்லாமல், தாக்குதலுக்குள்ளாகும் மக்களிடையே அச்ச உளவியலை நிரந்தரமாக்குகிறது. அரசின் கடுமையான நடவடிக்கை இல்லாததால் கும்பல் வன்முறையில் ஈடுபட்டால் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையும் வளர்ந்துள்ளது. மனித தன்மையற்ற கும்பல் வன்முறையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆனாலும், அரசு ஏனோ இதில் மெத்தனமாக இருக்கிறது.
இந்த கும்பல் மனநிலை ஒரு நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது. கும்பல் வன்முறை மனநிலை சமூகங்களுக்கு இடையே பரவலானால் அது மேலும் அபாயகரமான கட்டத்தையே எட்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது அரசியல் தலைவர்கள் கண்டனச் சடங்குகளோடு நிறுத்திவிடுகின்றனர். அதை சட்டப்பூர்வமாக தடுக்கவும் அதை தொடர்ந்து முன்னெடுக்கவும் முனைவதில்லை. சுதந்திரத்திற்கு முன்பு இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் சாதியால், தீண்டாமையால் ஒடுக்கப்படும் மக்களின் நியாயங்களை சமூக அடுக்கில் மேலே இருந்தவர்களிடம் உரையாடி அவரகளை அடித்தட்டில் இருப்பவர்களின் முன்னேற்றத்துக்காக, உரிமைகளுக்காக பணியாற்ற அழைப்பு விடுத்தார் காந்தி. அவர் அனைத்து தரப்பினரோடும் உரையாடலை நிகழ்த்தினார். உரையாடலோடு மட்டுமில்லாமல் காந்தியை பின்பற்றிய அவர்காலத்து காந்தியவாதிகள் களத்திலும் பணியாற்றினர். அதற்காக அவர் இயக்கங்களை முன்னெடுத்தார். அப்படி, இன்று களத்தில் செயல்படுகிற யாரேனும் தலைவர்கள், ஏதேனும் ஒரு அரசியல் கட்சி, அரசியல் இயக்கம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை மனசாட்சியுடன் கூற வேண்டியுள்ளது.
வேதாரண்யத்தில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு மாற்றாக தமிழக அரசே புதிய சிலை வைத்துள்ளது. இது ஒரு அரசு மேற்கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கைதான். அம்பேத்கர் சிலை மீது அவ்வளவு வன்மம் எப்படி வளர்க்கப்பட்டது. அம்பேத்கரை தலித்துகள் தங்கள் தலைவர் என்று கூறலாம். அல்லது மற்றவர்கள் அம்பேத்கரை தலித்துகளின் தலைவர் என்று ஒதுக்கலாம். ஆனால், அவர் ஒரு இந்தியத் தலைவர். இந்தியர்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மனித குலத்தின் உயரிய விழுமியங்களோடு வாழவேண்டும் என்பதை தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியவர். அதை அரசியல் அமைப்பில் வடித்தவர். அவரை சாதிய சக்திகள் எதிராக பார்க்கின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவர் இந்திய தலைவர் என்ற நிலையில் இருந்து கடந்த கால் நூற்றாண்டில் உலகத் தலைவர் என்ற நிலைக்கு அவரது சிந்தனைகள் சென்று விட்டன.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்க கால வரலாற்றாய்வாளர்கள் வேதகால நாகரிகத்தையொட்டி தங்கள் ஆய்வில், அதன் சமூக அமைப்பில் மேலே இருந்த பிராமணர்கள் பற்றி விதந்தோதிக்கொண்டிருந்த போது, அவரே கூறுகிறபடி, இந்தியாவில் முதன்முறையாக சூத்திரர்கள் யார்? என்று ஆய்வை மேற்கொண்டவர் அம்பேத்கர்தான். சூத்திரர்கள் எவ்வாறு வீழ்த்தப்பட்டார்கள் என்று பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியலை ஆய்வு ரீதியாக கோட்பாட்டு ரீதியாக வெளிக்கொணர்ந்தவர் அம்பேத்கர்தான். இவை எதுவுமே தெரியாமலும் அவர் எழுதியதை ஒரு பக்கம் கூட படிக்காமலும் அம்பேத்கர் தலித்துகள் தலைவர் அவரது சிலைகளை உடைப்போம் என்பது களிம்பு ஏறிய சாதி ஆதிக்க மனநிலையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்தியர்கள் உலக அரங்கில் பெருமை கொள்ளும்படியாக அவர்களின் அரசியல் அமைப்புக்கு ஜனநாயக முகம்கொடுத்த அம்பேத்கரின் தலை கும்பல் வன்முறை மூலம் உடைக்கப்படுகிறது. உண்மையில் உடைக்கப்பட்டது அம்பேத்கர் சிலை அல்ல. இந்திய ஜனநாயகத்தின் முகம்தான். ஆகையால், அரசு இனியும் கும்பல் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.