Advertisment

அனலும் புனலும் : ஆர்.எஸ்.எஸ். செல்லப்பிள்ளையின் அதீத விளையாட்டு!

திட்டமிட்டுத் திமிராக, அமைதியைச் சிதைக்கும் வகையிலும், வெறித்தனங்களைத் தூண்டும் வகையிலும் நடந்து கொள்ளும் இராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
Periyar bjp, periyar maniammai, periyar E. V. Ramasamy, பாரதிய ஜனதாக் கட்சி, மணியம்மை பெரியார்

Periyar bjp, periyar maniammai, periyar E. V. Ramasamy, பாரதிய ஜனதாக் கட்சி, மணியம்மை பெரியார்

குவியாடி

Advertisment

ஈ.வெ.இராமசாமிப் பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பு மட்டுமல்ல! கடவுள் மறுப்பு என்பது பெரியாரால் உருவாக்கப்பட்ட கொள்கையுமல்ல! கடவுட் கோட்பாடு வந்த பொழுதே கடவுள் மறுப்புக் கோட்பாடும் உருவாகியுள்ளது. அதற்குப் பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன?

கடவுள் மறுப்பிற்காக மட்டுமல்ல! மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனைகள், சீர்திருத்தக் கருத்துகள் முதலியவற்றிற்காகவும்தான் இன்றளவும் பெரியார் போற்றப்படுகிறார்! நாளையும் போற்றப்படுவார்!

பெரியார் அனைத்துக் கட்சிகளாலும் போற்றப்படும் தலைவர். பச்சைத்தமிழன் எனப் பெரியாரால் போற்றப்பட்ட காமராசரின் காங்கிரசுக் கட்சியும் பெரியாரை ஆதரிக்கிறது. தன் ஆட்சியையே பெரியாருக்கு ஒப்படைத்த பேரறிஞர் அண்ணாவின் திமுக- வும் அவரை ஆதரிக்கிறது. திமுகவில் இருந்து கிளைத்த அதிமுக, மதிமுக முதலான கட்சிகளும் நேற்று பிறந்த கட்சிகள் உட்பட பிற கட்சிகளும் பெரியாரைப் போற்றுகின்றன. இவ்வளவு ஏன் வாசுபாய் முதலான பாசக தலைவர்களும் பெரியாரைப் பாராட்டுகின்றனர்.

பெரியார் இந்தியத் தலைவர் மட்டுமல்லர். உலகச் சீர்திருத்தத் தலைவரும்கூட! அவர் சிலையைச் செருப்பால் அடிப்பதாக எச்( சு) இராசா சொன்னபொழுதே அவர்மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழ்நாட்டில் பெரியார் சிலை இருக்காது என்று சொல்லும் துணிவு, அவருக்கு வந்துள்ளது. இனியும் அரசு பொறுமை காக்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ஆர்.எசு.எசு.' எனப்பெறும் மதவெறி அமைப்பு பின்னணியிலான ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே மதவெறியாளனாக நடந்து கொண்டால் தனக்குத் தமிழகப் பாசகவின் தலைமைப் பதவியோ அரசில் பொறுப்போ கிடைக்கும் எனக் கனவு கண்டார், இராசா. ஆனால் அவரைச் செல்லப்பிள்ளைபோல் நடத்திக் கொண்டே இருக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறது பாசக. எனவேதான் அவர் விரும்பிய பதவியை அவருக்குத் தரவில்லை.

பெரியார் என்றுமே சாதிவெறியர் அல்லர். சாதிகளே வேண்டா என்ற மக்கள் நேயர். சாதி வேண்டா என்றதால் பெரியாரைச் சாதிவெறியர் என்றால், நாளை ஒரு கூட்டம், "சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற ஒளவையாரைச் சாதிவெறியராகச் சொல்லி அவருக்கு எதிராகக் கிளம்பும்.

" மதமானப் பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்ற வள்ளலார் இராமலிங்க அடிகளாரை மதவெறியராகச் சித்திரித்து ஒரு கூட்டம் புறப்படும்.

சாதிக்கு எதிரான சங்கப்புலவர்களையும் " பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரையும் எதிர்க்கவும் தமிழ்ப்பகைவர் துணிவர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே, திட்டமிட்டுத் திமிராக, அமைதியைச் சிதைக்கும் வகையிலும், வெறித்தனங்களைத் தூண்டும் வகையிலும் நடந்து கொள்ளும் இராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அவரை வெளியேற்றி இனி நுழையவும் தடை விதிக்க வேண்டும்.

இதனை எழுதிக் கொண்டிருந்த பொழுது மேலிட வற்புறுத்தலால், வருத்தம் தெரிவிப்பதுபோல் நாடகம் ஆடியுள்ளார் இராசா. தனக்குத் தெரியாமல் முகநூல் செயற்பாட்டாளர்(admin) பதிவிட்டு உள்ளதாகவும் தான் அதற்கு எதிரானவன் என்பதால் பதிவையும் செயற்பாட்டாளரையும் நீக்கிவிட்டதாகவும் யார் மனமேனும் புண்பட்டு இருந்தால் அவர் சார்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும் கதை சொல்லியுள்ளார். மக்களை அறிவிலிகள் என்று எண்ணி விட்டாரா? அல்லது பாசகவிற்கு இது போதும் என்றுவிட்டு விட்டாரா?

தான் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்கும் பண்பற்றவர், அடுத்தவரைக் குற்றவாளிபோல் கூறித் தன்னைப் பெருந்தன்மையாளர்போல் காட்ட முயல்கிறார்.

திரிபராவில் உலகத்தலைவர் இலெனின் சிலையை அகற்றிய பொழுதே நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது மத்திய அரசு.

இராசா என்னும் பெயர் உள்ளதால் தன்னை மன்னராக எண்ணிக்கொள்வது அறிவுடைமை ஆகுமா? இராசாவின் தலைப்பாகையை அணிந்து கொள்வதால் பிச்சைக்காரன் அரசனாக முடியாது! தலைவர்களைப் பழித்துச் சொல்வதால் ஒருவன் தலைவனாகிவிட முடியாது.

இராசாவின் ஆணவத்தால்தான் அவர் வீட்டிற்குப் பாதுகாப்பு போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரியார் சிலைகளைக் காப்பதற்கும் ஆர்ப்பாட்ட இடங்களில் சட்டம் ஒழுங்கைக் காக்கவும் காவலர்கள் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காகும் செலவுகளையும் சில இடங்களில் உடைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளைப் புதுப்பிக்க ஆகும் செலவுகளையும் இராசாவிடமிருந்து அரசு பெற வேண்டும். கட்டத் தவறினால் சிறைக்கு அனுப்ப வேண்டும்.

இது பெரியார் மண் என்று சொல்லும் பொழுதெல்லாம் கேலி பேசியவர்களுக்கு இது பெரியார் மண்தான் என உணர்த்திய மக்களுக்கும் தலைவர்களுக்கும் பாராட்டுகள்!

Periyar H Raja Analum Punalum Kuviyadi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment