அனலும் புனலும் : அகற்ற வேண்டியது அதிமுக அரசையா? எடப்பாடியார் ஆட்சியையா?

எடப்பாடி பழனிச்சாமி பாசக ஆதரவால்தான் அதிகாரத்தில் உள்ளார் என்பது உண்மைதான். ஆனாலும் தன்னுடைய திறமையாலும் துணிவாலும்தான் தன் பதவியைக் காத்து வருகிறார்.

குவியாடி

முந்தைய திமுக ஆட்சியின்பொழுது (2006-2011) அதனைச் சிறுபான்மைஅரசு என்றே எப்பொழுதும் செயலலிதா கூறிவந்தார். சட்டமன்றத் திமுக உறுப்பினர்கள் அடிப்படையில் அப்பொழுது திமுக அரசு பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் – காங்கிரசு கூட்டணியால் – அது பெரும்பான்மை அரசாகத்தான் செயல்பட்டுவந்தது.

இப்பொழுதோ சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் மட்டுமல்ல, சொந்தக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில்கூடப் பெரும்பான்மை இழந்து அல்லாடுகிறது அதிமுக!

நாணய உணர்வும் நாணமும் இருப்பின், அதிமுக பதவி விலகியிருக்க வேண்டும். எந்த அரசியல் தலைவர்களிடமும் இல்லாத உணர்வுகளை அதிமுகவிடம் மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

அதிமுகவிற்குப் பெரும்பான்மை வலிவு இல்லாமையால், அரசு வலிமை குறைந்து விளங்குகிறது. இதனால் சொந்தக் கட்சி உறுப்பினர்களின் பேரங்களுக்கே அடிபணிந்து நிற்க வேண்டியுள்ளது. மறுபுறம் ஆட்டிப்படைக்கும் மத்திய ஆளுங்கட்சியிடம் மண்டியிட்டு மன்றாட வேண்டியிருக்கிறது.

செயலலிதா வழி நடப்பதாகக் கூறிக்கொள்கிறது இந்த அரசு. செயலலிதா நிறைகளும் குறைகளும் கொண்டிருந்த தலைவர்தான். அடக்குமுறைக் கொடுமைகளைக்கூடத் துணிவு என்று தவறாகக் கருதிப் போற்றப்பட வேண்டியவர் தான். எனினும் உண்மையில் துணிவாகவும் செயல்பட்டு வந்தார். தன் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தும் ஒழுக்கக்கேடுகளிலும் கொலைகளிலும் ஈடுபட்டுவந்த மதத்தலைவரைத் துணிந்து சிறையிலடைத்தார்.

ஈழத்தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என்றும் சிங்களத் தமிழர்கள் என்றும் கூறிவந்தவர்கள் இடையே தமிழ்ஈழத்திற்கு அங்கீகாரம் வேண்டியும் தமிழ்இனப் படுகொலையாளி இராசபக்சேவைத் தண்டிக்கவும் சட்டமன்றம் மூலம் குரல்கொடுத்த துணிவானவர்தான்.

செயலலிதா தனக்குக் கப்பம் கட்டுவதற்காகத் தவறு செய்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், தனக்குத் தெரியாமல் தன் கட்சிக்காரர் யாரும் தவறு செய்வதை அறிய நேர்ந்தால், அவர் எந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவரைத் தூக்கி எறியத் தயங்காதவர். இதனாலேயே கட்டுப்பாட்டைக் காக்கும் தலைவியாக உருவகப்படுத்தப்பட்டார்.

மத்திய ஆளுங்கட்சியிடம் நெருக்கம் கொண்டிருந்தாலும் தன் அதிகார உரிமைக்குப் பாதிப்பு வருவதாக இருந்தால், துணிந்து எதிர்க்கத் தயங்காதவர்! இதனால் தமிழக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.

ஆனால், செயலலிதா வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டே அவர் காத்த உரிமைகளைத் தாள்பணிந்து அடகுவைக்கிறது இன்றைய அதிமுக அரசு.

இதன் நோக்கம் ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதுதானேதவிரத், தமிழக நலன்களைக் காக்க வேண்டும் என்பதல்ல!

பேரவைத்தலைவரின் நடுநிலைமையற்ற செயலால், ஆட்சியைக் காத்துக் கொண்டுள்ளது அதிமுக என்பது உலகறிந்த செய்தி. அவர் அணி மாறினார் என்றால், ஆட்சிஅதிகாரமும் மாறிவிடும். நேர்மையற்ற முறையில் ஆட்சியில் இருப்பதால்தான் தன்னை விற்பதற்குத் தயங்குவதில்லை. ஆனால் விலையாக நம் உரிமைகள் பறிபோவதுதான் கொடுமை!

தமிழக மக்களின் உரிமைகளைக் காவுகொடுக்கும் இந்த அரசு இன்னும் நீடிக்க வேண்டுமா? என்பதுதான் மக்கள் முன்புள்ள வினா? அதேநேரம் வாணலியில் இருந்து தப்பி அடுப்புத் தீயில் விழுவதுபோல் கொடுந்துயரம் ஏற்படுமோ என்ற அச்சமும் மக்களிடையே உள்ளது.

அதிமுக அரசு அகன்றால் அந்த இடத்தில், அடுத்த இடத்தில் உள்ள திமுக, கூட்டணி சேர்த்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால், மக்களாட்சி என மகிழலாம். ஆனால், மதவெறியும் மொழிவெறியும் மிக்க பாசக, குடியரசுத்தலைவர் ஆட்சியை அறிமுகப்படுத்தித் தன் முறைமுக ஆட்சியை அரங்கேற்றுமே! என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பாசக ஆதரவால்தான் அதிகாரத்தில் உள்ளார் என்பது உண்மைதான். ஆனாலும் தன்னுடைய திறமையாலும் துணிவாலும்தான் தன் பதவியைக் காத்து வருகிறார். பன்னீர்செல்வம்போல் இரண்டகனாக – துரோகியாக – மாறமாட்டேன் எனச் சசிகலாவிடம் தாள்பணிந்து கூறியவர்தான் பழனிச்சாமி. என்ன செய்வது? உறுதிமொழியைக் காப்பதைவிட உயர்ந்தது பதவியைக் காப்பது என்பதுதானே கட்சி அரசியலின் இலக்கணமாய் மாறிவிட்டது!

ஆனால், பழனிச்சாமி அணியினரின் பதவிநலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத தமிழக மக்கள் காக்கப்படாமல் போகும் கொடுமை தொடரக் கூடாது அல்லவா?

போட்டி வேட்பாளராகக் களத்தில் தனியனாக நின்று சட்டமன்ற உறுப்பினரான தினகரனுக்குக் கட்சியில் மிகுதியும் செல்வாக்கு உள்ளது. அவரே உண்மையான அதிமுக என மக்கள் உணருவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையர் கருதுகிறார்கள்.

வாய்ப்பு வந்தால் பாசகவிற்குப் பாதப்பூசை செய்ய ஆயத்தமாக இருப்பவர்தான் அவரும்! எனினும் பிறரை அடிமைப்படுத்தி இன்பம் கண்டவர்கள், பிறருக்கு அடிமையாக விரும்பமாட்டார்கள். அந்த அளவில் மதவெறிக்கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாக உறுதி அளித்தால், அவர் அடையாளம் காட்டும் ஒருவர் தலைமையில் அதிமுக அரசை அமைக்கலாம்!

பதவி நீக்கப்பட்ட 18 உறுப்பினர்களின் பக்கம் தீர்ப்பு வந்தாலும் மேல்முறையீடு செய்து காலங்கடத்தித் தேர்தல் வரும் வரை ஆட்சியில் இருக்கலாம் என ஆள்வோர் எண்ணக்கூடாது.

அதிமுக அரசு கவிழக்கூடாது என்றால், எடப்பாடியார் அதிகாரத்தை வேறொருவருக்கு மாற்றுவதே ஏற்றது! இல்லையேல் இருப்பதையும் பறிகொடுத்து ஒன்றும்இல்லாமல் போகும்நிலை ஏற்படும்.

தேர்தல் மூலம் ஆட்சி அதிகார உரிமை முடிவாகும் வரையில் இடைக்கால ஏற்பாடாக அதிகாரப் பெயர்ச்சி ஏற்படட்டும்! சிந்திப்பார்களா உரியவர்கள்?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close