Advertisment

வாட்ச் விலை சர்ச்சை தேவையா? தமிழக அரசியல் போகும் பாதை சரியா?

இந்த சர்ச்சையின் மையம் இதுதான், தி.மு.க-வினர் பா.ஜ.க-வை நோக்கி எங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இல்லை. எங்களை விமர்சனம் செய்ய நீங்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை என்பதுதான். அண்ணாமலையை நோக்கியும் இதே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள்.

author-image
Balaji E
New Update
Annamalai, Rafale watch, Rafale watch controversy, Tamilnadu politics, Tamilnadu, DMK, BJP, அண்ணாமலை, ரஃபேல் வாட்ச், பாஜக, திமுக,

எ. பாலாஜி, பத்திரிகையாளர்

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் வெளிநாட்டு நிறுவனம் தயாரித்த விலை உயர்ந்த ரஃபேல் கைக்கடிகாரம் தமிழக அரசியலில் சர்சையாகி உள்ளது. வெறும் 4 ஆடு சொத்தாக வைத்திருக்கும் அண்ணாமலை ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச் எப்படி வாங்கினார். தேசியவாதி வெளிநாட்டு வாட்ச் கட்டலாமா என்று திமு.க-வினர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு, அண்ணாமலை தரப்பில், எனது சொத்துக் கணக்கை வெளியிடுகிறேன். தி.மு.க அமைச்சர்கள் சொத்துக் கணக்கை வெளியிடத் தயாரா என்று கேள்வி எழுப்புகிறார். அண்ணாமலை மட்டும்தான் விலை உயர்ந்த வாட்ச் கட்டியிருக்கிறாரா? தி.மு.க அமைச்சர் உதயநிதி, ஸ்டாலின் குடும்பத்தினர் விலை உயர்ந்த வாட்ச் கட்டவில்லையா என்று பா.ஜ.க-வினர் எதிர் கேள்வி கேட்கிறார்கள். தி.மு.க - பா.ஜ.க இருதரப்பும் எழுத்தில் சொல்ல முடியாத அளவுக்கு சமூக ஊடகங்களில் வசைகளை வாரித் தெளிக்கிறார்கள்.

இப்படியாக, அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த வாட்ச் விலை சர்ச்சை தேவையா? தமிழக அரசியல் போகும் பாதை சரியா? அரசியலில் எளிமை என்பது இன்று என்னவாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் அரசியலில் எளிமை என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் காண்பது அரிதாக உள்ளது. ஆடம்பரம், பகட்டு, பந்தாதான் பளிச்சென தெரிகிறது. யாரேனும் மிகவும் அரிதாக அரசியலில் எளிமையாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இந்த ஆடம்பர அரசியலின் பகாசூர வெளிச்சத்தில் மங்கித் தெரியாமல் போகிறார்கள். அவர் நேர்மையானவர் என்று மட்டும் கூறிவிட்டு யாரும் அவரை பின்பற்றுவதில்லை. எளிமை என்பது நிச்சயமாக வெறும் தோற்றம் மட்டுமில்லை. அது ஒரு வாழ்க்கை முறை. இங்கேதான், காலம் இன்றைக்கும் நமக்கு மகாத்மா காந்தியின் தேவையை உணர்த்துகிறது.

காந்தியின் அரையாடை தோற்றம்தான், அன்றைக்கு அவரை 30 கோடி மக்களிடம் அவர்களில் ஒருவராக உணர வைத்தது. அதனால்தான், அந்த முதிய இளைஞரின் பின்னால் இந்தியாவே திரண்டு நடந்தது. தான் கூறியதை எல்லாம் காந்தி தனது வாழ்க்கையில் கடைபிடித்தார். காந்தியின் எளிமை என்பது நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரானது. காந்தி எளிமையாக இருந்தார், எளிமையாக வாழ்ந்தார். எளிமையை வாழ்க்கை முறையாகக் கொண்டார். எளிமை என்பது ஒரு வகையில் அறம்.

ஆனால், இன்றைக்கு அரசியல்வாதிகள் எளிமையாக இருப்பது போல, காட்டிக்கொள்கிறார்கள். ஒரு நாள் ஏழைகளின் வீட்டிலும் தலித் வீட்டிலும் சாப்பிட்டுவிட்டு எளிய மக்களிடம் நெருக்கமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். மக்களுடன் கலப்பது என்பது அரசியல்வாதிகள் தங்கள் படை பரிவாரங்களுடன் எளிய மக்களின் வீட்டுக்கு சென்று சாப்பிடுவது அல்ல.

இப்போது அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் சர்ச்சைக்கு வருவோம். இதற்கு முன், இங்கே பிரதமர் நரேந்திர மோடியின் கோட் சூட் விலை, ராகுல் காந்தியின் சட்டை விலை எல்லாம் விவாதமாகி உள்ளது. இப்போது அண்ணாமலை வாட்ச் சர்ச்சை, பதிலுக்கு பா.ஜ.க-வினர் எழுப்பும் தி.மு.க அமைச்சர்களின் சொத்துக் கணக்கு கேள்வி. இவைகளே இந்தியாவில் மக்களிடையே நிலவும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகளுக்கான சாட்சி.

இந்த சர்ச்சையின் மையம் இதுதான், தி.மு.க-வினர் பா.ஜ.க-வை நோக்கி எங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இல்லை. எங்களை விமர்சனம் செய்ய நீங்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை என்பதுதான். அண்ணாமலையை நோக்கியும் இதே கேள்விகளைத்தான் கேட்கிறார்கள்.

அண்ணாமலை அவருடைய எளிமைக்காக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டவரல்ல. தி.மு.க-வை எதிர்கொள்ள ஒரு சூடான இளம் தலைவர் வேண்டும் என்பதற்காக நியமிக்கப்பட்டவர். ஆனால், அவர் தன்னை ஒரு சாதாரண விவசாயி, எளிமையானவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர் தி.மு.க-வை மிகவும் சத்தமாகவே விமர்சித்தார். இப்போது, அண்ணாமலையின் வார்த்தைகளை வைத்தே தி.மு.க-வினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எந்த சாதாரண விவசாயி 5 லட்சம் ரூபாய் வாட்ச் வாங்கி கட்டுகிறார்கள் என்று கேட்கிறார்கள். தேசியவாதி வெளிநாட்டு வாட்ச் கட்டலாமா என்று கேட்கிறார்கள். அதற்கு, தேசியவாத முலாம் பூசி அண்ணாமலை அளித்த பதில்கள் ஆபாசமாக பல் இளிக்கின்றன. தி.மு.க தங்கள் ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், பந்தாக்களுக்கு திராவிட மாடல் முலாம் பூசுகிறது என்றால் பா.ஜ.க தேசியவாதம் என்ற முலாம் பூசுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்.

அப்படி என்றால், அரசியலில் இன்றைக்கு யார்தான் எளிமையாக இருக்கிறார்கள் என்று கேட்கலாம். அரசியல்வாதிகளிடம் எளிமை என்பது எள்ளளவும் இல்லாமல் போய்விட்டது. அரசியலில் எளிமை எப்போது மறைய ஆரம்பித்ததோ அப்போதே, அறமும் மறையத் தொடங்கி காணாமல் போய்விட்டது. அரசியல்வாதிகள் தாங்கள் மட்டுமல்ல, மக்களையும் ஆடம்பரம், பகட்டு, பந்தாவுக்கு பழக்கிவிட்டார்கள். அனைவரின் கைகளையும் கறையாக்கிவிட்டால், யாரும் தூய்மையானவர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை கறைபடிந்தவர்கள் என்று குற்றம் சாட்டக்கூடாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இன்றைக்கு அரசியலில், யோக்கியர்கள் யாரும் இல்லை. சதவிகிதம் வேண்டுமானால் மாறுபடலாம். இவர்களிடம்தான், காந்தியின் எளிமை, அவர் காலத்து காந்தியவாதிகளின் எளிமை, நேர்மை, அர்ப்பணிப்பு பற்றி கூற வேண்டியிருக்கிறது. உலகத்திற்கே காந்தி ஒரு பாடமாக இருக்கிறார். ஆனால், அவரை இந்தியர்களும், இந்திய அரசியல்வாதிகளும் பேசுவதோடு சரி, அவரைத் திரும்பிப் பார்ப்ப்பதே இல்லை.

இன்றைக்கு இந்த வாட்ச் விலை சர்ச்சை தேவையா, தமிழக அரசியல் போகும் பாதை சரியா என்றால், தேவைதான். சரிதான். அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி அப்பலப்படுத்தட்டும். அவர்களின் பொய் முகங்கள் கலையப்பட்டு நிர்வானப்படுகிற போதாவது மக்கள் தங்கள் பார்வைகளைத் திருப்புகிறார்களா என பார்ப்போம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Dmk Annamalai Rafale Deal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment