”ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை” என்று அண்ணா சொன்னார். அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணம் உண்டு. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில், மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியர்களைக் கொண்ட அரசு இருந்தது. அந்த அரசைக் கண்காணிக்க ஆளுநர் என்ற ஒருவரை வெள்ளையர் அரசு நியமித்தது. இந்தியா முழுமைக்கும் கவர்ஜெனரல் என்று ஒருவர் இருந்தார். அதே முறை இப்போதும் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் ஏஜெண்டாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்பதும் ஒரு காரணம்.
ஆளுநர் என்பவர், ஒரு மாநில அரசின் தலைவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உறுதுணையாக இருந்து மாநில வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உறவுப் பாலமாகத் திகழ வேண்டியவர். ஆனால், மத்திய அரசின் ஏஜென்டாக ஆளுநர்கள் செயல்படுகின்றனர். இப்போது இன்னும் மோசமாகி, மத்தியில் ஆளுகின்ற கட்சியின் ஏஜெண்டாகவே செயல்படுகின்றனர்.
சட்டப் பேரவையில் உரையாற்றும் ஆளுநர், தனது உரையில், “My government, என்னுடைய அரசு” என்று சொல்வார். அதே ஆளுநர், மத்திய அரசின் பேச்சைக் கேட்டு, அந்த அரசுக்கு எதிராக செயல்பட்டதும் உண்டு.
இந்த நிலைமை இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதே தொடங்கிவிட்டது. 1984 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் சொல்படி, ஆந்திராவில் ராமராவ் அரசைக் கவிழ்த்தார் அந்த மாநில ஆளுநராக இருந்த ராம்லால். ராம்ராவ் அமைச்சரவையில் இருந்த பாஸ்கரராவ் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள், ராமராவ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். அதை ஏற்று ராம்ராவ் அரசை டிஸ்மிஸ் செய்தார். 57 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பாஸ்கரராவை ஆட்சி அமைக்க அழைத்தார். பாஸ்கரராவ் முதல்வர் ஆனார். ஆட்சி அமைப்பதற்கான பலம் பாஸ்கரராவுக்கு இருக்கிறதா என்றுகூட ஆளுநர் ராம் லால் பார்க்கவில்லை. பாஸ்கரராவ் முதல்வர் ஆகிவிட்டால், ராம்ராவ் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கரராவ் பக்கம் வந்துவிடுவார்கள் என்று கணக்குப் போட்டனர். அனால் அது நடக்கவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஆட்சியை இழந்தார் பாஸ்கரராவ். ராம்ராவ் மீண்டும் முதல்வர் ஆனார்.
ஒரு மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டால், சட்ட நிபுணர்களின் கருத்தை அறிந்து முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் சொல்வார். உண்மையில், இவர்கள் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதில்லை. மத்தியில் ஆளும் கட்சியின் தலைமை அல்லது பிரதமர் சொல்லும் முடிவை ஏற்றுதான் செயல்படுகின்றனர். அந்த முடிவுக்கு சாதகமாக, சட்டத்தில் என்னென்ன ஷரத்துகள் உள்ளன என்பதை எடுத்துக்கொடுக்கும்படிதான் சட்ட நிபுணர்களிடம் கேட்கின்றனர். அவர்களும் சட்டத்தின் சந்துபொந்துகளை ஆராய்ந்து ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு ஆதரவான கருத்துகளை எடுத்துக்கொடுப்பார்கள். சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து ஆளுநர்கள் முடிவெடுப்பதில்லை. தங்கள் முடிவுக்கு ஏற்ப சட்டத்தை வளைத்துக்கொள்கின்றனர். மத்தியில் ஆளும் அதே கட்சி மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால், சட்டம் ஒரு கருத்தை சொல்லும். அப்படி இல்லாமல், மாநிலக்கட்சி ஆட்சியில் இருந்தால், அதே சட்டம், அதற்கு எதிரான கருத்தை சொல்லும். இதுதான் சட்ட நிபுணர்களிடம் ஆளுநர் கருத்து கேட்கும் லட்சணம்.
ஏதோ ஒரு சில ஆளுநர்கள் மட்டுமே, சுயமாக செயல்பட்டுள்ளனர். அதில் குறிப்பிடத் தக்கவர் தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா. 1990ல் தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி இருந்தது. ஆளுநராக பர்னாலா இருந்தார். மத்தியில் 57 எம்.பி.க்களை மட்டுமே வைத்திருந்த ஜனதாக் கட்சியின் சந்திரசேகர் பிரதமராக இருந்தார். அவருக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. தமிழகத்தில் திமுக அரசை டிஸ்மிஸ் செய்யும்படி, சந்திரசேகர் அரசுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது.
திமுக அரசைக் கலைக்கும்டி பரிந்துரை செய்து அறிக்கை அளிக்கும்படி, ஆளுநர் பர்னாலாவிடம் மத்திய அரசு கேட்டது. பர்னாலா மறுத்துவிட்டார். ஆளுநர் அறிக்கை பெறாமலே, திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய மத்திய அமைச்சரவை பரிந்துரைத்தது. அதை ஏற்று, திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன்.
இப்போது, தமிழகத்தின் ஆளுநர் எப்படி?
ஓராண்டாக தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் இல்லை. மஹாரஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக தமிழக ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வருகிறார். ஜெயலலிதா, மருத்துவமனையில் படுத்ததில் இருந்தே தமிழக அரசில் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது. அவ்வப்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது, இப்படிப்பட்ட மாநிலத்துக்கு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் இருக்கிறது. ஆளுநர் பதவிக்கு தகுதியானவர் கிடைக்கவில்லையா என்ன? இருக்கிறார்கள். ஆனாலும் நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் உள்ளது மத்திய அரசு. இதில் இருந்தே மத்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர், மத்திய அரசின் ஏஜெண்டாக அல்ல, மத்தியில் ஆளும் பாஜவின் ஏஜெண்டாகவே செயல்படுகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு, பாஜவின் பினாமி அரசு போலவே செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் எதையெல்லாம் ஜெயலலிதா எதிர்த்தாரோ, அவற்றையெல்லாம், வாய் பொத்தி, கை கட்டி ஏற்றுக்கொண்டது அதிமுக அரசு. ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோதும், எடப்பாடி முதல்வராக இருக்கும்போதும் இதே நிலைதான். பாஜவின் பினாமி அரசு என்று சொல்லக் கூடிய நிலைதான் உள்ளது. மத்திய அரசின் அடிமை அரசாகவே தமிழக அரசு உள்ளது. நமக்குக் கிடைத்த அடிமை மிகவும் சிறந்த அடிமை என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரதமர் மோடி.
எடப்பாடிக்கு எதிராக, டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் 20க்கும் மேற்பட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை, வேறு முதல்வரைத் தேர்ந்தெடுப்போம் என்று ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது வெளிப்படையான உண்மை.
சட்டப் பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் திமுக உட்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு அவசியமில்லை என்று சொல்கிறார் பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் ராவ்.
அதற்கு அவர் சொல்லும் காரணம், “132 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில்தான் உள்ளனர். எடப்படி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை பலத்துடன்தான் உள்ளது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடிக்கு உத்தரவிட அவசியமில்லை’’ என்று சொகிறார் வித்யாசாகர்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றபோது, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் 12 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக இருந்தனர். ஆனால், அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடப்பாடிக்கு உத்தரவிட்டார் இதே ஆளுநர் வித்யாசாகர் ராவ். அப்போதும் 132 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில்தான் இருந்தனர். ஆனாலும் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். ஆனால் இப்போது அவசியம் இல்லை என்று சொல்கிறார். காரணம், அபோது ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தது பாஜ. இப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி அணியும் இணைந்துவிட்டன. தான் சொன்னதைக் கேட்கும் அரசாக இருக்கும் இந்த அரசு நீடிப்பதையே பாஜ அரசு விரும்புகிறது. பெரும்பானமையை நிரூபிக்க உத்தரவிட்டால், எடப்பாடி அரசு கவிழும். அடிமை அரசு நீடிப்பதையே பாஜ விரும்புகிறது. அதற்கேற்ப செயல்படுகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றபோது, பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகிய இருவரின் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்து வாழ்த்தினார் ஆளுநர் வித்யசாகர். ஆளுநரின் வேலையா இது? இரண்டு அணிகள் இணைப்பின் பின்னணியில் பாஜக இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது ஆளுநரின் செயல். அதுமட்டுமல்ல, பாஜவின் ஏஜெண்டாக அவர் செயல்படுவதையும் உறுதி செய்வதாகவே உள்ளது.
இப்போது சொல்லுங்கள். அண்ணா சொன்னது சரிதானே?