ப.சிதம்பரம் பக்கம் : விநோதமான வருடத்துக்கு விடை கொடுப்பொம்.

விடை கொடுக்கும் 2017ம் ஆண்டு, பல வினோதங்களை கொண்டது. இந்த ஆண்டில் நிகழ்ந்த சில வினோதங்கள் என்னை வெட்கப்பட, கோபப்பட வைத்தன. இறுதியாக சிரிக்க வைத்தன.

ப.சிதம்பரம்

ஒவ்வொரு நாடும் நகைச்சுவைக்கென்று ஒரு நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுக்கு, ஒரு நாள் போதாதுதான். ஆனால் தொடங்கி வைப்போம். நகைச்சுவை பல்வேறு காரணங்களால் உருவாகிறது. உண்மையாகவே நகைச்சுவையை ஏற்படுத்தும், சம்பவங்கள் உள்ளன. தற்செயலாக நிகழும் சில சம்பவங்கள் நகைச்சுவையை ஏற்படுத்தும். இதழ்களில் வரும் நகைச்சுவைகளையும், கார்டூன்களையும் நான் ரசிக்கிறேன். அவற்றில் சில என்னை வாய் விட்டு சிறிக்க வைக்கும். எனக்கு மிகவும் பிடித்த ஒரு கார்டூன் காமிக்ஸ் டென்னிஸ் தி மெனஸ். சமூக வலைத்தளங்களில் வரும் நகைச்சுவைகள், அதை உருவாக்கியவர் குறித்து வியக்கும் அளவுக்கு நகைச்சுவையாக இருக்கின்றன. மீம்கள் சிறப்பாக இருக்கின்றன.

ஆனால் சில சம்பவங்களையும் அறிக்கைகளையும் படிக்கையில் அவை வினோதமானவையாக தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. தொடக்கத்தில் புன்முறுவலை ஏற்படுத்தினாலும், சில நேரம் கோபம் ஏற்படுத்தும். நானும் கோபமாகவே கருத்து தெரிவித்திருக்கிறேன். ஆனால், அது போன்றவற்றை பார்த்து, அதன் பின்னால் உள்ள அறியாமையை கண்டு சிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். வினோதமான அறிவிப்புகளால் மூளை குழம்புவதிலிருந்து தப்பிக்க நகைச்சுவை உணர்வு பெரிதும் உதவுகிறது.

நாம் விடை கொடுக்கும் 2017ம் ஆண்டு, இது போல பல வினோதங்களை கொண்டது. இந்த ஆண்டில் நிகழ்ந்த சில வினோதங்கள் என்னை வெட்கப்பட வைத்தன. கோபப்பட வைத்தன. ஆனால் இறுதியாக அவற்றை பார்த்து சிரிக்கக் கற்றுக் கொண்டேன்.

ஆபத்தான அறிவிப்புகள்

அதிகாரத்தின் உச்சத்தில் உள்ளவர்களே இது போன்ற வினோதமான அறிவிப்புகளுக்கு சொந்தக்காரர்கள்.

1) மத்திய உள்துறை இணையமைச்சர் ஒரு கிறித்துமஸ் நாளில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு மருத்துவர் கலந்து கொள்ளாமல் இருந்ததை கவனித்தார். அந்த மருத்துவர் சில நாட்கள் விடுமுறையில் இருந்தார். கடும் கோபமடைந்த அமைச்சர், “வேலைக்கு வராத மருத்துவர்கள் நக்சலைட்டுகளோடு இணையலாம். பிறகு உங்களை துப்பாக்கிக் குண்டுகளால் துளைப்போம் என்று கூறினார். அந்த அமைச்சரிடம் யாரோ, நமது மக்கள் தொகைக்கு தேவைக்கு அதிகமாக மருத்துவர்கள் உள்ளார்கள் என்று கூறியதால், மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கிறாரோ என்னவோ.

2) ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி, பசுக்களை கொல்பவர்களை கொல்லலாம் என்று வேதத்தில் (எந்த வேதம் என்று தெரியவில்லை) உள்ளது. கூடுதலா, பசுக் கொலைக்கான தீர்வையும் அந்த நீதிபதி சொன்னார். பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்து, பசுக் கொலைக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றார். ஒரு நீதிபதியே இப்படி சொல்லியிருப்பதால், நமது நெருக்கடியான சிறைச் சாலைகளில் போதுமான இடத்தை உருவாக்க வேண்டும்.

3) மத்திய பிரதேசத்தைப் சேர்ந்த ஒரு அமைச்சர், மணப் பெண்களுக்கு 700 மர பேட்டுகளை பரிசாக அளித்தார். அந்த மர பேட்டுகளில் ‘குடிகார கணவர்களை அடிப்பதற்காக என்றும், காவல்துறை தலையிடாது’ என்றும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. ஒரே கல்லில் பெண்களுக்கு அதிகாரம், மதுவிலக்கு, மற்றும் காவல்துறை சீர்திருத்தம் (எலும்புகள் உடைக்கப்பட்டால் கூட) என்று மூன்று மாங்காய்களை அடித்தார் அந்த அமைச்சர்.

முட்டாள்த்தனமான உத்தரவுகள்

பல்வேறு வார்த்தைகளால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், வினோதமான நடவடிக்கைகளின் படிநிலையில் உள்ளன.

4) உத்தரப் பிரதேசத்தில், தாரூல் உலூம் தியோபான்ட் என்ற அமைப்பு, இஸ்லாமிய பெண்கள், முடி வெட்டக் கூடாது, புருவங்களை திருத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. அழகு நிலையங்களுக்கு செல்வதற்கு தடை. அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது. அதனால் பெண்கள் அழகு நிலையத்துக்கு செல்லாமல், தங்கள் கணவர்களை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

5) மதுராவில் உள்ள மதோரா கிராம பஞ்சாயத்து, அந்த ஊர் பெண்கள், வீட்டை விட்டு வெளியே சென்று செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் 2,100 ரூபாய் அபராதம் என்று உத்தரவிட்டுள்ளது. ஏன் 2100 ரூபாய்? நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்வதாலா? அல்லது மலிவான செல்பேசியின் விலை 2100 ரூபாய் என்பதாலா?

6) கிறித்துமஸ் கொண்டாடக் கூடாது என்று ஒரு இந்து அமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. கிறித்துமஸ் பண்டிகையை வெறுக்கிறோம். கிறித்துமஸ் பாடல்களை வெறுக்கிறோம். கிறித்துமஸ் மரங்களை எரிப்போம். கிறித்துவத்தின் முக்கியமான கோட்பாடான மன்னிப்போம் என்பதை ஏற்க மாட்டோம் என்று அந்த இந்து அமைப்பு வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். நாம் அவர்களை மன்னிப்போம்.

7) தாவூ போரா சமூகத்தைச் சேர்ந்த அமைப்பு, அதன் உறுப்பினர்கள், இந்திய முறையில் கட்டப்பட்ட கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடங்களில்தான் திருமணங்களை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வெஸ்டர்ன் முறையில் இருக்கும் கழிப்பறைகளை உடைக்கும் படங்கள் வெளியாகின.

மோசமான நோக்கங்கள்.

வினோதம் என்பது மோசமாகவும் அமையலாம். அவற்றில் சில எனக்கு நகைச்சுவை உணர்வை ஏற்படுத்துவதில்லை.

8) பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிலையம், தன் ஊழியர்கள் அனைவரும், திருமணமானவர்களா, கன்னி கழியாதவர்களா, எத்தனை மனைவிகள் என்பது போன்ற விபரங்களை பூர்த்தி செய்து தருமாறு உத்தரவிட்டது. இந்த விண்ணப்பம் ஆண்களுக்கு மட்டுமா என்பது தெரியவில்லை.

9) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், ஒரு பரிசு வென்றதற்காக, சக மாணவியை கட்டிப் பிடித்து வாழ்த்து தெரிவித்தற்காக பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டான். நான்கு மாதங்கள் இடைநீக்கத்தில் இருந்தான். அந்த மாணவன் தனது உரிமைக்காக போராடுவேன் என்று கூறினான். மோடிக்கு அந்த மாணவனை மிகவும் பிடித்திருக்க வேண்டும். பிரதமர் அவர் வாழ்த்துக்களை அந்த மாணவனுக்கு அனுப்ப வேண்டும்.

10) ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் தம்பதியினர் அவர்கள் திருமண நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடையே இருந்த காதல், மாணவர்களை பாதிக்கும் என்பதை காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் அவர்களை பணி நீக்கம் செய்தது. அந்த தம்பதியினரிடையே நிலவிய அன்பு, மாணவர்களுக்கு தொற்றிக் கொள்ளும் என்று நிர்வாகம் பயந்ததா? அந்த தம்பதியினர் அவர்களின் திருமணம், வீட்டாரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் காதல் திருமணம் அல்ல என்றும் விளக்கம் கொடுத்தனர்.

11) வினோதமான உலகில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முடிசூடா மன்னர். மன்னரின் பிறந்த நாளை கொண்டாடுவதை விட அவரை ஏற்றுக் கொள்வதற்கு வேறு எது சிறந்த வழி? ட்ரம்ப்பின் 71வது பிறந்த நாளை இந்து சேனா என்ற அமைப்பு பிரம்மாண்டமாக கொண்டாடியது. புது தில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய அந்த நிகழ்ச்சி நெற்றியில் திலகமிடுவதோடு சேர்ந்து, 7 கிலோ 100 கிராமுக்கு கேக் வெட்டுவதோடு நிறைவடைந்தது.

வாய் விட்டு சிரியுங்கள். வினோதமான பழைய ஆண்டுக்கு விடை கொடுத்து 2018க்கு வரவேற்பு தெரிவியுங்கள். அது வளமையான ஆண்டாக அமையக் கூடும்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 31.12.17 தேதியிட்ட நாளிதழில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close