அகம் டிவி அரசியல்: கமல்ஹாசன் எடுக்கும் புது பரிணாமங்கள்

முதல்வர் பதவிக்குப் போட்டிபோடும் கமல்ஹாசன் லாஸ்லியா, கவின்,சேரன் என்ற மும்முனை உறவுகளை விவாதத்திற்கு அழைத்த போது புது வகையான அரசியல் பிறந்தது…..

bigg boss Season 3: how to understand Bigg Boss TV Show
bigg boss Season 3: how to understand Bigg Boss TV Show

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டோ தி ரிபப்ளிக் என்ற தனது புத்தகத்தில் இவ்வாறாக எழுதியிருந்தார், “தத்துவங்கள் ஆட்சி அமைக்கட்டும், தத்துவஞானிகள் மட்டும் அரசர்களாக வரட்டும்” என்று .

இந்த வரிகளை உற்று கவனித்தால், அரசியலைத் தத்துவமாக்குவது பிளேட்டோ வின் நோக்கமல்ல-  மாறாக, குடும்ப கட்டமைப்பில் வாழும் சாதாரண மக்களுக்கு அரசியலும், அதை உணரக் கூடிய சுதந்திரமும் அடைய முடியாது என்பதையே நாம் பொருளாய் கொள்ள முடியும்.

தெரிந்தோ ! தெரியாமலோ இன்று நாம் அனைவரும் பிளேட்டோ – வின் தர்க்கங்களை நியப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்,ஏன்…. பிளேட்டோ வாகவே மாறி வருகின்றோம்.

உதாரணமாக,

விரக்தியில் வரும் வசனம்: அண்ணன்,தம்பி, சொந்த பந்தமெல்லாம் வேஸ்ட், நட்பு தான் பெருசு…… நண்பேண்டா !!!!(அல்லது)                                                                                                         சந்தோஷத்தில் வரும் வசனம்: அண்ணன்/தம்பி, அப்பா/பையன், அம்மா/பொன்னு, கணவன்/மனைவியா வாழ  மாட்டோம், ஒரு நட்பா தான் பழகுவோம் !!!

இந்த இரண்டு வசனங்களிலும் குடும்ப உறவுகள் தனக்கான அடையாளங்களை இழந்து விட்டன என்பதையே நம்மால் உணர முடிகிறது .

குடும்ப உறவுகள்(அண்ணன்/தம்பி,தாய்/தகப்பன்) விதியினால் நமக்கு கொடுக்கப்பட்டது, உணர்வால் கட்டமைக்கப்படது, நிபந்தனைகளோடு நிர்பந்திக்கப்பட்டது. ஆனால், நட்பு என்கிற கட்டமைப்பு: சுதந்திரமாகத் தேடியது, வாழ்க்கை நிர்பந்தங்களுக்கு அப்பாற்பட்டது, நம் தேடலால் மட்டும் சாத்தியமாக்கப் பட்டது.

இன்றைய அரசியலும், நவீன பொருளாதாரமும், உலகமயமாக்க  சிந்தனைகளும் : விதி, உணர்வு, நிபந்தனை போன்றவைகளால் கட்டப்பட்ட குடும்பத்தில் இருந்து நம்மை விடுவிப்பதில் குறியாக உள்ளன. ஆனால், விடுவிக்க முடியுமா?குடும்பங்கள் தேவையில்லாத ஒன்றா ?

தீவிரவாதம், ஐந்து ட்ரில்லியன் இந்திய பொருளாதாரம், உலக வர்த்தக பிரச்னை போன்றவைகளில் இருக்கும் தெளிவு கூட…. குடும்ப வாழ்க்கையின் எதிர் காலம் என்ன ?அடுப்படிகளின் அழகியல் என்ன? தந்தை/தாய் – மகன்/மகள் என்று சொல்கிறோமே இவர்களெல்லாம் யார்? எந்த அர்த்தத்தில் தர்கத்தில் முதியோர் இல்லத்தை நாம் நியப்படுதினோம்? மாமியார்-மருமகள் ஏன் என்றும் சாத்தியப்படாத மொழியில் உள்ளது ?  என்ற இந்த கேள்விகளுக்கு தெளிவு இல்லாமல் இருக்கின்றோம். ஏன்…. இவைகளை கேள்வி ஆக்கப்படாமலே விட்டுவிட்டோம்.

மக்களாட்சி அரசியல் மக்களை உருவாக்கியதோடு நின்றுவிட்டது.  என் தலைவருக்கு குடும்பம் இல்லை, அதனால் அவருக்கு ஒட்டு போடுங்க !!! குடும்ப அரசியல் செய்கிறார்கள், அவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள் !!! என்ற தர்க்கத்தில் தான் இன்றைய மக்களாட்சி நடைபோட்டுவருகிறது.

உத்தேசமாக, ஒரு செய்தித் தாளை எடுத்து படியுங்கள் – மந்திரி மகன் வேகமாய் கார் ஓட்டினான், குடும்பத் தகராரு, கள்ளக் காதல், நகைத் திருட்டு இவையே இன்றைய குடும்பகளைப் பற்றிய கற்பனைகளாய் உள்ளன.

திரைப்படங்களை நாம் விமர்சிக்கிறோம், கொண்டாடுகிறோம், அரசியல் ஆக்குகிறோம், ஏன்….. அரசியல் தலைவர்களையே தேடுகிறோம். ஆனால், குடும்ப எதார்த்தங்களையும், ஒரு வாரத்திற்கு ஏழு நாள் என்று நமக்கு அறிமுகப்படுத்திய  டிவி சீரியலைப் பற்றிய விவாதங்கள், கருத்தாய்வும் நம்மில் ஏன் இல்லாமல் போனது? வெளிப்படையாய் சொன்னால், அடுத்த முதல்வரை ஏன் நாம் டிவி சீரியலில் தேடக் கூடாது? பெமினிசம், கம்யூனிசம், சோசியலிசம், கேபிடலிசம் போன்ற தத்துவங்களை விட நமது டிவி சீரியல் அன்றாட மனிதர்களை பிரதிபலிக்கிறது  என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த தர்கத்தில் மட்டும் பார்த்தால், இன்று அகம் டிவியில் காட்டப்படும் பிக்பாஸ் வீடு ஒரு நல்லத் தொடக்கம் என்றே சொல்லலாம். பொறாமை, கோபம், போட்டி வஞ்சகம், அழுகை, சிரிப்பு போன்ற உணர்வுகள் இங்கு படம் போட்டுக் காட்டுகின்றன. விவாதிக்கப் படுகின்றன, விவாதங்களாகப் மாற்றப் படுகின்றன. ஆகஸ்ட் ஐந்தாம் நாள்  இந்தியாவிற்கு என்று  ஒரு தலைப்பு செய்தி இருந்தால், அன்று பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி-முகினின் அன்றாட மக்களின் பிரிவுகளை அடையாளப்படுத்தின. இன்னும், சுருங்கச் சொன்னால் இந்திய ராணுவம், லாஸ்லிய-ஓவிய ஆர்மி இவை இரண்டில் எது சிறந்தது ? என்ற விவாதம் முன் வைக்கப்டவேண்டியதில்லை என்பது தான்  .

பிக்பாஸ் வீட்டால் தனியுரிமை(privacy) மீறப்படுகிறது என்ற வாதமும் நம் முன்னே வைக்கப்படுகிறது. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டமே தனி உரிமையை இழந்ததால் தான் கிடைத்து என்பதற்கு வரலாற்று சான்றுகளே உள்ளன.  காந்தியின் சபர்மதி ஆஷ்ரமத்தில் மக்கள் ஒன்றாய்த் தங்கி, உண்டு, கழிவறையை சுத்தம் செய்து தான் போராட்டத்திற்கான திட்டங்களைத் தீட்டினர். பிக் பாஸ் ரேஷ்மாவும், கஸ்தூரியும் தனது தனிஉரிமையை(privacy) இழந்ததால் தான் சுதந்திரமாக தங்கள் சோகக் கதையை சொன்னார்கள்.

முந்தைய இரண்டு தொடர்களில் கமல் ஒரு நடிகனாய் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்றார், ஆனால் இந்த மூன்றாவது தொடரில் தனது அரசியலின் அர்த்தத்தை பிக் பாஸ் என்ற வீட்டுக்குள் தேடி வருகிறார். முதல்வர் பதவிக்குப் போட்டிபோடும் கமல்ஹாசன் லாஸ்லியா, கவின்,சேரன் என்ற மும்முனை உறவுகளை சரி செய்ய நினைத்தபோது , விவாதத்திற்கு அழைத்த போது புது வகையான அரசியல் பிறந்தது என்றே சொல்ல வேண்டும்.

இந்த புது அரசியல்  இந்தியாவில் இருக்கும் 20 கோடி வீடுகளில் இருந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும். சமத்துவம், சம தர்மம், சமநீதி போன்றவைகள் நமது வீட்டு அடுப்படிகளிலும், படுக்கையறையிலும், கழிவறைகளிலும் ஆரம்பிக்கப்படட்டும்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss season 3 kamal hassan indian politics bigg boss home

Next Story
Tavleen Singh Writes : காஷ்மீர் முன்பை விட பெரிய தலைவலியாக மாறும்Kashmir 370, Article 370 abrogation,Imran khan , Narendra Modi , Mob Lynching
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express