Advertisment

சொன்னால் முடியும் : வகுப்புவாதமும் போர் முழக்கமும்

‘‘இந்தியாவின் ஒருமைப்பாடும், வளமும் பாகிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது’என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சொன்னார்.

author-image
Ravi Kumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
india pakistan

ரவிக்குமார்

Advertisment

”பாகிஸ்தான் நவீன ரக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. அதனால் அந்த பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது” என அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குனர் டான் கோட்ஸ் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்டுவந்த உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி ஒரு மாதத்துக்குள்ளாக இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தானை மிரட்டித் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக அவ்வப்போது அமெரிக்கா இப்படிச் சொல்வது வழக்கம். உடனே பாகிஸ்தான் அரசும் சில நடவடிக்கைகளை எடுக்கும். பிறகு வழக்கம்போல அமெரிக்க பாகிஸ்தான் உறவு தொடரும் – இதுதான் இதுவரைக்கும் நடந்துவரும் நாடகம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட இதேபோன்று ஒரு குற்றச்சாட்டை அமெரிக்கா கூறியது. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஹர்பூன் ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி. ஆப்கானிஸ்தானில் இருந்த ரஷ்ய ஆதரவு ஆட்சியை அகற்றுவதற்கு பாகிஸ்தான் செய்த உதவிகளைப் பாராட்டும் விதமாகத்தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு முதன்முதலாக ஹர்பூன் ரக ஏவுகணைகளை வழங்கியது. அந்த ஏவுகணைகள் கடலில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டவையாகும். அமெரிக்கா அப்போது கூறிய குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை. அது அமெரிக்காவே கிளப்பிவிட்ட புரளிதான் என்று அப்போது பேச்சு எழுந்தது. தனது கூட்டாளியாக இருக்கும் பாகிஸ்தானைப்பற்றி அமெரிக்கா ஏன் புரளி கிளப்பவேண்டும்? அதில்தான் அமெரிக்காவின் சூழ்ச்சி மறைந்திருக்கிறது.

பாகிஸ்தானின் நிலவியல் அமைப்பு பிரத்யேகமானது. 1947ல் அது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே அது அண்டை நாடுகளான இந்தியாவுடனும், ஆப்கானிஸ்தானுடனும் பகைமையையே பாராட்டி வருகிறது. சிறிய நாடாக இருப்பதால் அண்டை நாடுகளோடு மறைமுகப் போரையே அதனால் நடத்த முடியும். அதற்காக இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எதிரான ஆயுதக் குழுக்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரித்து ஊக்குவித்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய படையை அங்கிருந்து கிளப்புவதற்காக அந்த ஆயுதக் குழுக்கள் சிலவற்றை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. 1989 ல் ரஷ்ய துருப்புகள் அங்கிருந்து சென்ற பின்னர் அந்த ஆயுதக் குழுக்களை கலைத்துவிடுமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியது. ஆனால் பாகிஸ்தானால் அதைச் செய்ய முடியவில்லை. மாறாக அவற்றைத் தனது நாட்டிலிருந்து செயல்படவும் பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது. அதனால்தான் அதிபர் டிரம்ப் பாகிஸ்தான்மீது ஆத்திரப்படுகிறார். உதவிகளை நிறுத்தச் சொல்கிறார். ஆனால், அமெரிக்காவின் இந்த அணுகுமுறை பலனளிக்காது என்கிறார் பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஜி ஓல்சன். அவர் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் (09.01.2018) “பாகிஸ்தானுக்கு அமெரிக்கா செய்யும் உதவியைக்காட்டிலும் பன்மடங்கு அதிக உதவியை சீனா செய்து வருகிறது. எனவே இப்படியான மிரட்டல் இப்போது கைகொடுக்காது. பாகிஸ்தானின் உதவி இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ராணுவம் கரையொதுங்கிய திமிங்கிலம் போலாகிவிடும்” என எச்சரிக்கிறார் ஓல்சன்.

ஆப்கானிஸ்தானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது அமெரிக்காவுக்கு முக்கியமானதாகும். அப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து சில முயற்சிகளை மேற்கொண்டன. அம்முயற்சிகளில் அமெரிக்காவை அவை ஓரம் கட்டி வைத்துவிட்டன. அது அமெரிக்காவை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கிவிட்டது. எனவேதான் பாகிஸ்தான்மீது கட்டுக்கடங்கா கோபத்தில் அமெரிக்கா உள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு முறுகல் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதன் மூலம்தான் பாகிஸ்தான் தன்னைச் சார்ந்திருக்கும்படிச் செய்ய முடியும் என்பது அமெரிக்கா நெடுநாட்களாகக் கடைபிடித்துவரும் ஒரு தந்திரம். அதனடிப்படையிலேயே பாகிஸ்தான் நவீனரக அணு ஆயுதங்களை தயாரித்துவருகிறது என்ற செய்தியை அமெரிக்க அரசு கசிய விட்டிருக்குமோ என்று நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவொரு விதத்திலும் நல்லுறவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அமெரிக்கா காட்டிவரும் அக்கறை ஊரறிந்த உண்மையாகும்.

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தப் பிரச்சனை குறித்து நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழலாம். இந்தப் பிரச்சனையோடு காஷ்மீரில் அதிகரித்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்களையும், ‘ இதற்கு பாகிஸ்தான் உரிய விலையைத் தரவேண்டியதிருக்கும்’ என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருப்பதையும், ’ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நினைத்தால் எதிரியோடு போரிடுவதற்கு மூன்றே நாட்களில் ராணுவத்தை உருவாக்கிவிடும்’ என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பதையும் இணைத்துப் பார்த்தால் இதன் தீவிரத்தன்மை நமக்குப் புரிந்துவிடும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தை இந்த நிகழ்வுகள் உண்டாக்குகின்றன.

ராஜஸ்தான், கர்னாடகா உள்ளிட்ட பெரிய மாநிலங்கள் சிலவற்றிலும், வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றிலும் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் அவற்றில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு குறித்து பாஜகவுக்கு உறுதியான நம்பிக்கை இல்லாததால் அக்கட்சி பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் அக் கட்சிக்கு எதிராக வரும் பட்சத்தில் அடுத்து ஒருசில மாதங்களில் வரப்போகும் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு அது முன்னுரையாக அமைந்துவிடலாம். எனவே தனது வெற்றிவாய்ப்பை அதிகரிப்பதற்காக கார்கில் போரைப் போல பாகிஸ்தானோடு சிறு அளவிலான போர் ஒன்றை நடத்திப்பார்க்கலாம் என்ற முடிவுக்கு பாஜக அரசு தள்ளப்படலாம். அப்படியொரு நிலையை பாஜக அரசு மேற்கொண்டால் நாட்டுக்கு அது மிகப்பெரிய தீங்காகவே முடியும்.

துருப்புகளை எல்லைப் பகுதியை நோக்கி நகர்த்துவதற்கே பல ஆயிரம் கோடி ரூபாய்களை நாம் செலவு பண்ணவேண்டியிருக்கும். யுத்தம் என்று ஆரம்பித்தால் அது எப்படிப் போகும் என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது. கார்கில் யுத்தத்திலும்கூட இந்தியாவுக்குத்தான் அதிகப்படியான சேதம் நேர்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பாகிஸ்தானா? இந்தியாவா? என்ற கோணத்தில் இந்தப் பிரச்சனையை அணுகுவது சரியாக இருக்காது. அதுபோலவே இந்தப் பிரச்சனையை அமெரிக்காவின் பார்வையில் இருந்தும் நாம் அணுகக்கூடாது. ஏனென்றால் அமெரிக்காவுக்கு இந்தியாவும் தேவை, பாகிஸ்தானும் வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. இந்தியாவோடு அணுசக்தி ஒப்பந்தத்தை போட்ட அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதற்கு இருந்து வந்த தடையையும் அமெரிக்கா விலக்கிக்கொண்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க நோக்கிலான அணுகுமுறை எந்தவித நன்மையையும் இந்த இரண்டு நாடுகளுக்குமே தராது. அது அமெரிக்காவுக்கு மட்டுமே பயன்படும்.

பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா எப்படியெல்லாம் தனது அதிகாரத்தை வலுப்படுத்தியது என்பதை இந்தியா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாத சம்பவங்களை சாக்காக வைத்து உதவி செய்கிறேன் என்ற பெயரில் முதலில் அமெரிக்கா மூக்கை நுழைக்கும். அதன்பிறகு, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உங்களால் முடியாது என்று சொல்லி தானே அந்த வேலையில் ஈடுபடப்போவதாகச் சொல்லும். ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் என்று இதற்கான உதாரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகு அந்த நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தன என்பதே உண்மை.

அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி அங்கே குளிர்காய்வதுதான் அமெரிக்காவின் தந்திரமாக இருந்து வருகிறது. அதற்கு இந்தியா பலியாகிவிடக் கூடாது. இப்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் சீரழிவு இந்தியாவைத் தொற்றிக்கொள்ளாமல் தடுக்க வேண்டுமென்றால் அமெரிக்காவை சார்ந்திருக்கும் இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறை மாறவேண்டும்.

பயங்கரவாதப் பிரச்சனையை ஐ.நா.வுக்குக் கொண்டு சென்று பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அந்நாட்டின்மீது பொருளாதார தடைவிதிப்பதற்கு ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

எல்லையில் தற்போது அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களை தமது குறுகிய அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் நமது ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய முதல் பணி.

இரண்டு நாடுகளுக்கிடையில் நல்லுறவு நிலவ வேண்டும் என்றால், முதலில் இரண்டு நாட்டு மக்களுக்கிடையில் நல்லுறவு நிலவியாக வேண்டும். அரசாங்கங்கள் கைகுலுக்கிக் கொள்வதைக் காட்டிலும், மக்கள் ஆரத்தழுவிக்கொள்வதே அவசியம். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை இரண்டு நாட்டு ஆட்சியாளர்களுமே எடுக்கவில்லை. ‘மிகவும் நேசத்துக்குரிய நாடு’ என்ற அங்கீகாரத்தை இந்தியாவுக்கு வழங்க பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் யாவும் ஏனைய உறுப்பு நாடுகளுக்கு அந்த அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பது விதி. பாகிஸ்தானுக்கு அந்த அந்தஸ்தை இந்தியா வழங்கிய பின்னரும்கூட பாகிஸ்தான் அதைச் செய்யவில்லை.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியாவோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகப் பேசிக்கொண்டே இந்திய மக்கள் மீதான வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பாடப்புத்தகங்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பள்ளிக் குழந்தைகளின் மனதில் விதைத்துக் கொண்டிருக்கின்றன. மீண்டும் மீண்டும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லீம்கள் கொல்லப்பட்ட கதைகள் அங்கே சொல்லப்பட்டு வருகின்றன. முஸ்லீம்கள் கொல்லப்பட்டது எந்த அளவுக்கு உண்மையோ, அதைப்போலவே இந்துக்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதும் உண்மையாகும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏறத்தாழ பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அதை பரஸ்பரம் சொல்லிக் கொண்டேயிருப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. இதை இருநாட்டு ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

‘‘இந்தியாவின் ஒருமைப்பாடும், வளமும் பாகிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது’என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நினைவிருக்குமா ?

strong>(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment