சொன்னால் முடியும் : ஆளுநர் உரையும் முதல்வரின் பதிலுரையும்

ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்தபின் முதலமைச்சர் ஆற்றப்போகும் பதிலுரையில் அவர் தமிழக நலன்கள் குறித்துப் பேசுவாரா அல்லது ஆளுநரின் குரலையே எதிரொலிப்பாரா?

ரவிக்குமார்

தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே திரு. பன்வாரிலால் புரோஹித் சர்ச்சைக்குரியவராக மாறியிருக்கிறார். மவட்டந்தோறும் அவர் மேற்கொண்டுவரும் ஆய்வுகள் எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. அரசாங்கம் அவரை வரவேற்க ’சிவப்புக் கம்பளம்’ விரித்தால், எதிர்க்கட்சிகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி நிற்கின்றன. ஆளுநரின் செயல்பாடுகள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அதிகார வரம்பு மீறலாகவும் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் சட்டப் பேரவையில் தனது ‘கன்னி உரையை’ ஆளுநர் ஆற்றியிருக்கிறார். எதிர்பார்த்ததைப்போலவே அதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாகக் கருதப்படும் ஆளுநர் உரையில் அடுத்து அறிவிக்கப்படவிருக்கும் திட்டங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால் திரு. புரோஹித் அவர்களோ மத்திய அரசைப் பாராட்டுவதற்கே தனது உரையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜிஎஸ்டி வரி குறித்து ஆளுநர் கூறியிருப்பது அதற்கொரு உதாரணம்.

”சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்துவதால் மாநில அரசின் வரி வருவாயில் ஏற்படக்கூடிய இழப்பினை ஈடுசெய்து, மாநிலங்களின் நிதி நிலையை உறுதிப்படுத்த வழிவகுத்த மத்திய அரசிற்கு இந்த அரசு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது“ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தவரை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்தார். ஜிஎஸ்டியை எதிர்த்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்த கட்சி அதிமுக மட்டும்தான். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் மாநிலத்துக்குக் கிடைக்கும் வரி வருவாய் குறையும் என்பது மட்டுமே அவரது எதிர்ப்புக்குக் காரணம் அல்ல. அது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கிறது என்பதே அவரது முதன்மையான குற்றச்சாட்டு. பிரதமர் மோடியிடம் அவர் வழங்கிய மனுவிலும் அதைத்தான் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ’ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்படுவது சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாகும். அதனால் நிதி நிர்வாகத்தில் மாநிலங்களுக்குத் தற்போதுள்ள அதிகாரம் பறிபோய்விடும்’ என்று அவர் அச்சம் தெரிவித்தார். அவரது மறைவுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டே அவரது கொள்கைக்கு மாறாக ஜிஎஸ்டி மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்கள்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழ்நாட்டில் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலை மனதில் வைத்து உணவகங்கள் உட்பட சிலவற்றின்மீதான வரியை மத்திய அரசு குறைத்தாலும்கூட, அதனால் மாநிலத்தின் வரி வருவாயில் பெரிய மாற்றம் எதுவும் நேர்ந்துவிடவில்லை. அதை ஆளுநரே இன்னொரு இடத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

”மத்திய அரசின் வரி வருவாய்ப் பகிர்வில் மாநிலங்களுக்கான பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்ட போதிலும், தமிழ்நாட்டிற்கான பங்கு 4.969 சதவீதத்திலிருந்து 4.023 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரத்தில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அதன் நிதிப் பங்கீடும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இத் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநில அரசுகள் தங்களது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்தே ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்வி ஜெயலலிதா அவர்களின் வழியில் தமிழக அரசு நடப்பது உண்மையாக இருந்தால் வரி வருவாய்ப் பகிர்விலும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் தமிழகத்துக்கான பங்கைக் குறைத்ததற்காக மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். மாறாக மத்திய அரசை ஆளுநர் பாராட்டியிருக்கிறார்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைத் தமிழக அரசு முடிவுக்குக் கொண்டுவராமல் இழுத்தடிப்பதால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகிவருகின்றனர். பல மாதங்களாக நீடித்துவரும் அவர்களது பிரச்சனை குறித்து ஆளுநர் உரை மௌனம் சாதித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வு தொடர்பான மசோதாக்களை எந்தவித கருத்தும் சொல்லாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருப்பதைப் பற்றியும் ஆளுநர் பேசவே இல்லை.

“பருவமழையினைப் பெரிதும் நம்பியுள்ள விவசாயத்தின் நிலையற்ற தன்மையை நன்கு உணர்ந்த இந்த அரசு, பருவநிலையால் ஏற்படும் பேரிழப்பை ஈடுசெய்ய எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக, 2016-17 ஆம் ஆண்டில் ‘பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில்’ 15.36 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டனர்” என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது 2017 மே மாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த தகவலோடு முரண்படுவதாக இருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 23.9 லட்சம் விவசாயிகளை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க முடிவுசெய்யப்பட்டு 15.2 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் அப்போது தெரிவித்திருந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை கடந்த டிசம்பர் மதம் வரை பல மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. உண்மை நிலை இப்படியிருக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு உயர்ந்த இடத்தை வகிப்பதாக ஆளுநர் பெருமைபட்டுக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்த செல்வி ஜெயலலிதா 500 டாஸ்மாக் கடைகளை மூடியதோடு மது விற்பனை செய்யும் நேரத்தையும் குறைத்தார். அவரது மறைவுக்குப் பின் பதவிக்கு வந்த இன்றைய முதலமைச்சரும் 2017 பிப்ரவரியில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவித்தார். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஆளுநர் உரையில் அதைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி கடந்த டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் தேடும் பணி நடப்பதாக ஆளுநர் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

“இந்திய மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் ஓரளவு குறைந்துள்ளன” என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி 20 மீனவர்களும், 12 ஆம் தேதி 27 மீனவர்களும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது உடமைகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 4 ஆம் தேதி தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. ஆளுநர் தனது உரையை ஆற்றுவதற்கு முந்தைய நாள் சுமார் 4000 மீனவர்களை இலங்கைக் கடற்படை விரட்டியடித்தது. அவர்கள் சென்ற படகுகளில் சுமார் 100 படகுகளையும் வலைகளையும் நாசப்படுத்தியது. உண்மை நிலை இவ்வாறிருக்க இதற்கு மாறான தகவல்களை ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருப்பது சட்டப்பேரவையை மட்டுமல்ல தமிழக மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இலங்கைக் கடற்படைக்கு நற்சான்றிதழ் வழங்க ஆளுநர் ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தியும்கூட மத்திய அரசு இதுவரை அதைப் பொருட்படுத்தவில்லை. அதைப்பதைப்பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே இல்லை. மாறாக கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்து பார்வையிட்டதை, மட்டும் அவர் பாராட்டியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சடங்குக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, ”மாநிலங்களுக்கு இடையே நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு தனது முழு ஆதரவைத் தருவதாக, நீராதாரங்களுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று வெறும் அறிவிப்புக்கே புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

இலங்கைக் கடற்படைக்கு நற்சான்றிதழ் தருவதற்கும்; நீராதாரங்களுக்கான மத்திய அமைச்சரையும், பிரதமரையும் பாராட்டுவதற்கும்தான் இந்த உரையை ஆளுநர் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்தபின் முதலமைச்சர் ஆற்றப்போகும் பதிலுரையில் அவர் தமிழக நலன்கள் குறித்துப் பேசுவாரா அல்லது ஆளுநரின் குரலையே எதிரொலிப்பாரா என்பதை அறிய தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏனென்றால் தற்போது நடந்து வருவது ’பாஜகவின் மறைமுக ஆட்சி’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அது உண்மைதானா என்பது முதலமைச்சரின் பதிலுரையில் தெரிந்துவிடும்.

(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.writerravikumar@gmail.com)

×Close
×Close