சொன்னால் முடியும் : பயங்கரவாதமாக மாறும் வெறுப்புப் பிரச்சாரம்

எச்.ராஜவின் பதிவைப் படித்து ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்

ரவிக்குமார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு எச்.ராஜா சமூக ஊடகத்தில் இட்ட பதிவு மிகப்பெரிய சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. பாஜக ஆதரவாளர்களால் திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதைப் பார்த்து குதூகலப்பட்ட எச்.ராஜா ” இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என முகநூலில் பதிவிட்டிருந்தார்.

தனக்குத் தெரியாமல் தனது முகநூல் ’அட்மின்’ அந்தப் பதிவைப் போட்டுவிட்டதாகவும் அது தனக்கு உடன்பாடான கருத்து அல்ல என்பதால் அதை நீக்கிவிட்டதாகவும் எச்.ராஜா இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் திரு எச்.ராஜா இப்போது மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாகவே இப்படித்தான் ஆத்திரமூட்டும் விதத்திலும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பேசி வருகிறார். அவரது வெறுப்புப் பேச்சுக்கு தந்தை பெரியார் மட்டுமல்ல, நடிகர் விஜய், கவிஞர் வைரமுத்து, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எனப் பலரும் இலக்காகியுள்ளனர்.

திரு எச்.ராஜா தனது பதிவை நீக்கிவிட்டு அந்தப் பதிவு தான் போட்டதல்ல அட்மின் போட்டது என யாரோ ஒருவர்மீது பழி போடுவதும், வருத்தம் தெரிவிப்பதும் தானாக நடந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் அவரது கருத்துக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்வினையால் எழுந்தது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ’எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியிருப்பதும், தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் ‘எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஒரே குரலில் வலியுறுத்துவதும் தமது உத்தியை மாற்றும்படி பாஜகவினருக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசையும், அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவும் எச்.ராஜாவின் பதிவுக்கு மாறாக அவசரம் அவசரமாகக் கருத்து தெரிவிப்பதால் பாஜகவுக்கு இம்மாதிரியான செயல்பாடுகளில் உடன்பாடில்லை என நாம் எண்ணிவிட முடியாது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியா முழுவதும் வன்முறை ஏவப்பட்டது. பசுவைக் கொன்றார்கள், பசு மாமிசம் வைத்திருந்தார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளின் பேரில் அப்பாவி மக்கள் பல பேர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதும் இப்படித்தான் பாஜகவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல பிரதமர் மோடி பேசினார். ஆனால் அந்த வன்முறைத் தாக்குதல்கள் நின்றபாடில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெயரளவுக்குக் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சமூக ஊடகத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு அதன் பின் அதை நீக்கிவிட்டால் அத்துடன் அந்தப் பிரச்சனை தீர்ந்துவிடுவதில்லை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இத்தகைய பதிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகம் என்பது மட்டுமல்ல, அது நிரந்தரமானதும்கூட.

அமெரிக்க அதிபர் கிளிண்டனின் செயலாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கியைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அவர் எந்தப்பிரச்சனைக்காகப் பிரபலமானார் என்பதும் நமக்குத் தெரியும். இணையம் என்பது பரவலான காலத்தில்தான் மோனிகா லெவின்ஸ்கி பிரச்சனை வெளியானது. ஒருநொடியில் உலகம் முழுவதும் ஒரு விஷயத்தைப் பரப்புவதில் ஒருவரைப் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவதில் இணையத்துக்கு இருக்கிற வலிமையை சுட்டிக்காட்டியிருக்கும் அவர், நாம் அனைவரும் சிந்திக்கத்தக்க ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். “இப்போது புதிதாக ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. அங்கே பொதுவெளியில் ஒருவரை சிறுமைப்படுத்துவது ஒருபண்டமாகவும் அவமானப்படுத்துவது என்பது ஒரு தொழிலாகவும் மாறியிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். இணையத்துக்கு மட்டுமல்ல நமது நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்கிற சமூக ஊடகங்களுக்கும் இது பொருந்தும்.

’பப்ளிக் ஹியுமிலியேஷன்’– பொதுவெளியில் ஒருவரை சிறுமைப்படுத்துவது என்பது தார்மீகம் சம்பத்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அது அரசியல், பொருளாதாரம் தொடர்பானதும்கூட. அதனால் யார் அரசியல் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பொதுவெளியில் சிறுமைப்படுத்துவதே இவ்வளவு பெரிய கேட்டை உண்டக்குமென்றால் பொது வெளியில் வன்முறையைத் தூண்டும் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது இன்னும் பெரிய சேதங்களை உருவாக்கும்.

வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலேயே விவாதங்கள் நடந்தன. இந்திய தண்டனை சட்டத்தில் அதற்காக 153 A என்ற பிரிவு அதன் தொடர்ச்சியாகவே சேர்க்கப்பட்டது. 292, 293 மற்றும் 295 A ஆகிய பிரிவுகளும் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரிவுகள் நமது சட்ட அமைப்புகளால் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
இரண்டு மதத்தினருக்கிடையில், இனங்களுக்கிடையில், மொழி பேசுவோருக்கிடையில் பகைமையை ஏற்படுத்தினால் அந்த நோக்கத்தில் பேசினால், செயல்பட்டால் இந்தப்பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்தப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தப்பிரிவுகளை யாருக்கு எதிராகப்பயன்படுத்துகிறார்கள்? காவிரி நீர் உரிமைக்காகப் போராடினால் அவர்கள்மீது பயன்படுத்துகிறார்கள்; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடினால் அவர்கள்மீது ஏவுகிறார்கள். சிறுபான்மையினர் மீதே இந்தப்பிரிவுகள் ஏவப்படுகின்றன.

தற்போதுள்ள பிரிவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது மட்டுமின்றி இந்திய தண்டனைச் சட்டத்திலோ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ ’ஹேட்ஸ்பீச்’ எனப்படும் ‘வெறுப்புப் பேச்சு’ என்பது சரியாக விளக்கப்படவுமில்லை. ’ப்ரவாசி பாலாய் சங்காதன் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா ’ என்ற வழக்கில் 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்திய சட்ட ஆணையம் ’ஹேட்ஸ்பீச்’ என்பதை வரையறுக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்துத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சட்ட ஆணையம் பரிசீலித்தது. அதனடிப்படையில் தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ( அறிக்கை எண் : 267 ) மத்திய அரசிடம் அது 2017 மார்ச் 23 ஆம் தேதி சமர்ப்பித்தது.

வெறுப்புப் பேச்சு என்றால் என்ன யார் பேசும் வெறுப்புப் பேச்சை குற்றமாகக் கருத வேண்டும், அதற்கு எவ்வளவு தண்டனை விதிக்கவேண்டும் – எனப் பல்வேறு விஷயங்களையும் சட்ட ஆணையம் தனது அறிக்கையில் ஆராய்ந்திருக்கிறது.
இந்திய தண்டனை சட்டத்தில் (ஐபிசி) 153 C, 505 A என இரண்டு பிரிவுகளைப் புதிதாக சேர்க்க வேண்டும் என சட்ட ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அந்த சட்டப் பிரிவுகளை சேர்ப்பதற்கு ஏதுவாக ‘ குற்றவியல் சட்ட திருத்த மசோதா (2017) என ஒரு சட்ட மசோதாவையும் தயாரித்து மத்திய அரசிடம் சட்ட ஆணையம் வழங்கியிருக்கிறது.

153 C பிரிவு:

அச்சுறுத்தக்கூடிய விதத்தில் எழுதுவது அல்லது பேசுவது, குறியீடு, பார்க்கக்கூடிய அல்லது கேட்கக்கூடிய எதேனும் ஒன்றின் மூலமாக அச்சுறுத்துவது;

வன்முறையைத் தூண்டும் வகையில் குறியீடு, எழுத்து அல்லது பேச்சின் மூலம் வெறுப்பை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்ரமாகும். அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது 5000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படவேண்டும் எனக் கூறுகிறது.

505 பிரிவு:

பொது வெளியில் எவரேனும் ஒருவர் – மதம், இனம், சாதி, சமூகம், பாலினம், பிறந்த இடம், இருப்பிடம், மொழி, உடல் ஊனம் முதலானவற்றின் அடிப்படையில் அச்சுறுத்தும் விதமாகவோ அவதூறு செய்யும் விதமாகவோ பேசுவது எழுதுவது, கோபமூட்டுவது அல்லது வன்முறையைத் தூண்டுவது – என்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் அவருக்கு ஓராண்டுவரை சிறை தண்டனையோ அல்லது 5000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

வகுப்புவாதத்தை ஆதரித்து எவர் எதைச் சொன்னாலும் அதைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடும் மத்திய அரசு; முத்தலாக் விஷயத்தில் சட்ட ஆணையம் சொல்லிவிட்டது என ஜனநாயகக் காவலனாக வேஷம் போட்ட மத்திய அரசு வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட கமிஷனின் இந்த அறிக்கையை மட்டும் கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

பாஜக தேசிய தேசிய செயலாளர் திரு எச்.ராஜா பேசுவதைப்போல முஸ்லீம் ஒருவரோ, கிறித்தவர் ஒருவரோ பேசினால் காவல்துறையும் அரசாங்கமும் அதை வேடிக்கை பார்க்குமா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது.

திரு எச்.ராஜா பேசியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல அதை ஒரு பயங்கரவாத செயலாகவும் பார்க்க சட்டத்தில் இடமிருக்கிறது. மதன் சிங் எதிர் பீகார் மாநில அரசு என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அதில் பயங்கரவாதம் என்பதற்குக் கொடுத்திருக்கும் விளக்கம் இங்கு கவனிக்கத்தக்கதாகும். ’சமூகத்தின் அமைதியை கெடுப்பதாக பதற்றத்தை பாதுகாப்பற்ற நிலையை உணரச்செய்வதாகவும் ஒரு செயல் இருக்குமானால் அதைப் பயங்கரவாத செயலாகக் கருதலாம்’ என உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளது.

திரு எச்.ராஜவின் பதிவைப் படித்து ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்; தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகளுக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் திரு எச்.ராஜாவின் வன்முறையைத் தூண்டும் இந்த நடவடிக்கையை பயங்கரவாத செயல் என்றே கூறத் தோன்றுகிறது.

திரு எச்.ராஜா மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும், வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சட்ட ஆணையம் தயாரித்து அளித்திருக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றச் சொல்லியும் குரலெழுப்ப வேண்டும்.

(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close