/tamil-ie/media/media_files/uploads/2018/03/ayodhya.jpg)
முனைவர் ரவிக்குமார்
அயோத்தி பிரச்சனை தொடர்பான வழக்கு இன்று ( 14.03.2018) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 2018 பிப்ரவரியில் இது தொடர்பான விசாரணை நடந்த போது இந்த வழக்கை தினமும் விசாரித்து விரைவில் தீர்ர்ப்பளிக்க வேண்டும் என சிலர் கேட்டனர். ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் சம்மதிக்கவில்லை. ’நூற்றுக்கணக்கான ஏழை வழக்காடிகள் காத்திருக்கும்போது இதற்கு அப்படி முக்கியத்துவம் தர முடியாது’ என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்ததுமே சங்கப் பரிவாரங்கள் களத்தில் இறங்கிவிட்டன. பாபர் மசூதி இடிப்புக்கு வழிகோலிய ரத யாத்திரையைப்போலவே மீண்டும் ஒரு ரத யாத்திரையை அவர்கள் துவக்கினார்கள். அயோத்தியில் 13.02.2018 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களால் துவக்கப்பட்ட அந்த ரத யாத்திரைக்கு ‘ராம ராஜ்ய ரத யாத்திரை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ராமாயணத்தில் ராமர் சென்றதாக சொல்லப்படும் வழித்தடத்தில் இலங்கை வரை இந்த ரத யாத்திரை செல்லவிருக்கிறது. ”அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டவேண்டும்; பள்ளிப் பாடப் புத்தகங்களில் ராமாயணக் கதையை இடம்பெறச் செய்ய வேண்டும்; ஞாயிற்றுக் கிழமையில் அரசு விடுமுறை அளிப்பதற்குப் பதிலாக இந்துக்களுக்கு உகந்த வியாழக்கிழமையில் விடுமுறை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்காக இந்த ரத யாத்திரை துவக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரை செல்லக்கூடிய மாநிலங்கள் பலவற்றில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2019 ல் நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த ரத யாத்திரையின் அரசியல் நோக்கம் தெளிவாக நமக்குத் தெரிகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அது தொடர்பான வழக்குகளில் இன்னும்கூட எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை இப்போது உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்காகும்.
2011 ஆம் அண்டு மே மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டபோது நீதிபதி லோதா ‘ அல்காபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இந்த வழக்கை கிறித்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனைத் தொகுப்பாக மாற்றிவிட்டது’ எனக் கேலியாகக் குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு 2017 டிசம்பர் மாதத்தில் விசாரணைக்கு வந்தபோது “இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்க வேண்டும்; இந்த வழக்கின் தீர்ப்பு மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு ஜூலை மாதத்தில் விசாரிக்க வேண்டும்’ என இந்த வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, வழக்கு தனது தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விலேயே தொடர்ந்து நடக்கும் எனக் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி இந்த வழக்கை நில உரிமை தொடர்பான வழக்காக மட்டுமே நீதிமன்றம் கருதுகிறது எனவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறிவிட்டார்.
500 க்கும் மேற்பட்ட ஆவணங்களும்; பாலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட பகவத் கீதை, ராமாயணம் முதலான இலக்கியப் பிரதிகளும்; இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கையும்; 87 சாட்சிகளின் வாக்குமூலங்களும் உச்சநீதிமன்றத்திடம் இப்போது அளிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அது அந்தத் தேர்தல் முடிவுகளின்ம மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆட்சியாளர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் இப்போது நடைபெறும் வழக்கின் தன்மையைப் புரிந்துகொள்ள அயோத்திப் பிரச்சனையில் 2010 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் தெரிந்துகொள்வது அவசியம். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரண்டு நீதிபதிகள் பெரும்பான்மையாக ஒரு தீர்ப்பையும் ஒரு நீதிபதி முரண்பட்ட ஒரு தீர்ப்பையும் அதில் வழங்கியிருந்தனர்.
பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதிய நீதிபதி எஸ்.யு.கான் ஒரு புனைவு இலக்கியம் போல அந்தத் தீர்ப்பை ஆரம்பித்திருந்தார்.
“இதோ இருக்கிறது தேவதைகளும் அடியெடுத்துவைக்கத் தயங்கும் 1500 சதுர கஜங்கள் கொண்ட ஒரு துண்டு நிலம். அந்த நிலம் முழுவதும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுமாறு எங்களிடம் கூறியிருக்கிறார்கள். அந்த ஆபத்தான பணியில் ஈடுபடவேண்டாம் என எங்களைச் சான்றோர்கள் எச்சரித்தனர். நாங்கள் முட்டாள்களைப்போல அந்த நிலத்தில் அவசரமாக இறங்கி ஓடப்போவதில்லை, அப்படிச் செய்தால் நாங்கள் வெடித்துச் சிதறிவிடுவோம். எப்படியிருந்தாலும் நாங்கள் ‘ரிஸ்க்’ எடுத்துதான் ஆகவேண்டும். ஒரு தேவை எழும்போது ’ரிஸ்க்’ எடுக்காமல் இருப்பதுதான்
வாழ்க்கையில் மிகப்பெரிய ’ரிஸ்க்’ என்பார்கள். தேவதைகள் மனிதனின் முன்னால் தலைவணங்கச் செய்யப்படும்போது அந்த மரியாதைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவனது கடமை. இந்தத் தீர்ப்பின் மூலம் எங்கள் நோக்கத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோமா இல்லையா என்பது தெரியவில்லை. ஒருவர் அவருக்கே நீதிபதியாக இருக்க முடியாது” என்று அவர் எழுதியிருந்தார். புனைவு இலக்கியம்போல ஆரம்பித்த அந்தத் தீர்ப்பு புராணத்தைப்போல முடிந்துவிட்டது.
பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமையை மெய்ப்பிக்கும் ஆவணங்கள் எதையும் எந்தத் தரப்பினரும் வைத்திருக்காத நிலையில் ‘அனுபவப் பாத்யதையின்’ அடிப்படையில் மூன்று தரப்பினருக்குமே அது உரிமையானது என்ற விசித்திரமான முடிவை அந்தத் தீர்ப்பு அளித்தது. பிரச்சனைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என்பதைப் பற்றி அந்தத் தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளும் முரண்பட்ட கருத்துகளைச் சொன்னார்கள்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலொன்று அந்த இடத்தில் இருந்ததாகவும் அதை இடித்துத்தான் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் எனவே அங்கு கோயிலொன்றைக் கட்டுவதற்கு நியாயமிருக்கிறதென்றும் அந்தத் தீர்ப்புக் கூறியது. இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியையும் அதன் அடிப்படையில் அது சொன்னதையும் மற்ற வரலாற்றறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக மறுத்தபோதிலும் அந்த மறுப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு தொல்லியல் துறையின் சார்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அப்படியே அலகாபாத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
எவரிடமும் ஆதாரம் இல்லை என்னும்போது அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் எனச் சொல்வதே சரியானதாக இருக்கும். அப்படிச் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சனையில் ஒரு தீர்வைக் காணவேண்டிய பொறுப்பும் நெருக்கடியும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்குப் பதிலாகப் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் விதமாகவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து வக்ஃபு வாரியமும் பிற தரப்பினரும் செய்த மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதுதான் இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் ஊடகங்களைச் சந்தித்தபோது ”முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மரபுகளுக்கு மாறாக, அனுபவம் குறைந்த நீதிபதிகளின் அமர்வுகளுக்கு ஒதுக்குகிறார் அல்லது தனது அமர்விலேயே தலைமை நீதிபதி வைத்துக்கொள்கிறார்“ என்று குற்றம் சாட்டியிருந்தனர். வழக்குகள் ஒதுக்கீடு செய்யும் ரோஸ்டர் முறை அரசியல் நோக்கத்தோடு சிலருக்கு ஆதாயம் ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்படுகிறது என்பதே அந்த நான்கு நீதிபதிகள் கூறிய புகாரின் சாரம். அவர்கள் குறிப்பிட்ட வழக்குகளின் பட்டியலில் அயோத்தி சிக்கல் தொடர்பான வழக்கும் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகும்கூட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் ரோஸ்டர் முறையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அயோத்தி வழக்கையும் தனது தலைமையிலான அமர்விலேயே விசாரித்து வருகிறார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு மேலும் முக்கியத்துவம் கொண்டதாக மாறியிருக்கிறது.
’உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும். அதன்பின்னர் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவோம். அங்கு ராமர் கோயில் தவிர வேறு எதையும் கட்ட முடியாது” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோஷி இரண்டொரு நாட்களுக்கு முன்னால் (11.03.2018) கூறியிருப்பதைப் பார்க்கும்போது தீர்ப்பு எப்படி வரும் என்பதை அவர்கள் இப்போதே அறிந்து வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோது அதைப்பற்றி கருத்து தெரிவித்த வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர், ” தன்னை ஒரு சமூகக் குழுவாகச் சொல்லிக்கொள்ளும் எவராலும் வழிபடப்படுகிற புனிதத் தன்மைகொண்ட எவரோ ஒருவர் பிறந்த இடம் எனச் சொல்லி எந்த நிலத்தையும் உரிமைகோரலாம் என்ற முன்னுதாரணம் இந்தத் தீர்ப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பொருத்தமான சொத்து எங்காவது இருந்தால், அங்கு ஒரு பிரச்சனை கிளம்பினால் இப்படி இன்னும் எத்தனையோ ‘ ஜன்மஸ்தான்’கள் எதிர்காலத்தில் உருவாகலாம். வரலாற்றுச் சின்னமொன்றை வேண்டுமென்றே இடித்துத் தரைமட்டம் ஆக்கியதை நீதிமன்றம் கண்டிக்காவிட்டால் மேலும் அப்படிப் பலவற்றை இடிப்பதை யார் தடுக்க முடியும்?” எனக் கேட்டார். “இந்த நாட்டின் சட்டமானது நம்பிக்கைகளை அடிப்படையாககொண்டதல்ல, அது ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது என்ற நம்பிக்கை நிலவும்போதுதான் உண்மையான ஒற்றுமையும் சமாதானமும் சாத்தியமாகும்” என்றார். அந்த வார்த்தைகள் இப்போதும் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.
(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.