சொன்னால் முடியும் : மூன்று லட்சம் கோடி எங்கே?

மாற்றம், வளர்ச்சி என கவர்ச்சிகரமான கோஷங்களை வைத்து வாக்கு கேட்டு ஆட்சியைப் பிடித்த மோடி இந்திய இளைஞர்களை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

ரவிக்குமார்

தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால் ஏராளமாகக் கவர்ச்சித் திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் விதைத்து வந்தன. ஆனால் அதற்கு மாறாக மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தரக்கூடிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி அளித்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் மட்டும் தலித்துகளுக்கு சேர வேண்டிய ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் கோடி ரூபாய் மறுக்கப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாயை தலித் மக்களுக்கு ஒதுக்காமல் மிகப்பெரிய துரோகத்தை மோடி அரசு செய்துள்ளது.

தலித் மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஏமாற்றும் விதமாகவே பாஜக அரசின் பட்ஜெட் அமைந்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும்பொது தன் முன்னே ஐந்து சவால்கள் இருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி குறிப்பிட்டார். அவற்றைத் தனது பட்ஜெட் உரையில் வரிசைப்படுத்தவும் செய்தார்.

1. விவசாயிகளின் வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. அதை உயர்த்தவேண்டும்.
2. கட்டமைப்புத் துறையில் ஏராளமாக முதலீடு செய்யவேண்டியுள்ளது
3. உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி)யில் உற்பத்தித் துறையின் பங்கு 18% லிருந்து 17% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 10% என்பதிலேயே தேங்கி நிற்கிறது.
4. வரி வருவாயில் மாநிலங்களுக்குக் கூடுதலான பகிர்வு அளிக்கப்படவேண்டும்.
5. வரவு செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்து மொத்த பற்றாக்குறையின் அளவைக் குறைக்க வேண்டியுள்ளது.

இந்த சவால்களை சந்திக்க முடியாமல் பாஜக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதைத்தான் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் காட்டுகிறது.

விவசாயத் துறையின் வளர்ச்சி பற்றி கவர்ச்சியாகப் பேசிக்கொண்டே விவசாயிகளைக் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது மோடி அரசு. விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என இந்த பட்ஜெட்டிலும் வாக்குறுதி தந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான உருப்படியான திட்டம் எதையும் அறிவிக்கவில்லை.

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கை மூலமாக விவசாயத்துறைதான் அதிகம் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மோடி அரசு அதிகம் உயர்த்தாமல் வைத்திருந்தது. அது விவசாயிகளை மீள முடியாத கடனுக்குள் தள்ளிவிட்டது. குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்காக உயர்த்துவோம் என இப்போது சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர். ஆனால் விவசாயிகள் அதைப் பெறுவதற்கு அடுத்த சாகுபடிவரை காத்திருக்கவேண்டும். அதற்குள் உயரப்போகும் விலைவாசியில் இந்த ஆதரவு விலை உயர்வால் கிடைக்கும் பயன் யானைப் பசிக்கு சோளப்பொறியாகக்கூட இருக்காது.

”கட்டமைப்புத் துறையில் முதலீட்டை அதிகரிக்க தற்போதுள்ள அரசு தனியார் கூட்டு (பிபிபி) ’மாடல்’ பயனளிப்பதாக இல்லை. எனவே பெருமளவில் அரசாங்க முதலீட்டை அதிகரிக்க வேண்டும்” என 2015ல் அருண் ஜெய்ட்லி கூறினார். தனியார் முதலீடும் குறைந்துபோனது மட்டுமின்றி அரசாங்க முதலீடு சுத்தமாக உயர்த்தப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) உற்பத்தித் துறையின் பங்கை 20%க்கு மேல் உயர்த்தப்போவதாகவும் ’மேக் இன் இந்தியா’ திட்டம் அதற்காகவே கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார். ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் ஆரவாரமாகப் பேசினார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை என்றால் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் பத்து கோடி பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அப்படி புதிதாக 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமெனச் சொன்னால் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) உற்பத்தித் துறையின் பங்கு 25% ஆக உயர்த்தப்பட வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள். ஆனால் 25% ஆக உயர்வதற்குப் பதிலாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட அதைக் கீழே கொண்டு போயிருக்கிறது மோடி அரசு.
மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தின்போது 2011-12 ல் 18.1% ஆகவும் 2012-13 ல் 17.9% ஆகவும் இருந்த உற்பத்தித் துறையின் பங்கு, மோடி ஆட்சியில் 16%, 15% எனக் குறைந்துவிட்டது. சீனாவில் அது 32% ஆகவும்; தாய்லாந்தில் அது 35% ஆகவும்; பிலிப்பைன்ஸில் அது 30% ஆகவும் உள்ளது என்பதை இங்கே நாம் கவனிக்கவேண்டும்.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட உற்பத்தித் துறையின் பங்கு குறைந்திருக்கிறது என்றால் அப்போதிருந்ததைவிட வேலை வாய்ப்புக் குறைந்துவிட்டது என்று பொருள். மாற்றம், வளர்ச்சி என கவர்ச்சிகரமான கோஷங்களை வைத்து வாக்கு கேட்டு ஆட்சியைப் பிடித்த மோடி இந்திய இளைஞர்களை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு இந்த ஆண்டு 15% ஆக இருக்கிறது என்றாலும் இறக்குமதியின் பங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான வர்த்தகத்தில் பற்றாக்குறை கணிசமாக உயர்ந்துவிட்டது.
2017 டிசம்பர் மாத கணக்குபடி ஏற்றுமதி ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஆக இருந்தது. ஆனால் இறக்குமதி இரண்டு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்திருப்பதால் இந்தப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

”நாங்கள் ’கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரலிஸத்தின்’ மீது நம்பிக்கை கொண்டவர்கள், மாநிலங்களின் உரிமைகளை மதிப்பவர்கள் எனவே வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கைக் கூட்டப்போகிறோம்” என ஆர்ப்பாட்டமாகப் பேசிய மோடி அரசு, ஜிஎஸ்டி வரி விதிப்புமுறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாநிலங்களின் நிதி தன்னாட்சியை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டது. இப்போது மாநிலங்கள் யாவும் எந்தவொரு திட்டத்துக்கும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரவு செலவு மேலாண்மையில் கவனம் செலுத்தி நிதி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்போம் என்றார்கள். அதிலும் அவர்கள் குறிப்பிட்ட இலக்கான 3.2% க்குப் பதிலாக 3.5% ஆக பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்துவிட்டார்கள். அந்தப் பற்றாக்குறையை சமாளிக்க சமூக நலத் திட்டங்களுக்காகன நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தலித் மக்கள்தான்.

இந்த பட்ஜெட்டில் பட்டியலினத்தோர் துணைத் திட்டத்தின் கீழ் (எஸ்சிஎஸ்பி) தலித் மக்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய நிதியின் அளவில் சுமார் ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் கோடியைக் குறைத்து தலித்துகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை மோடி அரசு செய்திருக்கிறது.

மத்திய அரசுத் திட்டங்களுக்காகவும், மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய பட்ஜெட்டின் திட்ட மதிப்பீட்டில் 16.6% அளவு நிதியை தலித்துகளுக்கு ஒதுக்கவேண்டும் என்பதுதான் பட்டியலினத்தோர் துணைத் திட்டத்தின் அடிப்படை.

2018-19 க்கான பட்ஜெட்டின் திட்ட மதிப்பீடு பத்து லட்சத்து பதினான்காயிரத்து நானூற்று ஐம்பது கோடி ரூபாய். அதில் இந்திய மக்கள் தொகையில் 16.6% ஆக இருக்கும் தலித் மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படவேண்டிய தொகை ஒரு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து முன்னூற்று தொண்ணூற்றெட்டு கோடி ரூபாய். ஆனால் மோடி அரசால் ஒதுக்கப்பட்டிருப்பதோ ஐம்பத்தாறாயிரத்து அறுநூற்று பத்தொன்பது கோடி ரூபாய் மட்டும்தான். அதாவது ஒரு லட்சத்து பதினோராயிரத்து எழுநூற்று எண்பது கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. 16.6% ஒதுக்குவதற்கு பதிலாக வெறும் 6% ஐ மட்டுமே மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஆண்டு மட்டுமல்ல பதவியேற்ற நாளிலிருந்தே தலித் மக்களுக்கான ஒதுக்கீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக மோடி அரசு குறைத்தே வருகிறது. 2016-17 பட்ஜெட்டின் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு 55,0010 கோடி. அதில் 16.6% ஐக் கணக்கிட்டால் 91301.66 கோடி ரூபாய். அந்தத் தொகையை ஒதுக்குவதற்குப் பதில் பாஜக அரசு ஒதுக்கிய தொகை 38832.63 கோடி ரூபாய் மட்டும்தான். அந்த ஒரு ஆண்டில் மட்டும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையில் 52469.03 கோடி ரூபாயை ஒதுக்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வஞ்சித்தது.

2017-18 பட்ஜெட்டில் அதைப்போலவே 46786.59 கோடி ரூபாய் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் கோடி ரூபாய் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் தலித் மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறது மோடி அரசு.

பட்ஜெட்டில் தலித் மக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தலித் மாணவர்கள்தான். பாஜக அரசு தலித்துகளின் கல்வி மீது மிகப்பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறதென்றே சொல்ல வேண்டும். பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புக்கான நிதி வெகுவாகக் குறைந்துவிட்டது.

2013-14 ல் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 882 கோடி ரூபாயை ஸ்காலர்ஷிப்புக்கென ஒதுக்கியது. ஆனால் 2017-18 ல் பாஜக அரசு ஒதுக்கியதோ வெறும் 50 கோடி ரூபாய்தான்.

கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்களுக்குத் தரவேண்டிய ஸ்காலர்ஷிப் தொகையைத் தராமல் கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக அரசு பாக்கி வைத்துள்ளது. அப்படித் தரவேண்டிய தொகை மட்டுமே 11 ஆயிரம் கோடி உள்லது. தமிழ்நாட்டுக்கே சுமார் 1500 கோடி ரூபாய் மத்திய அரசு தரவேண்டியுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்த பாக்கித் தொகையை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என மாநில அரசுகள் எதிர்பார்த்தன. ஆனால் ஒரு ரூபாய்கூட அதற்கென ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஸ்கால்ர்ஷிப் தரப்படாததால் அதை வாங்கி கட்டணத்தை செலுத்தலாம் என நினைத்திருந்த ஏராளமான தலித் மாணவர்கள் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் படிப்பை நிறுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தலித் மக்களுக்கு இவ்வளவுபெரிய துரோகம் இழைக்கப்பட்டிருந்தும் பட்ஜெட் குறித்து அலசி ஆராய்கிற பொருளாதார நிபுணர்களும், அதைப்பற்றி கூர்மையான விமர்சனங்களை முன்வைத்துவரும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. அதுதான் நமது அரசியலின் நகைமுரண்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close