கருப்புக் கொடி டூ மோடி அப்பாய்ன்மென்ட்! திமுக.வை திசை மாற்றிய 11 காட்சிகள்

‘பிரதமர் மோடி அப்பாய்ன்மென்ட் கொடுக்கவில்லை என்பதுதானே ஸ்டாலினின் கோபம்! முதல் அமைச்சருக்கே கிடைக்காத அப்பாய்ன்மென்டை ஸ்டாலினுக்கு பெற்றுத்தருகிறேன்.'

காவிரிப் பிரச்னையில் வீரியமாக நடந்த கருப்புக் கொடி போராட்டம், பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்பில் வந்து நிற்கிறது. 2017 பிப்ரவரியில் அனைத்து விவசாய அமைப்புகளை திரட்டி, பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்டு தீர்மானம் நிறைவேற்றினார் மு.க.ஸ்டாலின். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு பதிலடியாகவே அடுத்த ஜூன் 3, கருணாநிதி பிறந்த நாள் விழாவில் சென்னையில் தேசிய கட்சித் தலைவர்களை அணி திரட்டினார் அவர்!

அதன் பிறகு காவிரி பிரச்னைக்காக இபிஎஸ், ஓபிஎஸ்.ஸுக்கே பிரதமர் ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுக்கவில்லை. ஆனால் ஏப்ரல் 13 அன்று ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின், ‘ஆளுனர் மூலமாக பிரதமரின் அப்பாய்ன்மென்ட்’ கேட்டிருப்பதாக கூறினார். பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’டை உறுதி செய்துவிட்டு, ஃபார்மாலிட்டியாகவே ஆளுனரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக திமுக கூட்டணி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ஏன்? எப்படி? ஸீன் பை ஸீன் இங்கே!

காட்சி 1 : காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த அவகாசம் மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்த நாளே (மார்ச் 30) திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ‘தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவது’ என முடிவு செய்யப்பட்டது.

காட்சி 2 : திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டபோது பிரதமரின் தமிழக வருகை உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் ஏப்ரல் 11-ம் தேதி மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவுக்கு பிரதமர் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

காட்சி 3 : ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணம், பிரதமர் அலுவலகத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 12-ம் தேதி சென்னை வருகை தருவதாக கூறிய அந்த அறிவிப்பில், மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டரில் பிரதமர் சென்று திரும்புவதாக இருந்தது.

ஆனால் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு விமான நிலையத்தில் இருந்து காரில் சென்று திரும்புவதாகவே இருந்தது. மிக முக்கியமான விஷயம், திமுக தனது கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த பிறகு வெளியான பிரதமரின் சுற்றுப்பயண அறிவிப்பில் கார் பயணம் தவிர்க்கப்படவில்லை. நேரம் வாரியாக துல்லியமாக அந்த சுற்றுப்பயண அறிவிப்பு வெளியானது.

காட்சி 4 : பிரதமரின் சுற்றுப் பயணத்தை நேரம் வாரியாக 4 நாட்களுக்கு முன்பு இப்படி அறிவிப்பதே அபூர்வம்! இதற்கு முன்பு பிப்ரவரி 24-ம் தேதி அம்மா ஸ்கூட்டர் திட்ட தொடக்க விழாவில் பிரதமரின் பங்கேற்பு அப்படி அறிக்கை வாயிலாக உறுதி செய்யப்படவில்லை. கடந்த நவம்பர் 6-ம் தேதி தினத்தந்தி விழாவுக்கு பிரதமர் வருகையும் அப்படி முன்கூட்டியே நேரம் வாரியாக தெரிவிக்கப்படவில்லை.

காட்சி 5 : ஆக, 12 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட திமுக.வின் கருப்புக் கொடி போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகவே ஏப்ரல் 12-ம் தேதி சென்னையில் மோடியின் சாலை மார்க்கப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 9-ம் தேதி வரை இந்த பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.

காட்சி 6 : மோடியின் சாலை மார்க்கப் பயணத்திற்கு மிரட்டலாக அமைந்தது, ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டம்தான்! சுமார் 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அணி அணியாக வந்து அண்ணா சாலையை திணறடித்ததை ஆட்சியாளர்கள் அதிர்ச்சியாக பார்த்தனர்.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளாக கருதப்படும் அதிமுக, திமுக, பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேமுதிக, பாமக, அமமுக, இடதுசாரிகள் உள்ளிட்டவற்றின் நேரடி ஆதரவு இல்லாமல் நடைபெற்ற அந்தப் போராட்டம் தமிழ் மக்களின் காவிரி வேட்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது. சி.எஸ்.கே. ரசிகர்கள் மீது நடந்த தாக்குதல், பலத்த கெடுபிடியையும் மீறி சேப்பாக்கம் மைதானத்திற்குள் செருப்பு வீச்சு ஆகியன தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் காவிரி விவகாரம் விபரீத பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறிகளாக அவை அமைந்தன.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றி 6 கட்டப் பாதுகாப்பு, மைதானத்தின் உள்ளே சி.எஸ்.கே. அணியின் மஞ்சள் நிற பனியன் அணிந்தபடி சுமார் 1000 ஆயுதப்படை காவலர்கள் ஆகியோரை மீறி புலிக்கொடியுடன் உள்ளே புகுந்த நாம் தமிழர் கட்சியினர் ஆட்டத்தின் பாதியில் கொடியை அசைத்து காவிரிக்காக கோஷமிட்டனர். சென்னையில் இருந்து ஏனைய ஐபிஎல் ஆட்டங்களை புனேவுக்கு மாற்றியதிலும், மோடியின் சாலை மார்க்கப் பயணத்தை மாற்றியதிலும் இந்த நிகழ்வுகளுக்கு பிரதான பங்கு உண்டு. ஏனென்றால் இதே அமைப்புகளும் ஐபிஎல்.லுக்கு அடுத்து மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதை தங்களின் போராட்டமாக அறிவித்திருந்தன.

காட்சி 7 : ஐபிஎல் போராட்டம் நடந்த மறுதினமே (ஏப்ரல் 11) மோடியின் சாலை மார்க்கப் பயணம் ரத்தானதாக தகவல்கள் வந்து சேர்ந்தன. ஆனால் முதலில் சாலை மார்க்கப் பயணத்தை அதிகாரபூர்வ அறிக்கை மூலமாக தெரிவித்ததைப் போல, இதைச் செய்யவில்லை.

காட்சி 8 : ஏப்ரல் 12-ம் தேதி காவிரி உரிமைக் குழுவினர் விமான நிலையத்தை முற்றுகையிடுவதாக முன் தினமே (ஏப்ரல் 11) உறுதியாக அறிவித்தனர். அவர்களுடன் திரளான திமுக தொண்டர்களும் விமான நிலையத்தில் இணைந்தால் சமாளிப்பது சிரமம் என்பது அதிகாரிகளுக்கு புரிந்தது. இதன்பிறகு நிகழ்ந்த சில ராஜதந்திர நகர்வுகள் முக்கியமானவை!

காட்சி 9 : சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பிரமுகர் ஒருவர், திமுக முதல் குடும்பத்தின் உறவுப் பிரமுகர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார். ‘பிரதமர் மோடி அப்பாய்ன்மென்ட் கொடுக்கவில்லை என்பதுதானே ஸ்டாலினின் கோபம்! முதல் அமைச்சருக்கே கிடைக்காத அப்பாய்ன்மென்டை ஸ்டாலினுக்கு பெற்றுத்தருகிறேன். கருப்புக் கொடி போராட்டம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவமானத்தை பெற்றுத் தரும். அதை மட்டும் நிறுத்துங்கள்’ என வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.

திமுக மட்டும் முடிவு செய்த போராட்டம் இல்லை இது. எனவே உடனே நிறுத்த முடியாத சிரமத்தை மேற்படி ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கு புரிய வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இதர போராட்டக்காரர்களுடன் இணையாமலும், விமான நிலையம் எதிரே மாஸ் காட்டாமலும், பிரதமர் வராத வெவ்வேறு இடங்களில் அடையாள ரீதியான கருப்புக் கொடி போராட்டம் மட்டுமே நடத்த திமுக தரப்பில் முடிவு செய்தார்கள். அதுவும் காலையில் பாரதிராஜா, சீமான், அமீர், வேல்முருகன் தரப்பினர் வீரியமாக தங்கள் போராட்டத்தை செய்து முடித்தபிறகு, பகல் 12 மணிக்கு மேல் தங்களது அடையாள எதிர்ப்பை திமுக கூட்டணி காட்டியது. இந்தப் போராட்டத்தில் மோடிக்கு எதிராக ஆவேசமாக முழங்கிய திமுக கூட்டணியின் ஒரே தலைவர் வைகோதான்!

காட்சி 10 : ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்புக்கு பிறகு காவிரி போராட்டத்தில் மீடியா அட்ராக்‌ஷனில் திமுக இல்லை. வேல்முருகன், சீமான், பாரதிராஜா, தமிமுன் அன்சாரி ஆகியோரை சுற்றியே காட்சிகள் நகர ஆரம்பித்தன. அதுவும் ஏப்ரல் 10-ம் தேதி காவிரிக்கான ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம், திமுக.வின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மூழ்கடித்தது.

எனவே ஏப்ரல் 13-ம் தேதி கடலூரில் இருந்து பல்லாயிரக்கணக்கான கார்களுடன் ஆளுனர் மாளிகையை நோக்கி பயணிப்பது எனவும், இதன் மூலமாக திமுக.வின் பலத்தை காட்டுவது எனவும் ஒரு முடிவை மு.க.ஸ்டாலின் எடுத்தார். ஏப்ரல் 13-ம் தேதி காலையில் கடலூரில் இருந்து ஆளுனர் மாளிகை நோக்கி கார் பேரணி என முரசொலியிலும் அறிவிப்பு வெளியானது. ஆனால், ‘போலீஸ் அனுமதிக்கவில்லை’ என்கிற காரணத்தின் அடிப்படையில் இந்த கார் பேரணி ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணியிலும் மோடியின் அப்பாய்ன்மென்டுக்கான வாக்குறுதி இருந்ததாக கூறுகிறார்கள்.

காட்சி 11 : ஏப்ரல் 13-ம் தேதி பகல் 12 மணிக்கு கூட்டணித் தலைவர்களுடன் ஆளுனரை சந்தித்த ஸ்டாலின், ‘பிரதமரை சந்திக்க ‘அப்பாய்ன்மென்ட்’ பெற்றுத் தரும்படி ஆளுனரிடம் கேட்டதாக’ செய்தியாளர்களிடம் கூறினார். ஆளுனரும் பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறியதாகவும் சொன்னார் ஸ்டாலின்.

‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்’ என அந்தப் பேட்டியில் குறிப்பிட்ட ஸ்டாலின், அடுத்தகட்ட போராட்டம் எதையும் அறிவிக்கவில்லை. அன்று காலையில் ஸ்டாலின் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டமும், அடுத்தகட்ட போராட்டம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆக, பிரதமரின் அப்பாய்ன்மென்ட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதை உறுதி செய்துவிட்டே ஆளுனரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.

விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் மோடியை சந்திக்கும் காட்சிகள் இருக்கும்! அதைத் தொடர்ந்து கர்நாடக தலைவர்களுக்கும் ‘அப்பாய்ன்மென்ட்’ இருக்கலாம். கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி பிரச்னையை கிடப்பில் போட மத்திய அரசுக்கு இந்த சந்திப்புகள் உதவலாம். ஆளும் கட்சியால், முதல்வரால், துணை முதல்வரால் பெற முடியாத பிரதமரின் அப்பாய்ன்மென்டை காவிரி பிரச்னையில் ஸ்டாலின் பெற்றார் என்பது திமுக.வுக்கு பெருமை (!) சேர்க்கலாம்! காவிரி பாசன விவசாயிகளுக்கு?!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close