scorecardresearch

ஜனநாயகத்தின் வாசம் புள்ளி விவரங்களுக்கு புரியுமா?

சுத்தம் என்பது உண்மையின் ஒருவகையான வெளிப்பாடு என்றால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உண்மைக்கும் பஞ்சமில்லை, வெளிபாட்டிற்கும் பஞ்சமில்லை.

ஜனநாயகத்தின் வாசம் புள்ளி விவரங்களுக்கு புரியுமா?
dirtiest railway station in India : Chennai Central Dirtiest railway station

சில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் தூய்மையான ரயில் நிலையங்களை கண்டறிந்து  ஸ்வச் ரயில், ஸ்வச் பாரத் 2019 என்ற புள்ளிவிவர கணக்கை  மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிக்கையின் நோக்கம் ; தூய்மையான, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை அடையாளப்படுத்துவது (அல்லது) உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவது.

இந்த அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ( அல்லது எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்* ) மிகவும் பின் தங்கிய நிலையில் (58 வது இடத்தில் ) இருந்தது. குறிப்பாக 2018ம் ஆண்டை விட இந்த வருடம் தூய்மை குறைந்துவிட்டன என்று அந்த புள்ளி விவரம் சொல்லியது.

இந்த அறிக்கை கேட்பது போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுத்தமான உலகம் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டுமா? அல்லது சென்னை சென்ட்ரல் அன்றாடம் உருவாக்கும் உலகத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமா?  என்ற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக கேட்க உள்ளோம்.

ரயில் நிலையம் என்ற வார்த்தையே மிகவும் செயற்கைத் தனமானது. அதிலும், சென்னை சென்டரல் நிலையத்தை அளவீடு செய்து விட்டோம், அது சுத்தத்தில் பின்தங்கி உள்ளது என்று சொல்வது மொழியியல் பிரச்சனை இன்றி வேறென்ன ?

எம். ஜி. ஆர் என்கிற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் :

ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தால் 1873ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.  இந்த ரயில் நிலையத்தின் தற்காலிக பண்பு என்ன? அதன் பயனர்கள் யார்? பார்வையாளர்கள் யார்?  போன்ற கேள்விகளுக்கு பதில் தேடினால் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எழுப்பும் ஜனநாயகத்தின் வாசம் புரியும்.

சென்னை சென்ட்ரல் எப்போதும் தன்னை ஒரு ரயில் நிலையமாக சுருக்க விரும்பவில்லை . ரயில் நிலையத்திற்கு வெளியில் தான் மனிதக் கதைகளும் எதார்த்தங்களும் கட்டவிழுத்து விடப்படுகின்றன. மெட்ரோ ரயில், வால்டாக்ஸ் சாலை, புறநகர் ரயில் நிலையம், அல்லி குளம் வணிக வளாகம் என ஓவ்வொன்றும் ஒரு வகையான ஜனநாயக கற்பனைகள்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ 2024 ல் உருவாக இருக்கும் புதிய இந்தியாவை நோக்கி நகர்கின்றது என்றால், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் பழைய நேரு இந்தியாவின் அன்றாடத்தை அன்றாடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  இந்த இரண்டு இந்தியாவும் ஒன்றாக கலந்து ஈ.வெ.ரா பெரியார் சாலையில் ( அல்லது பூந்தமல்லி சாலை) ஒன்றாக கலக்கும் போது தான் அன்று பெரியார் பட்ட பதட்டம் புரியும்.

ரிப்பன் மாளிகை சென்னை சாலைக்கான நெறிமுறைகளை உருவாக்குகிறது என்றால், வால்டாக்ஸ் சாலையில் நடைமேடையில் வாழும் மக்கள் சாலைக்கான மாற்று சிந்தனைகளும், இலக்கணத்தையும் உருவாக்குகிறனர். ரிப்பன் மாளிகை இயற்றும் நெறிமுறைகள் அதன் வாசலைக் கூட தாண்டுவது இல்லை.

 

ரிப்பன் மாளிகை

அல்லிக்குளம்  வணிக வளாகம் 1898ம் ஆண்டு சர் ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.  பின்பு மர்மமான முறையில் இந்த கட்டிடம் நெருப்புக்கு இரையானது. சமூகத்தில் கைவிடப்பட்ட/ பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இங்கே மீண்டும் உயிர் பெறுகிறது .

 

அல்லிக்குளம் வளாகத்திற்குள் வெளிப்படும்  மகிழ்ச்சி, வெறுமை, உரிமை போராட்டம், அடையாள அரசியல் , கெட்ட  வார்த்தை , மக்களின் நடை/உடை/ பாவனைகள் எல்லாம்  சென்னை நகரின் நேற்றைய/ இன்றைய/ நாளைய கீழடி.

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியில் இருக்கும் அன்றாட நிகழ்வுகள் , மனித சப்தங்கள், தேய்ந்த முகங்கள் மூலம் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் இருக்கும் ரயில் தண்டவாளங்களும், நமது ரயில் பயணங்களும் முழுமையடைகின்றன.

மெட்ராஸ் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் , எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என வெவ்வேறு  பெயர்கள் மாற்றப்பட்டாலும் , மாற்றத்திற்கான கதையை எழுத ஆங்கிலேய வரலாறும், இந்தியா வரலாறும் , தமிழக வரலாறும் பத்தாதது என்றே சொல்ல வேண்டும் . சென்னை சென்ட்ரல் வித்தியாசங்களைக் கொண்டாடுகிறது, அடையாள அரசியலை மறுக்கிறது. மனிதன், அவனுக்கு ஒரு வாழ்வு, காலையில் வரும் சூரியன் , இரவு 11.30 மணி கடைசி ரயில், மாதம் முப்பது நாள், ரயில் டிக்கெட்,வட மாநிலத்தவருக்கு தமிழ் தெரியாது, தமிழருக்கு வட மொழி தெரியாது, சுரங்க ரயில் நிலையம் , வெறுமையான மதியம் 3 மணி போன்ற எளிமையான அனுபவங்களில் தன்னை தேடுகிறது.

இன்றைய உலகம் ஒட்டுமொத்த புவியமைப்பையும் (இடத்தை) ‘புள்ளி விவரம்’ என்ற ஒற்றைக் கட்டமைப்பில்  கொண்டு வந்து கொண்டிருக்கிறது.  நிலத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வேறுப்பட்ட மக்களை மேற்கத்திய நாடு vs  கிழக்கத்திய நாடு, நவீனத்துவம் vs பாரம்பரியம் , முன்னேற்றம் vs பின்னேற்றம் போன்ற காலக் கணக்கில் வகுத்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, அம்பத்தூரும் , அண்ணா நகரும் 25 கிலோ மீட்டரால் பிரிக்கப்படாமல், காலத்தைப் பதிவு செய்யும் புள்ளி விவரத்தால் பிரிக்கப்பட்டுள்ளது (வளர்ச்சியடைந்த நகரம் , வளர்ந்து வரும் நகரம்). எல்லா மாற்றத்தையும் முன்னேற்றம் என்ற ஒற்ற வார்த்தையில் தேடிக் கொண்டு வருகிறோம். உதாரணமாக பழைய இந்தியாவில் இருந்து புது இந்தியாவாக மாறும் சப்தங்கள். விளைவு 19 லட்சம் மனித உடம்புகள்.

யார் இந்தியர், எது எல்லை, யார் உள்ளே, யார் வெளியே, எது இந்தியம் போன்றவைகள் எல்லாம் ஒரு புள்ளிவிவரத்தின் தான்  மூலம் உருவாக்கபப்டுகிறது. ஸ்வச் ரெயில், ஸ்வச் பாரத் 2019 ரயில்வே புள்ளிவிவரம் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு உள்ள வேறுபாடை கணிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை, ரயில்வே நிலையதிற்கான நடத்தையையும் உருவாக்குகிறது. ஒவ்வொரு ரயில்வே நிலைத்தையும் நிர்பந்திக்கிறது, நிர்பந்தத்திற்கு அடங்காததை புறக்கணிக்கிறது. உதாரணாமாக, வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகள் உலக வரைபடத்தை விட்டு வெளியேறியது போல.  ஏன் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது ? ஏன் இந்தியா வைத்துக் கொள்ளலாம் ? இந்த நன்னடத்தை  யார்  கணக்கு செய்வது ? எல்லாம் ஏதோ ஒரு புள்ளி விவரம்….

சுத்தம் என்பது உண்மையின் ஒருவகையான வெளிப்பாடு என்றால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உண்மைக்கும் பஞ்சமில்லை, வெளிபாட்டிற்கும் பஞ்சமில்லை.

வால் டாக்ஸி சாலை நடைமேடையில் வசிக்கும் மக்கள்
வால் டாக்ஸி சாலை நடைமேடையில் வசிக்கும் மக்கள்

 

இந்த புள்ளி விவரம், ரயில் நிலையத்திற்குள் வெளியே உள்ள மக்களை நிர்பந்திக்காமல், வெளியே தள்ளாமல் இருக்கும் என்ற உத்தரவாதத்தை தர முடியமா?

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Chennai central railway station accommodates more voice diversity democratic space