பாலாஜி எல்லப்பன், கட்டுரையாளர்
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத அடிப்படையில் குடியுரிமை அளிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு ஆகிய சட்டங்கள் ஆபத்தானது என்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் ஷாஹீன் பாக்கில் திரளான பெண்கள் கூட்டம் சிஏஏவை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதிவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஷாஹீன் பாக் பகுதி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஒரு போராட்டக் களமாக அடையாளப்பட்டிருக்கிறது. இதே கால கட்டத்தில், சிஏஏவை எதிர்த்து மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. ஆனால், தமிழகத்தில் சிஏஏவை எதிர்த்து சென்னை வண்ணாரப் பேட்டையில் பிப்ரவரி 14-ம் தேதி முதல் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என மக்கள் திரளாக போராட்டத்தை தொடங்கி 24 மணி நேரமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் வண்ணாரப்பேட்டை பகுதியை தென்னகத்தின் ஷாஹீன் பாக் என்றும் தமிழகத்தின் ஷாஹீன் பாக் என்றும் அரசியல் நோக்கர்கள் வர்ணித்து வர்கின்றனர்.
ஆனால், தேசிய தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தைவிட தமிழகத்தின் தலைநகர் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஷாஹீன் பாக்கில் நடைபெறும் போராட்டமானது தலைநகரில் நடைபெறுகிறது. பல மாநிலங்களிலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றாலும் எந்த போராட்டங்களும் ஷாஹீன் பாக் போராட்டம் போல தொடர் போராட்டமாக மாறாத நிலையில், சென்னை வண்ணாரப் பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்போராட்டமாக மாறியிருக்கிறது. அதனாலேயே இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்கூட இது போல ஒரு தொடர் போராட்டம் நடைபெறவில்லை. பாஜகவை கடுமையாக விமர்சிக்கிற மம்தா பானர்ஜி ஆளும் மேற்குவங்கத்தில் கூட இப்படி ஒரு தொடர் போராட்டம் இல்லை. மார்க்ஸிட் கட்சி ஆளும் கேரளாவில்கூட இப்படி ஒரு போராட்டம் நடைபெறவில்லை. ஆனால், தமிழகத்தில் தலைநகருக்கு அடுத்து தொடர் போராட்டம் நடைபெறுகிறது. ஏனென்றால், போராட்டம் என்பது அந்த மக்களின் போராட்ட அரசியல் கலாச்சாரம் சம்பந்தப்பட்டது; தமிழகத்தின் பன்மைத்துவம் சம்பந்தப்பட்டது.
ஷாஹீன் பாக் போன்ற தொடர் போராட்டங்கள் நடத்துவது என்பது தலைநகர் டெல்லிக்கு வேண்டுமானல் புதியதாக இருக்கலாம். ஆனால், தமிழகத்துக்கு புதிது அல்ல.
கூடங்குளம் அணு உலை எதிப்பு போராட்டம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பங்கேற்று தொடர்ந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. அதே போல, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாநிலத்தின் மொத்த மக்களும் திராளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் மூலம் போராட்டம் என்றால் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கே வழிகாட்டும் வகையில் முன்மாதிரியான ஒரு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கான காரணங்களும் தன்மைகளும் வேறுதான். என்றாலும், அதன் உறுதித்தன்மையில் ஒரு ஒற்றுமை உள்ளது.
உண்மையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே மக்கள் போராட களத்துக்கு வந்தார்கள் என்று கூறினால் அது மிகவும் மேலோட்டமான ஒரு பார்வையாக இருக்கும். இதுவரையிலான அரசியல் கட்சிகள், அரசுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்திகளும் கோபமும் ஒரு உள்ளூர காரணமாக இருந்தது. அதனால்தான், மக்கள் எந்த அரசியல் கட்சியின் அடையாளமும் இல்லாமல் போராட்டக் களத்தில் திரண்டார்கள்.
ஒருவகையில் இன்று ஷாஹீன் பாக்கிலும் வண்ணாரப்பேட்டையிலும் நடைபெறும் போராட்டத்துக்கு வழிகாட்டி ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.
சென்னை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்றுவரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் இனிவரும் நாட்களில் எப்படி அமையும், அவர்கள் இலக்கை அடைவார்களா, என்றெல்லாம் கணிப்பது என்பது வெற்று ஆருடமாகத்தான் இருக்கும். எல்லா போராட்டங்களும் ஒருநாள் முடிந்து போகின்றன. ஆனால், போராட்டங்கள் உண்மையில் அதோடு முடிந்துபோவதில்லை. அவை மக்கள் மனங்களில் போராட்டத் தீ கங்குகளின் சுவையை விதைத்துச் செல்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம், ஷாஹீன் பாக், வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டம் போன்ற உறுதியான நீண்ட போராட்டங்கள் மக்களிடையே போராட்டத் தீச்சுவையை பதித்துச் செல்கின்றன. மக்கள் இது போன்ற பெரும் போராட்டங்களின் தீச்சுவையை நாடாமல் இருக்க வேண்டுமானால் அது அரசுகளின், ஆட்சியாளர்களின் கைகளில்தான் இருக்கிறது. அதற்கு மக்களின் விருப்பம் அறிந்து அனைத்து மக்கள்நல அரசாக செயல்படுவதுதான் சரியாக இருக்கும்.
தமிழகம் போராட்டத் தீச்சுவையை முதலில் ருசித்தது; பின்னர் அதை நாடு முழுவதற்கும் காட்டிவிட்டு தற்போது அதை சென்னை வண்ணாரப்பேட்டையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.