வியூகத்தை மாற்றிய காங்கிரஸ் : குஜராத்தில் ஆட்சி மாற்றம் சாத்தியமா?

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அந்தக் கட்சியும், ஆட்சியும் கடந்த ஒரு வருஷமாக பட்டப்பாடுதான், குஜராத்தில் பாஜவுக்கு நடந்து வருகிறது.

ஸ்ரீவித்யா

குஜராத்தில் பா.ஜ.க ஆட்சி 1998ல் இருந்த நடந்து வருகிறது. மோடி பிரதமரான நிலையில் இப்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தல் மிக மிக முக்கியமானது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் கட்சியை ஆட்சியில் அமர்த்தி, முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமரான பின்னர் சந்திக்கும் சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால் அவரது கவுரவத்துக்கான களமாக பார்க்கப்படுகிறது.

2014 லோக்சபா தேர்தல் மற்றும் அதன் பிறகு நடந்த பல மாநில சட்டசபை தேர்தல்களில், ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றில் பா.ஜ., வென்றது. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோகமாக வென்றது. 2014 முதல், இதுவரை நடந்துள்ள பல தேர்தல்களில், பா.ஜ.,வின் வெற்றி தேர்தலுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டதாக அமைந்தது.

முதல் முறையாக குஜராத்தில் நடக்க உள்ள தேர்தல், சற்று வித்தியாசமானது. இந்தத் தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிரான அலை, ஆட்சியாளர்களுக்கு எதிரான அலை உள்ளது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவை சரியான போட்டி கொடுக்காததால், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்ற நிலையே இருந்தது.

கடந்த இரண்டு மாதங்களில், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இதை மோடியே உணர்ந்திருப்பார். மொத்தமுள்ள, 182 தொகுதிகளில், 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்த, பா.ஜ., தலைவர் அமித் ஷா, குஜராத்தில் உள்ள கள நிலவரத்தால் கலவரம் அடைந்துள்ளார்.

குஜராத்தில், கடந்த சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை, பாஜவுக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. ஒரு பக்கம் காங்கிரஸ் புத்துயிர் பெற்று தீவிரமாக, புதிய வியூகத்துடன் களமிறங்கியுள்ளது.
மற்றொரு புறம் படேல் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரும் ஹார்திக் படேல், தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு கோரும் அல்பேஷ் தாக்கூர், மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜிக்னேஷ் மேவானி ஆகிய இளைஞர்களும் பா.ஜ.,வுக்கு எதிராக தனித்தனியாக களமிறங்கியுள்ளனர். மக்களிடையே இவர்களுக்கு அமோக ஆதரவு உள்ளது.

வழக்கமான பொதுக் கூட்டங்களை மட்டும் நம்பியிருக்காமல், காங்கிரஸ் இந்த முறை பல்வேறு விதங்களில் பிரசாரம் செய்து வருகிறது. மோடி அளவுக்கு பிரசாரக் கூட்டத்தில் பேச முடியாது என்பதால், டுவிட்டர் போன்ற தளங்களை கையில் எடுத்துள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ள அவர், டுவிட்டரில் மோடிக்கு தினமும் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ஹார்திக் படேல் பிரசாரக் கூட்டங்களில் வறுத்து எடுத்து வருகிறார். அதுபோலவே, அல்பேஷ், ஜிக்னேஷும் தங்களுடைய பங்குக்கு பா.ஜ.,வின் கோட்டையில் இருந்து ஒவ்வொரு கல்லாக உருவி வருகின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அந்தக் கட்சியும், ஆட்சியும் கடந்த ஒரு வருஷமாக பட்டப்பாடுதான், குஜராத்தில் பாஜவுக்கு நடந்து வருகிறது. மோடிக்குப் பிறகு இரண்டு முதல்வர்களை பார்த்துவிட்டது. ஆனாலும், மோடி அளவுக்கு அங்கு பிரபலமான தலைவர்கள் இல்லை.

மோடியால், குஜராத்தில் மீண்டும் பாஜ அமைந்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜவுக்கு காங்கிரஸ் கடுமையான சவாலை கொடுக்கும். கிட்டத்தட்ட இரு கட்சிகளுக்கும் சமமான ஓட்டுகள் கிடைக்கும் என, கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என்றே சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இருந்தாலும் பாஜவை காங்கிரஸ் நெருங்கிவிட்டது.

குஜராத் தேர்தலில் தோற்றால், அது பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும் என்பதால், கடைசி நேரத்தில் மோடியும் அமித் ஷாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், பா.ஜ.,வுக்கு கடும் சவால் விடுக்கும் வகையில், அதிக தொகுதிகளில் வென்றாலே, அது காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியாக அமையும்.

கடந்த மூன்று தேர்தல்களில் இழந்தவற்றை, கொஞ்சம் கொஞ்சமாக மீட்க, காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜ அளித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக உள்ள ராகுல் கையில்தான் உள்ளது.

×Close
×Close