உங்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்று யாரவது கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஒரு வீடு உள்ளது.. ஒரு நிலம் உள்ளது.. நூறு சவரன் தங்க நகை உள்ளது.. இரண்டு வைர மாலை உள்ளது.. ஐந்து கிலோ வெள்ளி உள்ளது.. இரண்டு கார்கள் உள்ளன.. வங்கி கணக்கில் நிரந்தர வைப்பாக ஐம்பது லட்சங்களும், சாதாரண சேமிப்பு கணக்கில் ஐந்து லட்சங்களும் உள்ளன என்று ஒரு பட்டியல் கொடுப்பீர்கள்.. இது மட்டும்தான் மனிதனின் சொத்துக்களா ? இன்னும் சில உள்ளன.. உங்களிடம் உள்ள ஆடுகள், மாடுகள், குதிரைகள் இதெல்லாம் கூட உங்கள் சொத்துக்கள் தான்.. கிராமங்களில் இவையெல்லாம் முக்கிய சொத்துக்கள்.. இன்னும் சிலரை கேட்டால் நான் எனது நிலத்தில் நூறு தேக்கு மரங்களும், ஐநூறு தென்னை மரங்களும், ஆயிரம் வாழை மரங்களும் வைத்துள்ளேன் என்பார்கள்.. நிலமும் ஒரு சொத்து.. நிலத்தில் உள்ள மதிப்புள்ள மரங்களும் சொத்துக்கள்.. காரணம் அவற்றை விற்றால் அவற்றிற்கு சந்தையில் பணம் கிடைக்கும்.. ஆக எதையெல்லாம் விற்றால் சந்தையில் பணம் கிடைக்கிறதோ அவை சொத்துக்கள்.. இவற்றை நாம் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்று இரண்டு வகையாக பிரிக்கிறோம்.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
அசையா சொத்துக்கள் என்பவை நிலம், வீடு போன்றவை.. அசையும் சொத்துக்கள் என்பவை தங்க நகை, வைர நகை, ரத்தினங்கள், உங்களிடம் உள்ள ஷேர்ஸ் போன்றவை. இவற்றை ஆங்கிலத்தில் வேறு விதமாகவும் சொல்வார்கள்.. material assets என்று சொல்வார்கள்.. அதாவது தொடக்கூடியவை, பார்க்க கூடியவை என்றும் சொல்லலாம்.. உதாரணமாக உங்கள் நிலத்தை நீங்கள் பார்க்கலாம், தொடலாம், உங்கள் வீட்டையும், உங்கள் நகைகளையும் அப்படியே.. ஆனால் உங்கள் ஷேர்ஸ் ஐ நீங்கள் தொட்டு பார்க்க முடியாது.. இப்போதெல்லாம் அவை காகித வடிவிலும் வருவதில்லை.. அவற்றை பார்க்கவும் முடியாது.. காரணம் அவை டிஜிட்டல் வடிவத்தில் உங்கள் கணக்கில் வைக்கப்படும்.. இதனால் இவற்றை intangible ( தொடமுடியாதவை ), invisible ( பார்க்க முடியாதவை ) assets என்று அழைக்கப்படும்
இவ்வளவுதான் உங்கள் சொத்துக்களா.. ? உங்கள் மகனும் மகளும் கூட ஒரு வகையில் உங்கள் சொத்துக்கள்தான்.. ஆனால் அவர்கள் எமோஷனல் (எமோஷனல்), பயோலொஜிக்கல் (biological ) assets .. அவர்களையும் நீங்கள் தொடலாம் பார்க்கலாம்.. அவர்கள் பாசத்தை உணரலாம்.. அவர்களுக்கும் மதிப்பு உண்டு.. ஆனால் அவர்களை சந்தையில் விற்க முடியாது.. விற்க முடியாத சொத்துக்கள் அவை.. வியாபாரம் செய்ய முடியாத சொத்துக்கள் அவர்கள்.. வரதட்சிணை உள்ளதே என்று கேட்காதீர்கள்.. அது வேறு விஷயம்..
இதையெல்லாம் தாண்டி வேறு சொத்துக்கள் உள்ளதா என்றால் இருக்கிறது.. அவை எந்த வகையை சேர்ந்தவை?
நீங்கள் ஒரு அருமையான கற்பனைவாதி.. ஒரு சிந்தனையாளர்.. ஒரு அற்புதமான சிறுகதையை எழுதி ஒரு வார பத்திரிகையை அணுகுகிறீர்கள்.
சிறுகதையை படித்து பார்த்த அந்த பத்திரிகை அதிபர் அதனை வெளியிடுகிறார்.. வாசகர்களின் பேராதரவையும் அது பெறுகிறது.. அதற்காக ஒரு விருதையும், ஒரு தொகையையும் அவர் பெறுகிறார்.. தொடர்ந்து எழுத ஆரம்பிக்கிறார்.. பல கதைகள் எழுதுகிறார்.. அவரது எழுத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு நாள் மும்பைக்கு செல்கிறார்.. அங்குள்ள விழா ஒன்றிற்கு அவரை அழைத்து கௌரவிக்கிறார்கள்.. அப்போது அவரது மராட்டிய நண்பர் ஒருவர் சொல்கிறார், 'உங்களை போலவே இங்கு ஒரு எழுத்தாளர் உள்ளார் .. அருமையான கதை எழுதி உள்ளார் என்று'. 'அப்படியா நானும் படிக்க வேண்டுமே' என்று ஆவலுடன் சொல்கிறார்.. அப்போது அந்த ஒரு பக்க சிறு கதையை அந்த நண்பர் படித்து அர்த்தம் சொல்கிறார்.. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இவரது முதல் கதையை ஒத்ததாக உள்ளது அந்த கதை.. இவரது கதை பிரசுரம் ஆகி ஒரு வருடம் கழித்து அந்த கதை வேறு ஒரு மராட்டிய பத்திரிகையில் வருகிறது.
ஒரிஜினல் எழுத்தாளர் அதிர்ச்சி அடைகிறார்.. அதெப்படி என் கதையும் அவர் கதையும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஒன்றாக இருக்க முடியும்.. இதில் ஏதோ நடந்துள்ளது.. என்று அவர் மனம் அமைதியற்று போகிறது.....
உடனடியாக இதனை பற்றி தனது நண்பர் ஒருவரிடம் தெரிவிக்கிறார் அந்த எழுத்தாளர்.. அந்த நண்பர் இதை கேட்டு, ஐயையோ! இது ஒரு காப்பிரைட் பிரச்னையாயிற்றே.. உடனடியாக ஒரு சட்ட வல்லுனரிடம் சொல்லுங்கள் .. அவர் இதை பற்றி உங்களுக்கு எடுத்து சொல்வர் என்று சொல்கிறார்..
உடனே அந்த எழுத்தாளர் தனக்கு மிகவும் தெரிந்த, நீண்ட நாள் வக்கீல் நண்பர் ஒருவரிடம் இதனை தெரிவிக்கிறார்.. அமைதியாக இதனை கேட்ட வக்கீல் உடனே சொல்கிறார்.. பிரச்சனை இல்லை.. அது எந்த பத்திரிகையில் வந்தது?.. யார் எழுதினார்கள்? எந்த மொழியில்? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.. அதே நேரத்தில் உங்கள் படைப்பு எந்த வருடம் எந்த மாதம் எந்த பத்திரிகையில் வந்தது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.. இதையெல்லாம் வைத்து அந்த மராட்டிய எழுத்தாளருக்கும், அந்த பத்திரிகைக்கும் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்.. எனது client கதையை காப்பி அடித்து அப்படியே வரிக்கு வரி, வார்த்தை வார்த்தை உங்கள் பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறார் அந்த எழுத்தாளர்.. இதற்காக அந்த எழுத்தாளரும் , நீங்களும் தக்க பதில் சொல்ல வேண்டும்.. அதற்கான நஷ்ட ஈட்டையும் தர வேண்டும் என்று எழுதுகிறார்.. இதற்கு இரண்டு வாரங்களில் நீங்கள் தக்க பதில் அளித்து, நிவாரணம் தேடி கொள்ள விட்டால் நாங்கள் சட்ட ரீதியாக இந்த பிரச்னையை எடுத்து செல்வோம் என்று.
இந்த நிலைக்கு என்ன காரணம்.. ஒருவரது படைப்பை இன்னொருவர் எடுத்து கையாளும் போது, அதனை வணிக ரீதியாக பயன்படுத்தும் போது அது தண்டிக்கத் தகுந்த குற்றமாகிறது .
காரணம் உரிமை.. ஒருவருக்கு உரிமையான பொருளை இன்னொருவர் திருடினால் அது திருட்டு .. இங்கே இந்த எழுத்தாளருக்கு என்ன உரிமை இதில் இருந்தது?
அந்த உரிமைக்கு பெயர்தான் அறிவு சார்ந்த சொத்துரிமை.. இந்த அறிவு சார்ந்த சொத்துரிமையானது . தான் ஒரு புது வகையான சொத்து.. இந்த சொத்தை பார்க்க முடியாது.. தொட முடியாது.. ஆனால் படித்து உணரலாம்.. பார்த்து உணரலாம்.. கேட்டு மகிழலாம்.. அதுதான் அறிவு சார்ந்த சொத்துரிமையில், ஓர் உரிமையான , பதிப்புரிமை.. காப்பிரைட் எனப்படுவது.. இந்த காப்பிரைட் எனப்படுவது என்ன ? அதில் உள்ள உரிமைகள் என்ன? அதில் உள்ள பல வகையான காப்பிரைட்க்கள் என்ன? அறிவு சார்ந்த சொத்துரிமையில் உள்ள வேறு சொத்துக்கள் என்ன ?
அத்தியாயம் இரண்டு, அடுத்த வாரம்...
இந்த படைப்பு, திரு. ஷங்கர் கிருஷ்ணமூர்த்தியின் பதிப்புரிமை...(காப்பிரைட் ).. அவரது அனுமதி இன்றி இது வேறு யாரும் பயன்படுத்தவோ, மொழி மாற்றம் செய்தாலோ அது சட்டப்படி குற்றம்.
திரு . ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியாளர்.. , மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்.. சட்டம் படித்தவர்.. வணிக சட்டத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர்.. ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர்.. ஆலோசகர்.. பயிற்சியாளர் திரைப்பட நடிகர்.. திரைப்பட திரைக்கதை ஆலோசகர்.. திருச்சியை அடுத்த நங்கவரம் கிராமத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்த இவர் , சென்னையில் படித்து வளர்ந்து வேலை பார்த்து பிறகு வேலை நிமித்தம் பல நகரங்களில் பணி புரிந்து இப்போது பெங்களூரில் வசித்து வருகிறார்..
ஒரு நடிகராக இவர் 'காதலே என் காதலே, மாற்றான், நந்தனம், அனேகன், ஜானி, காப்பான்' படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர இன்னும் பல படங்களில் திரைக்கதை ஆலோசகராக, சட்ட ஆலோசகராக பணி புரிந்திருக்கிறார்.
கட்டுரை முயற்சி - @Anbarasan Gnanamani
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.