முகக் கவசம் எழுப்பும் ஜனநாயக விவாதங்கள் எவை?

மற்றவரைப் பார்ப்பதற்கு சின்ன தயக்கமும், பொறுமையும் தேவைப்படுகிறது. இன்றைய முகக்கவசம் ஜனநாகத்தின் மிகப்பெரிய வெற்றி என்றே தோன்றுகிறது.

By: Updated: June 28, 2020, 10:42:13 AM

கொரோனா பாதிப்பு சூழ்நிலையில், முகக்கவசம் மக்களின் வாழ்வுடன் இணைந்த அங்கமாகிவிட்டது. கலாச்சாரமான வாழ்வியலின் அடையாளமாக அது மாறிவிட்டது என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ என்ற தனது காணொலி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

கொரோனா நோய்க்கு ஆளாகும் வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட இதர நோயுடையவர்களில், சுமார் 10% -15% மக்கள் மரணத்தை சந்திக்கின்றனர். இத்தகைய மக்கள் பொது இடங்களில் பிற மக்களுடன் சமுதாயமயமாக்குதலைத் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. எனவே, கொரோனா தொற்று முடிவுற்ற பிறகும் கூட  வயதான மற்றும் பாதிப்புடைய நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமால் இருக்க சமூகத்தில் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவது இன்றியமையாதாகிவிடுகிறது.

இத்தகைய நிலையில், முகக்கவச பயன்பாடு சுகாதாரத்தோடு நின்று விடாமல் சமூக-அரசியல் மட்டத்திலும் ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களையும் நாம் விவாதிக்க முன்வரவேண்டும்.

முகக்கவச பயன்பாடு எதிர்காலத்திலும் தொடரும் பட்சத்தில், நாம் பார்த்து பார்த்து பழக்கப்படுத்திய  மற்றவர்களின் முகங்களை மீட்டு எடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை இழக்கின்றோம். மற்றவர்களின் முகத்தையும்,  முகங்கள் உருவாக்கிய உலகையும் மறந்துவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். நாம் மறக்கப்போவது கண், காது , மூக்கு போன்ற வெளிப்புற அம்சங்களை அல்ல, மாறாக முகங்கள் பற்றிய ஒரு அடிப்படை கற்பனையையும் தான்.

சில நேரங்களில், இந்த மறதி நல்லதாக கூட இருக்கலாம்  என்பதனை இக்கட்டுரை விவரிக்க முயல்கிறது.

இன்று #BlackLivesMatter #Dalitlivesmatter #migrantlivesmatter #LGBTlivesmatter  போன்ற வாசகங்களை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒரு முகம் சார்ந்த போராட்டங்கள் தான்.  மனித முகங்கள் தான் பார்க்கப்பட்ட விதத்தை கேள்விக் கேட்கும் வகையில் இந்த போராட்டங்கள் அமைந்துள்ளன.  இனவாதம், சாதியவாதம், வகுப்பவாதம் நிறைந்த நம்முடைய பார்வை மற்றவரை காணும் முன்னே அவரின் தன்மையை  தீர்மானித்துவிடுகிறது. ஒருதலைபட்சமான நமது பார்வை மற்றவர் பற்றிய அடிப்படைத் தடயங்களை கூட கண்டறிய தவறிவிட்டது.

‘The Oval Portrait’ எனும் சிறுகதையில், ஓவியன் தனது மனைவியை தத்துருவமாக வரைய முயற்சிக்கின்றான். அவளும், பல வாரங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து ஓவியம் வரைய உதவுகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் உடல் நலம் குன்றுகிறது.  ஓவியம் வரைந்து முடிக்கப்படுப்படும் போது    அவள் இறந்து விடுவது போல் கதை சித்தரிக்கப்பட்டது.

ஜாக்கஸ் தெரிதா ‘In Memoirs of the Blind’ என்ற தனது புத்தகத்தில், “ஓவியனின் பார்வை மனைவியின் ஆரோக்கியமற்ற நிலையை காணுவதை நிறுத்திவிட்டது. உண்மையில், அவனின் ஒவ்வொரு பார்வையிலும் அவள்  அமைதியாக இறந்து கொண்டிருந்தாள். ஓவியனின் அழுத்தமான பார்வை மற்றவர் எனும் தடயத்தை கடைசி வரை எதிர்கொள்ளவே இல்லை”என்று தெரிவித்தார்.

இந்த கதையில் உள்ள ஓவியனைப் போலத் தான் நமது அன்றாடப் பார்வையும் உள்ளது.  எப்போதும், நமது பார்வை ஒரு முடிவை நோக்கியே பயணிக்கின்றது. அறிவைப் பெருக்குகிறது. பெற்ற அறிவை மற்றவரிடம் போதிக்கிறது. பேச்சு, எழுத்து, மௌனம் போன்ற செயல்களை விட ஏதோ, ஒரு இனம்புரியாத அதிகாரமும், அங்கீகாரமும், உரிமையையும் பார்வைக்கு இருக்கத்தான் செய்கிறது.

மற்றவரோடு பேச, மற்றவரை அணுக, மற்றவரைத் தேட,  மற்றவரை மற்றவராய் உணர வேண்டுமெனில் நம்மைப் பற்றிய, நமக்கான பார்வையில் இருந்து பின்வாங்க வேண்டும். கற்றுக் கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் ஒரு சின்ன இடைவேளை  தேவைப்படுகிறது.

மற்றவரைப் பார்ப்பதற்கு சின்ன தயக்கமும், பொறுமையும் தேவைப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு என்பதை தாண்டி, முகங்களை மறைக்கும் இன்றைய முகக்கவசம் திருநங்கைகள், மனநிலை பிறழ்ந்தவர்கள், எல்.ஜி.பி.டி சமூக மக்கள் நுகர்ந்த முதல் ஜனநாயக வாசம் என்றே தோன்றுகிறது. முகக்கவசம்  இவர்களின் முகத்தை மறைக்கவில்லை. மாறாக, சமூகத்தில் இவர்கள் முகங்களை  பார்வையிடுவதற்கான, அளவிடுவதற்கான, மதிப்பிடுவதற்கான தடையற்ற சக்தியும், அடிப்படை யுக்தியும் நம்மிடம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

நாம் பார்த்த/பார்க்கும்/ பார்க்கப்போகும் ஒவ்வொரு முகங்களும்  ஒருவகையான ஆழ்ந்த அதிர்ச்சி, தெளிவற்ற வெளிப்பாடு, நிர்வாணம், வன்முறை, ரகசியம், விரக்தி , புத்தம்,  கண்ணீர், அறியாமை, இயலாமை, நியாபகம்,  வெறுமையான கற்பனை, சுதந்திரம், உரையாடல், அறநெறி என்பதை இன்றைய முகக்கவசம் சொல்கின்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Face face mask existentialism covid 19 pandemic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X