கஜ புயலும், மத்திய அரசும்: கிள்ளிக் கொடுப்பது நியாயம்தானா?

தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது, ரூ.15 ஆயிரம் கோடி. இதை அப்படியே மத்திய அரசு கொடுத்து விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரா.மணி

தமிழக வரலாற்றில் 2004-ம் ஆண்டை யாரும் மறக்கவே முடியாது. அந்த ஆண்டு ஜூலையில் கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரோடு எரிந்து சமாதி ஆனார்கள். தமிழக மக்களின் நெஞ்சங்களை சுட்டுப் பொசுக்கிய அந்த கோரத்தீயின் வடு ஆறுவதற்குள், அதே ஆண்டு இறுதியில் தமிழகத்தின் கடற்கரை மக்களை விழுங்கியது, ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி.

அதுவரை சுனாமி என்னும் பேரழிவு பற்றி நம் மக்கள் அறிந்ததே இல்லை. அப்படியும் ஒரு பேரழிவு இருக்கிறது என்று நமக்கு உணர்த்திய அந்தக் கொடூரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவு வாங்கப்பட்டன.

அப்பேர்ப்பட்ட சுனாமிக்கு இணையாக, சில இடங்களில் அதையும் மிஞ்சும் விதமாக, கடந்த நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தில் ஏழு மாவட்டங்களின் பெரும்பகுதியை சின்னாபின்னமாக்கிய கஜ புயலையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவே முடியாது.

உயிர்ச்சேதம் குறைவு தான் என புயல் கரையை கடந்து சென்ற நாளில் அனைவரும் திருப்திப்பட்டுக்கொண்ட போதிலும், அடுத்தடுத்த நாட்களில் தான் தெரிந்தது, கஜ புயலின் கோரம்.

கிட்டத்தட்ட ஒரு போரினால் ஏற்பட்ட பேரழிவுக்கு இணையாக நாசம் விளைந்து இருக்கிறது. மழையை வரவழைத்த மரங்கள் அனைத்தும் மழையோடு வந்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் படுத்து விட்டன. வீடுகள், படகுகள் எல்லாம் தூள்தூளாகி இருக்கின்றன.

மின்கட்டமைப்பே சீர்குலைந்து விட்டது என்று மின்சாரத்துறை அமைச்சரே ஒப்புக்கொள்ளும் வகையில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்தும், சரிந்தும் நாகை, திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இருளாக்கி விட்டன.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் கண்ணீர் நின்றபாடில்லை. மலைகளின் இளவரசியான கொடைக்கானலும் கஜா என்ற மதயானையின் தாக்கத்தால் உருக்குலைந்து இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் நிவாரணம் ஒரு பக்கம் என்றால் அரசியல் கட்சிகள் அனைத்தும் அவரவர் பங்குக்கு உதவி வருகின்றன. தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களின் உதவியும் பாராட்டும் விதத்தில் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் நிபுணர் குழு சம்பிரதாயப்படி வந்து 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமையை பார்வையிட்டுச்சென்றது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ரூ.353 கோடி நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது எப்படி போதுமானதாகும்?

தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டது, ரூ.15 ஆயிரம் கோடி. இதை அப்படியே மத்திய அரசு கொடுத்து விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும், இந்த அற்ப சொற்பத் தொகையை நிவாரணமாக வழங்குவதை எப்படி தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழக பாஜக வினரிடம் கேட்டால், “முதல் கட்டமாக இதை வழங்குகிறோம். இன்னும் தேவையான எல்லா உதவிகளையும் செய்வோம்” என்பார்கள். ஆனால் இதுவரை நடைமுறை என்னவென்றால் முதல் நிவாரண அறிவிப்போடு எல்லாம் முடிந்த கதையாகத்தானே இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ‘உலகம் சுற்றும்’ நம் பிரதமர் மோடி, கஜா புயல் பாதித்த பகுதிகளை இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லையே, ஏன்? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து நிவாரணம் கேட்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது, “மத்திய அரசு மனசாட்சியோடு உதவும் என் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டர். அந்த மனசாட்சி இந்த 353 கோடி தானா?

மக்களில் பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்த சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ஏனென்று கேட்காமலேயே ரூ.10 ஆயிரம் கோடி அறிவித்த மத்திய அரசு, கஜ புயல் நிவாரணத்தில் கஞ்சத்தனம் காட்டுவது ஏன்? அந்த 10 ஆயிரம் கோடி ரூபாயை அப்படியே கஜ புயல் நிவாரணத்திற்கு வழங்கி விடலாமே, எட்டு வழிச்சாலை திட்டத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு.! நீங்கள் ஒன்றும் அள்ளிக்கொடுக்கவேண்டாம். இப்படி கிள்ளிக் கொடுப்பது நியாயம் தானா?

இதுபற்றி மத்திய அரசின் போக்கை நன்கு அறிந்து வைத்து இருக்கும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், “தமிழகத்திற்கு மத்திய அரசு பெரிதாக எதுவும் செய்து விடப்போவதில்லை. அவர்களுக்கு ஏதாவது ஆதாயம் என்றால் மட்டும் ஓடி வருவார்கள். இங்கு அவர்களுக்கு அரசியல் ஆதாயம் ஒருநாளும் கிடைக்கப்போவதில்லை. வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகம் பூஜ்யத்தையே அளிக்க உள்ள நிலையில் அவர்கள் ஏன் தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படப்போகிறார்கள்” என்று களநிலவரத்தை பிரதிபலித்தனர்.

ஆக, முதல்வர் சொன்னது போல் மத்திய அரசுக்கு மனசாட்சி கிடையாது. எதிர்க்கட்சித்தலைவர் இங்கேயுள்ள முதல்வரைப்பார்த்து, “உங்களுக்கு இருப்பது இரும்பா இதயமா” என்று கேட்டதற்குப் பதில் டெல்லியைப் பார்த்து கேட்டு இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

(கட்டுரையாளர் ரா.மணி, மூத்த பத்திரிகையாளர்)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close