scorecardresearch

இந்தியாவை சூழ்ந்த இருளை அகற்ற வெளிச்சம் பாய்ச்சப் போவது யார்?

யஷ்வந்த் சின்ஹா ​: தனக்கு தானே அதிகாரத்தைத் தேடாமல் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்காகப் போராடும் தலைவர்கள் நாட்டிற்குத் தேவை.

இந்தியாவை சூழ்ந்த இருளை அகற்ற வெளிச்சம் பாய்ச்சப் போவது யார்?

1946 இல், எனக்கு ஒன்பது வயது, அப்போது பீகாரின் சிறிய நகரமான பாட்னாவில் வளர்ந்தேன். என்னைச் சுற்றி நடக்கும் முக்கியமான நிகழ்வுகளை நான் அறிந்திருக்கவில்லை, ஆனால் “பஜ்ரங் பாலி கி ஜெய்” மற்றும் “அல்லாஹ் ஹு அக்பர்” என்ற கூக்குரல்கள் எனக்கு தெளிவாக நினைவில் உள்ளன, குறிப்பாக நகரத்தில் இருள் சூழ்ந்த மாலை நேரத்தில், முன்னெச்சரிக்கையாக குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மேற்கொண்ட  நடவடிக்கைகள் மூலம், ஏதோ ஒரு தீமை நடக்கின்றது என்பதை அறிந்து கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் கலவரக்காரர்களால் தாக்கப்படவில்லை, எங்கள் மொஹல்லாவில் பாதுகாப்பாக இருந்தோம். நான் மாணவனாக இருந்த சமயத்தில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, அக்கம் பக்கத்தில் உள்ள பள்ளியில் இனிப்புகள் வழங்கப்பட்டன என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் இனிப்புகளை சாப்பிட்டேன், நமது நாடானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப்  பிரிக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது. நம் நாடு இப்போது சுதந்திரமாகிவிட்டது என்று கூறினேன். சுதந்திரம் மற்றும் பிரிவினை, கலரவம்  ஆகியவை அப்போதைய சிறுவயதில் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கீழ் குறிப்பிட்ட கதை என்னுடன் தங்கியிருந்த  என் மூத்த சகோதரர் ஒருவர் எங்களிடம் சொன்னதாகும்.

அவர் பல்கலைக்கழகப் பயிற்சிப் படை (பின்னர் தேசிய கேடட் கார்ப்ஸ் மூலம் மாற்றப்பட்டது) முகாமில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டு ரயிலில் பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, கேடட்கள் பெட்டிக்கு வெளியே முழு இராணுவ உபகரணங்களுடன் காவலில் நிற்க வேண்டியிருந்தது. ரயில் பாட்னாவிற்கு அருகில் உள்ள மசௌர்ஹி என்ற சிறிய ஸ்டேஷனை அடைந்ததும், சுழற்சி அடிப்படையில் என் சகோதரர் காவலுக்கு நிற்க வேண்டிய முறை வந்தது. அதன்படி அவர் காவலுக்கு நின்றார். பிளாட்பாரம் முழுவதும் பிணங்கள் குவிந்து கிடந்ததால்,  அவர் நிற்க இடம் கிடைக்கவில்லை என்று எங்களிடம் கூறினார். அவையெல்லாம் வகுப்புவாத கலவரங்களில் பலியானவர்களின் உடல்கள். என் சகோதரர் எங்களிடம் சொன்ன அந்த உண்மை சம்பவத்தை நான் என்றுமே மறக்கவில்லை. ஆனால் வளர்ந்த பின்னணி மற்றும் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தபோதிலும், நான் முழுவதும் தாராளவாதியாகவே இருந்தேன்.

நாடு முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் நடந்தன. அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தாவில்) சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கும் வரை அவரது கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏறக்குறைய அதே நேரத்தில், மாகாண சபைகளால் இந்திய அரசியலமைப்பு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்கள்,  இன்றைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக கூடினர். 1947ம் ஆண்டு  ஆகஸ்ட் 29ம் தேதியன்று  பி ஆர் அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட வரைவுக் குழுவை அரசியலமைப்பின் அவை அமைத்தது. ஐசிஎஸ் அதிகாரியான பி என் ராவ் அரசியலமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் கடினமான பணி தீவிரமாகத் தொடங்கியது. அரசியலமைப்பு அவை இறுதியாக 1949 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று  அரசியலமைப்பு சட்டத்தை  ஏற்றுக்கொண்டது.

இந்தியாவில் நடந்த இனக்கலவரங்கள், பிரிவினை, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு  பெருமளவு மக்கள் தொகையினர் இடம் மாறியது,  இரண்டு பெரிய சமூகங்களுக்கு இடையேயான  கசப்பு மற்றும் வெறுப்புணர்வு என இந்தியாவில் நடந்த பேரழிவு நிகழ்வுகளுக்கு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட அனைவரும் சாட்சியாக இருந்தனர்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசாக மாற முடிவு செய்தது மற்றும் இதேபோன்ற ஒன்றைச் செய்வதற்கான தூண்டுதல் இந்தியாவிலும் நிலவியது. ஆயினும்கூட, ஒரு தாராளவாத, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற அரசியலமைப்பையே அவர்கள் முடிவு செய்தனர்.  இருப்பினும் “மதச்சார்பற்ற” என்ற வார்த்தையானது அவசரநிலையின் போது மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இந்தியாவை ஜனநாயக, தாராளவாத மற்றும் மதச்சார்பற்ற அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவும், நாடு நெருக்கடியான கால கடங்களை கடந்து வந்தபோதிலும், நாட்டை இந்து ராஷ்டிராவாக மாற்றாமல் இருக்கவும் வற்புறுத்தியது யார்?  அந்தக் காலத்தின் ஆளுமைகளான காந்தி, நேரு, படேல், மௌலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத் மற்றும் அம்பேத்கர் ஆகியோர்தான்.  சிறந்த இந்தியாவாக, பல நூற்றாண்டுகளாக, தாராளவாத, சகிப்புத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பெரும்பாலும் வன்முறையற்ற சமூகமாக இந்தியா இருந்தது. தலைவர்கள் இந்த உள்ளார்ந்த தன்மையின் அடிப்படையில் செயலாற்றினர்.  அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இன்று என்ன மாறிவிட்டது? நமது சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறதா? நமது ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா? அரசியலமைப்புச் சட்டம் நமக்கான கடமையை செய்யத் தவறிவிட்டதா? இந்துக்கள் பாதுகாப்பற்றவர்களா? வரலாறு காணாத வகுப்புவாத கலவரங்கள் நல்லிணக்கத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதா? தலைமையின் இயல்பு தன்மையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.  பல நூற்றாண்டுகள் பழமையான  இந்திய சமூகத்தின் தன்மையை மாற்றத் துடிப்பவர்களின் கைகளில் நாட்டின் தலைவிதி சிக்கியுள்ளது.  இந்து சமூகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், தற்போதைய நிகழ்வுகள் இந்த அச்சத்தின் சூழலை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்கள் எதற்காக?  வரலாற்றை ஆழமாக தோண்டி எடுப்பார்கள். என்றால்,   தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக அவ்வாறு செய்வார்கள்.  மதம் என்பது அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிகளால் அபின் எனும் போதைப் பொருளாக அதன்  அபாயத்தை உணராத மக்கள் மீது  பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழிகளைத் தவிர இந்து மதத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்து மதம் வெறுப்பையும் வன்முறையையும் போதிக்கவில்லை. வெறுப்பையும் வன்முறையையும் பரப்பும் எவரும் உண்மையான இந்து அல்ல. நேரு, படேல், வாஜ்பாய் போன்ற அரசியல்வாதிகளுக்காக நாடு இன்று காத்திருக்கிறது.

சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது. எனக்கு இப்போது 85 வயது ஆகிறது. மனரீதியாக விழிப்புடன் இருந்தாலும், போராட்டத்தை நடத்துவதற்கு போதுமான உடல் தகுதி இல்லை. ஆனால் இந்தியா இன்று ஆபத்தில் உள்ளது, நாம் முற்றிலும் இருளில் மூழ்கும் முன் சில தன்னலமற்ற நபர்கள் அல்லது ஒரு குழு இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என்று நம்புகிறேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், இது சித்தாந்தங்களின் மோதல் என்பதை அங்கீகரிப்பது, வெறுமனே ஒரு அரசாங்கத்தை மாற்றுவதற்கான ஒரு கேள்வி மட்டும் அல்ல. 1947ல் நிழலில் இருந்த மக்கள் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளனர். சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான முழுமையான கட்டுப்பாடு மற்றும் பொய்யை நாளுக்கு நாள் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். மக்கள் மனதில் அவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. என் சொந்த குடும்பத்தில் நடப்பதையே நான் பார்க்க முடிகிறது. .

நிச்சயமாக, இந்த மோதல் இந்தியாவில் மட்டும் அல்ல. உக்ரைனில் நடக்கும் போர் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போராட்டமாகும். இந்தியாவில், பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை  ஒன்றிணைப்பது சவாலுக்கு உரியதாகும்.  அரசாங்கத்தை மாற்றுவது பற்றிய பேச்சு தொலைதூரத்தில் தெளிவற்று இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இருந்ததை விடவும் இந்த  போராட்டம் பெரியது மட்டுமின்றி கடினமானதும் கூட.

ஜனநாயகத்துக்கான இந்தியர்களின் அர்ப்பணிப்பு நிரூபிக்கப்பட்ட ஒன்று. சரியான செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மட்டுமே தலைமை வேண்டும். சுய அதிகாரத்தை  தேடுபவர்களால் இதைச் செய்ய முடியாது. ஜெயப்பிரகாஷ் நாராயண் வெற்றி பெற்றார், ஏனென்றால் அவர் ஒருபோதும் அதிகாரத்தை தனக்காக தேடவில்லை.  சுய அதிகாரத் தேடலுக்காக அன்றி,  ஒரு சித்தாந்தந்துக்கான போரில் ஈடுபடுகிறோம், என்று அறிவிக்க வேண்டிய தலைவர்களைக் கொண்ட குழு நமக்குத் தேவை. அப்போதுதான் அவர்கள் நம்பப்படுவார்கள். அந்த நாளைக் காணும் வரை நான் உயிரோடு இருப்பேனா? என்று உறுதியாக எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். மக்களை மயக்கத்திலேயே வைத்திருக்கும் எத்தகைய தரம் வாய்ந்த அபின் ஆக இருந்தாலும், மக்கள் ஒரு நாள் மயக்கத்தில் இருந்து விழித்துக் கொள்வார்கள். இந்திய மக்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இந்த கட்டுரை முதலில் மார்ச் 25ம் தேதியன்று அச்சுப் பதிப்பில் ‘Struggle against darkness’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போது, ​​அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் துணைத் தலைவராக உள்ளார்

தமிழில்; ரமணி

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Darkness over india who will show the light