பணம், புகழை எதிர்பார்த்து அரசியலுக்கு வராத ஒரு தலைமுறை, நம்மிடம் இருந்து விடை பெற்றிருக்கிறது. பச்சையப்பன் கல்லூரி பேராசிரியராக இருந்து கொண்டே பொதுவாழ்வுக்கு வந்த பேராசிரியர் க.அன்பழகன், தன் பொதுவாழ்வை கறையின்றி, நிறைவாக முடித்திருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள்..! அந்த இயக்கத்தின் வரலாற்றில் இன்னொருவர் இனி அந்தச் சாதனையை நிகழ்த்துவது சாத்தியமல்ல. எம்.ஜி.ஆர். பிரிந்த தருணத்தில் கலைஞருக்கு உற்ற துணையாக நின்று எம்.ஜி.ஆர். வகித்த பொருளாளர் பதவியை ஏற்றுக்கொண்டவர், வைகோ பிரிந்தபோது இரண்டாம்கட்டத் தலைவர்கள் பலர் ஊசலாடியபோதும் முழுமூச்சாக கலைஞருக்கு துணை நின்றவர்... திமுக.வில் ‘கூட்டலும் கழித்தலும்’ இவர் பெயரிலேயே நடந்து வந்தாலும், அந்த அதிகார கனத்தை ஒருபோதும் தலையில் ஏற்றிக் கொள்ளாதவர்... என பேராசிரியரைப் பற்றி சிலாகித்துக் கொண்டே போகலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/03/dmk-k-anbazhagan-funeral-300x199.jpg)
பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு, ‘அன்பளிப்பு’ வழங்கும் நடைமுறை பெரியார் காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அம்சம். பெரும் செல்வந்தர்களான மாவட்டச் செயலாளர்கள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தால், பேச்சாளர்கள் கூடுதல் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள். காரணம், பேச்சாளர்களின் பொருளாதாரச் சூழலை அறிந்து ‘மீட்டருக்கு மேலே’ போட்டுக் கொடுப்பார்கள் என்பதுதான்!
3 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் பேராசிரியர். கூட்டம் முடிந்ததும், பேராசிரியரின் வழிச்செலவு, உதவியாளர் செலவு என கணக்கிட்டு ஒரு தொகை கொடுக்கப்பட்டது. அப்போது அதை பிரித்துப் பார்க்கவில்லை இவர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வழக்கமாக பேராசிரியருக்கு வழங்கப்படும் தொகையைவிட இரு மடங்கு தொகை அது!
உடனே ஜெகத்ரட்சகனை போனில் பிடித்த பேராசிரியர், ‘எனக்கான செலவுத் தொகை இவ்வளவுதான். மீதத் தொகைக்கு இன்னொரு பொதுக்கூட்டத்தை நீ ஏற்பாடு செய்துவிடு. நான் வந்து பேசுகிறேன்’ என குறிப்பிட்டு, அதை மறக்காமல் செய்து முடித்தார்.
கல்வித் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர், அதிக ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்தவர்... என்ற அடிப்படையில் அந்தத் துறை மீது அதிக காதல் கொண்டிருந்தார் பேராசிரியர். உயர் கல்வி தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார். அப்படி கோரிக்கைகளுடன் வருகிறவர்கள் மீது இவர் தனிப்பட்ட மதிப்பும், அன்பும் செலுத்துவதையும் பார்க்க முடிந்திருக்கிறது.
அப்படி பேராசிரியரின் அன்பைப் பெற்றவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த ஏ.எல்.சுப்பிரமணியன். அண்ணா காலத்திலேயே எம்.எல்.ஏ. ஆனவர். திருநெல்வேலியில் பழமையான ம.தி.தா இந்துக் கல்லூரி நிர்வாகங்களில் முக்கியப் பங்கேற்று செயல்பட்டவர் அவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கு ஊக்கமூட்டி, செயல்படுத்தியவர் பேராசிரியர். அதனாலேயே அவர்கள் இருவரின் நட்பு பலமானது. பின்னாட்களில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருக்கு வேறு பலர் போட்டிக்கு வந்தபோதும், ஏ.எல்.எஸ்.ஸுக்கு துணை நின்றவர் பேராசிரியர்!
திமுக.வில் 40 வயதைக் கடந்த நிர்வாகிகளில் பெரும்பாலானோர், பேராசிரியருடன் நல்ல அறிமுகம் கொண்டவர்களே! சென்னையை அடுத்த புழல் திமுக நிர்வாகியான நாராயணன், தெருமுனைப் பிரசாரம் ரேஞ்சுக்கு பேராசிரியரை அழைத்து கூட்டங்கள் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார். ‘நான் ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர். பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தான் எனது கூட்டங்கள் இருக்க வேண்டும்’ என ஒருபோதும் பேராசிரியர் விரும்பியதில்லை.
கலைஞருக்கு அடுத்து, உணர்வுபூர்வமாக பெருமளவு நிர்வாகிகளை கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேல் கட்டிப் போட்டிருந்தவர் பேராசிரியர். அவருக்கு நினைவஞ்சலி செலுத்த தொண்டர்கள் திரண்டதில் ஆச்சர்யமில்லை. ஆனாலும் தமிழகம் முழுவதும் இருந்து அவருடன் நெருங்கிப் பழகிய சீனியர் நிர்வாகிகள் வரும் அளவுக்கு அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி அவகாசம் பெற்றிருக்கவில்லை.
மார்ச் 7-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு மரணம் அடைந்தவரை அன்று மாலையே தகனம் செய்துவிட்டதால், வெளியூர்களில் இருந்து மாவட்ட இணை, துணை, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் வந்து சேர முடியவில்லை. பேராசிரியரை அறிவாலயத்தில் பார்த்தே பழக்கப்பட்ட பல நிர்வாகிகள், அவரது கீழ்ப்பாக்கம் இல்லத்தை தேடிச் சென்று அஞ்சலி செலுத்தவும் சிரமப்பட்டனர்.
கலைஞர் இறந்தபோது, தொண்டர்கள் பெருமளவில் அஞ்சலி செலுத்த வசதியாக சேப்பாக்கம் ராஜாஜி ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டது. பேராசிரியருக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலோ, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலேயோ இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். வெளியூர் நிர்வாகிகள் வந்து சேர அவகாசம் கொடுத்து, மறுநாள் உடல் அடக்கம் நிகழ்ச்சியை திட்டமிட்டிருக்கலாம்.
திமுக வரலாற்றில் பின்னிப் பிணைந்த பேராசிரியரை திமுக சார்பிலேயே ஒரு இடம் வாங்கி, அதில் அடக்கம் செய்வது குறித்தும் பரிசீலித்திருக்கலாம். திராவிட இயக்க வரலாறுகளில் நினைவிடங்களுக்கான மரியாதை எப்போதுமே அதிகம். பேராசிரியருக்கும் அது கிடைத்திருக்க வேண்டும், கிடைக்க வேண்டும் என்பது தொண்டர்கள் அவா! எனினும், விடைபெறும்போதும் அவர் எளிமையை தரித்துக் கொண்டாரோ? எனத் தோன்றுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"