Advertisment

டி.டி.வி.தினகரன் vs எடப்பாடி பழனிசாமி : கீரி - பாம்பு சண்டை நடக்குமா?

டி.டி.வி.தினகரன் தலைமை அலுவலகத்திற்கு வந்து பூகம்பத்தை உருவாக்கப் போவதாக கிளம்பிய பதற்றத்தை, சிம்பிளாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக முறியடித்துவிட்ட திருப்தி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
டி.டி.வி.தினகரன் vs  எடப்பாடி பழனிசாமி : கீரி - பாம்பு சண்டை நடக்குமா?

கீரியையும், பாம்பையும் சண்டை போட வைப்பதாக சொல்லும் வித்தைக்காரன், கடைசி வரை அப்படியொரு சண்டையை நடத்தவே மாட்டான். இன்றைய அ.தி.மு.க. அம்மா அணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையிலான மோதல் இத்தகையதுதான்!

Advertisment

இவர்களை மோதவிடாமல் பாதுகாக்கும் வித்தைக்காரர்கள், மந்திரி பிரதானிகளும் எம்.எல்.ஏ.க்களுமே! காரணம், இருவரும் முட்டிக்கொண்டு ஆட்சி கவிழ்ந்தால், ஆகப்பெரிய நஷ்டம் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும்தான்! ஆகஸ்ட் 1-ம் தேதி எடப்பாடிக்கும், டி.டி.வி.க்கும் இடையே மோதலை எதிர்பார்த்து தமிழகம் ஏமாந்து நிற்கும் பின்னணி இதுதான்.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டி.டி.வி.தினகரன், 38 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு ஜூன் 2-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். அப்போதே அவர் ஆதரவாளர்களை திரட்டி, கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என பேசப்பட்டது. அதனால் எடப்பாடி ஆட்சிக்கு இடைஞ்சல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டி.டி.வி.தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு, ‘இரு மாதங்கள் பொறுமையாக இருக்கும்படி சசிகலா கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 5-க்குள் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையாவிட்டால், அதன்பிறகு நானே முழுமையாக களம் இறங்கி அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்’ என எடப்பாடிக்கு ஒருபுறம் கெடு விதித்தார். இன்னொரு பக்கம், தன்னை சந்தித்த 37 எம்.எல்.ஏ.க்களிடமும், ‘ஆட்சிக்கு நம்மால் எந்த தொந்தரவும் வரக்கூடாது’ என அழுத்தமாக சொன்னார் டி.டி.வி.தினகரன். எடப்பாடியை நோக்கி அவர் அசைத்த வெள்ளைக்கொடி இது.

publive-image டி.டி.வி.தினகரன்

இதன்பிறகாவது முக்கிய பிரச்னைகளில் டி.டி.வி.தினகரனின் ஆலோசனையை எடப்பாடி கேட்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தினகரன் ஆதரவாளர்களிடம் எழுந்தது. தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய அபிடவிட்களில் சசிகலாவை பொதுச்செயலாளராகவும், டி.டி.வி.யை துணைப் பொதுச்செயலாளராகவும் ஏற்றுக்கொண்ட எடப்பாடி, நடைமுறையில் மட்டும் அந்த மரியாதையை டி.டி.வி.க்கு கொடுப்பதில் என்ன சிக்கல்? என்பதுதான் தினகரன் ஆதரவாளர்கள் எழுப்பும் கேள்வி. அந்தச் சிக்கல், டெல்லியை மையமாகக் கொண்டது என்பதை இரு தரப்புமே அறிவார்கள். ஆனால் அவர்களால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் பெயரளவுக்காவது தம்பிதுரையை அனுப்பி சசிகலாவின் கருத்தைக் கேட்ட எடப்பாடி தரப்பு, துணை ஜனாதிபதி தேர்தலில் சுயமாக முடிவை அறிவித்தனர். இது டி.டி.வி.தினகரனை டென்ஷனாக்கியது. இடையில் பா.ஜ.க. மீதான ‘அட்டாக்’கை கொஞ்சம் அடக்கி வாசித்த ‘நமது எம்.ஜி.ஆர்.’, மீண்டும் முருங்கை மரம் ஏறியதும் இதன் பிறகுதான்!

இந்தச் சூழலில் டி.டி.வி.தினகரன் விதித்த ஆகஸ்ட் 5 கெடு நெருங்கி வந்ததும், அடுத்த பரபரப்பு உருவானது. ‘அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கே இருக்கிறது. கட்சியை பலப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பணியை ஆகஸ்ட் 5 முதல் செய்வேன்’ என ஜூலை 31-ம் தேதி டி.டி.வி.தினகரன் பேட்டியளித்தார். அதே நாளில் இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார், ‘கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் வழி நடத்துகிறார்’ என்றார்.

publive-image எஸ்.பி.வேலுமணி

ஜெயகுமாரின் பேட்டியின் உஷ்ணம் தாங்காத டி.டி.வி., ஆதரவாளர்கள், ‘ஆகஸ்ட் 5-ம் தேதி டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வரப்போவதாக’ செய்திகளை கசியவிட்டனர். இதையொட்டி எடப்பாடி தரப்பு சமரசத்திற்கு இறங்கி வரும் என்பது டி.டி.வி. ஆதரவாளர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் எடப்பாடி அன்றே தனது அதிரடி முகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி மாலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் டி.டி.வி.யை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பது பற்றி மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கப்படலாம் என்றும், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு டி.டி.வி.யை அனுமதிப்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதையொட்டி கோட்டையில் மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினர். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஜூலை 31-ம் தேதி இரவு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடத்திய சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

இவர்களில் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் மட்டுமல்ல... டி.டி.வி.தினகரனின் தீவிர எதிர்ப்பாளரும்கூட! டி.டி.வி.யை முகத்திற்கு நேராக, ‘நீங்கள் ஒதுங்கியே ஆகவேண்டும்’ என முதலில் சொன்னவர் அவர்தான். சி.வி.சண்முகமோ, எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தாலும்கூட இன்னமும் சசிகலா மற்றும் டி.டி.வி. மீதும் சாஃப்ட் கார்னரை கடைபிடிக்கிறார். எனவே எடப்பாடி தரப்பு செய்திகளை சி.வி.சண்முகம் மூலமாக டி.டி.வி.க்கு சொல்வதற்காகவே அந்த சந்திப்பு நடந்தது.

publive-image சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் மூலமாக டி.டி.வி.க்கு ‘பாஸ்’ ஆன அந்தச் செய்தியில், ‘சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லுமா? என்கிற விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுவரை எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரும் முயற்சியை நீங்கள் எடுக்க வேண்டாம். அது உங்களுக்கே எதிராக முடியும்’ என்கிற ரீதியில் எடப்பாடி தரப்பு கடுமை காட்டியிருக்கிறது.

இப்போதைய நிலையில் போலீஸ் இலாகா முழுக்க எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே இந்த மெசேஜை டி.டி.வி.தினகரனால் அலட்சியப்படுத்த முடியவில்லை. ஆகஸ்ட் 1-ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி ஏற்பாடு செய்த கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களே இருந்த சூழலில் தனது தூதர்களாக இருவரை கோட்டைக்கு அனுப்பினார் டி.டி.வி.தினகரன்.

அந்தத் தூதர்கள் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியான தளவாய்சுந்தரமும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வனும்தான்! இவர்கள் கோட்டையில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து, ‘மாலையில் தலைமை அலுவலகத்தில் உங்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நாங்களும் கலந்துகொள்கிறோம். அண்ணனுக்கு (டி.டி.வி.) எதிராக அங்கு யாரும் தேவையின்றி பேசக்கூடாது. அதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையூறாக அண்ணன் (டி.டி.வி.) எதையும் செய்யப் போவதில்லை’ என மீண்டும் வெள்ளைக் கொடியை அசைத்தனர். அதாவது, 5-ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு டி.டி.வி. வரப்போவதில்லை என்பதையே சூகசகமாக அவர்கள் சொன்னதாக எடப்பாடி புரிந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களுக்கும், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் எடப்பாடி தரப்பிலிருந்து அவசரமாக ஒரு தகவல் ‘பாஸ்’ செய்யப்பட்டது. மாலையில் நடக்கும் கூட்டத்தில், ‘முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் 4 பேர் மட்டுமே பேசுவார்கள். வேறு யாரும் உட்கட்சி பிரச்னைகளை அங்கு பேசக்கூடாது’ என வாய்க்கட்டு போட்டனர்.

அதன்படி ஆகஸ்ட் 1 மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயகுமார் ஆகிய 4 பேர் மட்டுமே பேசினார்கள். இவர்கள் நால்வரும் சொல்லி வைத்ததுபோல, ‘அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் மாவட்டம் வாரியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்’ என பேசி முடித்தனர்.

டி.டி.வி. ஆதரவாளர்களான தளவாய்சுந்தரம் உள்ளிட்ட சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அங்கு யாருமே டி.டி.வி.க்கு எதிராக அல்ல, டி.டி.வி. பெயரையே உச்சரிக்காததில் இவர்களுக்கு நிம்மதி! 5-ம் தேதி டி.டி.வி. தலைமை அலுவலகத்திற்கு வந்து பூகம்பத்தை உருவாக்கப் போவதாக கிளம்பிய பதற்றத்தை, சிம்பிளாக ஒரு கூட்டத்தின் மூலமாக முறியடித்துவிட்ட திருப்தி எடப்பாடி தரப்புக்கு!

‘நீ இந்தக் கோட்டை தாண்டி வரக்கூடாது; நான் அந்தப் பக்கம் வரமாட்டேன்!’ என்கிற ‘டீலிங் ஆட்டத்தை’ எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஆகிய இரு தரப்புமே கனகச்சிதமாக அரங்கேற்றுகிறார்கள். ஆகஸ்ட் 5-க்கு பிறகு டி.டி.வி. தரப்பில் சில மாவட்டங்களில் தொண்டர்களை சந்திக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடக்கலாம். அதிலும் மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் எந்த அளவுக்கு பங்கேற்பார்கள்? என்பது கேள்விக்குறி!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment