facebook and insta celebrity interview exclusive Lulu Deva Jamla G | Indian Express Tamil

’40 வயசுல காதல் வராதா?’ உணர்வைக் கொட்டும் லூலு தேவ ஜம்லா

நீ இப்டியெல்லாம் படம் போடாத, வீடியோ போடாத!” அப்டீன்னு சொல்லி அடக்குறத விட்டுட்டு, “அந்த மாதிரி படங்களோ வீடியோவோ பார்த்தா உனக்கு பிடிக்கலன்னா கடந்து போ” அப்டீன்னு சொல்லி இளைய தலைமுறையினரை பழக்கணும். அப்டி கடக்காம வன்மமா வக்கிரமா தாக்குறவங்கள இணையத்துல மட்டுமில்லாம reality-யிலயும் ஒரேயடியா ப்ளாக் பண்ணிட்டு கடந்து போகிற மாதிரி பெண்கள பக்குவப்படுத்தணும். அவங்க குடும்பங்கள இதெல்லாம் தப்பே இல்லன்னு கன்வின்ஸ் பண்ணணும்.- லூலு

’40 வயசுல காதல் வராதா?’ உணர்வைக் கொட்டும் லூலு தேவ ஜம்லா

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நபர்களை தொடர்கொண்டு ie தமிழ் இணையதளம் சார்பாக இனி வரும் வாரங்களில் பேட்டி காண உள்ளோம் . முதல் பேட்டி லூலு தேவ ஜம்லாவிடத்திலிருந்து.

உங்க சொந்த ஊர் எது?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதிக்கு அருகில் உடையார்விளை என்கிற ஒரு சின்ன கிராமம் தான் நான் பிறந்து வளர்ந்த ஊரு.

உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க?

ஊருக்குள்ள செல்வாக்கான கிறிஸ்தவ குடும்பம். அம்மா ஆசிரியை. அப்பா மரவியாபாரம் பார்த்துகிட்டே ஆர்கானிக் விவசாயமும் செஞ்சுட்டு இருந்தார். எனக்கு 2 தம்பிங்க. குடும்பத்துல மூத்தவ என்கிறதால சின்ன வயசுல இருந்தே எங்க வீட்ல நான் வச்சது தான் சட்டம் என்கிற மாதிரி தான் இருந்தது, கல்யாணம் என்கிற கட்டம் வரும் வரை.

ஒரு பதிவுல “என்னோட அம்மா அப்பா சாதி பாக்காம மட்டும் எனக்கு புடிச்சவனையே கட்டி வச்சிருந்தா, நான் ஏன் இப்படி இருக்க போறேன்?” அப்டீன்னு அவ்ளோ உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருப்பீங்க… அப்போ என்ன நடந்தது  கொஞ்சம் சொல்லுங்க?

1998-99ல நான் மதுரையில MBA படிச்சிட்டு இருந்தப்ப, வேற்று சாதி மதத்தை சார்ந்த ஒருத்தரை நான் காதலிச்சேன். படிப்பை முடிச்சிட்டு ஒரு நல்ல வேலையில ஏறி லைஃப்ல செட்டில் ஆனதுக்கப்புறம் அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு தீர்மானம் எடுத்திருந்தேன். இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்ட என்னோட பெற்றோர் என்னோட படிப்பை பாதியிலயே நிப்பாட்டி வலுக்கட்டாயமா மதுரையில இருந்து எங்க ஊருக்கு கூட்டிவந்து கிட்டத்தட்ட 6 மாசம் என்னை வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சிட்டாங்க. அப்போ மொபைல் இண்டர்னெட் வசதியெல்லாம் இல்லாத காலம் ஆனதால என்னோட காதலனை தொடர்பு கொள்ள முடியாம போச்சி. பழைய தமிழ் சினிமாக்கள்ள எல்லாம் காட்டுற அதே அடி உதை மிரட்டல் சதின்னு அவ்வளவும் அரங்கேற்றி எங்கள முழுசா பிரிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் 2000த்துல தங்களோட சாதி சனத்துலயே மாப்பிள்ளை பார்த்து கட்டி குடுத்துட்டாங்க. ஆசை பட்டது கிடைக்கலன்னா கிடைச்சத வச்சி சந்தோசமா வாழ்ந்திருவோம்னு முடிவெடுத்துட்டேன். நான் கற்பனை பண்ணி வச்சிருந்த ரொமாண்டிக் வாழ்க்கை அமையல என்கிற ஏமாற்றத்தை கூட எங்கயுமே வெளிய காட்டிகிட்டது இல்ல. ரெண்டு பசங்களை பெத்துகிட்டு வேற வழியே இல்லாம குடும்பத்துக்காகன்னு வாழ ஆரம்பிச்சிட்டேன்.

கன்னியாகுமரியில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? கன்னியாகுமாரி to ஆஸ்திரேலியா? இது எப்படி நடந்தது?

2001 முதல் 2006 வரை கன்னியாகுமரி மாவட்டத்துல ரெண்டு கல்லூரிகள்ள ஆங்கில பேராசிரியையா வேலை பார்த்திருக்கேன்.  2006ல நாகர்கோவில்ல ஒரு கல்லூரியில வேலைபார்த்துட்டு இருந்தப்ப UK-க்கு போகிறதுக்கான ஒரு வாய்ப்பு அமைஞ்சுது. தனியா தான் போனேன். அங்க போனப்புறம் Family Visa-வுக்கு அப்ளை பண்ணி 2 முறை reject ஆகிரிச்சி. சரின்னு தனியாவே சுத்தி அலைஞ்சி வேலை தேடியும் நல்ல வேலை எதுவும் கிடைக்கல.

ஒரு கடையில துப்புரவு பணியாளரா வேலை பார்த்தேன். அங்க இருந்துட்டே ஆஸ்திரேலியாவுக்கு வர்றதுக்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பிச்சேன். 2007 ஜனவரியில எனக்கு Australian Visa கிடைச்சுது. எங்க வீட்டு தோழரையும் dependant visaவுல கூட்டிட்டு Sydney-க்கு வந்துட்டேன். ஆரம்பத்துல என்னோட பப்பா தான் பண உதவி பண்ணி சப்போர்ட் பண்ணாரு. பசங்க ரெண்டுபேரையும் எங்க மம்மி பார்த்துகிட்டாங்க. கல்யாண விஷயத்துல என்னோட விருப்பத்துக்கு எதிரா இருந்த என்னோட பெற்றோர் நான் வெளிநாடு வர்ற விஷயத்துல முழு சப்போர்ட்டா நின்னதால தான் என்னால அவங்கள மன்னிச்சு மறுபடி ஏத்துகிட்டு அன்பு செலுத்த முடிஞ்சுதுன்னு சொல்லுவேன்.

இப்போ இவ்ளோ முதிர்ச்சியாக நிக்குகிற உங்களை ஏன் உங்க காதல் முறிவு மற்றும் திருமண விஷயம் இவ்ளோ தாக்குது?

பைக்ல பின்னால உக்காந்து ஜாலியா நைட் ரைட் போறது, ஜோடியா சேர்ந்து ஊர் சுத்துறதுன்னு ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட என்னால அப்டியெல்லாம் வாழ முடியல என்கிறது என்னை வெகுவா பாதிக்க தான் செய்தது அந்த காலகட்டத்துல. ஏன்னா, “சினிமா பார்க்கிறதே தப்பு. வாரம் தவறாம church-க்கு போயி அடக்க ஒடுக்கமான குடும்ப ஸ்திரியா தான் இருந்தாவணும்” என்கிற மாதிரியான ஒழுக்க விதிமுறைகளை வலியுறுத்துற ஒரு குடும்ப பின்னணி கொண்டது நான் வாழ்க்கைப்பட்ட குடும்பமும். எனக்கு அப்போ படிப்பு இருந்தாலும் வேலை எதுவும் இல்லாததால பொருளாதார சுதந்திரம் இருக்கல என்கிறதால அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் உடைச்சோ மீறியோ சுதந்திரமா எதுவுமே பண்ண முடியாத சூழல். ஆனா சுதந்திரத்துக்கான ஒரு தேடல் மட்டும் எப்பவுமே மனசுக்குள்ள ஒரு நெருப்பா கனன்று கொண்டு தான் இருந்தது. அந்த தேடலோட விளைவு தான் நான் 7 மாச கைக்குழந்தையை இந்தியாவுல விட்டுட்டு தனியா UKக்கு போக துணிஞ்சது. அதுக்கப்புறம் ஆஸ்திரேலியாவுல வந்து ரொம்ப கடுமையா உழைச்சி இப்ப இந்த நிலையை அடைஞ்சிருக்கேன்.

அதாவது பொருளாதார சுதந்திரத்தோட எனக்கான முடிவுகளை நானே எடுத்துகிட்டு என்னோட விருப்பப்படி வாழுற நிலை. நான் சாதி மதத்தை எல்லாம் தூக்கியெறிஞ்சிட்டு ஒரு கடவுள் மறுப்பாளராவும் சாதி எதிர்ப்பாளராவும் மாறினது மட்டுமில்லாம அதை பொது வெளியில அறிவிக்கவும் காரணமா இருந்த ஒண்ணு சாதிமத வேறுபாட்டால என்னோட இளவயது காதல் முறிக்கப்பட்டது என்கிறது.

இன்னொண்ணு என்னை சுத்தி இருந்தவங்களோட, குறிப்பா என்னோட குடும்ப அங்கத்தினர்கள் கிட்ட காணப்பட்ட hypocrisy.

சமீபமா உங்களை வன்மத்தோட திட்டும் சின்ன வயசு ஆண்கள் ஆதாவது உங்க குழந்தை வயசு ஆண்களுக்கு ஒரு போஸ்ட் போட்டீங்க “சாதி, மதம், வர்க்கம், இனம், மொழி, தேசம், பாலின பாகுபாடுகள் எதுவும் இல்லாம எல்லா மனிதர்களையும் சரிசமமா மதிக்கிற மாதிரி வளர்ந்திருக்கிற என் மகன்களை நினைச்சு நான் பெருமைப்படுறேன். உங்க அப்பா அம்மா உங்கள நினைச்சு இப்படி பெருமை படுவாங்களா?” உண்மையாவே ரொம்ப பக்குவமான பதிவு லுலு அது.. எங்கயிருந்து இப்படி ஒரு பக்குவம் வருது உங்களுக்கு?

முந்தைய கேள்விக்கு பதிலா சொல்லியிருக்கிற மாதிரி இதுக்கான பதிலை கண்டிப்பா ஒரு பத்திக்குள்ளயோ ஒரு பக்கத்துக்குள்ளயோ அடைக்கமுடியாது. சுருக்கமா சொல்லணும்னா எல்லாம் வாழ்க்கை கொடுத்த அனுபவங்களும் கொஞ்சூண்டு வாசிப்பறிவும் தான். அது மட்டுமில்லாம என்னோட பெரிய பையன் கென்னி (21) நான் distressல இருந்தப்ப எல்லாம் என்னோட therapistஆ செயல்பட்டு வாழ்க்கையை பத்தி எனக்கு குடுத்த insightsம் நான் இவ்ளோ பக்குவமடைய முக்கிய காரணம்னு சொல்லலாம். உதாரணமா, December 2017ல Australiaவுல ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான சட்டப்படியான அங்கீகாரம் கிடைச்ச சமயத்துல கென்னிக்கும் எனக்கும் இடையேயான ஒரு உரையாடல் தான், நான் homosexualityக்கு ஆதரவான ஒரு பலமான நிலைப்பாட்டை எடுக்க உதவிச்சி. அதுவரை இந்த விஷயத்துல மதில் மேல் பூனையா முழு தெளிவில்லாம தான் நான் சுத்திகிட்டு இருந்தேன். இது மட்டுமில்ல, குழந்தைகளுக்காக, குடும்பத்துக்காகன்னு ஒத்துவராத திருமண வாழ்க்கையில தொடர்வது அர்த்தமற்றது என்கிறதையும் மிகத்தெளிவா புரிய வச்சவன் அவன். இது தான் நான் அவனை குறித்து மிகவும் பெருமைப்படுற விஷயம்.

பெண் உடல் மேல இருக்க இந்த புனிதம் மாறனும். அதற்கு ஒரு ஷாக் treatment வேணும்தான். ஆனா இப்படி வெளிப்படுத்திக்கொள்ளும்போ, மீண்டும் ஒரு அழகியலா ஒரு பெண்ணு தன்னை முன்னிறுத்தி ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கே.  குறிப்பாக இதுக்கு என்ன சொல்லவாறீங்க?

உங்க cleavage செம்மயா இருக்கு, பூப்ஸ் அழகாயிருக்கு, உதடு செம்ம கிக்கா இருக்கு, கண்கள் காந்தமா இழுக்குது, செக்ஸி பிகர் அப்டீன்னெல்லாம் நிறைய ஆண்கள் என் படங்கள்/ வீடியோக்கள்ள கமெண்ட்ஸ் போடுறது வழக்கம். அதையெல்லாம் பார்த்து எந்த சங்கோஜமும் இல்லாம பெருமையா சிரிச்சிட்டே என்னால கடக்க முடியும். ஏன்னா என் உடலை பத்தின எந்த குற்ற உணர்வும் என்கிட்ட இல்ல. சொல்லப்போனா அதை எல்லாம் நான் என்னோட கிரெடிட்ஸா தான் எடுத்துக்கிறது. 47 வயசுலயும் என்னோட உடல் கவர்ச்சியா தான் இருக்கு, ஆண்கள் கவரப்படுறாங்க என்கிற விஷயம் எனக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட் தானே, இல்லியா?

இதனால தான் என்கிட்ட வந்து, “லூலு இந்த மாதிரி செக்ஸியா படம் வீடியோல்லாம் போடாதீங்க, யாராச்சும் misuse பண்ணிருவாங்க” அப்டீன்னு அக்கறையா அட்வைஸ் பண்ணுறவங்கள எல்லாம் பார்த்தா எனக்கு சிரிப்பு வந்திரும். அடேய் கூமுட்டைகளா, என்னோட உடல் என்ன ஒரு பொருளா, எவனாச்சும் use or misuse பண்ணுறதுக்கு? அவன் யூஸ் அல்லது மிஸ்யூஸ் பண்ணுறது என்னோட உடலோட ஒரு டிஜிட்டல் இமேஜை தானே? அப்டி அவன் பண்ணுறதால என்னோட மனசுக்கோ அல்லது என் உடலுக்கோ எதாச்சும் பிரச்சனை வருதா? இல்லீல்ல? அப்பறம் நான் ஏன் கவலைப்படணும்?

மிஞ்சி மிஞ்சி போனா அவன் என்ன பண்ணுவான்? என் படத்தை இல்ல வீடியோவை வச்சி masturbate பண்ணிப்பான், அம்புட்டு தானே? அப்ப கூட அவன் என்னால சந்தோஷம் ஆவுறான்னு தானே அர்த்தம்? சுத்தியிருக்கிறவங்க எல்லாருமே இன்புற்று இருக்கணும்னு நினைக்கிறது தானே என்னோட இயல்பு? அப்ப ஒருத்தன் என் படத்தை உபயோகிச்சி இன்புற்று இருக்கான்னா அதுல என்ன தப்பு? அது எனக்கு கிரெடிட் தானே? – அப்டீங்கிற கேள்விகள் எழும்பி சிரிச்சிட்டே கடந்துருவேன்.

இனி ஒருவேள அவன் என்மேல இருக்கிற தனிப்பட்ட வன்மத்தால என்னோட படத்தை எடுத்து அடல்ட்/ பார்ன் சைட்ஸ்ல போட்டு விடுறான்னு வச்சிக்க. அதனாலயும் எனக்கு என்ன பாதிப்பு வந்துர போவுது? இணையத்துல நாலு பேர் இல்லன்னா 4 லட்சம் பேர் என்னை பத்தி மோசமா பேசுவான். அம்புட்டு தானே? So what? அவன் தப்பா பேசுறது என்னை பெர்சனலா எந்தவிதத்துலயும் பாதிக்கவே போறதில்லியே? என் குடும்பத்தில உள்ளவங்களுக்கு, அதாவது என் பசங்களுக்கு, என்னை பத்தி நல்லாவே தெரியும் என்கிறப்ப, அதாவது, “நம்ம மம்மி அப்டி எதுவும் பண்ணல, அப்டியே எதாச்சும் பண்ணியிருந்தாலும் அது மம்மியோட தனிப்பட்ட விஷயம், அதுல நாம கேள்வி கேக்க எதுவுமே இல்ல” அப்டீன்னு கடந்து போற பக்குவம் என் பசங்க ரெண்டு பேருக்குமே இருக்கிறப்ப,  நான் என்னை சுத்தி இருக்கிற அந்த நாலு லட்சம் பேரோட ஒப்பீனியனை பத்தி ஏன் கவலைப்பட போறேன்? அப்பயும் நாலு லட்சம் பேர் என்னோட உடலோட டிஜிட்டல் இமேஜை பார்க்கிற அளவுக்கு எனக்கு பிரபல்யம் இருக்கு என்கிறதையே நான் என்னோட கிரெடிட்டா தான் எடுத்துப்பேன்.

ஆனா, என்னோட உடலை ஒரு கிரெடிட்டா பார்க்கிற அதே நான் எந்த ஆணோடயாவது (காமப்பகிர்வுக்கு இல்லாம நட்பு ரீதியா மட்டும்னா கூட) நெருக்கமாவணும்னா, அவங்க என்னோட உடலை மட்டும் பார்த்து என்னை அணுகுறவங்களா இருந்தா கண்டிப்பா ரிஜக்ட் பண்ணிருவேன். இதனால தான் என்கிட்ட தனிப்பட்ட மெசேஜ்கள்ளயோ, இல்ல பப்ளிக் கமெண்டுகள்ளயோ வந்து “லூலு உன்னோட படங்கள் சூப்பர், டிக்டாக் வீடியோக்கள் அடிபொளி” அப்டீன்னு பாராட்டுறவங்கள எல்லாம் நான் சட்டை பண்ணுறதே இல்ல. அய்ய ..ச்சி ப்பெ அப்டீன்னு அற்பமா பார்ப்பேன்.

சரி, இதனால நீ சொல்ல வரும் சேதி என்னன்னு தானே கேக்குறீங்க? தன் உடலைக்குறித்த குற்ற உணர்வோடு இங்க உலவும் பெண்களால எப்பயுமே தன்னோட உடலைத்தாண்டி சிந்திக்க முடியிறது இல்ல. இதனால தான் தன்னோட ஒரு அந்தரங்க படம் அல்லது வீடியோ தன்னோட அனுமதி இல்லாம இணையத்துல வெளி வந்துட்டுதுன்னா அத பார்த்து,

“ஆத்தாடி என்னா உடம்பே…

அங்கங்க பச்ச நரம்பே… ”

அப்டீன்னு ஜாலியா பாடிட்டே கடந்து போறத விட்டுட்டு, மிரண்டு போறாங்க. தற்கொலை பண்ணிக்கலாம்னு நினைக்கிறாங்க. கொஞ்சமாச்சும் தன் உடலை பத்தின குற்ற உணர்வை களைந்த அல்லது களைய முயலும் பெண்கள கூட அவங்க குடும்பம் குத்தி குத்தி உணர்வுக்கொலை பண்ணிருது. உண்மைய சொன்னா இது ரொம்ப மோசமான குடும்ப வன்முறை (domestic violence) அப்டீன்னு சொல்லலாம்.

பெண்களோட பிரைவேட் வீடியோக்கள திருடி காசுக்காக கைமாத்துற கழிசடைகளையோ, அவற்றை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு இணைய வக்கிரவாதிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி லைக் பிச்சை எடுக்கும் இணைய உலக சைக்கோக்களையும் எல்லாம் கட்டுப்படுத்துறது நம்மளோட கையில இல்லாம இருக்கலாம். ஆனா நமக்குள்ள இருக்கிற மனத்தடைய உடைச்சி, உடலைக்குறித்த குற்ற உணர்வை விடுத்து, உடலை கடந்து சிந்திக்கிறது எப்டிங்கிற கான்செப்ட்டை புரிஞ்சிகிட்டு, நம்மள பக்குவப்படுத்திக்க முடியுமே நம்மளால?

ஸோ இங்க நாம மாத்த முயற்சிக்க வேண்டியது பொது சமூகத்தோட, குறிப்பா பெண்களோட சிந்தனைய தான். குரல் குடுக்க வேண்டியது “பெண் என்பவளை வெறும் ஒரு உடலா” பார்க்கிற கலாச்சாரத்துக்கு எதிரா தான். கண்டிக்க வேண்டியது இதனால ஏற்படுற குடும்ப வன்முறைகள தான். அதுக்கு பெண்கள “நீ இப்டியெல்லாம் படம் போடாத, வீடியோ போடாத!” அப்டீன்னு சொல்லி அடக்குறத விட்டுட்டு, “அந்த மாதிரி படங்களோ வீடியோவோ பார்த்தா உனக்கு பிடிக்கலன்னா கடந்து போ” அப்டீன்னு சொல்லி இளைய தலைமுறையினரை பழக்கணும். அப்டி கடக்காம வன்மமா வக்கிரமா தாக்குறவங்கள இணையத்துல மட்டுமில்லாம realityயிலயும் ஒரேயடியா ப்ளாக் பண்ணிட்டு கடந்து போகிற மாதிரி பெண்கள பக்குவப்படுத்தணும். அவங்க குடும்பங்கள இதெல்லாம் தப்பே இல்லன்னு கன்வின்ஸ் பண்ணணும். இதுக்காக தான் நான்லாம் இவ்ளோ தெனாவெட்டா பப்ளிக்கா nudes போட தயங்காததும், அப்டி போட்டு ஷாக் treatment குடுக்கிற பெண்களை முழுமையா சப்போர்ட் பண்ணுறதும்.

 ( இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியாகும்)

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Facebook and insta celebrity interview exclusive lulu deva jamla g