ஆயிரம் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் தமிழிசை சௌந்தரராஜன் சிகரம் தொட்ட கதை இது

ஆயிரம் எதிர்குரல்கள், மோசமான மீம் சித்தகரிப்புகள் என்பதையும் தாண்டி தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக இன்று அவர் உயர்ந்து வருகிறார்.

By: Updated: June 2, 2019, 03:16:17 PM

Happy Birthday Tamilisai Soundararajan : பாஜகவிற்கான தமிழ் முகம் என்பதிற்கு பதிலாக தமிழகத்திற்கான பாஜக முகம் என்று தான் நிச்சயம் தமிழிசை சௌந்தரராஜனை நாம் குறிப்பிட முடியும். அரசியல் வாரிசுகளாக உச்ச பதவிகளை வகிக்கும் எத்தனையோ நபர்களிடம் இல்லாத கம்பீரமும் தெளிவும், சரியான தமிழ் உச்சரிப்பும் கூட ஒரு வகையில் தமிழிசை சௌந்தரராஜனை நேசிக்க காரணமாக அமைந்துவிடுகிறது.

பாஜகவினர் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இங்கு எதிர் வடிவம் கிளம்பும் போதும் தாக்குதலுக்கு முதலில் ஆளாவது தமிழக பாஜக தலைவர் தான். ஆனாலும் அத்தனை எதிர்ப்புகளையும் தன்னுடைய புன்னகையால் கடந்துவிடக் கூடிய தலைவராகவும், மக்களால் எளிதில் அணுகக் கூடிய அளவிற்கு ஒரு தலைவராகவும் நீடித்து நிற்கின்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

யாரிந்த தமிழிசை சௌந்தரராஜன்?

தென் தமிழகத்தில் யாரைக் கேட்டாலும் குமரி அனந்தன் யார் என்று சொல்லிவிடுவார்கள்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமரி மங்கலம் பகுதியில் பிறந்தவர் அனந்த கிருஷ்ணன். குமரி மங்கலம் அனந்த கிருஷ்ணன் என்று வழங்கப்பட்டவர் பின்னாளில் குமரி அனந்தனாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சி கொள்கை மேல் இருந்த தீராத பற்றால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக 1977ல் தேர்வு செய்யப்பட்டார். பனை மரத்தினை பாதுகாப்பது குறித்தும், நதிகள் இணைப்பு குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திய இவருடைய நான்கு மகள்களில் ஒருவர் தான் தமிழிசை .

அப்பா காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த போதிலும் மகள் பாஜகவினை தேர்வு செய்துள்ளார். இவருடைய சித்தப்பாவும் தற்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரும் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறார்.

சமீபமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, நீங்கள் பாஜகவில் இணைந்த போது உங்கள் அப்பாவின் கருத்து என்னவாக இருந்தது? என்று கேள்வி எழுப்பினார்கள்.  என் அப்பா என்னிடம் அன்று பேசவே இல்லை என்று பதில் கூறியிருந்தார் தமிழிசை.

வாரிசு அரசியலுக்கு நோ சொன்ன குமரி அனந்தன்… பாஜகவில் இணைந்த தமிழிசை சௌந்தரராஜன்

1961 ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்த இவர், சென்னை மருத்துக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். கல்லூரியில் சேர்ந்த ஒரே வருடத்தில் அதே கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மூத்த மாணவர் சௌந்தரராஜனை மணம் முடித்துக் கொண்டார் தமிழிசை.  குமரி அனந்தன் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியையும், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரையும் அழைத்திருந்தார். அடுத்த நாள் தமிழகம் எங்கும் தலைப்புச் செய்தி ஆனவர் தமிழிசை சௌந்தரராஜன்.

மருத்துவப்பட்டம் முடித்த பிறகு டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பினையும், பின்னர் கனடாவில் ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்தார் தமிழிசை.

ஆரம்ப காலம் முதலே தன் தந்தை போன்ற நல்ல பேச்சாற்றலைக் கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவம் படித்தாலும், அரசியல் கொள்கைகள், செயல்பாடுகளில் அதிக நாட்டம் காட்டினார். இருப்பினும் குமரி அனந்தனோ நான் உயிருடன் இருக்கும் வரை என்னுடைய குடும்பத்தில் இருந்து ஒருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படமாட்டார்கள் என்று உறுதியாக உரக்க கூறியவர், தமிழிசையின் ஆசைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனாலும் தந்தையின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவி புரிந்து வந்தார். தனியார் தொலைக்காட்சி மற்றும் தூர்தசனில் தன்னுடைய பேச்சாற்றல் காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

1996 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தந்தைக்கு உதவி செய்ய பிரச்சார வேலைகளில் ஈடுபட்ட தமிழிசைக்கு, பாஜகவினர் செய்து வந்த பிரச்சார வியூகம் பிடித்திருந்தது. பிரதமர் வாஜ்பாயின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் ஒரு நாள் பாஜகவிலும் இணைந்தார். கிட்டத்தட்ட 7 மாதங்கள் வரை தன்னுடைய தந்தை தன்னிடம் பேசவில்லை என்பதன் வருத்தம் இன்றும் அவர் மனதில் இருக்கிறது.

அரசியல் பிரவேசம் மற்றும் தமிழகத்தின் பாஜக தலைவர்

வாஜ்பாய் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த நேரத்தில் பாஜகவில் இணைந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் அடிப்படை தொண்டர் என்ற நிலையில் இருந்து தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டார். அதிகாரப்பூரவப் பேச்சாளராக வலம் வந்த அவர் ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் தன்னுடைய திறமையையும், பாஜகவின் மீது வைத்திருந்த பற்றினையும் நிரூபித்துக் கொண்டே சென்றார். பின்னர் அவர் பாஜக மாவட்ட மருத்துவ அணி, மாநில மருத்துவ அணி,  பாஜக மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்று வளர்ச்சி அடைந்தார். 15 வருடங்களில் தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர், அகில இந்திய செயலாளர் என்று தன்னை உயர்த்திக் கொண்டார்.

2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாஜக தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் அன்றைய தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். அவர் அங்கு வெற்றி பெற, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிராமண பின்புலம் இல்லாத,  அதே போன்று குறைந்த ஆண்டுகளே அரசியல் அனுபவம் கொண்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு அந்த பொறுப்பினை வழங்கியது டெல்லி தலைமை.

மேலும் படிக்க : கனிமொழி Vs தமிழிசை : கருத்து சுதந்திரம் பற்றி பேச யாருக்கு உரிமையுண்டு ?

தேர்தல் களத்தில் தமிழிசை சௌந்தரராஜன்

தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றிய தமிழிசை சௌந்தரராஜனுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன.

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராமாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 5ம் இடத்தை பெற்றார்.

2009 நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை பாஜக வேட்பாளராக நியமிக்கப்பட்டார். தா. பாண்டியன், இளங்கோவன் என்று பெரிய தலைகள் மத்தியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக மாநிலங்களவை எம்.பியாக இருந்த கனிமொழிக்கு எதிராக களம் இறக்கப்பட்டார். அதிலும் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.

இருப்பினும் தமிழக மக்களுக்கான தன்னுடைய அரசியல் பணி என்றும் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

சர்ச்சைகளை மீறியும் நிலைத்து நிற்கும் ஒரு பெண் அரசியல்வாதி

சில நேரங்களில் கருத்துகள் கூறுகின்றேன் என்று தலைவர்கள் பற்றி எதிர்கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இதற்கு கருத்துகள் சொல்கின்றேன் என்று ஒரு சாரர் தமிழிசையை வசை பாடுவதும், ட்விட்டர், ஃபேஸ்புக் என்று இணைய தளங்களில் அவரை வசை பாடுவதையும், கார்ட்டூன் சித்திரங்கள் மூலமாக சிகை அலங்காரத்தினை கேலி செய்வது என்றும் அனைத்துவிதமான எதிர்வினைகளையும் செய்தனர். இருப்பினும் அனைத்தையும் தைரியமாக சந்திக்கும் திறம் கொண்டவராக இன்றும் பலராலும் அறியப்படுகின்றார் பாஜக தமிழகத் தலைவர்.

ஸ்மிரிதி இராணி கடந்த முறை தேர்தலில் தோற்ற போதும் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது, தேர்தலில் போட்டியே இடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையில் இணைந்தவர்களும் உண்டு. இம்முறை அப்படியேனும் தமிழிசைக்கு அமைச்சரவையில் தமிழக முகமாக ஒரு இடம் கிடைத்திருக்கலாம் என்று பலரும் ஆதங்கப்படுவதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

தேர்தல் களங்களில் ஒருவர் பலமுறை தோல்விகளைத் தழுவினாலும், ஒரு பெண்ணாக, ஆண்களின் ஆதிக்கம் மிக அதிமாக இருக்கும் ஒரு களத்தில் தனித்து நின்று களமாடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Happy birthday tamilisai soundararajan the history and the rise of bjp chief tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X