Advertisment

பரவும் பசுப் பாதுகாப்பு வன்முறை

தமிழக முதல்வரோ தமிழக அரசைச் சேர்ந்த வேறு யாருமோ இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை ஒன்றும் பேசவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பரவும் பசுப் பாதுகாப்பு வன்முறை

கண்ணன்

Advertisment

சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆய்வு மாணவர் சூரஜ் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சூரஜின் நண்பர்கள் கூறியுள்ளனர்

மத்திய பாஜக அரசு கால்நடைகள் விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் இறைச்சிக்காக விற்கக் கூடாது என்ற புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது. இது மாட்டிறைச்சி உண்ணுதல் மீதான தடையல்ல என்ற பாஜக அரசும் அதன் ஆதரவாளர்களும் சொன்னாலும் இந்த விதிகள் நடைமுறையில் மாட்டிறைச்சி உணவு மீதான கடுமையான தடையாகவே அது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதை எதிர்த்து கேரளாவில் பல இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஐஐடி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் என்ற அமைப்பைச் சேர்ந்த மாணாக்கர்கள் திங்கட்கிழமை அன்று மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை நடத்தினர். இதில் பங்கேற்ற சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலும் பரவும் பசுப் பாதுகாவலர்கள்

மாட்டிறைச்சி உணவு உண்டதற்காகவும் மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டதற்காகவும் வட மாநிலங்களில் பலர் தாக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் பசுப் பாதுகாவலர்களால் முகமது அக்லக் என்பவர் கொல்லப்பட்டார். பசுப் பாதுகாப்பை முக்கிய அரசியல் செயல்திட்டமாகக் கொண்டுள்ள பாஜக அரசின் பிரதமர் நரேந்திர மோடியேகூட இந்தப் பசுப் பாதுகாவலர்களின் வன்முறை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் முதல் முறையாக தென்னகத்தில், அதுவும் தமிழகத்தில் மாட்டிறைச்சி உணவு உண்டதற்காக ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முதல் மோதல் அல்ல

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கும் ஏபிவிபி அமைப்புக்கும் இடையில் மோதல் ஏற்படுவது இது முதல் முறையல்ல. 2015ல் பிரதமர் நரேந்திர மோடி மீதான வெறுப்பைத் தூண்டுகிறார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்குப் புகாரளித்ததை அடுத்து ஐஐடி சென்னையின் அ.பெ.ப.படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டது. இந்தத் தடை நாடெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் நாடெங்கும் உள்ள ஐஐடி வளாகங்களிலும் இதர கல்வி நிறுவனங்களிலும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கப்படக் காரணமாக அமைந்தது.

தாக்கப்பட்ட மாணவர் கேரள மாநிலத்தின் மலப்புரத்தைச் சேர்ந்தவர். கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தத் தாக்குதலை வன்மையகக் கண்டித்துள்ளார். தமிழக முதல்வரிடம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகச் சொல்லியுள்ளார்.

ஆனால் தமிழக முதல்வரோ தமிழக அரசைச் சேர்ந்த வேறு யாருமோ இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை ஒன்றும் பேசவில்லை. இந்தத் தாக்குதல் பற்றிக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் மாட்டிறைச்சி உண்ணத் தடையில்லை, போராட்டமும் ஐஐடி நிர்வாகத்தின் அனுமதியுடனே நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே இந்த விஷயத்தில் சூரஜ் மீது எந்தத் தவறும் இருப்பதற்கான முகாந்திரம் இல்லை.

போரில் உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டத்தை, தடையை மீறி நடத்த முயன்ற திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தமிழக அரசு மாட்டிறைச்சி உண்டவரைக் கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை மாநிலமே கவனித்துக்கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் சூரஜ் மீதான தாக்குதலும் தமிழக அரசின் மவுனமும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. தமிழக பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பு சூரஜ் மீதான தாக்குதலை எதிர்த்து சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஏபிவிபி அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தப் போவதாக த.பெ.தி.க அறிவித்துள்ளது.

Sooraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment