இளையராஜா என்கிற இசை மேதையின் பிறந்த நாள் இன்று. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வில் பிறப்பு, தாலாட்டு, காதணி விழா, பூப்பு, காதல், காமம், காதல் தோல்வி, துயரம், மகிழ்ச்சி, கோபம், கல்யாணம், ஆன்மீகம், இறப்பு, கருமாதி என எல்லா நிகழ்வுகளிலும் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலித்து அவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறார் இளையராஜா.
இசை ஞானி இளையராஜா பண்ணைபுரம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இன்று உலக இசை மேதைகளில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். இளையராஜாவின் இசை பயணம் ஒரு நதியைப் போன்றது. அவர் பண்ணைபுரத்தில் தொடங்கி அன்னக்கிளியில் பிரவாகம் கொண்டு பிரபஞ்சத்தின் பேரிசையை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறார்.
இளையராஜாவின் 77வது பிறந்தநாளில் முன்பு எப்போதையும் விட இப்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழைகளைப் பொழிந்து வருகின்றனர். இதுதான் ஒரு கலைஞனின் மிகப்பெரிய வெற்றி. சினிமாவில் மூன்று தலைமுறை சக இசையமைப்பாளர்கள் உடன் இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் 1000 படங்களுக்கு 5000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, மிகபெரிய தளமான சினிமாகூட அவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சினிமா இசை மட்டுமல்லாமல், சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படியெல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்.
தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் அவனுடைய வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத தருணத்தை நினைவூட்டி நினைவில் பந்திருந்திருக்கும். அந்த பாடல் முனுமுனுக்கும்போது அது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். தமிழ் சமூகத்தின் அடையாளமாக இளையராஜா உருவாகியிருக்கிறார். இளையராஜா ஒரு தமிழகத்தின் அடையாளம் மட்டுமல்ல இந்திய இசையின் உலக இசையின் அடையாளம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இசை மேதை. அவரை எந்த இலக்கணங்களைக் கொண்டும் அளவுகோல்களைக் கொண்டு அளவிடுவது என்பது அளவிடுபவர்கள் தங்களைத் தாங்களே அளவிட்டுக்கொள்கிறார்களே தவிர இளையராஜாவை அளவிட முடிவதில்லை.