வரலாற்றில் எப்போதும் தனிமனிதர்களின் ஆளுமை செல்வாக்கு தவிர்க்க முடியாதது. அந்த வகையில் தமிழக நவீன அரசியல் வரலாற்றில் கால் நூற்றாண்டுக்கு மேல் தனது ஆளுமை மூலம் எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து தன்னிரகரற்ற தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா. அவர் மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டு புகழின் உச்சியில் இருக்கும்போதே மறைந்துபோனார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட கட்சிகளின் ஆட்சியில் அதிக காலம் அதிமுகவே தமிழகத்தை ஆட்சி செய்துள்ளது. அதிலும் அதிமுகவில் ஜெயலலிதா அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
எல்லா துறைகளையும் போல அரசியல் துறையும் ஆணாதிக்கத்துக்கு விதிவிலக்கல்ல. பல துறைகளில் ஆண் பெண் சமத்துவம் அல்லது பங்களிப்பு ஏற்பட்டுள்ள அளவுக்கு இன்னும் அரசியலில் அந்தளவுக்கு பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் சமத்துவமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
இயல்பாகவே திராவிட கட்சிகளின் தொடக்கம் ஆண்களின் ஆதிக்கம் நிறைந்ததாகவே இருந்தது. இப்போதும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அதிலும், திராவிட இயக்கத்துக்கு அல்லது திராவிட கட்சிகளுக்கு வெளியே இருந்து வந்த ஜெயலலிதா அதிமுகவின் ஏகத் தலைமையாக இருந்து கிட்டத்தட்ட 3 தசாப்தங்கள் கட்சியை கட்டுக்கோப்பாக வழிநடத்தினார். ஒரு கட்சியில் யார் எந்த நிலையில் இருந்தும் தலைமையின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் யார் வேண்டுமானாலும் உயர் பதவிகளுக்கு செல்ல முடியும்; உயர்மட்டத்தில் இருக்கும் யாரும் எதிராக செயல்பட்டால் அதள பாதாளத்திற்கு தள்ளும் நடவடிக்கை பாயும் என்று கடுமையான தலைவராக இருந்தார்.
ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஆண் தலைவர்களை தனது ஆளுமையால் ஆதிக்கம் செய்தார். மார்க்கரெட் தாட்சர், இந்திரா காந்தி, மாயாவதி வரிசையில் ஜெயலலிதா இரும்புப் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். பிராமணர் அல்லாதோர் அரசியல் திரட்சியாக உருவான திராவிட இயக்கங்களும் திமுகவும் ஜெயலலிதாவை பிராமணர் என்று முத்திரை குத்தி அவரை இயக்கத்தின் கொள்கை ரீதியாக வெளியே நிற்கவைக்க முயன்றாலும் அவர், இட ஒதுக்கீடு, மாநிலங்களின் உரிமை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற பல முற்போக்கான விஷயங்களில் திராவிட கட்சி தலைவியாகவே நடந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி பிரமுகர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் மக்களிடம் அரசியல் அடாவடிகளில் ஈடுபடாமல் பார்த்துக்கொண்டார்.
ஜெயலலிதா எப்போதும் மக்கள்மய அரசியல் நடைமுறைகளைச் சார்ந்து முடிவெடுப்பவராக இருந்தார். திமுகவின் முக்கிய தலைவர்கள் தொடக்கத்தில் இந்து மதம் குறித்து கடுமையாக விமர்சித்து மக்களின் ஆண்மீகப் பண்பாட்டில் பட்டும்படாமலும் விலகி நின்றாலும் எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதா மக்களின் தெய்வ நம்பிக்கை சமய நம்பிக்கையை பின்பற்றுபவராகவும் அதனை அங்கீகரிப்பவராகவும் இருந்தார். இதன் மூலம் மத அடிப்படையில் வேறு எந்த அரசியல் சக்திகளும் மக்களைக் கவர முடியாமல் செய்தார்.
அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் திமுக தலைவர் கருணாநிதியின் பல வியூகங்களை உடைத்து அவருக்கு நிகரான சாணக்கியத்தனம் உள்ளவர் என்று பல சந்தர்ப்பங்களில் தன்னை நிருவிக் காட்டியவர் ஜெயலலிதா.
தாளிக்கு தங்கம் திருமண நிதியுதவி திட்டம், முத்துலட்சுமி மகப்பேறு நிதிஉதவித் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழக்கும் திட்டம் என பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றார்.
ஜெயலலிதா எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அதிமுகவில் சில தலைவர்கள் அவரை வசைபாடியது உண்டு. அதே போல, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அவருக்கு கடுமையாக அதிமுகவின் அடுத்த கட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது உண்டு. இதையெல்லாம் கடந்து ஜெயலலிதா தனது ஆளுமையால், அரசு நிர்வாகத்தால், தன்னை ஒட்டுமொத்த தமிழக மக்களே அம்மா என்று அழைக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டார்.
அதனாலேயே ஜெயலலிதாவை விமர்சனம் செய்த எதிர்க்கட்சியினர் கூட அவருடைய தைரியத்தைப் பாராட்டும் வகையில் அவரை இரும்புப் பெண்மணி என்பதை ஏற்றுக்கொள்வர். இதை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி. கனிமொழி அண்மையில் கேரளாவில் நடந்த இலக்கிய விழாவில் ஜெயலலிதாவைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், “ஜெயலலிதாவுடன் எங்களுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவரது நிர்வாக முறையில் நாங்கள் உடன்படவில்லை. ஆனால், அவர் குறைந்தபட்சம் மாநில உரிமைகளை நம்பினார்.அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும் மறைந்த முதல்வர் மீது நான் எப்போதும் மரியாதை வைத்திருப்பேன். துரதிருஷ்டவசமாக, ஜெயலலிதாவுடன் தொடர்பு கொள்ள எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்திருந்தால் நான் அவரை விரும்பியிருப்பேன்” என்று கூறினார்.
இன்றைக்கு கட்சி சார்பு இன்றி திராவிட கட்சிகளின் அரசியலை மதிப்பிடும் சில ஆய்வாளர்கள், ஜெயலலிதா திராவிட இயக்கத்தின் அரசியல் தலைவராகவே அரசியல் செய்தார் என்று மதிப்பிடுகின்றனர். அவர் மக்கள்மய அரசியல் நடைமுறை சார்ந்து அரசியல் முடிவெடுப்பவர் என்பதாலேயே இன்றும் சிஏஏ போராட்டங்களிலும், அதிமுக தலைவர்கள் சிலர் வரம்புமீறி பேசும்போதும் அல்லது எதிர்க்கட்சியினர் வரம்புமீறி பேசும்போதும் யாராவது ஒருவர் முனுமுனுக்கவே செய்கிறார்கள் “அம்மா இருந்திருந்தால் இதெல்லாம் இப்படி நடக்குமா...” இதுவே ஜெயலலிதா மக்களின் மனங்களில் வாழ்வதற்கான சான்று. ஜெயலலிதாவைக் கண்டு மாற்றுக் கருத்தாளர்களும் மாற்றுக் கட்சியினரும் உள்ளூர வியந்தார்கள் என்றால் அது மிகையல்ல. இன்று ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளில் அவர் மறைந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவருடைய இடத்தை நிரப்ப முடியாமல் இன்னும் காலம் எடுத்துக்கொண்டுவருகிறது.