கலைஞர் கருணாநிதி ஒரு காலம்; காய்தலும் உவத்தலும்

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்து இரண்டாண்டுகள் கடந்த நிலையில் அவருடைய 97வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய அரசியல் பயணத்தின் தொடக்கமும் முடிவும் வியப்புக்குரியதுதான். அரசியலில் செயல்படுபவர்களுக்கு எல்லாம் அவர் ஒரு அரசியல் அகராதியாக விளங்குகிறார்.

By: Updated: June 3, 2020, 08:32:43 PM

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்து இரண்டாண்டுகள் கடந்த நிலையில் அவருடைய 97வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய அரசியல் பயணத்தின் தொடக்கமும் முடிவும் வியப்புக்குரியதுதான். அரசியலில் செயல்படுபவர்களுக்கு எல்லாம் அவர் ஒரு அரசியல் அகராதியாக விளங்குகிறார்.

மறைந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அவர்களை வாழ்த்துவதும் புகழ்வதும் என்பது சடங்கு என்பதாக அமையாமல், இந்த கட்டுரை கருணாநிதியின் அரசியல் பயணத்தையும் சாதனைகளையும் அவர் மீதான விமர்சனங்களையும் மதிப்பிடுகிறது.

நதியில் விழுகிற எல்லா மழைத்துளிகளும் சமுத்திரத்தை அடைவதில்லை என்றாலும் சமுத்திரத்தில் சேர்கிற துளிகள் எல்லாம் மழைத்துளியாக விழுந்தபோது இருந்த அதே தன்மையுடன் கடைசி வரை அப்படியே சென்று சேர்வதில்லை. மழைத்துளியின் பயணம் மட்டுமல்ல மனிதர்களின் பயணமும் அப்படியே அமைகிறது.

சில நேரங்களில், சிலர் காலத்தில் தனக்கான இடத்தை தனக்கான துறையை தேர்வு செய்கின்றனர். சில நேரங்களில் காலம்தனக்கான மனிதர்களைத் தேர்வு செய்கிறது. இதில் இரண்டு வகையையும் சேர்ந்தவர் கலைஞர் கருணாநிதி.

கருணாநிதியைப் பற்றி விவாதிக்கும்போதெல்லாம், அவருடைய சமூகப் பின்னணி பற்றி தவறாமல் பேசப்படுவது உண்டு. அவருடைய சமூகப் பின்னணி பற்றிய பொதுச் சமூகத்தின் இழிவான பார்வையை விலக்கி தன்னை உலகத் தமிழர்களின் தலைவராக நிறுவிக்கொண்டார். அதற்காக, அவர் எல்லா வகையிலும் செயல்பட்டார்.

தன்னை நோக்கி வரும் விமர்சன அம்புகளை எப்படி முனை மழுங்கடிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அடிமட்ட தொண்டனாக இருந்து ஒரு கட்சியின் தலைவராக உயர்ந்தவர் என்பதால் அவரிடம் அரசியல் அதிரடியும் அரசியல் முதிர்ச்சியும் சேர்ந்தே இருந்தது. அதை எப்போது யாரிடம் எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்பதை அறிந்தே இருந்தார்.

1968-இல் முதல்வரானபோதே அவர் தன்னுடைய வரலாற்றுக் கனவுகளை எல்லாம் நிஜமாக்கிவிட வேண்டும் என்று உறுதி பூண்டுவிட்டார். சாதியால் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைக்க பொது அடையாளங்களை உருவாக்கிவிட வேண்டும் என்று லட்சியம் கொண்டார். அதற்காக சிலப்பதிகார தலைவர் கண்ணகிக்கு சிலை எடுத்தார். உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவருக்கு சிலை எடுத்தார். அதே நேரத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற தேர்தல் அரசியலில் சாதிகளை  கையாள்வதிலும் தேர்ந்திருந்தார். இது முரணாகத்தான் உள்ளது.

கருணாநிதி முதல்வர் பதவி, பிரதமர் பதவி, ஜனாதிபதி பதவியைவிட அவர் நேசித்த என்றைக்கும் இழக்க விரும்பாத ஒர் பதவி உண்டென்றால் அது உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர் என்பதுதான். இலங்கை போருக்குப் பிறகு விமர்சனங்கள் வந்தபோது உண்மையில் அப்போது அவர் மிகவும் உள்ளுக்குள் துடித்துதான் போனார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது, பல சாதனை திட்டங்களை செய்துள்ளார். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். கலைஞரின் ஆட்சியில்தான் அதிகப்படியான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவர் அறிவித்த 1 ரூபாய்க்கு 1 ரேஷன் அரிசி, பின்னர் அது ஜெயலலிதா ஆட்சியில் இலவச ரேஷன் அரிசி என்பது உண்மையில் பல பட்டினி சாவுகளை தடுத்துள்ளது என்றே கூறலாம். கலைஞர் அறிவித்த இலவச கேஸ் சிலிண்டர் விறகுகளுக்காக காடுகள் அழிப்பை தடுத்து நிறுத்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதி வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்வதில் மிகவும் பிரக்ஞை பூர்வமாக செயல்பட்டுள்ளார்.  தன்னை விமர்சித்தவர்களாக இருந்தாலும் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் எல்லா ஆளுமைகளுக்கு நிச்சயம் கலைஞரால் திறக்கப்பட்ட ஏதேனும் ஒரு சிலை இருக்கும். அவரால் பெயரிடப்பட்ட ஏதேனும் ஒரு சாலை இருக்கும். நிகழ்காலத்தைவிட வரலாற்றில் வாழ வேண்டும் என்ற ஆசை கலைஞர் கருணாநிதியின் லட்சியமாக இருந்தது. அதனால்தான் வரலாறாகக் கூடிய எழுத்து, நாடகம், பத்திரிகை, சினிமா, கலை அரசியல் என எல்லாவற்றிலும் செயல்பட்டார்.

கலைஞர் அரசியலை ஒரு தேர்ந்த சதுரங்க ஆட்டக்காரனைப் போல விளையாடினார். இதில் பாராட்டுகளும் விமர்சனங்களும் சரிசமமாகவே காணப்படுகிறது. அந்த சூழலில் யார் விளையாடி இருந்தாலும் அப்படித்தான் விளையாடி இருப்பார்கள். கலைஞரை விமர்சித்தவர்கள் பலரும் அவரை ஒருமுறை நேரில் பார்த்து பேசிய பிறகு தங்களை அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக்கொண்டுள்ளனர். அல்லது அந்த விமர்சனத்தின் கடுமையை குறைத்துக்கொண்டுள்ளனர்.

கருணாநிதி தனது வாரிசுகளைப் பற்றி சிந்தித்தது உண்டு. ஆனால், தான் உயிரோடிருந்த வரை அரசியல் வாரிசு பற்றி சிந்தித்தது இல்லை. ஏனென்றால், அவர் அரசியல் வாரிசுகளை அடையாளம் காட்ட வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை அறிந்தவர். காலத்தில் அவர்களாகவே வெளிப்படுவார்கள் என்பது தெரியும்.

ஜனநாயகத்தில் ஒரு தலைவரின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம்; கேள்வி எழுப்பலாம், ஆனால், வரலாற்றில் அவருக்கான இடத்தை யாராலும் பறித்துவிட முடியாது. கலைஞர் மறைந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. அவருடைய 97வது பிறந்த நாளில் வாழ்த்தும் வசையும் விமர்சனமும் பாராட்டும் சரிசமமாகவே பொழியப்படுகிறது.

முடியாட்சியில் பேரரசுகளின் வீழ்ச்சிக்கு அவர்களின் பலவீனமும் எதிரியின் பலமும் காரணம் என்பதைப் போல, ஜனநாயகத்திலும் அரசியல் கட்சிகளின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவர்களின் பலமும் பலவீனமும் எதிர்க்கட்சிகளின் பலமும் பலவீனமும்தான் காரணமாக உள்ளது.

இன்று திமுக சமூக ஊடகங்களில் எந்தளவுக்கு பலமாக இருக்கிறதோ அதே அளவுக்கு திமுகவுக்கு எதிர் கருத்து கொண்டவர்களின் தரப்பும் பலமாகவே உள்ளனர். அவை ஒரு உதிரித் தன்மை கொண்டவையாக உள்ளன. அதனாலேயே, கலைஞர் பிறந்த நாளிலும் அவர் மீதான விமர்சனங்களை நாகரிகம் இல்லாமல் ஈவு இரக்கமில்லாமல் வீசப்படுகிறது.  கருணாநிதியின் உண்மயான விமர்சகர்கள் அவரை எப்போதும் இழிவுபடுத்துவதில்லை. அவர்களிடம் விமர்சனம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், வெறுப்பை உமிழும் உதிரி எதிரிகளோ அவரின் வரலாற்றுப் பாத்திரத்தை இழிவுபடுத்திவிட வேண்டும் என்று முயல்கின்றனர். வரலாற்றை தனிமனிதர்களோ, ஒரு இயக்கமோ, கட்சியோ, உதிரிகளோ அவர்கள் விரும்புகிறபடி தனியாக அவர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது. வரலாற்றை காலம் எழுதிக்கொண்டிருக்கிறது. அதில் கலைஞரை மட்டுமல்ல எவர் ஒருவரையும் இழிவுபடுத்தி இல்லையென்றாக்கிவிட முடியாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Kalaignar karunanidhi birthday celebration dmk leader m karunanidhi 97th birthday

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X