தமிழக அரசியல் வரலாற்றிலும் இந்திய தேசிய அரசியல் வரலாற்றிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கியவர் கலைஞர் மு. கருணாநிதி. அடுத்த ஆண்டு கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு, அவர் தலைவராக இருந்த கட்சி இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. அவருடைய மகன் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார்.
பொதுவாக மனிதர்கள் என்றாலே நிறைகளும் குறைகளும் கலந்தே இருக்கும். அதிலும், அரசியல் தலைவர் என்றால் அந்த நிறை குறைகள் அனைவரும் பொதுவெளியில் சுட்டிக்காட்டி புகழவோ, இகழவோ செய்யும்படியாக இருக்கும். அதனால்தான், பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால், மான ரோஷம் பார்க்கக்கூடாது என்றார் தந்தை பெரியார். விமர்சனங்களை, வசைகளைத் தாண்டி பணி செய்வதுதான் முக்கியம். ஆனால், தமிழக அரசியலில் கலைஞர் மு. கருணாநிதியைப் போல இழிவுபடுத்தப்பட்ட தலைவர் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், அவர்தான் தமிழ்ச் சமூகத்தை சாதி, மதம், பேதம் இல்லாத தமிழ் இனமாக ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாக வருகிற கனவைக் கண்டார்.
வெறுப்பு ஒரு தொற்று நோய்போல வேகமாக பரவிக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல் சூழலில், கலைஞர் கருணாநிதியின் 99வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய எந்தெந்த பண்புகள் இன்றைக்கும் என்றைக்கும் தேவையானது என்ற கேள்வி எழுப்பும்போது நிறையவே இருக்கிறது.
நவீன இந்திய அரசியல் வரலாற்றில், தமிழ்நாடு ஒரு வகை மாதிரியான அரசியல் போக்கை கொண்டிருந்தது. அந்த போக்கு என்பது மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டிருந்தது. அந்த தனித்துவமான போக்கை கலைஞர் கருணாநிதி தான் இருந்தவரை முன்னெடுத்துச் சென்றார். அவருடைய இந்த பிறந்தநாளில் இன்றைக்கும் தேவையான அவருடைய தனிச் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.
நவீன அரசியல் என்பது பாராளுமன்ற அரசியல், மக்கள் கருத்தை உருவாக்க பொதுக்கூட்டங்களில் அல்லது மக்களைத் திரட்ட மேடைப் பேச்சு என்ற பிரச்சார வடிவம் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக வளர்ந்தது. தமிழக அரசியலில் அண்ணாவுக்கு பிறகு அவரின் தொடர்ச்சியாக கலைஞர் மு. கருணாநிதி இருந்தார். பேச்சு, எழுத்து, அரசியல், சினிமா என்று தொண்டர்களை கவர்ந்தார். அந்த தொடர்ச்சி இன்றை திமுக தலைமையில் மட்டுமல்ல அரசியலிலும் குறைவுபட்டிருக்கிறது.
வடக்கைவிட தெற்கு முற்போக்கானது என்பது ஒரு ஒப்பீடாக இருக்கலாமே தவிர, சமயம் வாய்க்கும்போதெல்லாம், வடக்கும் தெற்கும் பிற்போக்கில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை நிரூபித்துவிடுவார்கள். ஆனால், கலைஞர் கருணாநிதி தமிழக அரசியலில் முற்போக்கு முகமாக கலைஞர் தன்னை வைத்துக்கொள்ள விரும்பினார்.
சாதி, மதம், மொழி, இனம் என்று பிரிந்து கிடந்த மக்களை ஒன்றிணைக்க, ஒரு தமிழ்மொழி என்ற பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒரு லட்சிய கனவு கண்டார். திருக்குறளும் திருவள்ளுவரும் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள் என்று முன்னிறுத்தினார். இந்திய தேசியத்துக்கு மகாபாரதமும் ராமாயணமும் தேசிய காவியங்கள் என்றால், தமிழக மக்கள் அனைவருக்குமான காப்பியமாக சிலப்பதிகாரத்தை முன்னிறுத்தினார். கண்ணகிக்கு சிலை வடித்தார். திருவள்ளுவருக்கு குமரியில் 133 அடியில் சிலை அமைத்தார். அவர் தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் சாதி, மதம் பேதம் இல்லாத தமிழ், தமிழர் என்ற ஒரு அடையாளத்தைக் கொடுக்க விரும்பினார். ஆனால், தேர்தல் அரசியலில், அதை வைத்துதான் அரசியல் கணக்குகளைப் போட வேண்டியுள்ளது என்ற நெருக்கடியையும் அவர் அறிந்திருந்தார்.
ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களை, தமிழ், தமிழர் என்ற பொது அடையாளத்தில் வைத்து கனவு காணக்கூடிய வெகுமக்கள் தலைவர்கள் இல்லை என்பது துரதிருஷ்டமான ஒன்று.
கலைஞர் கருணாநிதியிடம் இருந்த ஒரு முக்கிய பண்பு, அடித்தட்டில் எழுந்து வரும் அரசியல் குரல்களை, கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்பவராகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார். அதற்கான, புகழை ஏகபோகமாக வரித்துக்கொள்ளவும் செய்தார். புகழெனின் உயிரையும் கொடுப்பர் என்ற புறநாணூற்று பாடலுக்கு இலக்கணமாக இருந்தார். ஆனால், இன்று அடித்தட்டில் இருந்து எழுந்து வரும் குரல்களை அவரளவுக்கு இன்று காதுகொடுத்து கேட்கும் ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் இல்லை என்பது வேதனையானதுதான்.
எந்த ஒரு கட்சியும் கொள்கைகளைக் கைவிட விரும்புவதில்லை, ஆனால், அவற்றை கைவிட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டாலும், அந்த கொள்கையை நீர்த்துப்போன வடிவிலாவது கதகதப்பாக வைத்துக்கொண்டிருந்தால் மட்டுமே, மக்கள் மத்தியில் அந்த கட்சியின் தேவையும் செல்வாக்கும் இருக்கும். பெரியார், அண்ணா கோரிய திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது, அண்ணா அதை மாநில சுயாட்சி என்ற கோரிக்கையில் உள்ளடக்கமாக வைத்தார். கலைஞர் கருணாநிதி அண்ணாவின் அந்த குரலை மாநில சுயாட்சியை தொடர்ந்து பேசி உயிர்ப்புடன் அழைத்துக்கொண்டு வந்தார். திமுக இன்றைக்கும் அதை தொடர்கிறது. ஆனால், அந்த தீவிரம் இப்போதும் உள்ளதா என்பது ஐயம்தான்.
ஜெயலலிதாவும் மாநில உரிமைகள் பற்றி பேசினார். ஆனால், அவருடைய குரல், அண்ணாவின் திராவிட நாடு, மாநில சுயாட்சி என்பதன் தொடர்ச்சி அல்ல. அது ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்கக் முடியாது என்பதன் வெளிப்பாடுதான். ஆனால், கலைஞர் கருணாநிதி அண்ணாவின் தொடர்ச்சியாக இருந்தார். இப்போது, பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் தொடர்ச்சி என்று யாரையாவது உறுதியாக சொல்லிவிட முடியுமா என்பது ஐயமாகத்தான் உள்ளது.
கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினார். சென்னையில் மேம்பாலங்கள், அண்ணா பல்கலைக்கழகம், கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில், எல்காட், புதிய தலைமைச் செயலகம் என பலவற்றை தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வந்தார். சென்னையில் குடிசை மாற்று வாரியங்கள் மூலம் எளிய மக்களுக்கு வீடுகளைக் கட்டினார்.
விவசாயத்துக்கு இலவச மின்சாரம், ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு படி அரசி என்ற அண்ணாவின் உறுதிமொழியை 1 ரூபாய்கு ஒரு கிலோ அரசி என்று நடைமுறைப்படுத்தினார். ஜெயலலிதா போட்டிபோட்டுக்கொண்டு விலையில்லாமல் கொடுத்தார்.
உண்மையில், 1 ரூபாய்க்கு அரிசி, இலவச அரிசி என்பது பல ஏழை குடும்பங்களின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு போகத்துக்கு 30 - 40 மூட்டை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் கூட குடும்பத் தேவை, குடும்ப பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக விளைந்த நெல்களை விற்றுவிட்டு, ரேஷன் அரிசியை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் என்பது துயரம்தான். அத்தகைய மக்களை உயிர்வாழ வைத்துக்கொண்டிருப்பது இலவச அரிசி திட்டம்தான்.
இவை எல்லாவற்றையும்விட, கலைஞர் மு.கருணாநிதி ஒரு எளிய சமூக பின்புலத்தில் இருந்து வந்து ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். தமிழக அரசியலில் ஒருவர் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அவர் கலைஞரைத்தான் பேச முடியும் வேறு யாரையும் பேச முடியாது என்ற ஆளுமை மிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் அரசியல் விமர்சனங்கள், கருத்து மாச்சரியங்களைக் கடந்து தனது அரசியல் எதிரிகளிடமும் உரையாடினார்.
கலைஞர் மு. கருணாநிதி பல வகைகளில் தமிழகத்தின் தனித்துவமான அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாகவும் மையமாகவும் இருந்து வந்தார். அண்ணாவின் வழியில் பேச்சாலும் எழுத்தாலும் மக்களை ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி. அந்த குணம் யாரிடம் இருந்தாலும் அவர்களை தட்டிக்கொடுத்தார் கருணாநிதி. ஆனால், அவர்களின் தொடர்ச்சியில் பயணிக்க விரும்பும் தலைவர்களின் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது என்பது துரதிருஷ்டம்தான்.
கலைஞர் மு. கருணாநிதிக்கு தானும் ஒரு எழுத்தாளன், பத்திரிகையாளன் என்பதால் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மீது மதிப்பு இருந்தது. அதனால், அவர் எழுத்தாளர்களுடன் பத்திரிகையாளர்களுடன் இணக்கமாகவே இருந்தார். தமிழின் நவீன எழுத்து மொழி அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டாலும், ஒரு அரசியல்வாதிகா இருந்துகொண்டு அவரால் எழுத முடிந்த வரை, கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்தார். எழுத்தாளர்கள் பலரும் ஒட்டுமொத்த மொழியின் ஓட்டத்தில் ஓட முடியாமல் பின் தங்கி எழுதுவதை நிறுத்திவிடுகிற சூழலில், கலைஞர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
ஒரு புகழ்பெற்ற தலைவரைப் போல இன்னொரு தலைவர் உருவாவதில்லை. அப்படியே ஒரு தலைவர் உருவானாலும், அவருக்கு கலைஞருக்கு வாய்த்தது போல, நீண்ட ஆயுளும் நீண்ட செயல்பாடும், உழைக்கும் மனமும் வேறு எந்த தலைவருக்கும் வாய்க்குமா என்பது ஐயம்தான். கலைஞர் மு. கருணாநிதியின் இந்த பண்புகள் நேற்று இன்றும் நாளையும் என்றும் தேவை என்றே கூறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.