தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். வரலாற்றில் தனிமனித ஆளுமைகளின் பங்களிப்பை யாராலும் நிராகரிக்க முடியாது. அந்த வகையில் தமிழக, இந்திய அரசியல் வரலாற்றிலும் கருணாநிதியின் பங்களிப்பை மறுக்க முடியாது.
இந்திய அரசியல் வரலாற்றில், பெரும் அரசியல் தலைவர்கள் பலரும் அரசியல்வாதி என்ற அடையாளத்தைதாண்டி நல்ல பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கியுள்ளனர். நேரு, காந்தி, அம்பேத்கர் போன்றவர்கள் தாங்கள் ஒரு அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கியுள்ளனர்.
தமிழகத்திலும், ராஜாஜி அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் எழுத்தாளராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அதே போல, அண்ணா தன்னை அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், நாடகங்களை எழுதி நடிப்பவராகவும் இருந்தார். அன்றைய காலகட்டத்தில் பத்திரிகை, நாடகம் மற்றும் சினிமாவை தனது பிரசார கருவியாகப் பயன்படுத்திக்கொண்ட திமுக, அதன் மூலமாக வெகுஜனங்களை கவர்ந்து விரைவிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது வரலாறு.
அன்றைய திமுகவின் தலைவர்கள் பலரும் நல்ல பேச்சாளர்களாகவும் எழுதுபவர்களாகவும், இருந்துள்ளனர். அந்த வகையில்தான், திமுகவின் தலைவர்கள் அறிஞர், நாவலர், பேராசிரியர், புலவர், கவிஞர் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனர்.அந்த காலகட்டத்தில், அந்த மரபில் தலைவராக உருவான கருணாநிதி தன்னை ஒரு அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் பத்திரிகை ஆசிரியராகவும், சினிமா திரைக்கதை ஆசிரியராகவும், சினிமா பாடல் ஆசிரியராகவும், புனைகதை எழுதுபவராகவும், பழந்தமிழ் இலக்கியத்தில் பாண்டித்யம் உள்ளவராகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். அவருடைய எழுத்துகள், படைப்புகள் மீதான விமர்சனங்கள் இருந்தபோதிலும், (அந்த விமர்சனங்கள் அவருக்கே தெரிந்திருக்கும்) அவர் முதலமைச்சர் ஆன பிறகும் இப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் விருப்பமுடன் தொடர்ந்து செயல்பட்டார். அதனாலேயே, மற்றவர்கள் தன்னை கலைஞர் என்று அழைப்பதில் அவர் பெருமை கொண்டார். அதே போல, அவர் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மதிக்கவே செய்தார்.
அவர் முதலமைச்சராக இருந்தபோதும், திமுகவின் நீண்ட கால தலைவராக இருந்தபோதும், அவர் நினைத்திருந்தால் வேலைப்பளு காரணமாக இப்படி எழுதுவதை கைவிட்டிருக்கலாம் ஆனால் அதை அவர் செய்யவில்லை. தொடர்ந்து எழுதினார். தமிழ் எழுத்து மொழி எப்படி பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறது என்பது தெரிந்திருந்தாலும் அவர் தான் பழகிய மொழியில் ஓயாமல் எழுதிக்கொண்டிருந்தார். திமுக தொண்டர்களுகான முரசொலி கடிதம், கவிதை, கதை, திரைக்கதை என்று தன்னால் செயல்பட முடிந்த காலம்வரை எழுதிக்கொண்டே இருந்தார்.
அதனால், திமுகவில் கவிஞர்களும், எழுத்தாளர்களும் இடம்பெற்றனர். கருணாநிதி அவர்களுக்கான அங்கீகாரத்தை அளித்தார். கவிஞர்கள், எழுத்தாளர்கள் திமுகவில் சேர்வை அவர் வரவேற்றார். இதனாலேயே, அவரை விமர்சித்த எழுத்தாளர்கள் கூட அவர் அங்கீகரிக்கும்போது அவருடைய நட்பை விரும்பவே செய்துள்ளனர்.
கருணாநிதி தன்னை திமுகவின் தலைவர், தமிழக முதலமைச்சர், அரசியல் சாணக்கியர் என்று நிறுவிக்கொண்ட அதே அளவுக்கு அவர் உலகத் தமிழினத் தலைவராகவும், முத்தமிழ் அறிஞராகவும் நிறுவிக்கொள்வதில் அவர் பேராவல் கொண்டிருந்தார். அதை தனக்கான வாய்ப்புகள் மூலம் அதை சாத்தியப்படுத்திக்கொண்டார்.
அத்தகைய மரபின் தொடர்ச்சியாகத்தான் திமுகவில் இன்றும் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், மேடைப் பேச்சாளர்களும் காணப்படுகின்றன. பொறுப்புகளையும் வகித்துவருகின்றனர். அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், என்ற பன்முக ஆளுமைகொண்ட அறிஞர் அண்ணா, அதே போல, எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் என பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆகியோர் திமுகவின் தலைவராக அணி செய்திருக்கின்றனர். அப்படி, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போல அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் திமுகவுக்கும் தமிழகத்துக்கும் ஒரு தலைமை மீண்டும் வருமா என்பது காலத்தின் கைகளில்தான் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.