தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு!

தன்னுடைய முதல் டெல்லி பயணத்திலேயே கவனத்தை ஈர்த்தவர்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி, தமிழகத்துக்கு மட்டுமல்ல… இந்தியாவுக்கே பல விஷயங்களில் வழிகாட்டியாக ( karunanidhi in national politics ) இருந்துள்ளார். அரசியல்ரீதியாக மட்டும் அல்ல, நிர்வாகரீதியாகவும் வழிகாட்டியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒன்று.

தேசிய அரசியலில் கருனாநிதி

1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுகவும் இடம் பெற்றது. 2001ம் ஆண்டு அதிமுக அரசால் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, போலீசாரால் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாக்கப்பட்டார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் இலாகா இல்லாத அமைச்சராக அவர் இருந்து, இறந்து போனார்.

ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட கருணாநிதி, மாறன் ஆகியோர் அதிமுக ஆட்சி மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். ஆனால் வாஜ்பாய் அதை செய்யவில்லை. இதனால் திமுக அதிருப்தியில் இருந்தது. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைக்க, மாநில கட்சிகள் தயங்கி வந்தன. அகில இந்திய அளவில் தமிழகத்தில் இருந்து திமுகதான் முதன் முதலில் கூட்டணியை அறிவித்தது. அதன் பின்னரே மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி உருவானது.

karunanidhi in national politics

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கருணாநிதி

காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கூட்டணி அமைய கருணாநிதிதான் காரணமாக இருந்தார். இதனாலேயே சோனியாவுக்கு கருணாநிதி மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. இந்த கூட்டணி பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான், ‘சொக்கத்தங்கம் சோனியா’ என்று கருணாநிதி சோனியாவை அழைத்தார்.

இது மட்டுமல்ல… கருணாநிதியின் 81 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 1969ம் ஆண்டு அவரால் மறக்க முடியாது. ஆம்… அந்த ஆண்டில்தான் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். முதல்வராக பதவி ஏற்றதும் டெல்லி சென்றவர் இந்தியா முழுவதும் அறிந்த ஹீரோவாக திரும்பி வந்தார்.

ஆம்… முதல்வர் பதவி ஏற்றதும் மத்திய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயை சந்தித்தார். அப்போது, ‘தமிழக வறட்சியைப் போக்க ரூ.5 கோடி நிதி வேண்டும்’ என்று கேட்டார்.

‘‘என் தோட்டத்தில் பணம் காய்க்கும் மரம் இல்லையே’’ என்று கோபமாக பதில் சொல்லியிருக்கிறார், நிதி அமைச்சர்.

‘‘பணம் காய்க்கிற மரமே இல்லையே… இல்லாதது எப்படி உங்கள் தோட்டத்தில் இருக்கும்’’ என்று அதே வேகத்தில் பதில் சொல்லியிருக்கிறார், கருணாநிதி.

நிதி அமைச்சர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த கருணாநிதி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

மாநில சுயாட்சி

அப்போது, ‘‘மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்லுறவு வளர அதிக அதிகாரங்கள் வழப்பட வேண்டியது அவசியம். மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

‘‘அவற்றை மாநில அரசுக்குப் பகிர்ந்து கொடுத்தால், மத்திய அரசின் சுமை குறையும். மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் கிடைக்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

‘‘எந்தெந்த அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரலாமென்று ஆலோசித்துப் பரிந்துரைக்கும் அறிக்கை தந்திட, கல்வி நிபுணர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைப்பதென்று தமிழகத்தில் கழக அரசு முடிவு செய்துள்ளது.

‘‘அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்மென்று நாங்கள் வலியுறுத்தும் போது இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பலமாக இருக்க வேண்டுமென்பதையும் கருத்தில் கொண்டுதான் சொல்கிறோம்.

‘‘அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்கு அளிப்பதால், ஒற்றுமை பாதிக்கப்பட்டுவிடாது. நட்பு முறையிலேயே இந்த பிரச்னை திர்ப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்.’’ என்றார்.

டெல்லியில் சொன்னதோடு நின்றுவிடாமல், நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து மத்திய மாநில அரசுகளுக்கான உறவை ஆரய அமைத்தார்.

இன்று மாநில சுயாட்சியின் தத்துவம் அங்கிங்கெனாதபடி எங்கும் அரசியலில் எதிரொலித்து நிற்கிறது என்றால், அந்த கொள்கைகளுக்கு அகில இந்திய அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் கருணாநிதிதான்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் முடிவை பிரதமராக இருந்த இந்திரா எடுக்க காரணமாக இருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.

வங்கிகள் தேசிய மயம்

பிரதமர் இந்திரா காந்தியின் ’வங்கிகள் தேசிய மயம்’ திட்டத்துக்கு அடிகோலியது கருணாநிதிதான்.

டெல்லியில் நடந்த பிரதமர், மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் (20.4.69) பேசிய கருணாநிதி, ‘‘வங்கிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்தார். ‘‘இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

அன்றைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய், ‘‘வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், சொர்க்கத்தையே இங்கே கொண்டு வந்துவிடலாம் என நினைப்பது தவறு’’ என்று ஏளனம் செய்தார்.

ஆனால் முதல்வர் கருணாநிதியின் கருத்தை ஏற்று அன்றைய பிரதமர் இந்திராகாந்தி ஏற்றுக் கொண்டு 14 வங்கிகளை தேசிய மயமாக்கினார்.

அதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் கருணாநிதி, பிரதமர் இந்திராவை சென்னைக்கு அழைத்துப் பாராட்டுவிழா எடுத்து 14 பொருட்கள் பரிசாக கொடுத்தார்.

இதோடு கருணாநிதி நின்றுவிடவில்லை. ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார்.

ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். ஆனால் மாநிலங்களில் இந்த இரண்டு நாட்களிலும் ஆளுநரே கொடியேற்றுவார். இது நியாயமா?

பிரதமரைப் போலவே முதல்வர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். ஏன் பிரதமருக்கு இருக்கிற அந்த வாய்ப்பு மாநில முதல்வர்களுக்கும் வழங்கக் கூடாது என்று முதன் முதலாக குரல் கொடுத்தவர் கருணாநிதிதான்.

அதோடு நின்றுவிடாமல், அனைத்து மாநில முதல்வர்களும் ஆகஸ்டு 15ம் தேதி தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.

மே தினத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று முதன் முதலில் அறிவித்தவர் கருணாநிதிதான். கம்யூனிஸ்டுகள் அளும் மாநிலங்களில் கூட இப்படியொரு அறிவிப்பை செய்யவில்லை.

மே தின விடுமுறை

தமிழகத்தில் அறிவித்த திட்டத்தை இந்தியா முழுவதும் அறிவிக்க வைத்ததும் கருணாநிதிதான். வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மே தினத்தை இந்தியா முழுவதும் சம்பளத்தோடு கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க வைத்தார்.

கருணாநிதியின் சாதனைகள் அதோடு முடிந்துவிடவில்லை. 1969 மே மாதம் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ஜாகீர் உசேன் மரணம் அடைந்தார். அப்போது பிரதமர் இந்திரா காந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.

மூத்த தலைவர்கள் அனைவரும் துணை ஜனாதிபதியாக இருந்த விவி.கிரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சொன்னார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டியை குடியரசு தலைவர் பதவிக்கு அறிவித்தனர்.

வி.வி.கிரி தானும் போட்டியிடுவேன் என களத்தில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் குழப்பம். எதிர்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கருணாநிதியை டெல்லிக்கு அழைத்தார்கள், மாசானியும் நாத்பாயும், துவேதியும், பி.ராமமூர்த்தியும். கருணாநிதியோடு பல்வேறு மாநில கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது எடுத்த முடிவை கருணாநிதி டெல்லியில் அறிவிக்கக் கூடாது. சென்னையில்தான் அறிவிக்க வேண்டும் என்று முடிவானது. அதன்படி கருணாநிதி ஜூலை 26ம் தேதி, ‘‘வி.வி.கிரியை ஆதரிப்போம்’’ என்று கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி வி.வி.கிரியே குடியரசு தலைவரானார். வி.வி.கிரிக்காக குடியரசு தலைவர் மாளிகையின் பிரமாண்டமான கதவு கோபாலப்புரத்தில் இருந்து திறந்து வைத்தவர் கருணாநிதி.

1982ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் கருணாநிதியின் பங்கு முக்கியமானது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினார்.

கியானி ஜெயில் சிங்

ஆர்.வெங்கட்ராமன், நரசிம்மராவ், வி.பி.சிங் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. கருணாநிதியோ, ‘பிரதமரான நீங்களும் உயர் சாதி. நீங்கள் பரிந்துரைக்கும் 3 பேரும் உயர் சாதியினர். பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கியான ஜெயில் சிங்யை அறிவிக்கலாம்’’ என்றார்.

கருணாநிதி சிபாரிசு செய்ததாலேயே கியானி ஜெயில் சிங் ஜனாதிபதியானார்.

இதோடு அவரின் தேசிய பணி முடிந்துவிடவில்லை. ராஜிவ் காந்தியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், பிரதமராக உறுதுணையாக இருந்தார்.

ஐ.கே.குஜரால், தேவகவுடா பிரதமராகவும் கருணாநிதியே காரணமாக இருந்தார் என்பது வரலாறு.

ஒரு மாநில கட்சியின் தலைவர், ஒரு மாநில முதல்வர் என்ற நிலையில் நின்றாலும், அகில இந்தியப் பிரச்னையை, இந்தியக் குடிமகன் என்கின்ற நிலையில் அனுகி, அகில இந்திய கட்சித் தலைவர்களுக்கே தலைவராக விளங்கியவர்தான், திமுக தலைவர் கருணாநிதி.

ச.கோசல்ராம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close