ரஜினி ‘எஃபெக்ட்’ : மெகா அணிக்காக இறங்கி வரும் ஸ்டாலின்

ரஜினி தனி அணி அமைத்தால், இடதுசாரிகள், திருமா, வைகோ என அத்தனை பேரும் ரஜினியுடன் கைகோர்க்க போய்விடுவார்கள். பா.ஜ.க., ரஜினி, ஓ.பி.எஸ். என ஒரு அணி...

மறுபடியும் மெகா அணியை நோக்கி வியூகத்தை மாற்றியிருக்கிறார், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். சமீப நாட்களாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் மீது அவர் வெளிப்படுத்தும் பாச அணுகுமுறையே இதற்கு சாட்சி!

கடந்த ஏப்ரலில் விவசாயிகள் பிரச்னையை முன்வைத்து, இப்படியொரு அனைத்துக்கட்சி ஒருங்கிணைப்பை ஸ்டாலின் செய்தார். அதீத தயக்கங்களுக்கு பிறகு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஸ்டாலினுடன் மைலாப்பூரில் ஒரே மேடையில் காட்சி கொடுத்தார்கள். அப்போது இந்த ஒற்றுமைக்கு துணை நின்றவர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்! இந்த அணியை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கும் ஸ்டாலின் எடுத்துச் செல்வார் என்றே அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜூன் 3-ல் நடைபெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, அந்த எதிர்பார்ப்பை தகர்த்தது. காரணம், முக்கியத்துவம் வாய்ந்த அந்த விழாவில் அகில இந்தியத் தலைவர்களை மட்டும் மேடையேற்றுவது என ஸ்டாலின் எடுத்த முடிவு விடுதலை சிறுத்தைகளை வெறுப்பேற்றியது. ‘போராட்டங்களுக்கு மட்டுமே தி.மு.க. எங்களைத் தேடும்’ என்கிற ரீதியில் அப்போது ‘கமெண்ட்’ கொடுத்தார் திருமாவளவன். கருணாநிதியுடன் உளப்பூர்வ அன்பும் மரியாதையுமாக பழகிய தனக்கு அந்த விழாவில் இடமில்லை என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தி.மு.க.வினருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. ‘தி.மு.க. நம்பத் தகுந்த கட்சி அல்ல’ என சிறுத்தைகளும், ‘சிறுத்தைகளை சேர்த்தால் ஜெயிக்க முடியாது’ என தி.மு.க.வினரும் பரஸ்பரம் விமர்சித்தார்கள். அப்போது ஸ்டாலின் சின்னதாக ஒரு கண் ஜாடை காட்டியிருந்தால்கூட இணையதள தி.மு.க.வினர் அடங்கிப் போயிருப்பார்கள். ஏனோ ஸ்டாலின் அதை செய்யவில்லை.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான ஓரிரு போராட்டங்களில் இந்தக் கட்சிகள் கைகோர்த்தபோதும், பெரிதாக ஒருங்கிணைப்பு இல்லை. தமிழக ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பான புகாரை ஜூன் 14-ம் தேதி சட்டமன்றத்தில் எழுப்பிய ஸ்டாலினை, சபைக் காவலர்கள் வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் எதிரே மறியல் நடத்தி கைதானார் ஸ்டாலின். அன்று மாலை வரை சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினை, காங்கிரஸை தவிர்த்து வேறு பிரதான எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை.

அதேபோல கடந்த 27-ம் தேதி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தி.மு.க.வினரால் தூர் வாரப்பட்ட குளத்தை பார்வையிடச் சென்ற ஸ்டாலினை கோவையில் போலீஸார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு முதல் ஆளாக கண்டனக் குரல் எழுப்பியவர், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். ஆனாலும் கோவையில் போலீஸ் காவலில் இருந்த ஸ்டாலினை குறிப்பிடத்தக்க அளவில் எதிர்கட்சித் தலைவர்கள் யாரும் சென்று சந்திக்கவில்லை.

இந்தச் சூழலில்தான் கடந்த 28-ம் தேதி நீட் விவகாரத்திற்காக சென்னையில் மறியல் நடத்திய ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, வடசென்னையில் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தார். யாரும் எதிர்பாராதவிதமாக ஸ்டாலின் அங்கு சென்று ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்தார். ஸ்டாலினின் இந்த அணுகுமுறை இடதுசாரிகளுக்கே மகா ஆச்சர்யம்! அங்கேயே ஜி.ஆர். கைதைக் கண்டித்தும், அ.தி.மு.க. அரசைத் தாக்கியும் காரசாரமாக பேட்டியும் கொடுத்தார் ஸ்டாலின்.

இதற்கு அடுத்த நாளே இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. தி.மு.க.வின் நிரந்தர கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலனின் தாயார் நினைவு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடந்தது. இதில் ஸ்டாலினுடன் கலந்துகொண்ட மற்றொரு வி.ஐ.பி. திருமாவளவன். இந்த விழாவில் ஆளும்கட்சியை திருமாவளவன் பெரிதாக விமர்சிக்காவிட்டாலும், ‘தமிழகத்தில் மாற்றம் வேண்டும்’ என ஒரு வரியை சொன்னார். அடுத்து பேசிய ஸ்டாலின் இதையே பிடித்துக்கொண்டவராக, ‘மாற்றம் வரவேண்டுமென்றால், திருமாவளவன் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்’ என தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். தி.மு.க. அணியில் சிறுத்தைகள் இடம்பெற வேண்டும் என்கிற வெளிப்படையான அழைப்பாகவே இதை அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் திருமாவளவனுக்கே இந்த அழைப்பில் முழு நம்பிக்கை வரவில்லைபோல! காரணம், ஸ்டாலினுடன் அவருக்கு கடந்தகால அனுபவங்கள் அப்படி! எனவே ஸ்டாலினின் அழைப்பு குறித்து கேட்ட நிருபர்களிடம், ‘தி.மு.க.வுடன் இணைந்து போராட்டங்களை நடத்துவதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்பவே முடிவெடுப்போம்’ என 29-ம் தேதி பேட்டியளித்தார் திருமா. தங்கள் செயல் தலைவரின் வெளிப்படையான அழைப்புக்கு திருமா இப்படி ‘ரீயாக்ட்’ செய்தது தி.மு.க.வினருக்கு ஷாக்! இதுவே இப்போது மறுபடியும் முகநூலில் தி.மு.க. – சிறுத்தைகள் இடையே மோதலாக நகர ஆரம்பித்திருக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும், மெகா அணியை நோக்கிய ஸ்டாலினின் அணுகுமுறை ஒரு முக்கிய மாற்றம்தான். இதில் அழுத்தமாக குறிப்பிடவேண்டிய இன்னொரு அம்சம், வைகோ மீது ஸ்டாலின் காட்ட ஆரம்பித்திருக்கும் சாஃப்ட் கார்னர்! கடந்த ஜூன் 8-ம் தேதி உரிய விசா அனுமதியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மலேசியா சென்றிருந்த வைகோவை, அந்த நாட்டு குடியுரிமை அதிகாரிகள் விமானநிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. மணிக்கணக்கில் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டு திரும்பி வந்தார் வைகோ.

அப்போது அந்த நடவடிக்கையைக் கண்டித்து, அடுத்த நாளே ஸ்டாலின் அறிக்கை விட்டார். அது பெரிய விஷயமில்லை. அந்த அறிக்கையில் 3 இடங்களில், ‘அண்ணன் வைகோ’ என குறிப்பிட்டார் ஸ்டாலின். அதன்பிறகு ஸ்டாலின் மீதான ‘அட்டாக்’கை வைகோவும் வெகுவாக குறைத்தார். கருணாநிதியின் வைரவிழாவுக்கு முன்பு நிருபர்களிடம் பேசியபோது, அந்த விழாவுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்தார். கடந்த 27-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. மனித சங்கிலி நடத்தியபோது, ‘இந்த நீட் கொடுமைக்கு காரணமே முந்தைய காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி மத்திய அரசுதான்’ என வைகோ முழங்கவில்லை. மாறாக, ‘மாணவர்களுக்காக தி.மு.க.வினர் போராடுவது வரவேற்கத்தக்கது’என்றார் வைகோ.

ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் அணி அமைக்க தயாராகிவிட்டது. கடந்த 27-ம் தேதி நடந்த தி.மு.க.வின் மனித சங்கிலிக்கு முதலில் ஆதரவு கொடுத்தவரே முத்தரசன்தான்! ஆக, எந்த மக்கள் நலக் கூட்டணியால் 2016 பொதுத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு தடுக்கப்பட்டதாக வசை பாடினார்களோ, அதே மக்கள் நலக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் இப்போது ஸ்டாலினின் பாசப் பிடிக்குள் வர ஆரம்பித்துவிட்டன. இதில் எஞ்சியிருப்பது, தே.மு.தி.க.! விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவாக இல்லாததால், அவர் குறித்து ஸ்டாலின் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தக் கட்சிகள் போக, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட தி.மு.க.வின் வழக்கமான கூட்டணி கட்சிகளும் ‘வெயிட்டிங்’கில் இருக்கின்றன.

ஸ்டாலினின் இந்த திடீர் ‘மூவ்’வுக்கு இரண்டு காரணங்களை குறிப்பிடுகிறார்கள்.

காரணம் ஒன்று, நடிகர் ரஜினிகாந்த்! அரசியலுக்கு வர இருப்பதை ஓரளவு சூசகமாக சொன்ன ரஜினி, தனியாகவா? பா.ஜ.க.வுடன் இணைந்தா? என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை பா.ஜ.கவுடன் சேராமல் ரஜினி தனி அணி அமைத்தால், இடதுசாரிகள், திருமா, வைகோ என அத்தனை பேரும் ரஜினியுடன் கைகோர்க்க போய்விடுவார்கள். இதற்கான ஆயத்தப் பணிகளை செய்ய தமிழருவி மணியன் தயாராக இருக்கிறார். ஒருவேளை பா.ஜ.க., ரஜினி, ஓ.பி.எஸ். என ஒரு அணி அமைந்தாலும், அதை எதிர்க்க தி.மு.க.வுக்கு அணி தேவை!

இன்னொன்று, தமிழ்த் தேசியவாதிகளின் ஆர்ப்பரிப்பு! தூய தமிழ் தேசியம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமானை இதுநாள் வரை மற்ற கட்சிகள் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அண்மையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விவசாயிகளுக்காக நடந்த போராட்டங்களில் இடதுசாரிகள், வேல்முருகன், திருமா ஆகியோருடன் சீமானும் கலந்துகொண்டார். சில கொள்கை மாறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழர் நலனுக்காக போராடும் கட்சிகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வரும் முயற்சியில் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் ஈடுபட்டிருக்கிறார். தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் சீமான் ஆகியோருடன் இது தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையை அவர் நடத்தியிருப்பதாக கூறுகிறார்கள். இந்த மாற்று அணி வலுப்பெற்றால், 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி செய்த வேலையை இது செய்துவிடக் கூடும் என்கிற கவலையும் ஸ்டாலினுக்கு வந்திருக்கலாம்.

இப்போது எத்தனை வியூகங்களை வகுத்தாலும், தொகுதி பங்கீடு முடிகிற வரை எந்தக் கூட்டணியும் உறுதியில்லை என்பதும் நிதர்சனம்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close