Advertisment

மெர்சல் - பாஜக கொதிப்பது ஏன்?

மெர்சல் படத்தில் 30 செகண்ட் இடம்பெற்றுள்ள வசனத்தைக் கொண்டு தமிழக பாஜக தலைவர்கள் ஏன் கொதிக்கிறார்கள் என்பதை அண்ணாவின் வாசகம் மூலம் விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mersal - vijay - bjp

இரா.குமார்

Advertisment

மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி பற்றி விஜய் பேசும் வசனத்தை பாஜகவினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ”அந்த வசனத்தை நீக்கு இல்லையேல் வழக்கு தொடர்வேன்” என்று மிரட்டுகிறார் தமிழக பாஜ தலைவர் தமிழிசை.

பாஜவினர் கொந்தளிக்கும் அளவுக்கு அப்படி என்ன வசனம் அது? “8 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ள சிங்கப்பூர் அரசு, மருத்துவ சிகிச்சையை இலவசமா கொடுக்குது. 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் நம்ம அரசால் கொடுக்க முடியாதா?” என்று கேட்கும் வசனம்தான் அது.

நியாயமான கேள்விதானே. ”மருத்துவ சிகிச்சை இலவசம் என்பதே தவறு; புரியாமல் பேசுகிறார் விஜய்.

அவருக்கு அறிவிருக்கா?” என்று கொதிக்கின்றனர் பாஜகவினர்.

யோசித்துப் பார்த்தால் யாருக்கு அறிவில்லை என்பது புரியும். ஏதோ மேடையில் மைக்கைப் பிடித்து, பாஜக அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பேசிவிட்டதாக, அவர் மீது பாஜகவினர் விழுந்து பிராண்டுகிறார்கள். அந்த வசனத்துக்குச் சொந்தக்காரர் விஜய் இல்லையே. வசனகர்த்தா எழுதுகிறார். இயக்குனர் ஓகே செய்கிறார். அதைப் பேசி விஜய் நடிக்கிறார். அவ்வளவுதானே. இதற்கு விஜய் மீது பாய்வானேன். அரசுக்கு எதிரான வசனத்தைப் பேசி நடிக்கமாட்டேன் என்று விஜய் மறுத்திருக்கலாம். ஆனால், அரசை விமர்சித்து ஒரு வரி பேசக் கூடாதா? கருத்து சுதந்திரம் இல்லையா? இருக்கிறது. பேசலாம். நாம் வாழ்வது மக்களாட்சி நாடு. கருத்து சொல்ல நம் அரசியல் சாசனம் நமக்கு உரிமை கொடுத்துள்ளது. ஆனால், பாஜகவினர், அதெப்படி நீ கருத்து சொல்லலாம் என்று பாய்கின்றனர்.

ஹெச். ராஜா, ஒருபடி மேலே போய், மத ரீதியாகப் பேசுகிறார். “நடிகர் ஜோசப் விஜய்” என்று சொல்கிறார். விஷயம் புரிந்துவிட்டதா? ”ஜோசப் விஜய்” என்று அழுத்திச் சொல்லக் காரணம் என்ன? அதற்கு என்ன அவசியம் வந்தது? மதக் கலவரத்துக்கான விஷ விதையைத் தூவுகிறார் ராஜா. விஜய் என்பதாலேயே, அவர் இப்படி ஒரு வசனம் பேசுவதை இவர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. இதே வசனத்தை ரஜினி பேசியிருந்தால் இப்படிப் பாய்வார்களா? .பாயமாட்டார்கள்.

இன்னொரு கோணத்திலும் இதைப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கடுமையாக விமர்சிக்கின்றன. அதையெல்லாம் பாஜகவினர் தாங்கிக்கொள்கின்றனர். பதில் சொல்வதோடு சரி. வழக்கு போடுவேன் என்று மிரட்டுவதில்லை. கடுமையாக விமர்சித்து எழுதும் பத்திரிகைகளை மிரட்டுவதில்லை. ஒரு திரைப்படத்தில் வரும் 30 வினாடி வசனத்துக்கு இவ்வளவு ரீயாக்‌ஷன் ஏன்? பாஜகவின் ஒட்டுமொத்த தமிழக தலைவர்களும் விஜய் மீது பாய்வது ஏன்? அதுதான் திரைப்படத்தின் சக்தி.

எந்த ஒரு கருத்தையும், மேடை போட்டு பேசுவதை விடவும், நூலாக எழுதி வெளியிடுவதை விடவும், பத்திரிகைகளில் எழுதுவதை விடவும், அதே கருத்தை சினிமாவில் சொல்லும்போது அதற்கு வலிமை அதிகம். பாமர மக்களுக்கும் அந்தக் கருத்து போய்ச் சேருகிறது.

அண்ணா ஒருமுறை சொன்னார். “சென்சார் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால், ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்” என்றார் அண்ணா. திரைப் படங்கள் மூலம் தங்கள் கொள்கையைச் சொல்லித்தான் திமுக வளர்ந்தது. மற்ற எல்லா ஊடகங்களை விடவும் திரைப்பட ஊடகம் மிகவும் வலிமையானது. காரணம் அது பாமரனுக்கும் கொண்டு சேர்க்கிறது. இரண்டாவது, பார்ப்பவரை இருட்டில் உட்கார வைத்துப் பேசுகிறது சினிமா. இருட்டில் இருப்பதால், அவனது கவனம் முழுவதும் 100 சதவீதமும் சினிமாவின் மீதே இருக்கிறது. இதனால், சினிமாவில் சொல்வது, அவன் மனத்தில் ஆழப்பதிகிற்து. அதனால்தான் சினிமா என்பது வலிமையான ஊடகம். அப்படி ஒரு வலிமையான ஊடகத்தை அரசை விமர்சிக்கப் பயன்படுத்தியுள்ளார் விஜய். அதனால்தான் பாஜகவினர் மிரண்டு போய் கொதிக்கின்றனர்.

Bjp Actor Vijay Mersal Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment