Advertisment

ரஜினி ஏன் எம். ஜி. ஆர் ஆக முடியாது?

MGR - Rajini Political narrative: 'உட்சபட்ச நட்சத்திரம்' மொழிவாரி மாநிலங்களில் சாத்தியமானது/தவிர்க்க முடியாதது/இன்றியமையாதது

author-image
salan raj
New Update
ரஜினி ஏன் எம். ஜி. ஆர் ஆக முடியாது?

Rajinikanth and MGR Politics:  தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் கட்சித் தொடங்க உள்ளதாக அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் தெரிவித்தார்.

Advertisment

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பரப்புரையில்,"எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்" என்று பெருமிதப் பட்டார்.

அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம். ஜி. ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வளர்ச்சியில் சினிமா பெறும் பங்கு வகித்தது. விஜயகாந்த், சரத் குமார், கருணாஸ், நவரச நாயகன் கார்த்திக் போன்ற அடுத்தக்கட்ட தென்னிந்திய நடிகர்களையும் அரசியல் கண்டறிந்தது.

ஜனநாயக எதார்த்தத்தின் கீழ், விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிலம்பரசன் போன்ற திரைப்பட  நடிகர்கள் தீவிர அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, அரசியலில் சாதிக்க சினிமா வெறும் மொழியாக பயன்படுத்தப்படுகிறதா? பாமர, விளிம்பு நிலை மனிதர்களைச் சினிமா பொய்க்கிறதா?

(அல்லது)

சினிமா- அரசியல் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களே இயற்றி, அவர்களே நடித்து, அவர்களுக்கே நல்கிக்கொண்ட புதுவகை ஜனநாயக மொழி என்று பொருள் கொள்வதா என்ற கேள்வியும் முன் எழுகிறது.

இந்த கேள்விக்கான பதிலை இரண்டு வகையில் நாம் சிந்திக்கலாம்:

1. சினிமா முதன்மையானது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் நிறுவப்பட்டது. இருப்பினும், ஒரே நாடு, ஒரே இந்திய தேசம் என்ற பொதுவான பார்வையைக் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்தது. அதிலும், குறிப்பாக படித்த மேல் தட்டு சமூகம்; மொழி, மதம், சாதி ஆகியவற்றை பிரிவனை வாதமாகத் தான் கருதியது.

இதன் காரணமாக, மொழிவாரி மாநிலங்களில் சினிமா-அரசியல் என்ற ஜனநாயக வகைப்பாடு முக்கியத்துவம் பெற்றதாக பேராசிரியர் எம். மாதவ் பிரசாத் தனது சினி-பாலிடிக்ஸ் என்ற புத்தகத்தில் தெரிவித்தார்.

"மொழிவாரி சமூகங்களைப் பிரதிநிதித்துவம் (திராவிட தேசியம், கன்னட தேசியம் , தெலுங்கு தேசியம்) செய்த காரணத்தினால் மக்கள் கதாநாயர்களைக் கொண்டாடத் தொடங்கினர். மிதமிஞ்சிய நட்சத்திரம் என்ற அந்தஸ்தை வழங்கினர். உதாரணமாக, தெலுங்கில் என். டி ராமாராவ், (தமிழில் ரஜினி காந்த்தின்) அநேக வெற்றிப் படங்கள் அனைத்தும் ஹிந்தியில் அமிதாப் பச்சனின்  ரீமேக் படங்கள் தான். இந்தி திரைப்படங்களில் விளிம்பு நிலை மக்களுக்கான ஹீரோ என்று உருவகப்படுத்தப்பட்ட  அமிதாப் பச்சனின் அரசியல் ஆதிக்கம் சொல்லும்படி இருக்கவில்லை. ஆனால், என்.டி. ராமாராவ், தெலுங்கு தேசம், தெலுங்கு மக்கள் போன்ற கூடுதல் வசனங்களை முன்வைத்த காரணத்தினால் அரசியலில் வெற்றி கண்டார். 'இந்தி' என்பது இந்தியா என்ற அடையாளத்தோடு நன்கு இணைக்கப்பட்டதால் 'இந்தி தேசம்' 'இந்தி மக்கள்' என்பதற்கான பிரதிநித்துவத்தை அமிதாப் பச்சானால் பெற முடியவில்லை" என்று எம்.மாதவ் பிரசாத் குறிப்பிடுகிறார்.

 

publive-image

 

உதாரணமாக, 1947 ஆம் ஆண்டு கலைஞர் வசனத்தில் எம். ஜி. ஆர் நடிப்பில் வெளிவந்த ராஜகுமாரி திரைப்படம் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 1950க்குப் பின்பு தான் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகன், நட்சத்திரம் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எம்.ஜி. ஆர்-ன் சினிமா,  பொழுதுபோக்கு என்ற எதார்த்தத்தைத் தாண்டி, தமிழக மக்களின் இறையாண்மை, சமயசார்பின்மை, ஜனநாயகம், குடியரசு போன்ற வார்த்தைகளின் வெளிப்பாடாக திகழ்ந்தது.

அதாவது, திமுக எம். ஜி. ஆர்- ஐ பயன்படுத்தியதா ? (அ) எம்.ஜி.ஆர் மக்களைக் கவர திமுக-வையும், சினிமாவையும் பயன்படுத்தினாரா? என்ற கேள்விகளைத் தாண்டி- கதாநயாகன் என்ற 'உட்சபட்ச நட்சத்திரம்' மொழிவாரி மாநிலங்களில் சாத்தியமானது/தவிர்க்க முடியாதது/இன்றியமையாதது என்பதை திமுகவும், எம். ஜி. ஆர்-ம் புரிந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர் என் இதயக்கனி.....மரத்தில் பழம் பழுத்து தொங்கிக்கொண்டிருந்தது. அது தங்கள் மடியில் விழாதா என பலரும் காத்திருந்தனர். அது என் மடியில் விழுந்தது. எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டேன் என்பதை அறிஞர் அண்ணா பொது மேடையில்  இயல்பாகவே ஒப்புக் கொண்டார்.

 

publive-image

 

2 . அரசியல் முதன்மையானது:

எம்.ஜி.ஆரின் வெற்றி இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரின் வெகுஜன அரசியல் ( பாப்புலர் பாலிடிக்ஸ்) ஒரு விவாதமாகவும் முன்னெடுக்கப்பட்டது. எம். ஜி. ஆரின் திரைப்படங்களே, எம்.ஜி.ஆரின் அரசியலை உருவாக்கின என்று திரைப்பட வரலாற்றாசிரியரும், இயக்குநருமான சித்தானந்த தாஸ் குப்தா தனது புத்தகத்தில் குறிப்பிட்டார்.

இருப்பினும், தமிழகத்தில், சினிமா தன்னிச்சையாக/சுயாதீனமாக செயல்படவில்லை, சினிமா முழுமையான இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதை லயோலா கல்லூரி பேராசிரியர் எஸ். ராஜநாயகம் தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்தார்.

சினிமா சுயாதீனம் பெற்றிருந்தால் நடிப்பில், எம்.ஜி.ஆர்- ஐ விட திறமை வாய்ந்தவராக கருதப்பட்ட சிவாஜி ஏன் அரசியலில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை? திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே சிவாஜி திராவிட அரசியலோடு தன்னை இணைத்துக் கொண்டார்.

மேலும், தமிழகத்தில் மிதமிஞ்சிய புகழ் ,ரசிகர்கள் பட்டாளம் என்பது சினிமாவோடு நின்றுவிடவில்லை.  உதாரணமாக, திமுக தலைவர் மு.கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ( எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில்) தொண்டர்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் தொண்டர்கள் தங்களை  மாய்த்துக் கொண்டனர். காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி மறைவுக்கு உயிரை மாய்த்துக் கொண்ட 15 பேரில், 14 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது ஆய்வுக் கட்டுரையில் எம்.ஜி.ஆர் படங்களை மூன்று வகையாக பேராசிரியர் ராஜநாயகம் பிரிக்கிறார்.

1. 'எம். ஜி. ஆர் - திமுக' வகைப் படங்கள்

2. 'திமுக என்பதே எம்.ஜி.ஆர்' வகைப் படங்கள்

3. 'அண்ணா - திமுக'  வகைப் படங்கள்

(i) 'எம்.ஜி.ஆர்- திமுக' வகைப் படங்கள்:

1950-60 காலகட்டங்களில் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம் , திராவிட தனி நாடு கொள்கை  ஆகிய போராட்டங்களை தி.மு.க. நடத்தியது.

எம்.ஜி. ஆர் திரைப்பிரவேசம் : அப்போது திரைக்கு வந்த மர்ம யோகி, மலைக் கள்ளன், குலேபகாவலி, மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம், நாடோடி மன்னன் (எம். ஜி. ஆர் இயக்கித், தயாரித்த) போன்ற பெரும்பாலான எம். ஜி. ஆர் படங்கள் இந்த திராவிட சித்தாந்தங்களை முன்னெடுத்தன. இருப்பினும், இந்த படங்களில் எம்.ஜி.ஆர் முதன்மையாக்கப்பட்டார் (மாதவ் பிரசாத் வாதம்).

1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர், திமுகவின் உறுப்பினரான போது, ரசிகர் மன்றங்கள் தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டன. எம்.ஜி.ஆர் தனது படங்களின் மூலம் தனது முதல் எதிரி காங்கிரஸ், இந்தி மொழி, தி.மு.கவில் தான் யார்? கட்சியில் தனது முக்கியத்துவம் என்ன? என்பதை திரைப்படங்கள் (குறிப்பாக, நாடோடி மன்னன்) மூலம் தனது ரசிகர்களுக்கு புரிய வைத்தார். இந்த களம் தான் பின்நாளில் அதிமுகவாக உருவானது.

 

publive-image நாடோடி மன்னன் படத்தில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட திமுக கொடி. இருந்தாலும், எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தனியார் நிறுவனத்தின் சின்னமாகத் தான் கொடி பிரதிபலித்தது.

நாடோடி மன்னன் படத்தில் தான், எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் தொடங்கியது. நாடோடி மன்னன் 'திமுக படம்' என்பதைத் தாண்டி, திமுக- வைப் பற்றிய எம்.ஜி. ஆர் படம் என்றளவில் பெயர் பெற்றது.

உதரணமாக, 1977ல் முதல்வர் பதவியேற்ற போது, செய்தியாளர்களிடம் பேசிய எம். ஜி. ஆர்,  முதல்வர் ஆனால் என்ன செய்வேன் என்பதை "நாடோடி மன்னன்" படத்திலே தெரிவித்து விட்டேன்"  என்று குறிப்பிட்டதையும் இங்கு நாம் நினைவு கொள்ள வேண்டும் .

 (ii). திமுக என்பதே எம்.ஜி.ஆர் வகைப் படங்கள்  :

அரசியல் நிலவரம்: 1961ல் திமுகவில் இருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறினார். 1962ல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் திமுக பொதுச்செயலாளர் அண்ணா, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963 பொதுக்குழுவில் திமுகவின்  முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. 1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சட்டமேலவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் (அண்ணா நிர்பந்தம் காரணமாக). 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். 1969 பிப்ரவரி 3ஆம் நாள் முதல்வர் அண்ணா மரணமடைந்தார். முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் எம். ஜி. ஆர்-க்கு இடம் அளிக்கப்படவில்லை.

எம். ஜி .ஆர் திரைப்பிரேவேசம் : இந்த காலகட்டங்களில் வெளிவந்த எம். ஜி. ஆர் படங்கள் காங்கிரஸ், இந்தி  எதிர்ப்பைக் கைவிட்டன. மொழி, திராவிட நாடு என்பதைத் தாண்டி விளிம்பு நிலை மக்கள், பெண்கள், வறுமை, அதிகாரத்துவம், சொத்துக் குவிப்பு , மதுபானம், சட்டம் ஒழுங்கு, லஞ்சம்,ஊழல், போன்ற சமூக அவலங்களை எம். ஜி.ஆர் முன்னெடுத்தார்.

 

publive-image 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' பாடல் வரிகள்- பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா, பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா

 

எங்கள் வீட்டுப் பிள்ளை, திருடாதே, தாய் சொல்லை தட்டாதே,  ஒளி விலக்கு, வேட்டைக்காரன், காவல்காரன் போன்ற திரைப்படங்கள் காங்கிரஸ், இந்தி மொழி எதிர்ப்பை விட திமுக ஆட்சியாளர்கள் பற்றியும், அறிவுசார்ந்த நேர்மையான ஆட்சியைப் பற்றியும் பேசத் தொடங்கியது.

 

publive-image எங்கள் வீட்டுப் பிள்ளை திரைப்படம்- நான் ஆணையிட்டால் , அது நடந்து விட்டால்... எதிர்காலம் வரும் என் கடமை வரும்

இதில், கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால்,      எம். ஜி. ஆர் பாமர மக்களுக்கான போராளி என்பதை தாண்டி, பாமர மக்களுக்கான தற்போதைய அரசியல் நிலவரம் என்ன? யாரை, எதற்காக எதிர்க்க வேண்டும்?  பகைவர் யார்? நண்பர் யார்? என்ற கூடுதல் பரிமாணங்களையும் சினிமாவில் சொல்லத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம். ஜி.ஆர் என்ற உருவகத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றார்.

(iii) 'அண்ணா திமுக' வகைப் படங்கள் :

அரசியல் நிலவரம்:

1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். அதாவது, அண்ணாவின் திமுக. பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. 1973ல்  திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக பெரும் வெற்றி பெற்றது.

 

publive-image படம் - நினைத்ததை முடிப்பவன் (கண்ணை நம்பாதே)  போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம்

சினிமா பிரேவேசம்:  உரிமைக் குரல், ரிக்சாக்காரன்,  சிரித்து வாழ வேண்டும், இதயக் கனி, மீனவ நண்பன், நினைத்ததை முடிப்பவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற திரைப்படங்கள்  மூலம், தமிழகத்தில் அதிமுக புதிய கட்சி இல்லை என்பதையும், அண்ணாவின் உண்மையான திமுக வெற்றிகரமாக தன்மூலம் மீட்கப்பட்டது  என்பதையும் எம். ஜி. ஆர் தனது படங்களின் மூலம் ரசிகர்ளுக்கு புரிய வைத்தார். அண்ணாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் என்பதைத் தாண்டி, அண்ணாவும், எம்.ஜி. ஆர்-ம் ஒன்று என்பதை திரைக்கதை நுணுக்கங்கள் மூலம் விளக்கினார்.

 

publive-image ரிக்சாக்காரன் திரைப்படம் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்புஇங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு - நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

 

எம். ஜி. ஆர்- ன் வெற்றி எங்கே தொடங்கியது: 

எம்.ஜி.ஆர் சினிமா என்ற எழுத்தை, அரசியல் என்ற புத்தகத்தில் எழுதியதாக ராஜநாயகம் கூறுகிறார். அதாவது, சினிமாவும், அரசியலும் ஒருங்கே பயணப்பட்டது. சினிமாவும், அரசியலும் ஒரே வகையாக அர்த்தம் கொள்ளப்பட்டது. எம். ஜி. ஆர்- ன் படங்களை அன்றைய அரசியல் சூழ்நிலைகள் தீர்மானித்தது.

எம். ஜி. ஆர் ஒரு குறிப்பிட்ட சினிமா மொழியில், குறிப்பிட்ட திரைக்கதையின்  மூலமே பயணப்பட்டார். ஆனால், ரஜினி தனது சில  திரைப்படங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடனான  முரண்பாட்டை (அண்ணாமலை,படையப்பா) முன்னிலைப் படுத்தியிருந்தாலும், அதை தொடரவில்லை.

publive-image படையப்பா  திரைப்படம்

உதரணமாக, படையப்பாவில் வில்லி கதாபாத்திரத்தில்  வந்த நீலாம்பரி, பாபா படத்தில் ரஜினியிடம் மணி கேட்டு சென்றிருப்பார். ரஜினியின் படங்களில் அரசியல் காட்சிகள் கட்சிதமாக பொருந்தியதே தவிர, அரசியலும், சினிமாவும் ஒருங்கே இணைக்கப்படவில்லை.

 

publive-image பாபா திரைப்படம்

சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தை (அநேக படங்களில்-  நம்பியார்) எம்.ஜி. ஆர் வெல்லும் போது, சினிமா பார்வையில் சிவாஜியை வென்றதாகவும், அரசியல் பார்வையில் அன்றைய ஆட்சியாளர்களை வென்றதாகவும் ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ரஜினிகாந்த் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு தொடர்ச்சியான அரசியல் எதிரியை, அரசியல் நண்பர்களை ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லவில்லை.

ரஜினி, திரைப்படங்களில் தற்கால அரசியலைத் தேடினாரே தவிர, அரசியலுக்கான திரைப்படங்களை முன்னெடுக்கவில்லை. 2004 பாராளுமன்றத் தேர்தலில், ரஜினியின் பாமகவுக்கு எதிரான நிலைப்படும் ( யார்  எதிரி?), பி.ஜே.பி க்கு ஆதரவான நிலைப்பாடும் ( யார் நண்பர்?) ரசிகர்களால் தெளிவாக புரிந்து கொள்ளப்படவில்லை.

எனவே, தமிழக மக்கள் தங்கள் தலைவர்களையும், முதல்வர்களையும் திரையரங்குகளில் தேடவில்லை. தமிழகத்தில் சினிமாவை விட அரசியல் ரீதியான காரணங்கள் தான் தலைவர்களை தீர்மானிக்கிறது.

எம். ஜி. ஆர் - ரஜினிகாந்த் அரசியல்:  எம்.ஜி.ஆர் படங்களில் நடித்து கால எதேர்ச்சையாக அரசியலில் கால்பதிக்க வில்லை. படங்கள்- அரசியல் என்பதை ஒருங்கிணைத்தார். ரசிகர் மன்றமும், அரசியல் கட்சியும் ஒன்றுதான் என்பதை அவரே வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் 11  வருட ஆட்சிக்காலத்தில் விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் குறையப்படவில்லை என்பதற்கு பல பொருளாதார ஆய்வுகள் உள்ளன. உண்மையில், அவர்களின் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்தன.

இடஒதுக்கீட்டில், கிரீமிலேயர் பிரிவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு காரணமாக, 1980    மக்களவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் படுதோல்வி அடைந்தார். இதனையடுத்து, பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான உரிமை,  பழைய முறையை மீண்டும் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாகவும் உயர்த்தினார். மதுவிலக்கு கொள்கைகளிலும் எம்.ஜி.ஆர் சில ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்களும் அதிகளவில் ஒடுக்கப்பட்டது. திரைப்படங்களில் சமூக அவலங்கள் குறித்து எம். ஜி. ஆரால் உண்மையான கேள்வியை எழுப்ப முடிந்தது. ஆனால், அதற்கான பதிலை அரசியலில் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் கற்பனையாகவே முடிந்தன.

எவ்வாறாயினும், மக்கள் மனதிலும், தலைவர்கள் மத்தியிலும் எம். ஜி. ஆர் முக்கியத்துவம் பெறுவது விளக்கப்படவேண்டிய ஒன்று. புது இந்தியாவின் அடையாளம் “குறைந்த ஆட்சி, நிறைந்த நிர்வாகம்” என்ற

உறுதிப்பாட்டை 2014ல் முழங்கியிருந்தாலும், 1980ல் இருந்தே இந்தியாவில் கல்வி, சுகாதாரம், வேளாண் துறைகளில் தனியார் துறையினர் ஊக்குவிக்கப் பட்டு, அரசின் தலையீடு குறைந்து கொண்டு தான் வருகிறது.

 

publive-image

 

இந்த கண்ணோட்டத்தில் தான், தமிழக அரசியலையும், எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் பெறுவதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

உதாரணமாக, பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் எம். ஜி. ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கு உயர்மட்ட, தேசிய அளவிலான பொருளாதார நிபுணர்கள், அரசு அதிகாரிகள் பொருளாதார செலவினங்களை காரணம் காட்டி எதிரான கருத்தை தெரிவித்தனர். எம். ஜி. ஆர் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை முற்றிலும் புறந்தள்ளினார். மதுபான விற்பனை, கட்சியினர் அன்பளிப்பு, குறிப்பிட்ட பொருட்கள் மீது கூடுதல் வரி போன்றவைகளால்  திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

 

publive-image நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க பாடல் வரி- " சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே. நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே"

திமுக தலைவர் கருணாநிதி, மறைந்த அதிமுக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அநேக திட்டங்களும் பொருளாதார வாதத்தையும், நிபுணர்களின் ஆலோசனைகளையும் மீறி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.

ஓய்வு பெற்ற நீதிபதிகள், தொழிலதிபர்கள், ஐ. ஏ. எஸ் அதிகாரிகள் என நல்ல அனுபவமுள்ள வல்லுநர்கள் குழு (council of Experts) சி.இ. ஒ முதல்வர் மூலம் சிஸ்டம் சரி செய்யப்படும் என்று ரஜினிகாந்த் கூறுவது எம். ஜி. ஆர் அரசியலுக்கு மிகவும் எதிர்மறையாகவே அமைந்திருக்கிறது.

 

மேலும் வாசிக்க: 

Popular Cinema and Politics in South India: The Films of MGR and Rajinikanth by S. Rajanayagam

Cine‑politics: Film Stars and Political Existence in South India - M. Madhava Prasad

The Image Trap: M.G. Ramachandran in Film and Politics , Culture and Subaltern Consciousness. An Aspect of MGR Phenomenon by  M S S Pandian

The Nurturing Hero: Changing Images of MGR by Sara Dickey

Rajini Kanth Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment