‘ஒன்றிணைவோம் வா’ வெற்றியா? தோல்வியா?

Ondrinaivom vaa: திமுக நிர்வாகிகளின் மனநிலை, பொருள் நிலையை சரியாக எடைபோடவில்லை என்றே தெரிகிறது. அதன் எதிரொலிதான், இந்த அஸைன்மென்ட்கள் அவர்களை மூச்சு முட்ட வைத்துவிட்டது.

By: May 15, 2020, 7:28:05 AM

பிரசாந்த் கிஷோர் திமுக.வுடன் கைகோர்த்த பிறகு, மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த முதல் திட்டம் ‘ஒன்றிணைவோம் வா’. இது நிஜமான இலக்கை அடைந்ததோ இல்லையோ, புதன்கிழமை மாலையில் கோட்டையில் திமுக எம்.பி.க்கள்- தலைமைச் செயலாளர் இடையே சலசலப்பைக் கிளப்பிவிட்டது. இந்தச் சூழலில், ‘ஒன்றிணைவோம் வா’ நிறைவு கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் சொல்லப்படுவதால், அதன் தாக்கம் குறித்து அலசினோம்.

ஏப்ரல் 20-ம் தேதி, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1520 மட்டுமே. 90730 90730 என்கிற எண்ணைக் கொடுத்து, உதவி தேவைப்படுகிறவர்கள் இந்த எண்ணுக்கு அழைக்கலாம் என கூறினார் ஸ்டாலின்.


‘உங்களின் தேவைகளே எங்களின் முன்னுரிமை; கழக தலைவருடன் நேரடியாக இணைய 90730 90730 எண்ணிற்கு அழையுங்கள்; உங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கிறோம்.’ என முதல் நாள் விளம்பரத்தில் குறிப்பிட்டது திமுக. ‘உங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உடனடி உதவி பெற அழையுங்கள்’ என்றே தொடர்ந்து அந்த எண்ணை பிரபலப்படுத்தினார்கள்.

முதல் 5 நாட்களில் 2 லட்சம் அழைப்புகள் வந்ததாக பெருமிதம் கொண்டது திமுக. ‘2 லட்சம் அழைப்புகளை 5 நாட்களில் அட்டென்ட் செய்ய முடியுமா?’ என மீம்ஸ்கள் கிளம்பியதுமே, ‘கால் சென்டர் நெட்வொர்க் பற்றி அறிந்தவர்களுக்கு இது சாத்தியம் என்பது தெரியும்’ என பதிலடி கொடுத்தனர் திமுக.வினர். பி.கே. டீம் பக்காவாக ஒரு அலுவலகம் அமைத்து இதற்கு உழைப்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்ட இடம் அது! இறுதிகட்டத்தில் மு.க.ஸ்டாலினும் தனது வீடியோ பேட்டியில் இதற்காக அலுவலகம் அமைத்து ஏராளமான நண்பர்கள் பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.

தமிழகம் முழுவதும் இருந்து உதவி கேட்டு வந்த அழைப்புகளை அந்த ‘நண்பர்கள்’ ஆய்ந்து அலசி, மாவட்டச் செயலாளர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அஸைன்மென்ட்களாக கொடுத்தார்கள். முதலில் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 50, 100 என்கிற எண்ணிக்கையில் வந்தபோது அவர்களும் ஓரளவு ஆர்வமாக பயனாளிகளைத் தேடிச் சென்றனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மே 11-ம் தேதி நிலவரப்படி 17 லட்சம் அழைப்புகள் வந்ததாக குறிப்பிட்டார் ஸ்டாலின். இவற்றில் ஒரு லட்சம் அழைப்புகள் தங்களால் நிறைவேற்ற முடியாதவை என முடிவு செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார் அவர்.

இந்த காலகட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக தலா 10000 பேர் அடங்கிய பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 9 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்து செலவுகளை இழுத்து வைத்திருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கையைப் பார்த்து அந்தந்த நிர்வாகிகள் ஆடிப் போனார்கள்.

இந்த எண்ணிக்கையில் முக்கால்வாசி பேர், வம்புக்கு போன் செய்து உதவி கேட்டவர்கள் என்பதாகவும் தகவல்கள் வந்தன. இந்த பெரும் எண்ணிக்கையில் நிஜமான பயனாளிகளை அடையாளம் காண்பது திமுக மா.செ.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் பெரும் சவாலாக இருந்தது.

கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மாதிரி நெட்வொர்க் வலுவாக வைத்திருக்கும் சில மா.செ.க்களும் எம்.எல்.ஏ.க்களும் ஓரளவு சமாளித்தனர். மற்றவர்கள் கதறியே விட்டார்கள். உடனே உதித்த ஐடியா அடிப்படையில்தான் மே 12-ம் தேதி அனைத்து மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து தங்களிடம் இருந்த மனுக்களை சமர்ப்பித்தனர். பல மா.செ.க்களுக்கு அதற்கு பிறகுதான் மூச்சே வந்தது.

இந்த இடமே திமுக.வுக்கு ஒரு சறுக்கல்தான்! சாதாரண காலகட்டத்திலேயே எதிர்க்கட்சியின் மனுக்களுக்கு அரசு அலுவலகங்களில் என்ன மரியாதை? என்பது தெரிந்த விஷயம். இப்போது அரசாங்கம் சரிபாதி ஊழியர்களைக் கொண்டு இயங்குகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிவது, புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை என அதிகாரிகள் அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில், திமுக.வின் மனுக்களை என்ன செய்திருப்பார்கள்?

இதற்கிடையே பொதுத்தளத்தில் இருந்தும், திமுக.வை நோக்கி கேள்விக் கணைகள் கிளம்புகின்றன. ‘முதலில் தொலைபேசி எண்ணை அறிவித்தபோதே இந்தந்த உதவிகளை தங்களால் செய்ய முடியும் என்றோ, அல்லது அரசாங்கத்திடம் உங்கள் மனுக்களை கொடுப்போம் என்றோ திமுக உண்மையை அறிவித்திருக்க வேண்டாமா?’ என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

க்ளைமாக்ஸாக மே 13-ம் தேதி தலைமைச் செயலகத்திற்கும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் கட்டுக்கட்டான கோரிக்கை மனுக்களுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். அங்கு இவர்களை தலைமைச் செயலாளர் சண்முகம் மதிக்கவில்லை என டி.ஆர்.பாலு புகார் தெரிவிக்க, மறுநாள் அதற்கு தலைமைச் செயலாளர் மறுப்பு தெரிவித்த நிகழ்வுகள் அரங்கேறின.

இனி தொடர்ந்து திமுக அறிவித்த எண்ணுக்கு உதவி கேட்டு பழைய மாதிரி போன் கால்கள் வருமா? என்பது ஒரு கேள்வி! வந்தாலும், அந்த மனுக்களும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்குத்தான் சமர்ப்பிக்கப்படுமா? ஏப்ரல் 30-ம் தேதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் 25 நகரங்களில் கிச்சன் அமைத்து, தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கவிருப்பதாக குறிப்பிட்டார். அது இனி நடைபெறுமா?

ஒன்றிணைவோம் வா திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது இருந்ததைவிட 7 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு இப்போது இருக்கிறது. புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னை மட்டுமன்றி, இங்கே இருக்கிற தொழிலாளர்களின் பிரச்னை முன்பைவிட அதிகமாகியிருக்கிறது. இவர்களைக் கவனிக்க வேண்டிய முழுப் பொறுப்பும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதேசமயம், திமுக மாதிரியான ஒரு பெரிய கட்சி இந்தப் பணியில் இன்னும் சரியான திட்டமிடலோடு இறங்கியிருக்கலாம். பிரசாந்த் கிஷோர் டீம் திமுக.வுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்த உடனேயே, முந்தைய சுனில் டீம் எங்கே சறுக்கியது என்கிற விவரங்களைத்தான் சேகரித்ததாம்.

2016 சட்டசபை தேர்தலில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் கலைஞர் கருணாநிதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை மையமாக வைத்து பிரசாரம் செய்யாதது, 2016 தேர்தல் வேட்பாளர் தேர்வு குளறுபடிகள், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றியை கோட்டை விட்டு டெபாசிட் இழந்தது, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற பெரிதாக முயற்சிக்காதது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்து விட்டு திரும்பப் பெற்றுக் கொண்டது, 2019 நாடாளுமன்ற தேர்தலில் காட்டிய அக்கறைக்கு நிகராக 22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் கவனம் செலுத்தாதது, வேலூர் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் தவறான மதிப்பீடுகளால் திமுகவுக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தது, நாங்குநேரி உட்பட இரு தொகுதி இடைத்தேர்தல்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைந்தது, முரசொலி மூலப் பத்திர விவகாரம்… என அந்தப் பட்டியல் நீள்கிறது.

இதற்கு முன்பு பி.கே. டீமில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து பணியாற்றி அனுபவம் பெற்றவராம் சுனில். எனவே இருவருக்குமே பரஸ்பர பலம், பலவீனம் தெரியும். சுனிலை இவ்வளவு டீட்டெயிலாக அலசி ஆராய்ந்து களம் இறங்கிய பி.கே. டீம், திமுக நிர்வாகிகளின் மனநிலை, பொருள் நிலையை சரியாக எடைபோடவில்லை என்றே தெரிகிறது. அதன் எதிரொலிதான், இந்த டீம் அள்ளிக் கொடுத்த அஸைன்மென்ட்கள் திமுக நிர்வாகிகளை மூச்சு முட்ட வைத்துவிட்டது.

திமுக இளைஞரணி அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாடல் ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது உண்டு. அதேபோல திமுக சார்ந்த அறக்கட்டளை நிதிகளை இந்தப் பணிகளில் ஓரளவு பயன்படுத்தியிருந்தால், நிர்வாகிகள் மூச்சு முட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

இனி அடுத்த நகர்வை திமுக இதில் எப்படி முன்னெடுக்கும் என்பது தெரியவில்லை. ‘ஒன்றிணைவோம் வா’ முழக்கம் நிறுத்தப்பட்டு வேறு முயற்சிகளில் திமுக இறங்கலாம் என தகவல் வருகிறது. அவற்றை பி.கே. டீம் கூடுதலான திட்டமிடலுடன் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin ontrinaivom vaa coronavirus relief news in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X