Advertisment

இந்தியாவில் கல்வி அடிப்படை உரிமையா? கேள்வி கேட்கும் வானவில் குழந்தைகள்!

இந்திய அரசியல் சட்டத்தின் 86வது திருத்தம் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (14 வயதிற்குட்பட்டவர்கள்) இலவச, கட்டாய ஆரம்பக் கல்வியை உறுதி செய்கிறது.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nagapattinam Vanavil School teaches creative education, Nagapattinam Vanavil School, Education is fundamental rights

Nagapattinam Vanavil School

Nagapattinam Vanavil School teaches creative education : சிக்கலில் அமைந்திருக்கிறது அந்த பள்ளி. உள்ளே சென்று மாடி அரங்கில் நுழைந்ததும்  “கொட்டோ  கொட்டுன்னு கொட்டுவோம்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டுவோம்” என தேனீ வேடமிட்ட குழந்தைகள், சிங்க வேடமிட்ட குழந்தைகளை வட்டமிட்டு உரத்த குரலில் தங்களின் நாடகத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். தஞ்சையில் நடைபெற இருக்கும் நிகழ்வு ஒன்றில் தங்களின் நாடகத்தை அரங்கேற்ற ஒத்திகை செய்து கொண்டிருந்தார்கள் இம்மாணவர்கள்.

Advertisment

பள்ளியில் கொடுக்கும் புத்தகங்களை படித்து மனப்பாடம் செய்துவிட்டு அப்படியே பரீட்சை தாளில் கொட்டுதல் என்பது தான் கல்விக்கான ஒரு அடையாளமாக மாறிவிட்டது. தான் எண்ணியதை, தன் எண்ணத்தை நிறைவேற்றும் நம்பிக்கையை நம்முடைய கல்வி ஒரு குழந்தைக்கு புகுத்துகிறதா என்று கேள்வி எழும் போது தான் கல்வி என்றால் என்ன? எதன் அடிப்படையில் கல்விக்கான அர்த்தம் அமைகிறது? என்ற கேள்விகள் உருவாகிறது.

publive-image வானவில் பள்ளியில் நாடக ஒத்திகையில் குழந்தைகள் (Express Photo by Nithya Pandian)

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் சிக்கல், கீழ்கரையிருப்பில் அமைந்திருக்கிறது வானவில் பள்ளி. கல்வி என்பது வெறும் புத்தகங்கள், மானப்பாட பகுதிகள், கேள்விகள் - பதில்கள், தேர்வுகள் என்றில்லாமல் ஓவியம், நாடகம் என மாற்று வழிக் கல்வியை வழங்குகிறது வானவில். ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது வானவில்.  இந்த பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது. அவர்களுக்கென சின்னச்சின்ன கனவுகள் இருக்கிறது. கனவுகளை சுமக்கும் அந்த குட்டிக்குட்டி குழந்தைகளின் பிஞ்சுக் கைகள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக சார்ந்தே இருக்கிறது.  இவர்களின் கனவுகளுக்கு வானவில் ஏன் வண்ணம் தீட்டுகிறது? வானவில்லும் இல்லை என்றால் இந்த குழந்தைகளுக்கு கனவுகள் என ஏதும் இருந்திருக்குமா? அனைவருக்கும் ஆரம்ப கல்வியை உறுதி செய்யும் இந்திய அரசு ஏன் இந்த குழந்தைகளை பள்ளிவாசல், தேவாலயங்கள், கோவில் வாசல்களில் நிற்கவைத்தது?

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

ஆதியன் இனத்தினர்

இந்த குழந்தைகள் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவரும் பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். இம்மாவட்டத்தில் இவர்களின் எண்ணிக்கை என்பது வெறும் 300-400 குடும்பங்கள் வரைதான் . இந்த சமூகம் நாகையின் அரசூர், நீலப்பாடி, கொரக்குடி, செல்லூர் போன்ற இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். நாடோடி இனத்தை சேர்ந்த இவர்கள் ஒரு இடத்தில் நிலையாக வாழ்வதில்லை. தங்களின் தேவைகளுக்காக இடம்விட்டு இடம் நகர்கிறார்கள். தங்களுக்கென பூர்வீகமாக சொத்துகளோ, பணம் சேமித்து வைக்கும் முறையோ இவர்களிடம் இல்லை. பெரும்பான்மையான பெற்றோர்கள் குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

Nagapattinam Vanavil School teaches creative education, Nagapattinam Vanavil School, Education is fundamental rights வானவில் பள்ளி

எங்கே சென்றாலும் கூடவே  தங்களின் குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறார்கள். இன்றைய நாளுக்கான தேவையை மட்டும் கணக்கில் வைத்து குழந்தைகளுடன் ப்ளாஸ்டிக் விற்பனை செய்ய செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இந்த சமூகத்தினர். கட்டற்ற சிந்தனைகளை நிஜமாக்கும் வல்லமை கொண்ட இந்தியாவின் நாளைய எதிர்காலம் என்று நாம் கூறும் நம் நாட்டின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது என்று கூறினால் யார் தான் நம்புவார்கள்? முடியாது தான். நம்பும் திராணி இல்லையென்றாலும் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை அது.

பொதுவாக பழங்குடி இன மாணவர்களுக்கு அரசு எக்கச்சக்க சலுகைகளை வழங்குகிறது. அதில் படித்து அனைவரும் வீடு, வாசல், வசதி என்று வாழ்கிறார்கள் என்ற ஒரு பொதுப்படை எண்ணத்தை கேள்விக்குறியாக்குகிறார்கள் இந்த சமூகத்தில் இருந்து படிக்க வரும் குழந்தைகள்.  தங்களின் அடுத்த  தலைமுறையாவது படிக்கட்டும் என்று அரசு பள்ளிகளில் இக்குழந்தைகளை சேர்த்தால், இவர்களின் உடை, பேச்சு, நடவடிக்கை மற்ற மாணவர்களின்  கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறது. ஆதலால் இந்த சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளி செல்வதையும் வெறுக்கின்றார்கள்.

அரசு பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கும் வாய்ப்பற்றவர்களாக இருக்கும் இம்மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதும் அரிய நிகழ்வாக அமைகிறது. கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற்ற பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் தான் பலருக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் பழங்குடியினத்தவர்களுக்கு குறிப்பாக நாடோடி சமூகத்தினருக்கு சாதி சான்றிதழை மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் சென்று அனைத்து விபரங்களையும் சரி பார்த்த பிறகு தான் வழங்க முடியும்.

இவர்களின் நாடோடி வாழ்க்கையில் எப்போது எங்கே இருப்பார்கள் என்பதே பலருக்கும் தெரியாது. டி.ஆர்.ஒ எப்படி இவர்களை அணுகுவார் என்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ரேசன் கார்ட், நிரந்திர இருப்பிட சான்றிதழ் என ஏதாவது ஒன்றை அடிப்படையாக கொண்டு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது, இந்த இரண்டும் இவர்களின் வாழ்வில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆரம்பமே சிக்கலாக இருப்பதால் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் எந்த விதமான சலுகைகளையும் இந்த இன குழந்தைகள் அனுபவிப்பதில்லை. சமீபத்தில் இருளர் சமூகத்தில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்கொண்டு படிக்க இயலாமல், வயலில் எலி பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் நியாபகம் வருகிறது.

லட்சுமியின் மரணம்

சுனாமி எத்தனையோ நபர்களின் வாழ்வை புரட்டி போட்டது. இந்தியாவில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றான நாகையில் ஏற்பட்ட இழப்பீடுகள் மிக அதிகம். இம்மக்களுக்கு உதவி செய்வதற்காக சென்னையில் இருந்து வந்த தன்னார்வலர்களில் ஒருவர் தான் பிரேமா ரேவதி. சுனாமி இழப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். ஒரு நாள் அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் கையில் ஒரு குழந்தையுடன் உணவுக்காக உதவி கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு பெண். பார்ப்பதற்கு ஒரு குட்டி பொம்மை போன்று ஒரு வயதுக்கும் குறைவாக இருந்த அக்குழந்தையின் பெயர் லட்சுமி.

“அவளை பார்ப்பதற்கு முன்பு வரை, ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால் நான் நிச்சயமாக நம்பியிருக்க மாட்டேன்” என்று ஆரம்பித்தார் பிரேமா ரேவதி.  “லட்சுமி இந்த வானவில்லின் அடிப்படை. அன்றைய சூழலில்  பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்த அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு நாங்கள் மருத்துவரிடம் சென்றோம். அவளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு சென்னை வந்துவிட்டேன். அவளை அவளுடைய பெற்றோர்கள் சரியாக கவனிக்கவில்லை. ஒரு வயது கூட முழுமையடையாத நிலையில் லட்சுமி உயிரிழந்தாள்” என்றார்.

Nagapattinam Vanavil School teaches creative education, Nagapattinam Vanavil School, Education is fundamental rights வானவில் பள்ளியில் நாடக ஒத்திகையில் குழந்தைகள் (Express Photo by Nithya Pandian)

ஆதியன் இனத்தில் இருக்கும் குழந்தைகள் ஏன் பள்ளி செல்வதில்லை என்பதை யோசிக்க துவங்கினார் பிரேமா. அந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, அக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் படி எவ்வளவோ கேட்டுக் கொண்டார். 15 வருடங்களில் வானவில் தன்னால் இயன்ற மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. “ஆரம்பத்தில் எந்த பெற்றோர்களும் எங்களை நம்பவில்லை. நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில் போன்ற இடங்களில் தன் பெற்றோர்களுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை வம்படியாக அழைத்து வந்து வகுப்பறையில் உக்கார வைத்தோம். காலங்கள் உருண்டோடின. தன்னுடைய பிள்ளைகள் பள்ளி, கல்லூரி என ஒவ்வொரு கட்டமாய் முன்னேறி செல்வதை பார்த்த பிறகு தான் வானவில் குறித்து ஆதியன் இனத்தினர் நம்பிக்கை பெற்றனர்.

வானவில் பள்ளி

இன்று வானவில் பள்ளியில் 160க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கியுள்ளனர். கிண்டர் கார்டென் முதல் 5ம் வகுப்பு வரை வானவில் பள்ளி, மாற்றுக் கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாணவர்கள் இங்கே தங்குவதற்கு வசதியாக விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவ / மாணவிகள் அருகில் இருக்கும் புதுவை அரசு பள்ளியில் படிக்கின்றனர். சிலர் அந்த பள்ளியில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்று சென்னை போன்ற நகரங்களில் மேற்படிப்பினை தொடருகின்றார்கள்.

Nagapattinam Vanavil School teaches creative education, Nagapattinam Vanavil School, Education is fundamental rights வானவில் குழந்தைகளுடன் பிரேமா ரேவதி

இங்கு படிக்கும் பல்வேறு மாணவர்களின் ஆசைகளும் கனவுகளும் மாற்று வழிக் கல்வியால் விளைந்ததாகவே இருக்கிறது. பலருக்கும் ஓவியர்களாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.  “ இந்த குடும்பங்களில் இருக்கும் பலரின் தாய் மொழி தெலுங்கு. இவர்கள் தமிழ் மொழி கற்றலுக்கான காலம் என்பது கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. மற்ற மாணவர்களுடன் கல்வி ரீதியாக போட்டியிடும் அளவிற்கு இவர்கள் வளர அதிக அளவில் இக்குழந்தைகள் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் படிப்பு நமக்கு வரவில்லையே என்ற எண்ணம் வந்துவிட கூடாது என்பதால் தான் இவர்களுக்கு மாற்று வழிக்கல்வி. தன் எண்ணங்களை வெளிப்படுத்த தடையாய் ஏதும் இல்லை என்ற நம்பிக்கையை இந்த கல்வி வளர்க்கும் என்று நம்புகின்றேன்” என்கிறார் பிரேமா ரேவதி.

இந்த பள்ளியில் செல்லூரை சேர்ந்த குழந்தைகள் மட்டும் தங்கி படிக்கின்றனர். பலரும் டே ஸ்காலர்களாக வந்து செல்கிறார்கள். இந்த பகுதிகளில் மட்டுமில்லாமல் வானவில் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம், ஆப்பரக்குடி பகுதிகளில் ஆதியன் பழங்குடி மாணவர்களுக்காக மாலை நேரப்பள்ளிகளை நடத்தி  வருகிறது.

அனைவருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி

2002ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் விதி 21(ஏ)வில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின் 86வது திருத்தம் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (14 வயதிற்குட்பட்டவர்கள்) இலவச, கட்டாய ஆரம்பக் கல்வியை உறுதி செய்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் எந்த சட்டமும் செல்லுபடியாகிறது. இல்லாத பட்சத்தில் அவை வெறும் ஏட்டளவில் தான். குழந்தைகள் எதிர்கால சிந்தனையற்றவர்களாக, எதிர்காலமற்றவர்களாக நகர்தலை விரும்பாத ஒரு சிலரின் உழைப்பால் தான் மாற்றங்கள் உருவாகிறது என்பதற்கு வானவில்லும் வானவில்லின் ஒவ்வொரு பிஞ்சு நெஞ்சுகளும் உதாரணங்களாக வாழ்கிறார்கள்.

மேலும் படிக்க :  ‘சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!

Nagapattinam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment