பிக்பாஸ்: சுயலாபத்திற்காக சுயமரியாதையை விற்ற ஜூலி!

பிக்பாஸில், காயத்ரி மற்றும் நமீதாவுடன் சேர்ந்துக் கொண்டு, ஓவியாவை தூங்கக்கூட விடாமல், பாட்டு பாடி ஜூலி நோகடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஒவ்வொரு ஆண்மகனையும் அதிகம் சீரியல் பார்க்கும் பெண்கள் போல் ஆக்கிவிட்டது “பிக்பாஸ்” நிகழ்ச்சி. “40 ஆண்டுகள் கழித்து ஒரு டி.வி.நிகழ்ச்சி பார்க்கிறேன்” என்று கூறிய எழுத்தாளர் சாரு நிவேதிதா தொடங்கி, “ஓவியா தான் என் இன்ஸ்பிரேஷன்” என இயக்குனர் சீனு ராமசாமி சொல்லும் அளவிற்கு, சாமானியன் முதல் சாதனை படைத்தவர்கள் வரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

பிக்பாஸ் இல்லத்தில் இருப்போருக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது என்கிறது பிக்பாஸ் டீம். அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஆனால், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள் சிலரை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, “வீரத் தமிழச்சி” என பெயர் வாங்கிய ஜூலியின் நிலை தான் இப்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது, ஜூலியை கடுமையாக விமர்சித்தவர் நடிகை ஆர்த்தி. ஜூலியை ‘ஃபேக்… ஃபேக்’ என்று அடிக்கடி சொல்லிவந்தார். பொறாமை காரணமாக பேசுகிறார்  என மக்களுக்கும் ஆர்த்தி மீது வெறுப்பு ஏற்பட, குறைவான ஓட்டுகள் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆர்த்தி. அப்போது ஜூலி மீது மக்களுக்கு கொஞ்சம் கரிசனம் இருந்தது.

ஆனால், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருப்போரின் ஆதரவைப் பெற காலில் விழும் அளவிற்கு சென்றுவிட்டார் ஜூலி. குறிப்பாக, தன்னுடைய சுயமரியாதையை இழந்தும் கூட காயத்ரியின் ஆதரவைப் பெற துடிக்கிறார். ஆனால், ஜூலியிடம் பேசினாலும், இப்போதுவரை ஜூலியை ஒரு கேவலவமான பிறவியாகவே பாவித்து வருகிறார் காயத்ரி. அப்போது தன்மானத்தை இழக்கும் ஜூலி, அதைப்பற்றி துளிக் கூட கவலைப்படுவதில்லை.

குறிப்பாக, வயிறு வலிப்பதாக ஜூலி அழுது, கண்கள் சொருகிய நிலையில் இருக்கும் போது, ஓவியாவைத் தவிர வேறு எந்தப் பெண் போட்டியாளர்களும், ஜூலியின் அருகில் கூட செல்லவில்லை. ஜூலி நடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டு, ஆண்கள் ஜூலிக்கு செய்யும் முதலுதவியை பார்த்துக் கொண்டு தான் நின்றார்கள்.

அதன்பின், ஜூலி அழுதுக் கொண்டு படுத்திருக்க, அவர் அருகில் சென்று ஆறுதல் சொல்லி, தேற்ற முயற்சிப்பதும் ஓவியா தான். ஆனால், காயத்ரி உள்ளே வந்தவுடன் ஓவியா வெளியே சென்றுவிடுகிறார். “ஓவியா என் மைன்ட்டை மாற்றிவிட்டாள் அக்கா! நான் அவளை நம்பவில்லை. ஓவியா என்னை உசுப்பேத்தி விடுகிறாள்” என்று அப்பட்டமாக பொய் கூறிய ஜூலியை, அந்த கணத்தில் மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். காயத்ரியின் அல்ப ஆதரவிற்காக, ஜூலி நடந்து கொண்ட விதம், ஜூலிக்கு எதிராக மீம் போடும் அளவிற்கு சென்றது.

நேற்று பிக்பாஸில்,  காயத்ரி மற்றும் நமீதாவுடன் சேர்ந்துக் கொண்டு, ஓவியாவை தூங்கக்கூட விடாமல், பாட்டு பாடி ஜூலி அவரை நோகடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.  தனக்கு ஆதரவாக இருந்த ஒருவரையே, தனது சுய லாபத்திற்காக மற்றவர்களிடம் பொய்யாக பேசி, மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடக்க தன்னுடைய தன்மானத்தையே விற்று நிற்கும் ஜூலியின் பெற்றோரை நினைத்தால் தான் நமக்கு பரிதாபமாக இருக்கிறது.

ஜூலியின் இந்த மோசமான கேரக்டரை பற்றி அவர்களது நண்பர்கள், உறவினர்கள் நிச்சயம் ஜூலி குடும்பத்தினரிடம் பேசுவார்கள். அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கும் போது, நமக்கு ஜூலியின் பெற்றோர் மீதுதான் அனுதாபம் வருகிறது.

அதேசமயம், கூடவே இருந்து துரோகம் செய்யும் துரோகிகள், மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடும் எதிரிகள் என அனைவரையும் தில்லாக நின்று எதிர்க்கும் ஓவியாவை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த உலகத்தில் சிலரால் மட்டுமே பிரச்சனைகளை புன்னகையால் எதிர்கொள்ள முடியும். அப்படி ஒரு மனிதராக இதுநாள் வரை தோனியை  மட்டுமே நான் பார்த்து வந்தேன். இப்போது ஒவியாவையும் பார்க்கின்றேன். அவர் இந்த ஷோவில் ஜெயிக்கிறாரோ, இல்லையோ… ஆனால், பிரச்சனைகளை ‘ஜஸ்ட் எ ஸ்மைல்’ கொண்டு எதிர்க்கும் ஓவியாவை பார்க்கும் போது பொறாமையாகத் தான் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை ஒரு பொழுதுபோக்காக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒரு பிரச்சனை என்று ஒன்றை நாம் சந்திக்கும் போது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக ஓவியா கற்றுக் கொடுத்திருக்கிறார்.

வாழ்க்கையில் நாம் ஜெயிக்க, “கவர்ச்சி பதுமை” என்று பார்க்கப்பட்ட ஓவியா போன்ற நடிகை கூட, சில சமயங்களில் நமக்கு பாடம் கற்பிக்கும் அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

அதேசமயம், வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் நசுக்கலாம் என்று ஜூலியும் நமக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஜூலி மோசமானவர் என்று சொல்லவில்லை. மோசமானவராக இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று தான் சொல்கிறோம்.

எது எப்படியோ… பிக்பாஸின் டி.ஆர்.பி. இப்போதைக்கு சேஃப் தான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close