நெடிய சோகத்திற்கு முடிவே இல்லை

இந்தியாவின் இதர பகுதியினர் தொலைக்காட்சி, கைபேசிகள், இணையம், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் இல்லாத பொதுமுடக்கத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

By: Updated: August 3, 2020, 07:07:01 PM

ப.சிதம்பரம்

(கட்டுரையாளர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். முன்னாள் மத்திய அமைச்சர்)

‘ஜம்மு மற்றும் காஷ்மீர், ஒரு மாபெரும் சிறைச்சாலை’ என்றார், அரசியல் தலைவர் ஒருவர். வேறு பலரைப் போல அங்கே வீட்டுக் காவலில் இருப்பவர் அவர்! 2019 ஆகஸ்ட் 5-ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்தைத் தொடர்ந்து எழுத்துபூர்வ உத்தரவுகள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை அது!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அரசின் திட்டத்திற்கு நோக்கம் இருந்தது. மாநிலத்தை உடைப்பது, அதன் தகுதியை யூனியன் பிரதேசங்களாக குறைப்பது, அந்தப் பிராந்தியங்களை மத்திய அரசின் நேரடி ஆளுகைக்குள் கொண்டு வருவது, அரசியல் நடவடிக்கைகளை முடக்குவது, காஷ்மீர் பள்ளத்தாக்கின் 7.5 மில்லியன் மக்களை வலுக்கட்டாயமாக தங்கள் திட்டங்களை ஏற்க வைப்பது, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவது ஆகியவைதான் அந்த நோக்கம்.

சரி, முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?

கடினமான சில உண்மைகளை புள்ளிவிவரப் பதிவுகளில் இருந்து பார்க்கலாம். (பிரதான ஆதாரம்: ஜம்மு மற்றும் காஷ்மீர் மனித உரிமை அமைப்பின் ஜூலை 2020 அறிக்கை)

– 2001- 2013 இடையே பயங்கரவாத நிகழ்வுகளின் எண்ணிக்கை 4522-ல் இருந்து 170-ஆகக் குறைந்திருந்தது. மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை (பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் எதிர்ப்பு இயக்கத்தினர்) 3552-ல் இருந்து 135 ஆகியிருந்தது. 2014 முதல், குறிப்பாக 2017-க்குப் பிறகு, கடினமான பலப்பிரயோக அணுகுமுறையால் வன்முறை வேகமாக அதிகரித்திருக்கிறது. (அட்டவணையைப் பார்க்க)

– அதிகபட்சமாக 6605 அரசியல் செயல்பாட்டாளர்கள் (144 சிறார்கள் உள்பட) பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டனர். மெஹ்பூபா முஃப்தி உள்பட பலர் இன்னமும் காவலில் இருக்கிறார்கள். கடுமையான பொதுப் பாதுகாப்புச் சட்டம் மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டது. (444 வழக்குகள்). அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு, தரக்குறைப்பு செய்யப்பட்டது. வீடுகளில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவர்களின் நடமாட்டமும், அரசியல் செயல்பாடும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவம் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினரின் வருகை காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகமானது. 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதும், 38,000 படைவீரர்கள் கூடுதலாக வரவழைக்கப் பட்டார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 பிரிவின் கீழான கட்டுப்பாடுகள் நடைமுறையில் ஆண்டு முழுவதும் அமலில் இருந்திருக்கின்றன. கடந்த மார்ச் 25-க்குப் பிறகு, நாடு தழுவிய பொதுமுடக்கம், இங்கு அனைத்தையும் மூடிவிடும் அதிகாரத்தை நிர்வாகத்திற்கு வழங்கியிருக்கிறது. அங்கே ‘அமைதி’ தென்படுகிறது என்றால், அது ஜான் கென்னடி அழைத்த ‘மயான அமைதி’தான்.

– அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப் பட்டிருக்கின்றன. பொதுப் பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் மிகப் பரவலாக அமல் படுத்தப்பட்டிருக்கின்றன. பொது நடமாட்டத்தை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாதுகாப்புப் படை அணிவகுப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் பரவலாகவும் தினமும் நடத்தப்படுகின்றன. உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய ஆணையங்களே காயம்பட்டு நிற்கின்றன. புதிய ஊடகக் கொள்கையும் தீவிரமான தணிக்கைகளும் அங்கு சுதந்திரமான ஊடகத்திற்கு இடமில்லை என்பதற்கான வெளிப்படையான ஒப்புதல்.

– முபீன் ஷா, மியான் அப்துல் கயூம், கவ்ஹெர் கீலானி, மஸ்ரட் ஸாஹ்ரா, ஸஃபூரா ஸாஃப்கர் ஆகியோரின் வழக்குகள் அங்கு நிலவும் அதிகார துஷ்பிரயோகத்தையும், நீதியைப் பெறுவதில் நிலவும் சிரமங்களையும் விவரிக்கின்றன.

ஆகஸ்ட் 2019 முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கின் உற்பத்தி இழப்பு ரூ40,000 கோடி என்றும், பணி இழப்பு எண்ணிக்கை 4,97,000 என்றும் காஷ்மீர் தொழில் வர்த்தக அமைப்பு மதிப்பீடு செய்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகை 6,11,534-ல் (2017) இருந்து 3,16,424 (2018), 43,059 (2019) என வீழ்ந்திருக்கிறது. பழம், ஜவுளி, தரை விரிப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, போக்குவரத்து தொழிற்சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாற்றியமைப்புச் சட்டத்திற்கான அரசியல் சாசன அனுமதி, 4ஜி சேவைகளை திரும்ப வழங்குதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத் திருத்தங்கள், வெவ்வேறு மனித உரிமை மறுப்புகளுக்கு எதிரான பொதுநல வழக்குகள் ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் இனிதான் விசாரித்து முடிவெடுக்க இருக்கிறது.

புதிய காஷ்மீர் பிரச்னை

ஒரு காஷ்மீர் பிரச்னை, 1947 முதல் இருந்தது. காஷ்மீர் ஆட்சியாளரின் இந்திய தொடர்புக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தபோது எழுந்த பிரச்னை அது. இந்தியாவுடன் போரிட்டு வெல்ல முடியாது, காஷ்மீரை கைப்பற்ற முடியாது என பாகிஸ்தான் பாடம் படித்துக் கொண்டது. 2019 ஆகஸ்ட் முதல், புதிய காஷ்மீர் பிரச்னை உருவாகியிருக்கிறது.

இந்த புதிய காஷ்மீர் பிரச்னை பல பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது- 370-வது பிரிவு ரத்துக்கு அரசியல் சாசன அனுமதி, ஒரு மாநிலத்தின் தகுதியை இரு யூனியன் பிரதேசங்களாக குறைப்பு, அரசியல் மற்றும் மனித உரிமைகள் மறுப்பு, பொருளாதார சீர்குலைவு, புதிய குடியேற்றக் கொள்கை, மக்களை ஆளக்கூடியவர்களை முழுமையாக மாற்றியது, புதிய குடியேற்றக் கொள்கைக்கு ஜம்முவில் உடன்பாடு இல்லாமை, லடாக்கில் முழுமையாக நிர்வாகவே இல்லாமை ஆகியவைதான் அவை.

ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியாவின் இதர பகுதியினர் உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் அதிர்ச்சிகரமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் மக்களின் துயரங்களில் சிறிதாகவே அக்கறை காட்டுகிறார்கள். லடாக் மீதான சீனாவின் நடவடிக்கையும், சீனா- பாகிஸ்தான் தொடர்பும் இந்தியாவின் இதரப் பகுதியை தூக்கத்தில் இருந்து எழுப்பின. ஆனால் இது போதாது.

பொது முடக்கம் நேரத்தில் இன்னொரு பொது முடக்கம்

மொத்தமான பொது முடக்கத்தை இந்தியாவின் இதரப் பகுதி புரிந்திருக்கிறது- யாரும் தங்கள் வீட்டுக்கு வெளியே செல்லக் கூடாது. பொது முடக்கத்தில் இருந்தாலும்கூட, இந்தியாவின் இதர பகுதியினர் சுதந்திரமாக பேசவும் கருத்தை வெளிப்படுத்தவும் முடியும். செய்தித் தாள்களை பெற முடியும். தொலைக்காட்சி, கைபேசிகள், இணையம், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அணுக முடியும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொத்த பொதுமுடக்கத்தின் ஊடாக உரிமைகள் மறுப்பு பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது.

இந்தியாவின் இதர பகுதியினர் பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை இல்லாத பொதுமுடக்கத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும். செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி, கைபேசிகள், இணையம், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத பொதுமுடக்கத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதுதான் காஷ்மீரின் இன்றையச் சூழல்.

ஆகஸ்ட் 5-ல் ஓராண்டு ஆகிறது. நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், பன்முகத் தன்மை வாய்ந்த அரசியல் அமைப்பு என நமது பெருமை மிக்க அரசியல் சாசன நிறுவனங்கள் ஆகஸ்ட் 5, 2019-ல் உருவான புதிய காஷ்மீர் பிரச்னைக்கு பதில்களை கண்டு பிடிக்கவில்லை. இது ஒரு சோகமான தோல்வி. அடிவானம் தொடுகிற வரை இன்னொரு அபிரகாம் லிங்கன் இல்லை என்கிற உண்மையால் உருவான சோகம் இது. ஆன்மாவை உலுக்கும் இந்த வார்த்தைகளை நாம் கேட்க முடியாது. ‘இந்த நாடு, சுதந்திரத்தின் புதிய பிறப்பைப் பெறும். அந்த அரசு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களுக்கான அரசாக பூமியில் அழியாது இருக்கும்.’

கட்டுரையின் மூல வடிவை ஆங்கிலத்தில் வாசிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

தமிழில்: ச.செல்வராஜ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:P chidambaram kashmir issue opinion column in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X