பஞ்சமி நிலச் சட்டம் 1892 : நூற்றாண்டுகளாக தொடரும் நிலத்திற்கான உரிமை போராட்டம்

panchama land history depressed class land act 1892 : நிலம் தான் அனைத்தும். நிலவுடமையே சுதந்திரமாக இந்த சமூகத்தில் ஒருவனை இயங்க வைக்கும் என்று  யாரேனும் கூறினால் நம்புவீர்களா? விவசாயம் என்பதே தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒன்று. அதன் விலை பொருட்களே வாழ்வின்…

By: Updated: October 18, 2019, 08:06:26 AM

panchama land history depressed class land act 1892 : நிலம் தான் அனைத்தும். நிலவுடமையே சுதந்திரமாக இந்த சமூகத்தில் ஒருவனை இயங்க வைக்கும் என்று  யாரேனும் கூறினால் நம்புவீர்களா? விவசாயம் என்பதே தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒன்று. அதன் விலை பொருட்களே வாழ்வின் ஆதாரம். இவை இரண்டும் கிடைத்தால் யாரிடமும் எதற்காகவும் கையேந்தி நிற்கவும் வேண்டாம் என்ற அடிப்படையில் நூற்றாண்டுகளாக போராடிய மக்களின் வரலாறு இது.

பஞ்சமி நில சட்டம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்த உயர்சாதி மக்களின் நிலவுடமை கொள்கை, நிலத்தின் மீதான ஆதிக்கம், கட்டுப்பாடு, உரிமைகளால் உருவான வரலாற்றைப் பற்றி பேசுகிறது இந்த கட்டுரை. அசுரன் வெளியான பின்பு அனைவரும் பஞ்சமி நில மீட்டெடுப்பு குறித்து யோசிக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலமே சுதந்திரத்தை தரும் என ஒரு ஆங்கிலேயரை யோசிக்க வைத்த இந்தியாவின் வரலாறு தான் என்ன? தமிழகத்தின் நிலை தான் என்ன என்பதை பற்றி இங்கு பேசுவோம்.

காணியாட்சி  அல்லது மிராசு முறை

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பது மக்களின் வரிப்பணத்தையும் உள்ளடக்கியது என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலம் என்பது பொது சொத்து தான். அதில் விளையக்கூடியதை வைத்து, கிடைக்கும் லாபத்தில் அரசுக்கான வரியை செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட முறையே மிராசு எனப்பட்டது. மன்னராட்சி ஒருவாராக இந்தியாவில் ஒழிக்கப்பட்ட பிறகு ஆங்கிலேயர்கள் புதிய நிலவுடமை  கொள்கைகளை வகுத்தனர். அதுவரையிலும் மிராசு முறை செயல்பட்டு வந்தது. ஆனால் ஆட்சி மாற்றம், தொடர் படையெடுப்பு போன்றவைகளால் மிராசு முறைகளின் கொள்கைகள் சீர் குழைய துவங்கின.

தமிழகத்தில் பிராமணர்கள் மற்றும் வெள்ளாள குடிகள் தான் அதிக அளவில் மிராசுதாரர்களாக செயல்பட்டனர். நிலத்திற்கு உடமையாளர்களாக இருந்த இவர்களின் நிலத்தில் விவசாயம் செய்ய வேலையாட்களை நியமனம் செய்வது , அவர்களுக்கான கூலியை தருவதை முக்கிய பொறுப்பாக கொண்டனர்.   இந்த முறை விவசாய நிலத்திற்கானதாக மட்டுமல்லாமல் பின்னாளில்  அப்பகுதியில் இருக்கும் தரிசுநிலம், குடியிருப்பு பகுதிகள் என அனைத்தையும் உட்படுத்தியதாக இருந்தது.

தமிழகத்தில் மூன்று விதமான சாகுபடி நடைபெற்றது. பண்ணை முறை. இங்கு மிராசுதாரர்கள் பண்ணையாட்களை வைத்து விவசாயம் செய்தனர். இவர்களுக்கு தினக்கூலி வழங்கப்பட்டது. பொதுவாக தினக்கூலிகளில் பெரும்பாலானோர் ஊருக்கு வெளியே தங்கவைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள்.   இரண்டாவது முறை பங்கு சாகுபடி. மிராசுதாரர்கள் மற்றும் ஊருக்கு வெளியே வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் பார்த்து, அதில் வரும் விளைச்சலில் பங்கு போட்டுக் கொள்வது. இதிலும் அவர்களுக்கு சரிசமமான பங்கு என்ற முறையில்லை. குத்தகை, பயிருக்கான செலவு இதர நிலம் மற்றும் கிணறுக்கான பராமரிப்பு செலவுகள் போக போக கூலிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்றே பங்குகள் வழங்கப்பட்டன. இந்த பங்குகள் பறக்குடி வாரம் என்று அழைக்கப்பட்டது. இவ்விரண்டு முறையும் தென்னிந்தியாவில் காவிரி நீர் பாசன பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பின்பற்றப்பட்டது. இங்கு வேளாண் அடிமைகளாக மக்கள் நடத்தப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்கின்றனர்.

மூன்றாவது குத்தகை முறை விவசாயம். இது பெரும்பாலும் மிராசு அமைப்புகள் இல்லாத, இடைநிலை சாதியினரின் நிலங்களில் நடத்தப்பட்ட விவசாயம் ஆகும். இங்கு அடிமை முறைகள் என்பது சற்று குறைவாகவும், அனைவருக்கும் சுதந்திரமான வெளி இருந்ததும் உண்மை.

வேளாண் அடிமைகள்

பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்ற விவசாயத்திற்கும் சமவெளிப் பகுதிகளில் நடத்தப்பட்ட விவசாயத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காவிரி  டெல்டா பாசனப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய அடிமை முறைகள் வழங்கப்பட்டு வந்தன. மேற்கு கடலோர பகுதிகளில் மலபார் நிலங்களிலும் நீண்ட கால அடிமை முறைகள் பின்பற்றுபட்டு வந்தது. காணியாட்சி எனப்படும் மிராசு முறையில் நிலமுடையவர்கள் உயர் சாதியினராகவும், குத்தகைதாரர்கள் இடைநிலை சாதியினராகவும் , விவசாய கூலிகள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்தனர்.

விவசாயக் கூலிகளுக்கு அனைத்து வகையான தீண்டாமை விதிமுறைகளையும் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் அவர்களின் உழைப்பு என்றும் தீண்டத்தாகதாகவே இருந்தது. அவர்கள் பொதுவாக ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டனர். மிராசு முறையை பின்பற்றிய இடங்களில் மட்டுமே பறச்சேரிகள் அதிகம் இருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். ஊருக்கு வெளியே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பிராமண, ஷத்திரிய, வைஸ்ய, சூத்திர என மக்களை நான்கு முறையாக பிரித்தது வர்ணாசிரம். இது பெரும்பாலும் சமவெளி பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் அதிக அளவில் பின்பற்றப்பட்டது.  இந்த வர்ணாசிரம முறைக்குள் வராத மக்கள் பஞ்சமர்கள் (ஐந்தாம் நிலை மனிதர்கள்) என்று வழங்கப்பட்டனர். அவர்கள் பொதுவாக ஊருக்கு வெளியே வாழ கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மூவேந்தர்களின் தொடர் தாக்குதலில் சிக்குண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதறியோடிய மலைவாழ் மக்கள் ஊர் புறங்களில் குடியிருக்க வந்தனர். அவர்களை மலையாளிகள் என்று அடையாளப்படுத்திய பேச்சுவழக்கு நிலுவையில் வெகு காலமாக இருந்தது. மலைப்பகுதியில் நிலையற்ற தன்மையுடன் வாழ்ந்து வந்த மக்களுக்கு உணவும் தங்க இருப்பிடமும் வழங்கப்பட்டதால் அடிமை நிலைப்பற்றி அவர்கள் பெரிதும் யோசிக்கவில்லை என்கிறார் ஆராய்ச்சியாளார் லூடன்.

(தரவு : நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850 – 1956)

நிலத்திற்கான உரிமை போராட்டம்

சமவெளிப் பகுதிகளில் கள்ளர்கள், மறவர்கள், படையாட்சிகள் ஆகியோருக்கும் விவசாய நிலம் இருந்தது. இங்கு நிலங்களுக்கு சொந்தம் கொண்டாடும் மிராசு முறை இல்லை. ஆனால் சேரிமக்கள் என்ற சொல்லாடல் வழங்கப்பட்ட வண்ணமே இருந்தது. மிராசுதாரர்கள் எனப்படும் உயர்சாதியினர், மிராசுதார்கள் அல்லாத இடைநிலை சாதியினர் என இருதரப்பினருமே தாழ்த்தப்பட்ட புறச்சேரி மக்களுக்கு நிலம் என்பது கிடைத்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தின. நிலத்திற்கான தேவை உணர்ந்து மக்கள் போராட ஆரம்பித்தது 1820களிலேயே துவங்கிவிட்டது. 1839 ஆகஸ்ட் மாதம் புறம்போக்கு நிலத்தினை சொந்தம் கொண்டாட மிராசுதாரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் விவசாயம் செய்வதற்கு யார் வேண்டுமானாலும் உரிமை கோரலாம் என்ற பட்சத்திலும் மிராசுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. கீழ் சாதியை சேர்ந்த ஒருவர் நிலத்திற்கு உரிமை கோரி விண்ணப்பம் செய்தால், அவ்வூரில் இருக்கும் உயர்சாதியினர், இடைநிலை சாதியினர் தங்களின் மறுப்புகளை கூற உரிமை இருந்தது. அம்மக்கள் நிலங்களை உடமைகளாக வைத்திருப்பதை விரும்பவில்லை என்று தான் கூற வேண்டும். விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லாத தரிசு நிலங்களை சில நேரங்களில் வேண்டாம் என்று அவர்கள் சொன்ன பின்பு தான் கீழ்சாதியினர் கைகளுக்கு நிலங்கள் கிடைத்தது.

நோட்ஸ் ஆன் பரையாஸ் ஆஃப் செங்கல்பட்டு அறிக்கை (Notes on the Pariahs of Chengalput)

ஜேம்ஸ் ஹென்றி அப்பெர்லெய் த்ரெமென்ஹீர் 1853ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி ஜார்ஜ் வில்லியம் த்ரெமென்ஹீருக்கும் கமிலா எலிசெபெத் க்ரெய்க் அவர்களுக்கும் மூன்றாவது மகனாக பிறந்தார். அவர் இந்திய குடிமையியல் சேவையில் 1873ம் ஆண்டு சேர்ந்தார். அவருக்கான பயிற்சிகள் 1875ம் ஆண்டு முடிந்தது. பின்பு அவர் 1878ம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் பணியில் அமர்த்தபப்ட்டார். பல்வேறு இடங்களில் பணியாற்றிய அவர் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக 1891ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படியாக வாழ்கிறார்கள், அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டு 17 பக்க அறிக்கை ஒன்றை தயாரித்து இங்கிலாந்துக்கு அனுப்பினார்.

த்ரெமென்ஹீர்

அந்த அறிக்கையில் வெளியிடப்பட்ட சில வரிகள் இவ்வாறாக அமைந்திருந்தது “They are] always badly nourished, clad, if at all, in the vilest of rags, eaten up with leprosy or other horrible diseases, hunted like pigs, untaught, uncared for…. The British administration has freed this clan of a community from the yoke of hereditary slavery and from the legal disabilities; but they still remain at a low depth of social degradation” (அவர்கள் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தான் இருந்தார்கள். தொழுநோயும் இன்னபிற நோய்களும் தின்றதன் மிச்சமாக அவர்கள் வாழ்ந்தார்கள். கல்வி இல்லாமல் பாதுகாப்பு இல்லாமல் பன்றிகளைப் போல் வேட்டையாடப்பட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சியோ அடிமை முறையை முற்றிலுமாக ஒழித்தது. ஆனால் இந்த சமூகத்தில் அவர்கள் கீழ் இடத்தில் இருந்து இன்னும் முன்னேறவே இல்லை) . அன்றைய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்புடன் வாழ்வதற்கான உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தது என்பது தான் அவர் கூற விளைந்தது.

நிலம் ஒன்றே அடிமை வாழ்வினை ஒழிக்கும் என்பதை முன்னிறுத்தி இவர் எழுதிய இந்த  17 பக்க அறிக்கை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய வாதப்பொருளாக அமைந்தது. தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களின் வாழ்வுரிமையை மேம்படுத்த உத்திரவாதம் தந்த கையோடு 1892ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பஞ்சமி நிலத்திற்கான சட்டம் கையெழுத்திடப்பட்டு வருவாய்த்துறை அராசாணையாக 1010/1010A .  அக்டோபர் 28ம் தேதி, 1912ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார் இத்தகைய பெரும் மாற்றத்தை செய்த த்ரெமென்ஹீர்.

(தரவு : ஃப்ரெண்ட்லைன்)

பஞ்சமி நிலச்சட்டம் விதிமுறைகளும் மீட்பு போராட்டங்களும்

10 ஆண்டுகள் வரை தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ அடமானம் வைக்கவோ கூடாது

10 ஆண்டுகள் கழித்து நிலத்தை தாழ்த்தப்பட்டோர் அல்லாதோருக்கு விற்கனவோ அடமானம் வைக்கவோ கூடாது.

இந்த விதிமுறைகளை மீறி செய்யப்படும் நில உரிமை மாற்றங்கள் செல்லுபடி ஆகாது  என இந்த மூன்று விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் ஒதுக்கப்பட்டன.

ஆனால் விளிம்பு நிலை அறியாத மக்கள் தங்கள் தேவைகளுக்காக மற்ற தாழ்த்தப்பட்டோரிடம் தான் நிலத்தை அடமானம் வைக்க வேண்டும், விற்க வேண்டும் என்பது நகை முரணாகவே இருந்தது. அவர்கள் மீண்டும் நிலவுடமைதாரர்களிடமே சென்றார்கள். தங்கள் நிலங்களை மிகவும் குறைந்த விலைக்காக விற்றார்கள். வெறும் ஒரு பை அரிசிக்காக விற்கப்பட்ட அவலமும் அரங்கேறியது. காஞ்சிபுரம் மாவட்டம் காரணை பகுதியில் தலித்துகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஏமாற்றிப் பெறப்பட்டதாகவும், அதனை தங்களுக்கே மீட்டு தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் சூழ்ந்திருந்த போராட்ட களத்தில், போராட்டத்தை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூட்டில் ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை ஆகியோர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்பு தமிழகம் எங்கும் பஞ்சமி நிலங்களை மீட்கும் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் மக்களோடு இணைந்து போராடி வருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பஞ்சமி நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காமராஜர் காலத்தைக் காட்டிலும், கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட திமுக ஆட்சியில் நிறைய நபர்களுக்கு நிலங்கள் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்… கல்லாறு மக்களின் நிலை என்ன?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Panchami land history depressed class land act

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X