Advertisment

திராவிடக் கட்சிகளை தூண்டிச் சுடர்விட வைக்கும் பெரியார்

Periyar is a ignition to Dravidian parities: மத்திய பாஜக அரசு ஏதேனும் இந்துத்துவ கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் முதல் எதிர்ப்பு குரல் இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழகத்தில் இருந்துதான் எழும்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP's insult to Periyar

BJP's insult to Periyar

Periyar is a ignition to Dravidian parities: மத்திய பாஜக அரசு ஏதேனும் இந்துத்துவ கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் முதல் எதிர்ப்பு குரல் இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழகத்தில் இருந்துதான் எழும். அப்போதெல்லாம் இணையத்தில் பலராலும் பயன்படுத்தப்படும் வார்த்தை இது பெரியார் மண் என்ற வார்த்தைதான். தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பாஜகவுடன் கூட்டணி கண்ட கட்சிகள் என்றாலும் அவர்கள் முழுமையாக பாஜகவின் எல்லா நிலைப்பாடுகளையும் ஆதரிக்கும் நிலைக்கு செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் இந்த கட்சிகளின் உள்ளீடாக பெரியாரின் சிந்தனைகள் உள்ளன என்றால் அது மிகையல்ல. அதற்காக அவர்கள் பெரியார் கொள்கைகளை 100 சதவீதம் அப்படியே பின்பற்றி நடக்கிறார்கள் என்பது பொருளல்ல. பெரியார் வளர்த்தெடுத்த சில கருத்தியல்களும் நவீன தமிழக வரலாறும் திராவிட கட்சிகளின் நனவிலியாக இருந்து இயக்குகிறது என்பதை உணர முடியும்.

Advertisment

உதாரணத்திற்கு இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆர்ப்பாட்டமும் அறிவித்திருக்கிறது. திமுக இந்தியை எதிர்க்கும்போதெல்லாம் தமிழக பாஜகவினர் முன்வைக்கும் விமர்சனம் திமுககாரர்கள் நடத்தும் பள்ளிகளில் எல்லாம் இந்தியை கற்பிக்கிறார்கள். ஆனால், அதை மத்திய அரசு கூறும்போது மட்டும் எதிர்க்கிறார்கள். போலியான இந்தி எதிர்ப்பு தமிழ்ப் பற்று வேஷம் போடுகிறார்கள் என்பதுதான் அது. இப்படி அவர்கள் முரணாக இருந்தாலும், உண்மையில் அவர்கள் வேஷம் போடவில்லை அவர்களை அப்படி பேச வைப்பது அந்த கட்சியின் நனவிலியாக பதிந்திருக்கும் தமிழக வரலாறும், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்தியல்களே அப்படி பேசவைக்கின்றன.

ஏதோ திமுகதான் இப்படி பாஜகவுக்கு பேசுகிறதா என்றால் அதனுடன் கூட்டணியில் இருக்கிற அதிமுகவும் இந்த சூழலில் அதனால் முடிந்த அளவு அதன் எதிர்ப்பை மௌனமாகவேனும் முனுமுனுக்கத்தான் செய்கிறது. அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமனி தனது டுவிட்டர் பக்கத்தில், “நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். இதைத்தான் திராவிட கட்சிகளின் நனவிலியாக உள்ள பெரியாரின் கருத்தியல்கள் என்கிறேன்.

பொதுவாக பெரியார் என்றாலே அவர் கடவுள் மறுப்பாளர் என்ற மிகவும் குறுகலான ஒரு வட்டத்திலேயே பொதுச்சமூகம் அவரைக் காண்கிறது. ஆனால், பெரியாரின் பணிகள் பல பரிமாணங்களைக் கொண்டது. அடிப்படையில் பெரியாரும் அவர்கால திராவிட இயக்கத் தலைவர்களும் ஐரோப்பிய வரலாற்றுத்தாக்கம் மிக்கவர்கள். ஐரோப்பிய வரலாற்றில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி உலகுக்கு அளித்த கொடையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்தியல் செல்வாக்கு செலுத்திய யாதொன்றும் வலுப்பெற்றுள்ளன. அது போல, காங்கிரஸுக்கு மாற்றாக உருவான திராவிட இயக்க தலைவர்கள் மத்தியில் ஐரோப்பிய வரலாற்றுத்தாக்கமும் பிரெஞ்சுப் புரட்சியின் கருத்தியல் தாக்கமும் இருந்ததை கவனிக்கலாம்.

தொடக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்த பெரியார் காங்கிரஸ் எதிர்ப்பாளராகவும் இந்தி எதிர்ப்பாளராகவும் பிராமண எதிர்ப்பாளராகவும் மாறி அப்படியே அறியவும்படுகிறார். தமிழகத்தில் இந்தி மொழி எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும் பெரியார் தொடங்கவில்லை என்றாலும் அவற்றை பரவலாக்கி உறுதிப்படுத்தியவர் பெரியார்தான். தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிராமண எதிர்ப்பு என்பது பறையர்களிடம் கலாச்சார அரசியல் அடிப்படையில் இருந்த நிலையில், 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர் அல்லாத சாதிகளின் அதிகாரத்தை மையப்படுத்தி நீதிக்கட்சி உருவானது. காங்கிரஸின் கொள்கைகள், பிராமண மேலாதிக்கத்தால் காங்கிரஸை விட்டு வெளியேறும் பெரியார் இயல்பிலேயே பிராமண எதிர்ப்பாளராக மாறுகிறார். பின்னர், வாழ்நாள் முழுவதும் அவர் தீவிர பிராமண எதிர்ப்பாளராக இருந்தார்.

பெரியாரின் பிராமண எதிர்ப்பு என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமானது அல்ல. அது சூத்திரர்களின்அல்லது இடைநிலைச் சாதிகளின் அதிகாரத்தை வலியுறுத்துவது. அது இடைநிலைச் சாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள சூத்திர பட்டத்தை ஒழிப்பதும் சாதியை ஒழிப்பது ஆகும். அதன் தொடர்ச்சியாகத்தான் பெரியார் சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பை முன்வைக்கிறார்.

மெட்ராஸ் மாகானத்தில் பிராமணர் அல்லாதார்களின் அரசியல் எழுச்சியாக உருவான நீதிக்கட்சி வெற்றி பெற்று பின் தோல்வியடைந்த பிறகு அதற்கு ஆதரவாக இருந்த பிராமண எதிர்ப்பாளர்கள் பெரியாரிடம் (நபர்களாக குறிப்பிடவில்லை)  ஒரு அரூப அரசியல் அபிலாஷைகள் கொண்ட் சக்தியாக தஞ்சமடைந்தது. பிறகு, அது பெரியாரின் தலைமையில் பராமரிப்பில் தன்னை வலுப்படுத்திக்கொண்டு அண்ணா தலைமையில் மீண்டும் அதிகாரத்தை நோக்கி வெளியே சென்றது என்று கருத முடிகிறது.

இவ்வாறு பெரியார் சூத்திரர்கள் அதிகாரம் அடைந்ததற்கு காரணமாக இருந்தார். பெரியாரின் வழியில் அதிகாரம் அடைந்த திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வருகின்றன. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா பிராமணராக இருந்தபோதும் அவருடைய அரசு பெரியாரின் ஊக்கம் பெற்ற  சூத்திரர்களான பிற்படுத்தப்பட்டவர்ளின் நலன்களை புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஒரு அரசாக இருந்தது.

பாஜகவினருக்கு வேண்டுமானால் பெரியாரின் கடவுள் மறுப்பு, இந்து மத மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு பிரச்னையாக இருக்கலாம். ஆனால், ஆன்மீகத்தை விரும்பும் கடவுள் நம்பிக்கையுள்ள அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரியாருடன் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனென்றால், பெரியார் இடைநிலைச் சாதிகளின் சூத்திரர்களின் இழிநிலை ஒழிய வேண்டும் என்றும் அதிகாரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியவர் என்பதை அவர்கள் அறிவர். ஆனால், அவர்கள் தங்களிடம் குவிந்த அதிகாரத்தை அடுத்த நிலையில் உள்ள பட்டியல் சாதிகளுக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டனர். அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் சுயமரியாதை திருமணம், சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து ஒரு இயக்கமாக கடைபிடித்து சமூக பழக்கமாக்காமல் அதற்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துவிட்டு அதை சமூக பழக்கமாகாமல் கைவிட்டார்கள்.

அதே போல, இந்திய அளவில் காந்தி தீண்டாமைக்கு எதிராக இந்து மதத்திற்குள் இருந்து தீண்டாதார் அல்லாதார் மக்களுடன் உரையாடல் நிகழ்த்தி தீண்டாமையை ஒழிக்கப் போராடினார் என்றால், தமிழகத்தில் பெரியார் இடைநிலைச் சாதிகளிடம் தீண்டாமை ஒழிப்பையும் சாதி ஒழிப்பையும் வலியுறுத்தி இந்து மதத்தை விமர்சித்துப் பேசினார். பெரியாரின் சாதி ஒழிப்பு பிரசாரம் சாதியை ஒழிக்காவிட்டாலும் அது இடைநிலைச் சாதிகள் கடைபிடித்துவந்த கடினமான தீண்டாமை நடைமுறைகளை கைவிட வைத்தது. காந்திகூட தான் எல்லோருக்குமான பிரதிநிதியாக தன்னை கூறிக்கொண்டார். அதற்கு மறுப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. பெரியார் அப்படி தன்னை எப்போதும் எல்லோருக்குமான தலைவராகவோ பிரதிநிதியாகவோ அறிவித்துக்கொண்டதில்லை.

அம்பேத்கரை தனது தலைவர் என்று கூறிய பெரியார், தன்னை ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராகவோ அல்லது தாழ்த்தப்பட்டோர்களின் தலைவராகவோ அறிவித்துக்கொண்டதில்லை. தீண்டாமை, பெண்ணடிமை, மத மூடநம்பிக்கை ஆகியவற்றை கலைவது மற்றும் பிராமண அல்லாதவர்களின் அதிகாரம், சூத்திர பட்டம் ஒழிப்பது இவைகளே அவருடைய முதல் பணியாகக் கொண்டிருந்தார். அதற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாத பிரசாரம் செய்வதில் அவர் தெளிவாக இருந்தார். அவர் பட்டியல் இனத்தவர்களின் பிரச்னையை இடைநிலைச் சாதிகளிடம் இருந்துகொண்டு பேசியவர். அவர் நன்கு அறிந்திருந்தார் ஒடுக்கப்படுபவர்களுக்கு அதற்கு வெளியே இருந்து ஒருவர் தலைவராக முடியாது என்று. பெரியார் எப்போதும் தான் பட்டியல் இனத்தவர்களுக்கு அதை செய்தேன், இதை செய்தேன் என்று பட்டியலிட்டதில்லை. ஆனால், அவர் வழிவந்த தலைவர்கள் பெரியாரை உணராமல் பட்டியல் இன மக்களின் தனித்துவத்தை விலக்கி அவர்களை உள்ளடக்கிக்கொள்ள முனைகிறார்கள். அதனாலேயே, தாங்கள் பட்டியல் சாதிகளுக்கு என்னவெல்லாம் செய்தோம் என்று பட்டியலிட்டு நன்றியை எதிர்பார்க்கிறார்கள்.

பெரியார் மீதான தலித் அறிவுஜீவிகளின் விமர்சனம் உண்மையில் அது பெரியார் மீதான விமர்சனமாக தட்டையாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது அதிகாரத்தைக் கைப்பற்றிய இடைநிலைச் சாதிகள் பட்டியல் சாதிகளை அதிகாரத்திலிருந்து விலக்கியதோடு மட்டுமில்லாமல் ஒடுக்குதலிலும் ஈடுபடுவதால், பிற்படுத்தப்பட்டோர்களின் சமூகநீதி பிம்பமாக உள்ள பெரியார் என்ற குறியீடு மீது அவர்களின் விமர்சனம் பாய்கிறது. ஆனாலும், இந்துத்துவ சக்திகள் பெரியாரை விமர்சிக்கும்போது தலித்துகள் பெரியாரை விட்டுக்கொடுப்பதில்லை. பெரியார் இன்னும் தலித்துகளின் போராட்டப் பதாகையாகத்தான் இருக்கிறார்.

பெரியார் தமிழக அரசியலுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் அவற்றின் அரசியல் நனவிலியில் சில விஷயங்களை ஆழமாக உள்ளீடு செய்து சென்றுள்ளார். அது தமிழர் உணர்வு. சுய மரியாதை, சூத்திர அதிகாரம், இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை ஆகியவை ஆகும். அதன் பண்புகளில் அளவுகளில் மாற்றம் இருக்கலாம். அவற்றிலிருந்து திராவிடக் கட்சிகள் நடைமுறையில் அவர்களின் அரசியல் நனவிலியில் பொதிந்துள்ள பெரியாரின் கருத்தியல்கள் அவர்களை அரசியல் வரலாற்றின் நதியில் இழுத்துச் செல்கிறது. தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாக திராவிட அரசியல் உருவாவதற்கு பெரியார் காரணமாக ஆதாரமாக இருந்திருக்கிறார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஆனால், சில பெரியாரியர்களைப் போல, பெரியாரை கடவுள் மறுப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடைக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜக பெரியாரை கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், அவர் திராவிட அரசியலில் ஸ்தூலமாகவும் அதன் அரசியல் நனவிலியில் ஆழமாகவும் பதிந்துள்ளார். பெரியார் ஸ்தூலமாக இருந்தால் கபளீகரம் செய்துவிடலாம். ஆனால், தமிழக அரசியல் கலாச்சரத்தின் நனவிலியாக இருந்து திராவிட கட்சிகளை இந்துத்துவத்திற்கு எதிராக அவர்களே விரும்பாவிட்டாலும் தூண்டி சுடர்விட வைக்கிறாரே என்ன செய்யமுடியும்?

பெரியார் மற்றொரு விஷயத்தில் அவர் காந்தியுடன் ஒப்பிடக் கூடியவர். தனது அரவனைப்பில் வளர்ந்த திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் அவர் செல்வாக்குள்ள தலைவராக இருந்தபோதும் பெரியார் ஒருபோதும் பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டதில்லை. அந்த வகையில், பெரியாரும் காந்தியைப் போல அரசியலில் பதவிகளை விரும்பாத ஒரு அரசியல் துறவிதான்.

Dmk Aiadmk Periyar Dravidar Kazhagam Periyar Statue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment