Advertisment

ராகுல் காந்தி எதிர் நோக்கும் சவால்கள்

கிராம புற ஓட்டுக்கள் என்றுமே காங்கிரசிற்கு என்பதை குஜராத்தும் நிருபித்திருக்கிறது. அதனை இன்னும் வலுவாக்க கிராம புற அரசியலை ராகுல் மேம்படுத்த வேண்டும்.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi On Rakesh Asthana, சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா

Rahul Gandhi On Rakesh Asthana

சுகிதா

Advertisment

(காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தினம் நேற்று (28.12.17) கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் எத்தகைய சூழலில் பொறுப்பேற்றுள்ளார் என்பதை நேற்றைய கட்டுரையில் பார்த்தோம். இன்று அவர் எதிர் நோக்கியுள்ள சவால்களையும், அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு 16 மாதங்களே உள்ள நிலையில் ராகுல் இப்போதிருந்தே தயாராக வேண்டிய கட்டாயம், அதற்குள் கட்சிக்குள் சில களைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கோடிஸ்வர மூத்த காங்கிரஸ் தலைவர்களை ஓரம் கட்டி அவர்களிடம் உள்ள பொறுப்புகளை இளைஞர்களிடம் கொடுக்க வேண்டும். மூத்த தலைவர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு மாநில அளவில் கட்சிகளுக்குள் இருக்கிற கோஷ்டி பூசலை உடைத்து இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும். எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் உண்டு. ஆனால் தமிழக காங்கிரசாரின் சத்தியமூர்த்திபவன் சட்டை கிழிப்போடு ஒப்பிடுகையில் காங்கிரசில் இருப்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று. ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கும் - அசோக் கெலாட்டுக்கும் இடையே உள்ள மோதல், மத்திய பிரதேசத்தில் ஜோதிராவ் சிந்தியாவிற்கும் - திக்விஜய்சிங்கிற்கும்,டெல்லியில் அஜய் மக்கானுக்கும் - ஷீலா தீட்சத்திற்கும் இடையே என மூத்த தலைவர்களின் ஆதிக்கம் மோதல்கள் வெளிப்படையானவை. இது தான் ராகுலுக்கு முதல் சவால்.

பாஜகவிற்கு பள்ளி, கல்லூரி அளவில் ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பு உள்ளது. அதே போன்று இடதுசாரிகளிடம் இந்திய மாணவர் சங்கம், டைஃப்பி உள்ளிட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கும் சங்கங்கள் உள்ளன. இது போன்று காங்கிரசிற்கு இளைஞர்களை கட்சிக்குள் கொண்டு வரும் நோக்கில் மாணவர் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

ராகுல் காங்கிரஸ் குடும்பத்தின் 5 வது தலைமுறை, அப்படியிருக்க மூத்த காங்கிரஸ் குடும்பங்களின் இளைய தலைமுறை தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் போனதற்கான காரணத்தை கண்டறிய வேண்டியது அவசியம். ராகுலை 47 வயதிலும் இளைஞர் காங்கிரஸ் மன ஓட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் இளம் தலைவராக பார்ப்பது உத்வேகத்தை தரலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் 35 வயதில் தலைவரானவர், நேரு 40 வயதிலும்,இந்திரா 42 வயதிலும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ஆனவர்கள். இதனால் 47 வயது இளைஞர் என்று சொல்வதை தாண்டி ராகுலுக்கு இளைஞர்களையும், மூத்த தலைவர்களையும் அனுசரித்த போக வேண்டிய நிலை உள்ளது.

ராகுல் பிறக்கும் போது செல்வ செழிப்பு, அதிகாரமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் மோடி எப்போதும் தன்னை அடையாளப்படுத்தும் போது சாமான்யர் என்று கூறுகிறார். டீ விற்றுக் கொண்டிருந்த நான் இன்று நாட்டின் பிரதமர் என்ற மக்களிடம் எளிதில் இடம்பிடிக்க கூடிய வசனங்களை மோடி பேசும் போது அதனை எதிர்கொள்ள கூடுதலாக களத்தில் மக்களோடு மக்களாக ராகுல் நிற்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக தேர்தல் வரும் மாநிலங்களில் பாதயாத்திரை போவது, விவசாயி வீட்டில் இளைப்பாறுவது, தலித் வீட்டில் சாப்பிடுவது இப்படி தேர்தல் அரசியலுக்கு செய்வதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனை தேர்தல் அரசியல் என்று ஒற்றை குற்றச்சாட்டில் காலி செய்துவிட முடியும். ராகுலை நேரு - காந்தி குடும்ப அரசராக பார்க்க வைக்கும் இந்த பிம்பத்தை மாற்ற கட்சியில் சாமான்யர்களை தலைவர்களாக உருவாக்குவதும் அவர்களை முதலமைச்சர்கள் ஆக்குவதும் தான் ஒரே வழி.

மோடி தேர்தல் களத்தில், பொது மேடைகளில் பிரயோகிக்கும் வார்த்தைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையக் கூடிய வார்த்தைகளாக பயன்படுத்துவார். மோடியின் ஏற்ற இறக்கமான பேச்சை விட அவர் மக்களுக்கு நெருக்கமான வார்த்தைகளை பயன்படுத்தியது தான் எளிதாக மக்களிடம் மோடியை மூன்றாண்டுகளாக கொண்டு சேர்த்தது. இதற்கு சில உதராணங்களை சொல்லலாம். குஜராத் தேர்தலில் மணி சங்கர் அய்யர் பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சிக்க மோடி உடனடியாக குஜராத்துக்கு நேர்ந்த அவமானம் என்று குஜராத் மக்கள் முழுவதையும் தன் பக்கம் இழுத்தார். குஜராத் தேர்தல் முடிவு வெளியானதும் குஜராத் மக்களுக்கு தலைவணங்குகிறேன் என்று டிவிட்டரில் பதிவிட்டார் மோடி. ராகுல் காந்தியோ, உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் குஜராத் மக்களுக்கும் நன்றிஎன்று டிவிட்டரில் பதிவிட்டார். வெறுமனே நன்றி தெரிவித்தலுக்கும், தலை வணங்குகிறேன் என்று பிரதமரே உதிர்க்கும் வார்த்தை. இவை இரண்டுக்கும் இடையே உள்ள இடைவேளை தான் மோடி அரசியலுக்கும் ராகுல் அரசியலுக்கும் உள்ள வேறுபாடு.

காங்கிரஸ் உறுப்பினர்கள் இதைபடிக்கும் போது பல பிரதமரை உருவாக்கிய கட்சிக்கு மோடி மூன்றாண்டு ஆட்சியை வைத்து பாடம் எடுப்பதா என்று கேள்விகள் எழலாம். ஆனால் ராகுல் மக்கள் பக்கத்தில் போக வேண்டும் என்றால் மக்கள் பக்கத்தில் இருப்பது போல் 3 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை பார்க்காமல், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காமல், மக்களை நேரடியாக பார்க்காமல், மக்கள் பிரச்சினைகளை ரேடியோவில் பேசியும், பொது கூட்டங்களில் பேசியும் மக்கள் பக்கத்தில் எப்போதும் இருப்பது போல் ஒரு தோற்றத்தை மோடி உருவாக்கி வைத்திருக்கிறார். இதனை சமாளிக்க இந்த யுக்தியும் ராகுலுக்கு அவசியம். அது எந்தளவுக்கு என்றால் மோடி பிரச்சார முடிவில் தாய் மண்ணில் அழுது கண்ணீர் விடும் அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்கும் யுக்திகளை ராகுல் கையாள வேண்டும்.

வெள்ளை பைஜாமாவில் எளிமையான உடை அணியும் ராகுல் காந்தி,மோடி அணியும் பல லட்சரூபாய் கோட் உடையை ''சூட் பூட் சர்கார் ''என விமரசிக்கும் போது அதை ரசிக்க முடிகிறது. குஜராத்தில் மோடி தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே சிந்தித்து செயல்படுகிறார் என்று அதானியை மனதில் வைத்து ராகுல் பிரச்சாரத்தில் பேசினார். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த காலத்தில் மிட்டல்களும், அம்பானிகளும், டாடாவும், நாராயணமூர்த்தியும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஏன் ராகுல் காந்திக்கும் நெருக்கமாக இருந்தவர்கள் தானே என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

கிராம புற ஓட்டுக்கள் என்றுமே காங்கிரசிற்கு என்பதை குஜராத்தும் நிருபித்திருக்கிறது. அதனால் அதனை இன்னும் வலுவாக்க கிராம புற அளவில் விவசாயிகள் மீதான அக்கறை பார்வையோடு கிராம புற அரசியலை ராகுல் மேம்படுத்த வேண்டும். ஒரு கால்த்தில் காங்கிரஸ் வசமிருந்த மாநிலங்களான தமிழகம் உட்பட, உத்திர பிரதேசம், ஆந்திரா, ஓடிஷா மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிராந்திய கட்சிகள் காலூன்றிய இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் வாக்களிக்கும் விருப்பபட்டியலில் காங்கிரஸிற்கு இடமில்லை என்பதை உணர்வது அவசியம். தற்போதைய சவால் 2018ல் வர உள்ள தேர்தலில் கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேகாலாயாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது. அது தான் 2019 ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் பிம்பத்துக்கு உயர்த்தும். தற்போதைய காங்கிரசின் தேவையும் கூட. ஏன்எனில் 2006ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியில் 17 மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருந்தன. இன்னும் அதிகமாக 18 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி என்ற வரலாறை 1991ம் ஆண்டு காங்கிரஸ் எட்டியுள்ளது. அப்போது மக்களவையில் 48% எம்பிக்கள் காங்கிரஸ் அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள். தற்போது அதே 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது மக்களவையில் 66% எம்பிக்கள் மக்களவையில் பாஜக மற்றும் கூட்டணியை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதை எல்லாம் ராகுலும் அவரது தேர்தல் குழுவும் திறனாய்வு செய்வது அவசியம்.

முந்தைய கட்டுரையைப் படிக்க...

(கட்டுரையாளர் சுகிதா, கவிஞர், ஊடகவியலாளர்)

Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment